இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 2 : Maamalai potrutum
இலக்கண தேர்ச்சி கொள்
1. குற்றியலுகரப் புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
விடை
❖ குற்றியலுகரச் சொற்களில் நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம், வருமொழி முதலில் உள்ள உயிரெழுத்துடன் புணரும்போது தான் ஏறிய மெய்யை விட்டு உகரம் மறையும். பின்னர் நிலைமொழி இறுதியில் உள்ள மெய் வருமொழியாகிய உயிரெழுத்துடன் புணரும்.
❖ எ.கா: மாசற்றார் - மாசு + அற்றார்
‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' மாச் + அற்றார்
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' (ச + அ = ச) மாசற்றார் எனப் புணர்ந்தது. கருவிழி, பாசிலை, சிறியன், பெருங்கல் ஆகிய சொற்களைப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக, கருமை + விழி
2. கருவிழி பாசிலை, சிறியன், பெருங்கல் ஆகிய சொற்களைப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
விடை
கருவிழி = கருமை + விழி
விதி : 'ஈறுபோதல்' என்ற விதிப்படி, கரு + விழி - கருவிழி எனப் புணர்ந்தது.
பாசிலை = பசுமை + இலை
விதி :‘ஈறுபோதல்’ என்ற விதிப்படி, பசு + இலை என்றானது.
விதி :‘ஆதிநீடல்’ என்ற விதிப்படி, பாசு + இலை என்றானது.
விதி : 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' என்ற விதிப்படி, பாச் + இலை என்றானது.
விதி : "உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்ற விதிப்படி, (ச் + இ - சி) பாசிலை எனப் புணர்ந்தது.
சிறியன் = சிறுமை + அன்
விதி : ‘ஈறுபோதல்’ என்ற விதிப்படி, சிறு + அன் என்றானது.
விதி : ‘இடை உகரம் ‘இ’ ஆதல்' என்ற விதிப்படி, சிறி + அன் என்றானது.
விதி :'இஈஐ வழியவ்வும்' என்ற விதிப்படி, சிறி + ய் + அன் என்றானது.
விதி : ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்ற விதிப்படி, சிறியன் எனப் புணர்ந்தது.
பெருங்கல் = பெருமை + கல்
விதி : ‘ஈறுபோதல்” என்ற விதிப்படி, பெரு + கல் என்றானது.
விதி : ‘இனமிகல்' என்ற விதிப்படி, பெருங்கல் எனப் புணர்ந்தது.
3. புணர்ச்சிவிதி தந்து விளக்குக.
புலனறிவு, வில்லொடிந்தது, வழியில்லை, திரைப்படம், ஞாயிற்றுச்செலவு,
விடை
புலனறிவு விதி = புலன் + அறிவு
விதி : 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி புலனறிவு எனப் புணர்ந்தது.
வில்லொடிந்தது = வில் + ஒடிந்தது
விதி : ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்' என்னும் விதிப்படி, வில் +ல் + ஓடிந்தது என்றானது.
விதி : 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி, வில்லொடிந்தது எனப் புணர்ந்தது.
வழியில்லை வழி + இல்லை
விதி : 'இஈஐ வழி யவ்வும்' என்னும் விதிப்படி, வழி + ய் + இல்லை என்றானது.
விதி : ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி, வழியில்லை எனப் புணர்ந்தது.
திரைப்படம் = திரை + படம்
விதி : ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்' என்னும் விதிப்படி, திரை + ப் + படம் = திரைப்படம் எனப் புணர்ந்தது.
ஞாயிற்றுச்செலவு = ஞாயிறு + செலவு
விதி : ‘நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டற ஒற்று இரட்டும்' என்னும் விதிப்படி, ஞாயி + ற் + று + செலவு என்றானது.
விதி : "இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்' என்னும் விதிப்படி, ஞாயிற்று + ச் + செலவு = ஞாயிற்றுச்செலவு, எனப் புணர்ந்தது.
4. விதி வேறுபாடறிந்து விளக்குக.
தன்னொற்றிரட்டல் - தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும். இனமிகல் - வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.
