பாடச்சுருக்கம்
• ஒருபொருளின் அணுக்களுக்கு இடையே உள்ள விசை அணுவிடை விசை மற்றும் பொருளின் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள விசை மூலக்கூறிடை விசை ஆகும்.
• ஹீக் விதி : மீட்சி எல்லைக்குள் தகைவானது திரிபுக்கு நேர்த்தகவில் உள்ளது.
• ஓரலகு பரப்பில் செயல்படும் விசை தகைவு ஆகும். ஒரு பொருளின் குறுக்கு வெட்டுப்பரப்பு A மற்றும் செலுத்தப்பட்ட விசை F எனில் தகைவின் எண் மதிப்பு F/A. இழுவிசை அல்லது அமுக்கத்தகைவு இரண்டையும் ஒரே வார்த்தையில் நீட்சித்தகைவு எனக்கூறலாம்.
• ஒரு உருளையின் நீளமாறுபாட்டிற்கும் அதன் தொடக்க நீளத்திற்கும் இடையே உள்ள தகவு ∆L/L ஆனது நீட்சித்திரிபு எனப்படும்.
• மீட்சி எல்லைக்குள் நீட்சித் தகைவுக்கும் நீட்சித்திரிபுக்கும் இடையே உள்ள விகிதம் கம்பிப் பொருளின் யங்குணகம் எனப்படும்.
• மீட்சி எல்லைக்குள் பருமத்தகைவிற்கும் பருமத்திரிபுக்கும் இடையே உள்ள விகிதம் பருமக்குணகம் எனப்படும்.
• மீட்சி எல்லைக்குள் சறுக்குப் பெயர்ச்சித் தகைவிற்கும் சறுக்குப்பெயர்ச்சித் திரிபுக்கும் இடையே உள்ள விகிதம் விறைப்புக் குணகம் எனப்படும்.
• பாய்ஸன் விகிதம் = பக்கவாட்டுத்திரிபு / நீளவாட்டுத்திரிபு
• ஓரலகு பருமனில் கம்பியில் சேமிக்கப்பட்ட மீட்சி நிலை ஆற்றல் U = 1/2 × தகைவு × திரிபு = 1/2 × Y × (திரிபு). இங்கு Y என்பது பொருளின் யங்குணகம் ஆகும்.
• A என்ற மேற்பரப்பில் செயல்படும் செங்குத்து விசை F எனில் அழுத்தமானது ஓரலகு பரப்பில் செயல்படும் விசை என வரையறுக்கப்படுகிறது.
• நீர்மப்பரப்பிலிருந்து h ஆழத்தில் மொத்த அழுத்தமானது P = Pa + ρgh, இங்கு Pa என்பது காற்றழுத்தம், மற்றும் அதன் மதிப்பு 1.013 × 105 Pa ஆகும்.
• பாஸ்கல் விதிப்படி ஓய்வில் உள்ள பாய்மத்தில் ஒரே உயரத்தில் உள்ள அனைத்துப் புள்ளிகளிலும் அழுத்தம் சமமாகும்.
• மிதப்பு விதியின்படி ஒரு பொருளின் மூழ்கிய பகுதி வெளியேற்றும் திரவத்தின் எடை பொருளின் எடைக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், பொருளானது அத்திரவத்தில் மிதக்கும்.
• ஒரு நீர்மத்தின் பாகியல் எண் என்பது நீர்மத்தின் ஓரலகு பரப்பில் நீர்ம இயக்கத் திசைக்கு செங்குத்துதிசையில் ஓரலகு திசைவேகச் சரிவைக்கொண்டுள்ள நீர்மத்தின் தொடுவரைத்திசையில் செயல்படும் பாகியல் விசை ஆகும்.
• ஒரு நீர்ம ஓட்டமானது ஒரு புள்ளியைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நீர்மத்துக்களும் ஒரே பாதையில் அதற்கு முன் கடந்த துகளின் வேகத்திலேயே கடந்தால் அந்த ஓட்டம் வரிச்சீர் ஓட்டம் எனப்படும்.
• பாய்ம ஓட்டத்தில் திசைவேகமானது மாறுநிலைத் திசைவேகத்தைத் தாண்டினால் ஓட்டமானது சுழற்சி ஓட்டமாக மாறுகிறது.
• ஒரு உருளை வடிவ குழாயின் வழியே பாய்ம ஓட்டம் வரிச்சீரா அல்லது சுழற்சி ஓட்டமா என முடிவு செய்வதால் ரெனால்டு எண் முக்கியத்துவம் பெறுகிறது.
• ஸ்டோக் சமன்பாடு F = 6πηav. இங்கு a ஆரமுள்ள கோளத்தின் மீது செயல்படும் பாகியல் விசை F மற்றும் v ஆனது கோளத்தின் முற்றுத்திசைவேகம் ஆகும்.
• ஒரு நீர்மத்தின் பரப்பு இழுவிசையானது நீர்மப் பரப்பில் வரையப்பட்ட ஓரலகு நீளமுள்ள கற்பனைக் கோட்டின் வழியே கோட்டிற்கு செங்குத்தாக, பரப்பிற்கு இணையாகச் செயல்படும் இழுவிசை என வரையறுக்கப்படுகிறது.
• திரவம் மற்றும் திண்மப்பொருள் திரவத்தினுள்ளே சந்திக்கும் புள்ளியில் வரையப்பட்ட தொடுகோடுகளுக்கு இடையே உள்ள கோணம் திடம் மற்றம் திரவ இணையுன் சேர்கோணம் எனப்படும்.
• கொடுக்கப்பட்ட ஒரு புள்ளியில் கடந்து செல்லும் ஒவ்வொரு பாய்மத்துக்களின் திசைவேகமும் காலத்தைப் பொறுத்து மாறாமல் இருப்பின் பாய்ம ஓட்டம் சீரான ஓட்டம் எனலாம்.
• a1 v1 = a2 v2, என்ற சமன்பாடு ஒரு குழாயின் வழியே செல்லும் பாய்மத்திற்கான தொடர்மாறிலிச் சமன்பாடானது. பாய்ம ஓட்டத்தில் பாய்மத்தின் நிறை மாறாமல் உள்ளதன் காரணமாக அமைகிறது. அதன்படி, ஒரு வரிச்சீர் ஓட்டத்தில் உள்ள அமுக்க இயலாத, பாகுநிலையற்ற பாய்மத்தின் ஓரலகு நிறைக்கான அழுத்த ஆற்றல், இயக்க ஆற்றல் மற்றும் நிறை ஆற்றல் ஆகியவற்றின் கூட்டுத்தொகை மாறிலியாகும். அதாவது P/ρ + v2/2 + gh = மாறிலி.