Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | துணைப்பாடம் கவிதைப்பேழை: இசைத்தமிழர் இருவர்

இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம் கவிதைப்பேழை: இசைத்தமிழர் இருவர் | 11th Tamil : Chapter 6 : Palkalai niruvu

   Posted On :  09.08.2023 06:42 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு

துணைப்பாடம் கவிதைப்பேழை: இசைத்தமிழர் இருவர்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு : துணைப்பாடம் கவிதைப்பேழை: இசைத்தமிழர் இருவர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 6

விரிவானம்

இசைத்தமிழர் இருவர்

 

நுழையும்முன்

இசை! கலைகளின் மகுடம்! உணர்வுகளின் வினையூக்கி. இசை, குருதியைச் சூடேற்றும்; உயிரை உருக்கும்; ஆழ்கடல் அமைதியாய் மனத்தை உறங்க வைக்கும். இரசனையின் முகவரிக்கு இசைமொழியில் கடிதமெழுதும் காற்றின் கவிஞர்களே இசைக்கலைஞர்கள். தமிழகத்தின் நுழையும்முன் காட்டிலும் மேட்டிலும் வயல் சேற்றிலும் தவழ்ந்த இசையைச் சீராட்டி, மெருகூட்டி உலகுக்குத் தந்து மகிழ்ந்தவர் இருவர். இவ்விருவரும் உலக இசைப்பேரேட்டின் தமிழகத்து முத்திரைகள்; அவர்கள், சிம்பொனித் தமிழர் இளையராஜா, ஆஸ்கர் தமிழர் .ஆர். இரகுமான் ஆகியோர் ஆவர்.

 

சிம்பொனித் தமிழர்


ஆசியக் கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, சிம்பொனி இசைக்கோவையை உருவாக்கும் திறன் கைவராது என்பது மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டமாகும். இந்தக் கற்பனைவாதத்தை உடைத்து ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவுக்கு சிம்பொனி இசைக்கோலத்தை அமைத்துக்காட்டியவர் இசைமேதை (மாஸ்ட்ரோ) இளையராஜா. அவர், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தைச் சேர்ந்தவர், அவருடைய இயற்பெயர் இராசையா. தாய் பாடும் தாலாட்டில் தொடங்கித் தமிழ்நாட்டின் அனைத்து இசை வடிவங்களையும் அசைபோட்டு வளர்ந்த தமிழினத்தின் பெருமைக்குரிய இசை மேதை அவர்,

அன்னக்கிளி படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவின் இசையோட்டம் தமிழர் வாழ்ந்த திசைகளில் எல்லாம் தென்றலாய் நுழைந்து புதிய வாசல்களைத் திறந்தது. அவரிடமிருந்து புதுப்புது மெட்டுகள் சிறகு விரித்தன. கண்களை மூடிக்கொண்டு இளையராஜாவின் பாடல்களைக் கேட்டால், பாடலின் ஒவ்வொரு சரணத்திற்கு இடையிலும் அவர் சுழற்றும் இசைச் சிலம்பம் நம்மைப் புதிய திசைகளில் பறக்க வைக்கும். அவர், பழந்தமிழ் இசையையும் உழைக்கும் மக்களின் துள்ளல் இசையையும் மனத்தை மயக்கும் வகையில் கலந்து தந்தார். இவர், திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர்; பல இராகங்களுக்குத் திரையிசையில் கொடுத்த அறிமுக மெட்டுகள் மெல்லிசையில் புதிய உயரங்களைத் தொட்டன.

1970களின் தொடக்கத்தில் பிறமொழிப் பாடல்கனைச் சுமந்து திரிந்த தமிழ்ச்செவிகள் விடுதலை பெற்று, தமிழ்ப்பாடல்களை நோக்கித் திரும்பியதற்கு இளையராஜாவே காரணமெனலாம். எழுபது, எண்பதுகளில் மெல்லத் தோன்றிப் புது வேகம்கொண்ட சமூக மாற்றங்களின் குறியீடாக இளையராஜாவின் இசை திகழ்ந்தது. பின்னணி இசையிலும் பாடல் இசையிலும் விடுபட்டுப்போன வாய்மொழித் தன்மை, யதார்த்தம் ஆகியன பொதிந்த அவருடைய இசை, சாமானியரையும் ஈர்த்தது; அவர்களது வாழ்வின் தருணங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதோடு அமைப்புக்கு அப்பாற்பட்ட இசை இயக்கமாகவும் மாறியது. அவர், தமிழ்ச் செய்யுனின் யாப்போசைக் கட்டமைப்புக்குள் இருக்கின்ற இசை ஒழுங்கைப் புரிந்துகொண்டு திரைப்பாடல்களைச் செவியுணர் கணிகளாகவும் பண்பாட்டு வெளிப்பாடாகவும் மாற்றிய பெருமைக்குரியவர்,