விடை
அ) தன்னொற்றிரட்டல்:
பண்புப்பெயர் புணர்ச்சிகளில் ஈறுபோதல் விதிப்படி 'மை' விதி நீங்கிய பிறகு நிலைமொழிஈறு உகர ஈறாகவும் வருமொழி முதல் உயிராகவும் இருப்பின் தன்னொற்று இரட்டல் விதியைப் பின்பற்றுதல் வேண்டும்.
சான்று: வெற்றிலை = வெறுமை + இலை
விதி மாற்றம்:
❖ ஈறுபோதல் வெறு + இலை
❖ தன்னொற்று இரட்டல் வெற்று + இலை
❖ உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் வெற்ற் + இலை
❖ உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே வெற்றிலை
தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்:
நிலைமொழியில் தனிக்குறில் முன் ஒற்று வந்து, வருமுதல் முதலில் உயிர் வந்தால் நிலைமொழியிலுள்ள ஒற்று இரட்டிக்கும்.
சான்று: கல்லதர் = கல் + அதர்
விதி மாற்றம்:
❖ தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் கல் + ல் + அதர்
❖ உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே கல்லதர்.
ஆ) இனமிகல்:
பண்புப்பெயர் புணர்ச்சிகளில் ஈறுபோதல் விதிப்படி 'மை' விருதி நீங்கிய பிறகு இனமிகள் விதியைப் பயன்படுத்த வேண்டும்.
சான்று: கருங்கடல் - கருமை + கடல்
விதி மாற்றம்
❖ ஈறுபோதல் கரு + கடல்
❖ இனமிகல் கரு + ங் + கடல் = கருங்கடல்
வளிமைக்கு இனமாத் திரிபவும் ஆகும்:
நிலைமொழியின் இறுதி மகர மெய்யாக இருக்கும் எனில், அச்சொல் மூன்று நிலைகளில் புணரும்.
சான்று: பாடம் + வேளை + பாடவேளை
விதி மாற்றம்: மகரமெய் கெட்டுப் புணரும்.
சான்று: பழம் + தோல் - பழ + தோல் - பழத்தோல்
விதி மாற்றம்: மகரமெய் கெட்டு வல்லினம் மிக்குப் புணர்ந்தது.
சான்று: காலம் + கடந்தவன் = காலங்கடந்தவன்
விதி மாற்றம்: வருமொழியின் முதலெழுத்துக்கேற்ப மகரமெய் திரிந்து புணர்ந்தது.
பொருத்துக,
அ) அடி அகரம் ஐ ஆதல் - செங்கதிர்
ஆ) முன் நின்ற மெய் திரிதல் - பெருங்கொடை
இ) ஆதிநீடல் - பைங்கூழ்
ஈ) இனமிகல் - காரிருள்
[விடை: அ) பைங்கூழ் ஆ) செங்கதிர் இ) காரிருளி ஈ) பெருங்கொடை]
5. கூற்றுகளைப் படித்துக் கீழ்க்காண்பவற்றுள் சரியானதைத் தேர்க.
அ) நிலைமொழியில் குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும்போது 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்' என்னும் விதியைப் பெறும்.
ஆ) நிலைமொழியின் ஈற்றில் இரஐ வரும்போது வகர உடம்படுமெய் பெறும்
இ) பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் "எறுபோதல்' என்னும் விதியே முதன்மையானதாக விளங்கும்.
ஈ) தன்னொற்றிரட்டல் எண்ணும் விதி பண்புப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொருந்தும்,
ii) அ, இ, ஈ - சரி, ஆ - தவறு
i) அ, ஆ, இ - சரி, ஈ. - தவறு
[விடை: ii) அ, இ, ஈ - சரி, ஆ - தவறு]
தெரிந்து தெளிவோம்.
மெய்ம்மயக்கம்
மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளையும், இறுதியில் வரும் எழுத்துகளையும் அறிந்துகொண்டதைப் போலவே மொழிக்கு இடையில் வரும் எழுத்துகளையும் அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறான எழுத்துகள் தமிழ்ச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் கண்டறியவும் பயன்படுத்தவும் உதவுகின்றன.
சொல்லின் இடையில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவது மெய்ம்மயக்கம் எனப்படும். இது உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என இரண்டு வகைப்படும்.
