பருப்பொருளின் பண்புகள்
PROPERTIES OF MATTER
உலகம் தோன்றியதிலிருந்து தற்காலம் வரை உருவாக்கப்பட்ட பல மிகப்பெரும் முன்னேற்றங்கள் பருப்பொருளின் பண்புகள் பற்றிய அறிவை மனிதகுலத்திற்கு பயனுள்ள சில தேவையாக மாற்றவேண்டுமென்ற ஊக்கமான விருப்பத்தின்படி செய்யப்பட்டதாகும்- லார்டு கெல்வின்
கற்றலின் நோக்கங்கள்:
இந்த அலகில் மாணவர்கள் அறிந்து கொள்ள இருப்பது
• பருப்பொருளில் அணுக்களிடையே அல்லது மூலக்கூறுகளிடையே உள்ள விசைகள்
• தகைவு, திரிபு மற்றும் மீட்சிக்குணகம்
• பரப்பு இழுவிசை பாகுநிலை
• பாய்மங்களின் பண்புகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
அறிமுகம்
உலகத்தில் உள்ள பழமையான அணைகளில் ஒன்று திருச்சியில் அமைந்துள்ள கல்லணை ஆகும். கல்லணை காவிரி ஆற்றின் குறுக்கே பாசனத்திற்காக கட்டப்பட்டது. காவிரி ஆற்றில் அதிக வெள்ளப் பெருக்கின் போது நீரின் வேகம் பொதுவாக மிக அதிகமாக இருக்கும். கல்லணையின் உறுதித்தன்மையும், அதன் பயன்பாடும், இதனை 2 ஆம் நூற்றாண்டிலேயே வடிவமைத்த தமிழர்களின் உள்ளுணர்வுள்ள அறிவியல் புரிதலை வெளிப்படுத்துகிறது. முற்காலத்தின் அறிவுப் பூர்வமான கட்டுமானங்களுக்கு மற்றொரு உதாரணம் எகிப்தில் உள்ள பிரமிடுகள் ஆகும். தற்காலத்தில் உலகம் முழுவதும் மேம்பாலங்கள் மற்றும் பாலங்கள் ஏராளமாக உள்ளன. கனரக வாகனங்களின் இயக்கத்தால், பாலங்கள் எப்பொழுதும் தகைவுக்கு உட்படுகின்றன. தகுதியான பொருள்களைக் கொண்டு முறையாக வடிவமைக்கவில்லை எனில் பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் உறுதியாக இருக்காது. பருப்பொருளின் பல்வேறு வடிவங்களை (திண்மம், திரவம் மற்றும் வாயு) புரிந்து கொள்வதன் மூலம் மனித நாகரீக வளர்ச்சி அமைந்துள்ளது.
பருப்பொருளின் பண்புகளைக் கற்பது, ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக எந்த ஒரு பொருளையும் தேர்வு செய்ய மிகவும் தேவையான ஒன்றாகும். உதாரணமாக, தொழில்நுட்பத்தில் விண்வெளி பயன்பாடுகளில் பயன்படுத்தும் பொருள்கள் எடை குறைவானதாகவும் ஆனால் உறுதியானதாகவும் இருக்க வேண்டும். செயற்கை மனித உறுப்பு மாற்றும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் பொருள்கள் திசு இணக்கமானதாக இருக்க வேண்டும். மருத்துவத்தில் கதிரியக்க சிகிச்சை முறைகளில் திசுக்களுக்கு மாற்றாக செயற்கை உடல் திரவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாய்மங்கள் உயவுப்பொருளாகப் பயன்பட அவை சில பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். இந்த பேரியலான பண்புகள், பருப்பொருளுக்கு உள்ளேயே நடைபெறும் நுண்ணிய நிகழ்வுகளால் முடிவு செய்யப்படுகிறது. இந்த அலகு திண்மங்கள் மற்றும் பாய்மங்களின் பண்புகள் மற்றும் பருப்பொருளின் செயல்பாட்டைக் கையாளும் விதிகளை விளக்குகிறது.