அவருடைய இசை ஐவகை நிலப்பரப்புகளையும் காட்சிப்படுத்தும் மெட்டுகளைக் கொண்டது. இன்றளவும் நெடுந்தொலைவுப் பயணங்களின் வழித்துணையாக அவரின் இசை இருப்பதற்கு இதுவுமொரு காரணம். வற்றாத நதிகள் பாயும் மலைகள் நிறைந்த ஜம்மு, காஷ்மீரின் பஹார் இன மக்களின் நாட்டுப்புற இசையில் புல்லாங்குழலில் வழிந்தோடும் பஹாடி முதல் மதுரை மக்களின் கிராமிய இசையிலிருந்து முகிழ்த்துச் செவ்வியல் இசையில் கோலோச்சும் ஆனந்தபைரவி (அன்னக்கிளி உன்னைத் தேடுதே) வரை அவரின் இசையில் பண்கள் இழையோடுகின்றன. எம்மொழியில் இசையமைத்தாலும், அவர் அம்மண் மணத்துடன் தம்மை இணைத்து இசையமைப்பதே, மக்கள் அவருடைய இசையில் ஒன்றுவதற்குக் காரணமாகும்.

பெற்ற விருதுகள் சில:

இந்திய அரசு - பத்ம விபூஷண் விருது

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது

சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது

தமிழ்நாடு - கலைமாமணி விருது

மத்தியப்பிரதேசம் - லதா மங்கேஷ்கர் விருது

கேரளம் - நிஷாகந்தி சங்கீத விருது

இந்திய இசைமேதைகள் அனைவராலும் மதிக்கப்படுபவர் இளையராஜா. அவரின், 'எப்படிப் பெயரிடுவேன்?' (HOW TO NAME IT?) என்னும் இசைத்தொகுப்பும் புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்ட 'காற்றைத் தவிர ஏதுமில்லை' (NOTHING BUT WIND) என்னும் இசைத்தொகுப்பும் இசையுலகின் புதிய முயற்சிகள் எனக் கொண்டாடப்பட்டன. மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி போன்ற மனித உணர்வுகளுக்கும் இசை வடிவம் கொடுக்க முடியும் என்பதை "இந்தியா 24 மணிநேரம் (INDIA 24 HOURS)" என்னும் ஆவணக் குறும்படத்தின் பின்னணி இசையில் வெளிப்படுத்தினார்.

மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு ஆரட்டோரியோ (0ratorio) என்னும் சை வடிவில் இசையமைத்துள்ளார். 'இராஜாவின் ரமணமாலை", "இளையராஜாவின் கீதாஞ்சலி' என்னும் தமிழ் இசைத்தொகுப்புகளையும் கன்னட மொழியில் 'மூகாம்பிகை' என்ற பக்தி இசைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் ஆதிசங்கரர் எழுதிய மீனாட்சி ஸ்தோத்திரம் என்ற பக்திப்பாடலுக்கும் இசையமைத்துள்ளார். பஞ்சமுகி என்ற கர்நாடகச் செவ்வியல் இராகம் அவர் உருவாக்கியதாகும்.

இளையராஜாவின் இசை நுணுக்கம்

தமிழகத்தின் நாட்டுப்புற இசை வடிவத்தைத் திரையிசையில் தவழவிட்டவராகவே இசைஞானி இளையராஜா அறியப்படுகிறார். ஆனால், மேற்கத்திய இசையை முறைப்படி பயின்ற காரணத்தால் நாட்டுப்புற இசையின் செவ்வியல் தன்மைகளோடு மேற்கத்திய இசையைக் கலந்து உலவவிட்டார். கவிஞர், மனத்தில் உருவகித்துக் காகிதத்தில் எழுதுவதுபோல், மனத்தின் இசையைக் குறியீடுகளாகக் காகிதத்தில் எழுதிவிடுவார். இசைஞானி தன் தேடலின் மூலம் மேற்கத்திய இசையுடன் கர்நாடக, இந்துஸ்தானி இராகங்களையும் திரையிசையில் பயன்படுத்தியிருக்கிறார்.