உடனிலை மெய்ம்மயக்கம்
சொற்களின் இடையில் ஒரேமெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும். தமிழில் க், ச், த், ப் ஆகிய மெய்யெழுத்துகள் தம் எழுத்துகளுடன் மட்டுமே சேரும் உடனிலை மெய்ம்மயக்க எழுத்துகள் ஆகும். இந்த எழுத்துகளின் அருகில் அவற்றுக்குரிய எழுத்து வரிசை மட்டுமே வரும். பிற எழுத்துகள் வாரா. அவ்வாறு வந்தால் அச்சொல் தமிழ்ச்சொல்லாக இருக்காது.
எடுத்துக்காட்டாக, பக்கம் என்ற சொல்லில் (ப + க் + க் + அ + ம்) க் என்னும் மெய்யெழுத்து தொடர்ந்து இருமுறை வந்துள்ளதைப் பாருங்கள். இதுபோலவே ச், த், ப் ஆகிய எழுத்துகளும் வரும்.
அச்சம் எச்சம்
மொத்தம் சாத்தன்
அப்பம் கப்பம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும். தமிழில் ர், ழ் ஆகிய இரண்டு மெய்யெழுத்துகள் தம் வரிசை எழுத்துகளுடன் சேர்ந்து வராமல் பிற மெய்யெழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும். எனவே, இவ்விரு மெய்யெழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரியவையாகும்.
ர் – தேர்தல், உயர்வு
ழ் – வாழ்பவன், சூழ்க
க், ச், த், ப், ர், ழ் ஆகிய ஆறனையும் தவிர்த்த ஏனையபன்னிரண்டுமெய்களும் உடனிலை மெய்ம்மயக்கமாகவும் வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் உள்ளன. இவற்றையும் மெய்ம்மயக்கம் என்றே கொள்ள வேண்டும்.
ட் - பட்டம், காட்சி ங்
ற் - வெற்றி, பயிற்சி
ங் - அங்ஙனம், தங்கம்
ஞ் - விஞ்ஞானம், மஞ்சள்
ண் - தண்ணீர், நண்பகல்
ந் - செந்நெறி, தந்த
ம் - அம்மா, அம்பு
ன் - மன்னன், இன்பம்
ய் - செய்யலாம், வாய்மை
ல் - நல்லவன், செல்வம்
வ் - இவ்விதம், தெவ்யாது
ள் - உள்ளம், கொள்கை
ஈரொற்று மெய்ம்மயக்கம்
தனிச்சொற்களிலோ கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் ய், ர், ழ் ஆகிய மெய்கள் ஈரொற்றாய் வரும்.
(மூன்று மெய்களாக மயங்கி வரும்) இதனை ஈரொற்று மெய்ம்மயக்கம் என்பர்.
ய் - காய்ச்சல், நாய்க்கால்,
ர் - உயர்ச்சி, தேர்க்கால்
ழ் - வீழ்ச்சி,காழ்ப்புணர்ச்சி
கற்பவை கற்றபின்
1. மாடித்தோட்டம் அமைக்கும் முறையை இணையத்தளம் மூலம் அறிந்து வகுப்பில் கலந்துரையாடுக.
விடை :
கலந்துரையாடுபவர்கள்: ஆசிரியர், மாணவ, மாணவியர் (மங்கை, குமார்).
ஆசிரியர் : மாணவர்களே நேற்று நம் வகுப்பில் இயற்கை வேளாண்மை குறித்துக் கற்பிக்கும் போது, இன்று பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும "மாடித்தோட்டம் அமைத்தல்” பற்றிய செய்திகளை அறிந்து கொண்டு வாருங்கள் என்றேன் அல்லவா? யாராவது அதைப்பற்றி தெரிந்து அறிந்து வந்தீர்களா?
மாணவர்கள் : ஆமாம் ஐயா, நாங்கள் இணையத்தளத்தில் தேடிப்பார்த்து அறிந்து கொண்டோம்.
ஆசிரியர் : சரி சரி! நீங்கள் அறிந்து கொண்டதை மற்றையோரும் அறியும் வகையில் கலந்துரையாடலாமா!
