Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | உரைநடை: இயற்கை வேளாண்மை

இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: இயற்கை வேளாண்மை | 11th Tamil : Chapter 2 : Maamalai potrutum

   Posted On :  05.08.2023 07:03 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : மாமழை போற்றுதும்

உரைநடை: இயற்கை வேளாண்மை

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : மாமழை போற்றுதும் : உரைநடை: இயற்கை வேளாண்மை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 2

உரைநடை உலகம்

இயற்கை வேளாண்மை

 

நுழையும்முன்

மனித உயிர்கள் வாழ அடிப்படையாக விளங்குவது வேளாண்மை. அதனால்தான் 'உழவு உலகிற்கு அச்சாணி' என்று வள்ளுவரும் 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று பாரதியாரும் போற்றுகின்றனர். இயற்கையிலிருந்து விலகி மண்ணுக்கும் மண்ணில் வாழும் உயிர்களுக்கும் ஊறு விளைவிக்கின்ற நிலை மாறவும் இயற்கை வேளாண்மை புதுப்பொலிவு பெறவும் வலியுறுத்துகிறது இவ்வுரையாடல்.

 

சொக்கலிங்கம் : வா! மங்கை! என்ன ஊரோடு வந்து விட்டாயா? (உட்புறம் பார்த்து) மல்லிகா, இங்கே வா, மங்கை வந்திருக்கிறாள் பார்!

மங்கை : ஆமாம் சித்தப்பா, இங்கே வந்து இரண்டு நாள்கள் ஆகிவிட்டன! சுத்தமான காற்று, கிணற்றுத் தண்ணீர், அம்மா கைச்சமையல் வேறெங்கே கிடைக்கும்?

மல்லிகா : வாம்மா மங்கை! குழந்தைகள் நல்லாருக்காங்களா? உன் கணவர் எப்படி இருக்கிறார்?

மங்கை : எல்லோரும் நல்லா இருக்காங்க. நீங்க நல்லா இருக்கீங்களா?

மல்லிகா : நல்லா இருக்கோம்மா.

மங்கை : நான் இனிமேல் நம்ம கிராமத்தில்தான் இருக்கப் போகிறேன். அப்பாவின் நிலத்தில், நம்மாழ்வார் ஐயாவின் வழியைப் பின்பற்றி இயற்கை முறையில் வேளாண்மை செய்யலாம்னு இருக்கேன்.


மல்லிகா : நல்ல முடிவுதான் எடுத்திருக்கிறாய் மங்கை! நமக்கெல்லாம் அவர்தானே வழிகாட்டி.

சொக்கலிங்கம் : சொல்லம்மா, நான் என்ன உதவி செய்யணும்?

மங்கை : இயற்கை வேளாண்மை செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் எனக்கு இருக்கிறது! ஆனா, அதைப்பற்றி ஒண்ணும் தெரியாது. நீங்கதான் படிப்படியாக எனக்குச் சொல்லித்தர வேண்டும்.

சொக்கலிங்கம் : சொல்றேன்மா. வா, நம்ம பண்ணைக்குப் போய் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்தபடி பேசுவோம்....

(மல்லிகா இரண்டு குவளைகளில் மோருடன் வருகிறார். இருவரும் மோர் குடிக்கின்றனர்)

மங்கை : இப்படி வெண்ணெயோடும் வாசனையோடும் மோர் குடித்து எத்தனை நாளாச்சு? எங்க வாங்குறீங்க?

மல்லிகா : மோரை வாங்குவாங்களா? கொல்லையில இருக்குற நம்ம மாட்டோட பால்தான் இவ்வளவு வாசம்.

மங்கை : அப்படியா? எனக்குப் பால், மோர் எல்லாம் நெகிழிப் பையில் வாங்குற பழக்கம். அதான் கேட்டேன்.

(உள்ளிருந்து சொக்கலிங்கம் கிளம்பி வருகிறார். அவருடன் மங்கையும் மல்லிகாவும் கிளம்புகிறார்கள்)

மங்கை : இது என்ன சித்தப்பா, பனைமரம் வளக்கிறீங்களா?


சொக்கலிங்கம் : ஆமாம்மா, பனைமரம் நம்ம தமிழ்நாட்டோட மாநில மரம். பனங்கொட்டய மூன்றடிக்கு மூன்றடி இடைவெளி விட்டு நட்டு வச்சிருக்கேன், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகுது இன்னும் ஏழு ஆண்டுல பலன் தரும்.

மங்கை : பனைமரத்துனால் என்ன பயன் சித்தப்பா?

சொக்கலிங்கம் : என்னம்மா, இப்படிக் கேட்டுட்ட, பனைமரம் ஏழைகளோட கற்பக விருட்சம்னு சொல்லலாம்; சிறந்த காற்றுத் தடுப்பானும்கூட, ஆழத்தில் நீர்மட்டம் குறையாம நீரைச் சேமிச்சு வைக்கிற தன்மையுடையது. இதனால நிலத்தடி நீர்மட்டம் குறையாது. பனை வளர, பெரிய அளவுக்குத் தண்ணீர் தேவையில்லை. இன்னும் ஏழு ஆண்டில் காய்க்கத் தொடங்கிடும். நுங்கு. பதநீர் மட்டுமல்ல அவற்றிலிருந்து கருப்பட்டி. பனங்கற்கண்டுன்னு மதிப்புக்கூட்டுப் பொருள்களையும் உருவாக்கலாம். நம்முடைய மருதம் பண்ணையைச் சுற்றிலும் மொத்தமாக 50 பனைமரம் வெச்சிருக்கேன். வாம்மா, உள்ளே போவோம்!

தெரியுமா?

பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதநீரிலிருந்து பனங்கற்கண்டு கருப்பட்டி போன்றவற்றைத் தயாரித்து விற்பதன்மூலம் அதிக வருவாய் கிடைக்கும். இவ்வாறு ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவதை மதிப்புக் கூட்டுப்பொருள் என அழைக்கின்றனர்.

இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய். அதேநேரம் எளிதில் சிதைந்துவிடும் வகையில் மென்மையானதும்கூட. நிலத்தின் வளத்தை அக்கறையுடன் நன்முறையில் பராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்யும். விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்"

- மசானபு ஃபுகோகா

மங்கை : சித்தப்பா, நீங்க மதுரையில் வேலை பார்த்தப்ப பழைய முறையில்தானே வேளாண்மை நடந்திருக்கும். இன்றைக்கு உரம், பூச்சிக்கொல்லி என்று மண்ணே நஞ்சாகிப் போயிருக்கு.

சொக்கலிங்கம் : ஆமா, மங்கை! நிலத்தைச் சரிசெய்வதுதானே முதல் வேலை! அதற்கு முதல்ல அறுவடை முடிந்த பிறகு வைக்கோலைச் சமமாகப் பரப்பி, மடியச் செய்து மறுபருவம் வந்தவுடன் நிலத்தில் நீரைத் தேக்கி உழவேண்டும்.

மங்கை : வைக்கோலை மடியச் செய்து உழ வேண்டுமா?

மல்லிகா : ஆமாம் மங்கை இந்த வைக்கோல் மென்மையானதாகவும் லேசானதாகவும் தெரிகிறது. இந்த வைக்கோலின் உண்மையான மதிப்பை மக்கள் அறிந்துகொண்டால் உலகம் ஒருமுறை குலுங்கும். நிலத்தில் வைக்கோலைப் பரப்புவது, உரச்செடிகளை வளர்ப்பது, நிலத்தில் இருந்து கிடைக்கும் குப்பை கூளம். செடி செத்தைகளை நிலத்திற்கே கொடுப்பது என்ற செயல்கள் நெற்பயிரும் மாரிக்காலப் பயிரும் வளர்வதற்கான வளத்தைப் பூமிக்கு அளிக்கின்றன.

சொக்கலிங்கம் : பரவாயில்லையே! மல்லிகா. இவ்வளவு தெளிவாக வைக்கோலின் மகத்துவம் பற்றி அறிந்து வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வைச் செய்தவர் ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா. இவர் 1978ஆம் ஆண்டு, "ஒற்றை வைக்கோல் புரட்சி" என்னும் நூலை எழுதியவர். உழப்படாத நிலம், வேதியியல் உரம் இல்லாத உற்பத்தி, பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி, ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல் ஆகிய ஐந்து வேளாண்மை மந்திரங்களை உலகிற்குச் சொன்னவர். வைக்கோலை மடக்கி உழுவதோடு மட்டுமல்லாமல் பருவம் வந்தவுடன் நீரைத் தேக்கி உழுதல் வேண்டும். உமும்போது தொழு உரம் இட வேண்டும். ஆனா, ஒரே ஆண்டில் நிலத்தின் நஞ்சு நீங்காது. ரெண்டு மூன்று ஆண்டுகள் ஆகும்.

மங்கை : சித்தப்பா, தொழு உரம் என்றால்?

சொக்கலிங்கம் : தொழு உரம்னா, வேற ஒன்றுமில்லை, மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றைக் கலந்து வைக்கோலை மட்கச் செய்து உருவாக்க வேண்டும். இது நஞ்சை நிலத்துக்கு! புஞ்சைன்னா, காய்ந்த இலைச் சருகு, சாம்பல் ஆகியவற்றைக் கலந்து போட்டால் போதும். சாம்பல்னா எங்காவது போய், தொழிற்சாலைக் கழிவை எடுத்துவந்து போடக் கூடாது! ஆடு,மாடு முதலிய கால்நடைகளின் சாணத்தை எரிப்பதனால் கிடைக்கும் சாம்பல் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.

(இருவரும் பேசியபடி சரிவான பகுதிக்கு வருகிறார்கள்)

மங்கை : என்ன இது? முன்பு உங்கள் நிலத்தில் இப்படி ஒரு குளம் இல்லையே!

சொக்கலிங்கம் : ஆமாம் மங்கை, இந்த மருதம் பண்ணைக்கு வளமே, இந்தக் குளம்தான். பழைய கிணத்துல தண்ணீர் அதிகம் இறங்கிருச்சும்மா! நான் இங்கு வந்து இயற்கை வேளாண்மை செய்ய வேண்டும் என்று நினைத்தபோது, முதல்வேலை நிலத்தில் இருக்குற நச்சுத்தன்மையை நீக்கியது. அடுத்த வேலை, நீர்வளத்தை அதிகப்படுத்தியது.

மங்கை : அப்படின்னா,எத்தனை அடி ஆழத்தில் தண்ணீர் வந்தது! பழைய குளத்தையே, ஆழமாக்கினீங்களா? புதுசா வெட்டினீங்களா?

சொக்கலிங்கம் : அந்தத் தப்பை நான் செய்யவில்லை! சின்னச்சின்னதா வாய்க்கால் வெட்டினேன். பழைய கிணத்தைச் சுற்றிச் சின்னச்சின்ன மரக்கன்றுகளை நட்டேன். என் நல்ல நேரம், நல்ல மழை பெய்தது. வாய்க்கால் மூலமா வந்த தண்ணீர் இந்தக் குளத்துல தேங்குச்சு! தண்ணீரே இல்லாத பழைய கிணத்திலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது!

மங்கை : இந்த இடத்துல சில்லுன்னு நல்லாக் காற்று வருது. இது மரத்துல மோதி வருகிற காற்றா? நீரில் மோதி வருகிற காற்றா? என்ன சிலிர்ப்பு! வெயிலே தெரியவில்லை!

மல்லிகா : மங்கை, பண்ணையத்துக்கு வெயிலும் ரொம்ப முக்கியம்மா! மழைநீர்ச் சேகரிப்பால நமக்குக் கிணத்துத் தண்ணீர் மட்டம் உயர்ந்திருச்சு!

மங்கை : சித்தப்பா, நம்ம பண்ணையில் என்னவெல்லாம் விளைகின்றன? நிறைய மரங்கள் இருக்கின்றன. இதென்ன இந்தப் பயிர் புதுசா இருக்கு?

சொக்கலிங்கம் : மங்கை, இது உளுந்து. நெல்லுக்கு ஊடுபயிராகப் போடுவது! இதை அறுவடை செய்தபின், அதன் வேர் முடிச்சுகளில் இருக்கும் நைட்ரஜன், நிலத்தின் வளத்தைப் பெருக்கி அடுத்த விளைச்சலை அதிகரிக்கச் செய்யும்.

மங்கை : சரி! ஆனால்? பூச்சி விழுந்தா நாம பூச்சிக்கொல்லியத்தானே பயன்படுத்த வேண்டும்.

மல்லிகா : அதுதான் மங்கை, நாம கவனிக்க வேண்டியது. பூச்சிக்கொல்லி பயிரில் இருக்குற பூச்சிய மட்டும் கொல்லல, விளையற பயிர்க்குள்ளயும் ஊடுருவுகிறது. அதச் சாப்பிடுகிற மக்களுக்கு நெறய நோய் வருது! புற்றுநோய்,வயிற்றுப்புண், மலட்டுத் தன்மை. இன்னும் என்னென்னவோ சொல்றாங்க!

மங்கை : அது சரி! அப்புறம் எப்படிப் பயிரில் விழுகிற பூச்சிய விரட்டுறது? விளைச்சல் குறையாதா?

சொக்கலிங்கம் : ஏன் குறையப் போகுது? இயற்கை வேளாண்மைன்னா, ஒட்டு மொத்தமாவிதைக்கிறதுல இருந்து விளைச்சல் முடிகிற வரைக்கும் வேதிக்கலப்பே இருக்கக் கூடாதும்மா!

மங்கை : வேதிக்கலப்பு இல்லாத பூச்சிக் கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா?

சொக்கலிங்கம் : நம்ம முன்னோர்கள் எந்த வேதியியல் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துனாங்க? சொல்லு பார்ப்போம்? வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை எல்லாத்தையும் நல்லா இடிச்சுக் கோமியத்துல ஊற வச்சு அதைத் தெளிச்சா போதும்மா! பூச்சியெல்லாம் போயிரும்!

மங்கை : உண்மைதானா? சித்தப்பா!

சொக்கலிங்கம் : ஆமா மங்கை! அப்படித்தான் நாங்க செய்யறோம். பூச்சிகள் வருவது படிப்படியாக் குறையுது. அதோட நிலத்துல இருக்குற மண்புழு போன்ற சின்ன உயிர்கள் அழியறது தடுக்கப்படுது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்ப் பெருக்கத்துனால், மண்ணும் தன்னோட வளத்தை இழக்கிறதில்ல.

மங்கை : பூச்சிக்கொல்லி சரி? உரத்துக்கு என்ன பண்ணுறீங்க!

சொக்கலிங்கம் : ஏராளமான உரங்கள் போட்டால் விளைச்சல் கூடும்னு நினைச்சோம், மொதல்ல விளைச்சல் கூடுற மாதிரி இருந்தது! அப்புறம் நாளாக நாளாக மண்ணு நஞ்சாகி விளைச்சல் குறைந்தது! அதனால் இப்போதெல்லாம் உரத்தையும் இயற்கையாகவே உருவாக்கிக் கொள்கிறோம்.

மங்கை : நாம் பயன்படுத்துற உரம், மருந்து எல்லாமே இயற்கையா நம்மிடம் இருப்பது, சுற்றுச்சூழலைக் காப்பதற்கான வழியல்லவா?

சொக்கலிங்கம் : ஆமாம்மா, நுண்ணுயிர்ப் பெருக்கம் குறையாமல்... மண் சத்து வீணாகாமல் நிலமும் நல்லா இருக்கும்.

மங்கை : அப்படின்னா, விடாமல் மாறிமாறிச் சாகுபடி செய்யலாமா சித்தப்பா?

சொக்கலிங்கம் : இல்லை மங்கை! நிலத்தை ஆறப்போடணும், சரியான கால இடைவெளியில் மாறிமாறிப் பயிரிடணும். இதைப் பற்றியெல்லாம் இன்னும் நீ நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குச் சுற்றியுள்ள பண்ணைகள் சிலவற்றைப் பார்வையிடலாம். அரசும் வேளாண்மை அலுவலகம் மூலம் நிறைய வழிமுறைகளைச் சொல்கிறது; பயிற்சிகளையும் தருகிறது. அவற்றில் நீ கலந்துகொண்டு நல்ல வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளலாம்.

மங்கை : ஆடிப்பட்டத்துல உழவைத் தொடங்குகிறேன். பேசிக்கிட்டு இருந்ததுலே நேரம் போனதே தெரியல. வாங்க, வீட்டுக்குப் போவோம்.

Tags : Chapter 2 | 11th Tamil இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 2 : Maamalai potrutum : Prose: Iyarkai velaanmai Chapter 2 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : மாமழை போற்றுதும் : உரைநடை: இயற்கை வேளாண்மை - இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : மாமழை போற்றுதும்