நாட்டுப்புறப் பாடலுக்குக் கர்நாடக இசை வடிவமும் கல்யாணி இராகத்தின் ஆரோகண சுரங்களைக்கொண்டே (ஏறுவரிசைச் சுரங்கள்) கலைவாணியே உனைத்தானே' என்னும் பாடலுக்கு மெட்டமைத்திருக்கிறார். மூன்றே மூன்று சுரங்கணைக்கொண்டு ஒரு தெலுங்குப் பாடலுக்கு இசையமைத்தும் இருக்கிறார்; நான்கே இசைக்கருவிகளைக்கொண்டு ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். முழுத் திரைப்படத்துக்கும் அரை நாளில் பின்னணி இசையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார் (நூறாவது நாள்). பிற நாட்டின் இசைவடிவத்தை நம் மண்ணுக்கேற்ற வகையில் மாற்றம் செய்வதோடு திரைப்படப் பின்னணி இசைக்கோவையைக்கூட உணர்வின் மொழியாக மாற்றித் தருவதே அவருடைய தனிச்சிறப்பாகும்.

தமிழ் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு. மலையாளம், கன்னடம், மராத்தி என நம் நாட்டின் பிற மொழிப்படங்களுக்கும் இசையமைத்திருக்கின்றார். இளையராஜா இசைக்கலைஞர் மட்டுமல்லர்; சிறந்த ஒளிப்படக் கலைஞர்; கவிஞர்: பாடகர்; 'பால்நிலாப் பாதை', 'வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குது' உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கும் எழுத்தாளரும் ஆவார்.

பரிபாடலில் நோதிறம், பாலையாழ், காந்தாரம் முதலிய பண்கள் காணப்படுகின்றன. சைவத்திருமுறைகளில் காரைக்கால் அம்மையார் நட்டபாடையிலும் இந்தளத்திலும் பாடியுள்ளார்.

தேவாரத்தில் 23 பண்களில் பாடல்கள் உள்ளன. தேவாரத்தில் இல்லாது நாலாயிர திவ்ய பிரபஞ்சத்தில் மட்டும் காணப்படும். பண்கள்: நைவளம், அந்தாளி, தோடி, கல்வாணம், பியந்தை, குறண்டி, முதிர்ந்த இந்தளம் ஆகியவை. சாளரபாணி என்ற பண் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் .காணப்படுகிறது...

மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடலான "நம்ரதா கே சாகர்" என்னும் பாடலுக்கு இசையமைத்து, இந்துஸ்தானி இசைப் பாடகர் அஜொய் சக்கரபர்த்தியைப் பாடவைத்து இசைக்கோவையை வெளியிட்டிருக்கிறார். ஆசியாவிலேயே முதன்முதலில் சிம்பொனி (Symphony) என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக் கோவையை உருவாக்கியவர் இவரே. சிம்பொனி இசைப் பணியை எழுதக் குறைந்தது ஆறு மாதமாவது ஆகும்; வெறும் பதின்மூன்று நான்களில் இச்சாதணையை நிகழ்த்தியிருக்கிறார். பண்டைய தமிழரசர்களின் ஆட்சி வட இந்தியா வரையிலும் பரவியிருந்தது. ஆனால், இளையராஜாவின் இசை ராஜாங்கமோ உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.

 

 

ஆஸ்கர் தமிழர்

அமெரிக்காவின் கோடாக் அரங்கில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கும் தருணம். இன்னும் சில நிமிடங்களில் இசைக்கான விருதுக்குரியவர் அறிவிக்கப்பட இருக்கிறார். அவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து இசையமைப்பாளர்களும் தம்முள் விருதுக்குரியவர் யார்? என அறியும் ஆவலில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களில் நால்வர் அவ்விருதுக்குப் பலமுறை பரிந்துரைக்கப்பட்டவர்கள்; ஒருவர் மட்டுமே புதியவர். அவருக்கே 2009ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படப் பின்னணி இசை இசைக்கான ஆஸ்கர் விருது என்று அறிவிக்கப்பட்டது.