மங்கை : நகர்ப்புற வாழ்க்கை, தண்ணீர்ப்பற்றாக் குறை, தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்தல் இவற்றுக்காகவே மாடித்தோட்டம் அமைக்கத் தொடங்கினர்.
ஆசிரியர் : சரி சரி! மாடித்தோட்டம் அமைத்தல் எவ்வாறு? அதைப் பேசுங்கள்.
மங்கை : நம் மாடியின் தரைத்தளம் வீடு தண்ணீரில் பாதித்து விடாதபடி முதலில் தரையில் மிகப்பெரிய நெகிழி விரிப்பு ஒன்றை விரித்துக் கொள்ள வேண்டும். அதில் தேங்காய் நார்த்தூள், செம்மண் இவற்றைக் கலந்து அதில் தொழுஉரம் இட்டு பரப்பிக் கொள்ள வேண்டும்.
குமார் : இம்முறை மட்டுமல்ல தேங்காய் நார்க் கலவையை, செடியை வளர்க்க உதவும் பைகள், வண்ணம் வாங்கும் போது கிடைக்கும் வாளிகள் இவற்றில் கலந்து வைத்தும் செடிகளை வளர்க்கலாம்.
ஆசிரியர் : என்னென்ன செடிகள் வளர்க்கலாம்.
மங்கை : கீரை வகைகள், தக்காளி, சுத்தரி, வெண்டை போன்ற காய்கறிகள் ரோஜா, மல்லிகை, முல்லை போன்ற பூஞ்செடிகள் முதலியன வளர்க்கலாம்.
ஆசிரியர் : இதனால் என்ன பயன்?
குமார் : நமக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கும். பார்க்கும் போது மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.
ஆசிரியர் : மிகவும் நன்று!
குமார்-மங்கை : நன்றி ஐயா!
2. பள்ளியில் செயல்படும் தேசியப் பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவற்றின் வாயிலாக மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் உங்கள் செயல்பாடு குறித்து உரை நிகழ்த்துக,
விடை :
அனைவருக்கும் வணக்கம்!
இன்று நம் பள்ளியில் "தேசியப்பசுமைப்படை" மற்றும் * சுற்றுச்சூழல் மன்றத்தின் விழா நடைபெறுகின்ற இந்நாளில், இந்த இரு அமைப்புகளின் மூலமாக நம் பள்ளியில் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து நினைத்துப்பார்க்கிறேன்.
இவ்விரு அமைப்புகளையும் கொண்டு பள்ளியிலும், பள்ளியைச் சுற்றியுள்ள நம் ஊர்ப்பகுதிகளிலும் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறோம். அவற்றுள் ஒன்று மரக்கன்று வளர்த்தல். நான் ஒன்பதாம் வகுப்பு முதல் இப்பள்ளியில் பயின்று வருகின்றேன். அப்போதிருந்தே இவ்வமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறேன். "மரங்களின் இன்றியமையாமை, மரங்கள் எவ்வாறு மனிதனுக்கும், பிற உயிர்களுக்கும் பயன்படுகின்றன. மரம் எப்படி மனிதனின் மூச்சாகிறது என்பதையெல்லாம் எடுத்துக்கூறினேன். எங்கள் தெருவில் "வீட்டுக்கு ஒருமரம்" என்பதை செயல்படுத்தி வருகிறேன்.
அதுமட்டுமல்ல, எங்கெல்லாம் இடம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் "பிறந்தநாள்” மரங்கள் நடுவதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கிறேன். யார் மரம் நட்டார்களோ, அவர்களே தம் கரங்களால் பராமரிக்க வேண்டும் என்பதையும் வலியறுத்துகிறோம். "மரங்களின்றி மூச்சுக்காற்று கூட பெற இயலாது” அல்லவா! எனவே மரம் வளர்த்துப் பயன்பெறுவோம். நம் உயிர் உள்ள வரை மரங்களைப் பாதுகாப்போம்!
3. நகரங்களின் பெருக்கமும் பறவையினங்களின் அழிவும் -காரணங்களுடன் வகுப்பறையில் விவாதிக்க.
விடை :
நம் பண்டைத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். அனைத்து உயிர்களிடத்திலும் உயிர்நேயம் உடையவர்களாக வாழ்ந்தனர். அதனால் மனித இனமும் பிற உயிர்களும் இன்புற்று வாழ்ந்தன. காலம் செல்லச் செல்ல மக்கள் தொகை பெருக்கம் அதிகம் ஆகிறது. மனிதனின் தேவைகளும் பெருகின. அதனால் மனிதன் இயற்கையை அழிக்க முற்பட்டான். கிராமங்கள் எல்லாம் நகரங்களாக மாறத்தொடங்கின. பெரு நகரங்களையும், நகர்ப்புறங்களையும் மக்கள் நாடிச் செல்ல ஆரம்பித்தனர். மக்கள் பெருக்கத்தினாலும், நகர்ப்புற விரிவாக்கத்தினாலும் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், குடியிருப்புகள், சாலை வரிவாக்கம் இவற்றின் தேவைகளால் மரங்களை அழித்தான். அதனால் இயற்கையை நம்பி வாழ்ந்த பறவைகளின் வாழ்வாதாரம் குறையத் தொடங்கின.
எனவே, பறவைகள் அதன் வாழ்வாதாரத்தின் அழிவை சந்திக்கத் தொடங்கின. தகவல் தொடர்புக்காக அமைக்கப்பட்டுள்ள கோபுரங்களில் இருந்து வெளிவரும் நுண் அதிர்வலைகளும் பறவைகளின் அழிவுக்குக் காரணமாயின. இவ்வாறாக மனிதனின் அடிப்படைத் தேவைகளின் மாற்றங்கள், நகர்ப்புற வளர்ச்சி அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய இவை அனைத்தும் பறவைகளின் அழிவுக்குக் காரணம் ஆயின என்பதை மறுக்க முடியாது.
"பறவைகளைக் காப்போம்! மகிழ்வுடன் வாழ்வோம்!
இயற்கையைப் பேணுவோம்! பிற உயிர்களை வாழ்விப்போம்!”
4. உங்களது மழைக்கால அனுபவங்களைக் கவிதையாக வெளிப்படுத்துக.
விடை :
அன்றொரு நாள் ...
மாலை முதலே வானத்தில் ஆரவாரம்
ஒளியும் ஒலியுமாய் இடியும் மின்னலும்
பக்கவாத்தியமாய் பண்ணிசைக்கும் காற்று
இன்றாவது மழை வருமா... வந்து
எனக்குள் மகிழ்ச்சியைத் தந்தது
5. பிரமிளின் கவிதைத் தொகுப்பிலிருந்து உங்களுக்குப் பிடித்த கவிதையை வகுப்பறையில் காட்சிப்படுத்துக.
விடை
குமிழிகள்
“ இன்னும் ....
உடையாத ஒரு
நீர்க் குமிழி
தியில் ஜீவிக்க
நழுவுகிறது”
"நிலையற்ற தன்மை கொண்ட நீர்குமிழி சொல்லுகிற, நிலையாமை நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது.
6. பறவை பற்றி எழுதப்பட்ட கவிதைகள் சிலவற்றைத் தொகுத்துக் கையேடாக்குக.
விடை
கிளை கிடைக்க
வந்து அமருகிறது
ஒரு பறவை
அதன் எச்சத்தில் கீழே
சருகுகளின் மீது உராயும் சத்தம் பறவைக்கு
குற்றவுணர்ச்சியை ஏற்படுத்த
மீண்டும் பறக்கத் தொடங்கியது.
சுகம்
பறந்த வான் வெளி
சிறகுகளை நீள வீரித்து
காற்றுக் கடலில் சுகமாய் நீந்துகின்றன
சில பறவைகள் .....
7. உங்கள் பள்ளி வளாகத்தின் இயற்கைச்சூழலை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் ஏற்ற திட்டம் ஒளிறை உருவாக்குக.
விடை
எம் பள்ளி வளாகத்தின் இயற்கைச்சூழலை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட திட்டம் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகும். இத்திட்டத்தில் தன்னார்வம் உள்ள மாணவர்கள் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டு வாரம் ஒருமுறை பள்ளி வளாகத்தில் கூடுகை நடத்தி பசுமையை, இயற்கையைப் பாதுகாக்கத் திட்டமிடுவோம்.
❖ இருக்கின்ற மரம், செடி கொடிகளைப் பாதுகாத்தல்.
❖ புதியதாக மரக்கன்றுகளை நடுதல்.
❖ சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுதல்.
❖ இயற்கைச்சூழலை மேம்படுத்தத்தூண்டும் "முழக்கத்தொடர்கள்" கொண்ட பதாகைகள் ஆங்காங்கே வைத்தல்.
❖ இது நம் பூமி, நம் சொத்து இதனைப் பாதுகாப்பது வருங்கால சந்ததியாகிய நம் பொறுப்பு, என்பதை உணர்த்துதல்,
❖ ஒவ்வொரு வாரமும் கூடுகையின் போது மேற்கூறியத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு செயல்படுத்துதல்.
8. தமிழ் இலக்கியங்கள் காட்டும் பூக்கள் குறித்த செய்திகளைத் திரட்டி, தகவல் பலகையில் காட்சிப்படுத்துக,
விடை
ஆம்பல் (White Water Lily)
❖ நெய்தல் நில மலர்.
❖ நெய்தல் நிலத்தில் உள்ள அனைத்து வகையான நீர் நிலைகளிலும் மலரும் தன்மையுடையது.
❖ "நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்" என்று ஔவையும் பாடியுள்ளார்.
கொன்றை (Laburnum)
❖ தமிழ் இலக்கியத்தில் இடம் பெறுகிறது.
❖ சரக்கொன்றை, கடுக்கை என வேறு பெயர்கள் உண்டு.
❖ கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து ஆகிய இலக்கியங்களில் பாடப்படுகிறது.
குறிஞ்சி (Kurunji Malar)
❖ 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும்.
❖ இம்மலரை வைத்தே மலையும் மலை சார்ந்த இடமும் என்ற திணையே உருவாகியது என்பர் ஆய்வாளர்கள்.
காந்தள் (Malabar Glory Lily)
❖ செங்காந்தள் எனவும் அழைக்கப்படும்.
❖ குறிஞ்சிப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, கலித்தொகை ஆகிய இலக்கியங்களில் இம்மலர் பாடு பொருளாக இடம் பெற்றுள்ளது.
தளவம் (Pink Jasmine)
❖ செம்முல்லை என்றும் அழைக்கப்படும்.
❖ முல்லை நிலத்தில் மழைக்காலத்தில் மட்டுமே மலரும்.
❖ அடுக்கு மல்லி என்றும் பேச்சு வழக்கில் வழங்கப்படும்.
❖ ஐங்குறுநூறு, பொருநராற்றுப்படை ஆகிய இலக்கியங்களில் பேசப்படும் மலர் இது.
9. காட்டுவளமும் காட்டுயிர்களும் பாதுகாக்கப்படுதல் - உயிர்ச்சங்கிலி உயிர்ப்புடன் அமைதல் இரண்டு கருத்துகளுக்கும் வலுச்சேர்க்கும் வகையில் கருத்தாடல் நிகழ்த்துக.
விடை
அன்பார்ந்த மாணவர்களே!
இயற்கையைப் பாதுகாப்பதில் முதன்மையானது. காட்டு வளத்தைப் பாதுகாத்தல் ஆகும். காடே அனைத்து உயிர்களுக்கும் புகலிடம் ஆனது. ஆதிகாலத்தில் மனிதன் காட்டுயிர்களோடு ஓர் உயிராக காடுகளில் தான் வாழ்ந்து வந்தான். தன்னையும் பாதுகாத்து தனக்கு ஆதாரமாய் விளங்கிய காட்டையும் பாதுகாத்து, அனைத்து உயிர்களையும் நேசித்தான்.
காட்டு வளமே பல்லுயிர்ப் பெருக்கத்துக்குக் காரணமாய்த் திகழ்கிறது. காட்டின் உயிர்களாகிய புல், பூண்டு முதல் விலங்கு, பறவைகள் அனைத்தும் வளமுடன் இருந்தால்தான் உயிர்ச்சங்கிலி உயிர்ப்புடன் இருக்கும்.
