புள்ளியியலின் பரப்பு
புள்ளியியல் பரப்பு மிகவும் விரிந்ததாகும். மனிதனின் அனைத்து நடவடிக்கைகளிலும் அது பொதிந்துள்ளது. பொருளியல், தொழில், வணிகம், கல்வியியல், திட்டமிடல், மருத்துவம் போன்று பல துறைகளிலும் அது தேவைப்படுகிறது. பின்வரும் பகுதி புள்ளியியல் எவ்வாறு பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதனை நமக்கு விளக்குகிறது.
பொருளியலில் புள்ளியியல்
பொருளியலில் பல பிரச்சனைகள் உள்ளன. உதாரணத்திற்கு, உற்பத்தி, வருமானம், வேலைவாய்ப்பு, பகிர்வு, நுகர்ச்சி, சேமிப்பு, செலவு மற்றும் இவை தொடர்பான எண்ணற்ற ஆய்வுக்குரிய வினாக்கள் தோன்றும். வினாக்களுக்கு விடை தேடும் ஆய்வுகளுக்கு புள்ளிவிவரங்கள் இன்றியமையாதவை. எடுகோள்களை உருவாக்குவது, விவரங்களை திரட்டுவது, வகைப்படுத்துவது, பகுப்பாய்வு செய்வது, முடிவுகளை எடுப்பது, கொள்கைகளை வகுப்பது என புள்ளியியல் பொருளியலில் இரண்டறக் கலந்துள்ளது.
தொழிலில் புள்ளியியல்
தொழிற்சாலைகளில் புள்ளியலின் பயன்கள் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளது. மிக முக்கியமாக தரக்கட்டுப்பாட்டு நுட்பம் (Quality Control) இங்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட தரத்தில் பொருட்கள் இருக்கின்றனவா என்பதை சோதிக்க இந்நுட்பம் பயன்படுகிறது.
புள்ளியிலும் வணிகமும்
உயிர்வாழ இரத்தம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு வணிகத்திற்கு புள்ளியியல் முக்கியமானதாகும். நடப்பு நிலைகளை புரிந்துகொள்ளவும், எதிர்கால போக்கினை உணர்ந்து கொள்ளவும் சந்தை ஆய்வுகள் மிகமுக்கிய பங்காற்றுகின்றன. உற்பத்தியும், சந்தையிடலும் ஒருசேர நடப்பதில்லை. உற்பத்தியை முன்கூட்டியே திட்டமிட வேண்டியுள்ளது. அவ்வாறு திட்டமிடுவதற்கு புள்ளியியலின் தேவை அவசியமாகும்.
புள்ளியியலும் கல்வியியலும்
மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய கல்விக்கான தேவையை கண்டறிவதில் புள்ளியியல் மிகப்பெரிய பங்கினை வகிக்கின்றது. அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் ஆய்வு மற்றம் மேம்பாட்டுத் துறைகள் இருக்கின்றன. இத்துறைக்கு புள்ளிவிவரங்கள் பெரிதும் உதவுகின்றன. பழைய அறிவினை சோதித்துப் பார்ப்பதும், புதிய அறிவினைப் பெறுவதும் புள்ளிவிவரங்களின் மூலமே சாத்தியமாகும்.
புள்ளியியலும் திட்டமிடலும்
திட்டமிடலில் புள்ளியியல் தவிர்க்க இயலாத ஒன்றாகும். இன்றைய நவீன உலகு திட்டமிடல் உலகு எனப்படுகிறது. அனைத்து அரசுத் துறைகளும் சிறப்பாக இயங்கும் பொருட்டு திட்டமிடலின் அடிப்படையிலேயே செயல்படுகிறது. முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், அதை செயல்படுத்துவதிலும் புள்ளிவிவரங்கள் துணை செய்கின்றன. மேற்கூறியவைகளை செய்ய பல்வேறு புதிய புள்ளியியல் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் மைய, மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் திட்டமிடலின் அடிப்படையிலேயே செயல்படுகிறது.
புள்ளியியலும் மருத்துவமும்
மருத்துவத்தில் புள்ளியியல் பெருமளவுக்குப் பயன்படுகிறது. உடல் சோதனைகள் அனைத்தும் புள்ளிவிவரங்களாக தொகுக்கப்படுகிறது. அவ்வாறு தொகுக்கப்படும் விவரங்களின் அடிப்படையிலேயே மருத்துவர் சிகிச்சை அளிக்கின்றார். தொடர் மருத்துவ கண்காணிப்பிலும், சிகிச்சைகளிலும் புள்ளிவிவரங்களின் மற்றும் பகுப்பாய்வு முறைகளின் பங்கும் இன்றியமையாதது. மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அனைத்திலும் புள்ளியியலின் பல்வேறு பகுதிகள் பயன்படுகிறது.
புள்ளியியலும் நவீன பயன்பாடுகளும்
கனிணி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைத் தன்னகத்தே ஏற்றுக்கொண்ட புள்ளியியல், நிறுவனங்களின் முடிவெடுத்தலில் புதிய மாதிரிகளை உருவாக்கி துல்லியமான முடிவுகளை எடுக்க உதவுகிறது. இப்பணியினை செய்வதற்கு பல புதிய மென்பொருட்களை உருவாக்கியுள்ளனர்.