அரங்கத்தின் கரவொலி அடங்குவதற்கு முன்பே சிறந்த திரையிசைப் பாடலுக்கான விருதுக்கும் இவரின் பெயரே அறிவிக்கப்படுகிறது. இரண்டு ஆஸ்கர் விருதுகள் ஒருவருக்கே! இரு கரங்களிலும் விருதுகளை ஏந்தியவாறு உரையைத் தொடங்கியவர், தம் தாய்மொழியான தமிழில் உரையை நிறைவு செய்கிறார். ஆம்! அவர்தான், உலக அரங்கில் சாதனை நாயகனாய்த் திகழும் இசைப்புயல் .ஆர். இரகுமான்.

தம் இசைக்குக் கிடைத்த இரு விருதுகளையும் கையில் ஏந்திய நிலையில், கடந்து வந்த பாதை அவர் கண்முன்னே நிழலாடியது. இவருடைய தந்தை ஆர்.கே. சேகர் மலையாளத் திரைப்பட உலகில் புகழுடன் விளங்கிய இசைக்கலைஞர், இளம்வயதிலேயே .ஆர். இரகுமான் தம் தந்தையின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டார். தந்தையைச் சூழ்ந்திருந்த இசைக்கருவிகள் அவருள் இசை வேட்கையைத் தூண்டின. இசைக்கலைஞர்கள் வியக்கும் வகையில் நான்கு வயதிலேயே ஹார்மோனியம் இசைப்பதில் திறமை பெற்றிருந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்து குடும்பப் பொறுப்புகளை ஏற்கும் சூழல் ஏற்பட்டதனால் பண்ணிப்படிப்புக்கு இடையூறு ஏற்பட்டது.

இசைக்குழுக்களில் இரவெல்லாம். பணியாற்றிவிட்டு நேராகப் பள்ளிக்குச் செல்வார். பள்ளியின் நுழைவுவாயிலில் இவரின் தாயார் காத்திருந்து இவருக்குச் சீருடை அணிவித்தும் உணவளித்தும் வகுப்பிற்கு அனுப்பி வைப்பார்,  இத்தகைய வாழ்க்கைப் போராட்டத்தால் பள்ளிப்படிப்பு பதினோராம் வகுப்புடனே முடித்துவிட்டது.

.ஆர். இரகுமான், 1992ஆம் ஆண்டு ரோஜா என்னும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகத் தமது திரையிசைப் பயணத்தைத் தொடங்கினார்

பிங்கல நிகண்டு என்னும் நூலில் 103 பண்கள் காணப்படுகின்றன. பண்கள், பாடும் காலங்களுக்கு ஏற்றவாறு பகல் பண், இரவுப் பண், பொதுப் பண் என்று வகுக்கப்பட்டுள்ளன.

இவரின் இசை, தமிழ்த்திரைப்பட இசையுலகில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது. தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற சிறப்பினைப் பெற்றார். தம் இசைப்பங்களிப்பால் இளைஞர் உலகின் இசை ஆளுமையாக வளர்ந்தார். அடுத்தடுத்த படங்களில் அவர் வெளிப்படுத்திய மெல்லிசை, கேட்டவர் நெஞ்சங்களில் எல்லாம் சிம்மாசனமிட்டு அமர்ந்தது. தமிழ் யாப்பிலக்கணத்தின் நால்வகைப் பாக்களில் கலிப்பாவின் ஓசை துள்ளல் ஓசையாகும். இந்தத் துள்ளலோசைக்கு மயங்காதவர்களே உலகில் இல்லை எனலாம். தோற்கருவியால் துடித்தெழும் இந்தத் துள்ளல் ஓசை, கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடு. தமிழ் மக்களின் நெடிய வாழ்வியல் மரபில். துள்ளல் ஓசைச் சாயல் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும். இதனை நுட்பமாக உணர்ந்த .ஆர். இரகுமான் தம் இசைக் கட்டத்துக்குள் நின்று இளைஞர்களை ஆடவும் பாடவும் வைத்தார்.