உயிர்ச்சங்கிலி என்பது என்ன தெரியுமா? மாணவர்களே, உயிரியல் சுழற்சி என்று ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள். புல் பூண்டு தாவர வகைகளை உண்டு வாழும் வண்டினம், பூச்சிகள், விலங்குகள், பறவைகள் ஒன்றுக்கொன்று உணவு, முறைகளிலும் வாழ்வியல் கூறுகளிலும்
சார்ந்திருப்பது உயிர்ச்சங்கிலி ஆகும். உயிர்ச்சங்கிலி உயிர்ப்புடன் இருந்தால்தான் சமூக வாழ்வு சிறந்து இருக்கிறது என்று பொருள். உயிர்ச்சங்கிலி உயிர்ப்புடன் திகழ கடல்வாழ் உயிரினம், மலைவாழ் உயிரினம், காட்டில் வாழும் உயிரினம் என இவை அனைத்தும் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலையில் சார்ந்தே அமைந்துள்ளது. இவ்வாறு உயிர்ச்சங்கிலி மூலம் இயற்கையே ஒவ்வொரு உயிரினத்தையும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைத்துள்ளது.
இயற்கையை அழிப்பதாலும் வாழ்வியல் முறைகள் மாறுவதாலும் “Web of life” எனப்படும் இந்த உயிர்ப்பிணைப்பு, உயிர்ச்சங்கிலி பிணைப்பு சற்று தளர்ந்துள்ளது என்று சுற்றுப்புற ஆய்வாளர்களும், சுற்றுப்புறவியல் ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
10. நீங்கள் அண்மையில் படித்த சிறுகதை ஒன்றை வகுப்பறையில் கூறுக.
விடை
குழந்தைகளுக்கான குட்டிக்குட்டிக் கதைகள் நூலில்,
பார்வையற்றவர் கேட்ட வரம்
ஓர் ஊரில் கண்பார்வையற்ற ஒருவன் இருந்தான். பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு மனதில் மிகவும் கவலை. கண்கள் இல்லாமல் படைத்து, வாழ்வதற்கு வசதியும் இல்லாமல் செய்துவிட்டானே இறைவன்!
இறைவா என் வாழ்வை மாற்று என தினந்தினம் மனம் உருகி வேண்டினான்.
கடவுள் ஒரு நாள் வந்தார். ஒரே ஒரு வரம் தான் 'கேள்' என்றார், பார்வையற்றவன் கேட்டான். என் பேரன் ராஜவீதியில் தங்கத்தேர் ஓட்டி விளையாடுவதை ஏழாவது மாடியில் உள்ள என் அறையில் இருந்து நான் நூறாண்டுகள் பார்த்து மகிழ வேண்டும் என்றான்.
கடவுளே அதிர்ந்து போய்விட்டார். ஆனால் சொன்னபடி ஒரு வரம் கொடுத்தார்.
மாணவர்களே, இக்கதையின் சாரம் என்ன தெரியுமா. நாம் “விவேகத்துடனும், புத்திசாலித் தனத்துடனும்” நடந்து கொண்டால் அனைத்தும் பெறலாம். எந்த நிலையிலும் உங்கள் உணர்ச்சிக்கு இடம் கொடுத்து அறிவை இழந்துவிடாதீர்!
11. புணர்ச்சி விதிகள் ஏன்? இதிலிருந்து நீங்கள் பெறும் பயன்களைத் திரட்டுக.
விடை
சொற்புணர்ச்சியின்போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களை சுருங்கச் சொல்லும் வரையறைகளை புணர்ச்சி விதிகள் என்பர்.
பயன்கள்:
❖ மொழி ஆளுகையைப் புரிந்து கொள்ள புணர்ச்சி விதி பயன்படுகிறது.
❖ புணர்ச்சி இலக்கணம் தெரிந்தால்தான் எந்த இடத்தில் ஓரெழுத்து மிகும், எந்த இடத்தில் கெடும், எந்த இடத்தில் இன்னொரு எழுத்தாகத் திரியும் என்னும் விதியை அறிந்து மொழியைப் பிழையில்லாமல் பேசுவதற்குப் பயன்படுகிறது.