உலகை வெற்றிகொள்ளப் புறப்பட்ட தமிழர்களுடன் வலம்வந்த இசைத்தோழமை .ஆர். இரகுமான். தொண்ணூறுகளில் தொழில்நுட்பக்கல்வி பயின்று உலகெங்கும் பரவிய தமிழ் இளைஞர்களை இணைத்தது அவர்தம் இசை. அவர், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இசை, பண்பாட்டுக் குறியீடுகளைத் தம் இசையில் தவழவிட்டார். இணைய வழியில் உலவும் இனைஞர்களின் கனவை, இசையாக மொழிபெயர்த்துக் காலப் பதாகையில் ஒலிவண்ணம் தீட்டினார்.

பெற்ற விருதுகள் சில:

இந்திய அரசு - பத்ம பூஷண் விருது

தமிழ்நாடு - கலைமாமணி விருது

கேரளம் - தங்கப் பதக்கம்

உத்திரப்பிரதேசம் - "ஆவாத் சம்மான்" விருது

மத்தியப்பிரதேசம் - "லதா மங்கேஷ்கர்" விருது

மொரீஷியஸ் - தேசிய இசை விருது

மலேசியா - தேசிய இசை விருது

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் - சர்வதேச இசை விருது

நாட்டுப்புற இசை. கர்நாடக இசை. இந்துஸ்தானி இசை இவற்றுடன் மேற்கத்திய உலகளாவிய இசை முறைகளையும் கலந்து, புதிய கணினித் தொழில்நுட்ப உதவியுடன் உலகத்தரத்தில் இசையமைத்ததுடன் பல இனம் பாடகர்கனையும் அறிமுகம் செய்தார்.

இரகுமானிடம் எல்லோரும் இரசித்துக் கேட்பது அவரின் 'தாளம் உருவாக்கும் முறை'. ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்குமுன் அதற்கான தாளத்தைத்தான் முதலில் உருவாக்குவார். பாடலுக்கான சூழலை மனத்தில் உள்வாங்கிக்கொண்டு, அதற்கேற்ற தானக்கட்டை உருவாக்கி அதனுள் அமிழ்ந்திருக்கும் பாடலுக்கான மெட்டை வெளிக்கொணர்வார். ஒரு சிறந்த மெட்டு எப்படி ஈர்க்கிறதோ, அதுபோலப் பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வரும் இசையும் மக்களை ஈர்க்கும்படியாக இசையமைப்பதில் வல்லவர். மெட்டுக்கு இணையான இசைக்கோவையை வழங்கியதில் தனித்துவமாணவர் இளையராஜா எனில், அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் இரகுமான் ஆவார்.

இவர் இசையமைத்த "வந்தே மாதரம்", "ஜன கண மன" என்னும் இசைத்தொகுதிகள். நவீன இசை வடிவில் நாட்டுப்பற்று உணர்வை மிளிரச் செய்தன. மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிப்படங்களுக்கும் இசையமைத்ததோடு இந்தித் திரைப்பட உலகத்திலும் தம் இசை முத்திரையைப் பதித்தார். மேலை நாட்டுத் திரைப்படங்களுக்கும். நாடகங்களுக்கும் இசையமைத்து உலக இசையமைப்பாளர்கள் வரிசையிலும் தம்மை நிலைநாட்டிக்கொண்டார். வெவ்வேறு கலாச்சார மக்களையும் தம் இசையால் ஒருங்கிணைத்ததுடன் திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்திய சிறப்பும் இவருக்குண்டு.

'ஸ்லம்டாக் மில்லியனர்" என்ற திரைப்படத்தின் இசைக்காக, 'கோல்டன் குளோப் விருது பெற்றதன் மூலம் உலகளாவிய புகழ் பெற்றார். அவ்விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே. இவரின் ஆஸ்கர் சாதனை, சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு வாழ்க்கைப் பாடமாகும்; அதே படத்தின் இசைக்காக கிராமி விருதையும் பெற்றார்.

தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இசைக்கென்று ஓர் இன்றிமையாத இடமுண்டு. அதில், இளையராஜா, .ஆர். இரகுமான் ஆகியோரின் வருகை புகழ் மகுடமாக ஒளிர்கின்றது.

Tags : Chapter 6 | 11th Tamil இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 6 : Palkalai niruvu : Supplementary: Isaitamilar iruvar Chapter 6 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு : துணைப்பாடம் கவிதைப்பேழை: இசைத்தமிழர் இருவர் - இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு