இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: கலைச்சொல்லாக்கம் | 11th Tamil : Chapter 6 : Palkalai niruvu
இயல் 6
இனிக்கும் இலக்கணம்
கலைச்சொல்லாக்கம்
(பள்ளியின் இணைய இதழுக்காக அகராதியியலர் செழியன் அவர்களுடன் மாணவர்கள் முத்து, தமிழ்க்கனல் நேர்காணல்)
முத்து : வணக்கம் ஐயா !
செழியன் : வணக்கம்.
முத்து : தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
செழியன் : மகிழ்ச்சி.
தமிழ்க்கனல் : இப்பொழுதுள்ள பேச்சு வழக்கில் ஆங்கிலச்சொற்கள் மிகுதியாகக் கலந்து மக்களால் பேசப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்குரிய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தும் வழக்கம் குறைந்து வருகிறது. இதற்கான காரணத்தைச் சொல்லுங்கள் ஐயா.
செழியன் : அப்படி முழுமையாய்ச் சொல்லிவிடமுடியாது. சான்றாக cellphone என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கைபேசி, செல்லிடப்பேசி, அலைபேசி போன்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இவ்வாறான சொற்களை உருவாக்கிக் கொள்ளும் முறைமைக்குக் கலைச்சொல்லாக்கம் என்று பெயர். அறிவியலுக்கு ஏற்புடைய கலைச்சொற்கள் வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன சில கலைச்சொற்கள் பொருத்தமில்லாமல் உள்ளன. காலத்திற்கேற்ப வளரும் சில துறைகளில் கலைச்சொற்களின் தேவை மிகுதியாக இருக்கிறது. எனவே, நாம் கலைச்சொற்களை உருவாக்கும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
முத்து : கலைச்சொற்கள் என்றால் என்ன?
செழியன் : ஒரு மொழியில் காலத்திற்கேற்ப. துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக, உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களைக் கலைச்சொற்கள் என்கிறோம். ஒரு மொழி தன் வேர்ச்சொற்களைச் கொண்டு புதிய புதிய கலைச்சொற்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும். இவ்வாறு உருவாக்கிக் கொள்ளும்போது மொழி தன்னைப் புதுப்பித்துக்கொண்டு புதிய செழிப்பினைப் பெற்று மேலும் வளர்ச்சி பெறும். எடுத்துக்காட்டாக website,
blog போன்றவை தகவல் தொழில்நுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள். இவற்றிற்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களாக உள்ள இணையம், வலைப்பூ போன்றவை தகவல்தொழில் நுட்பக் கலைச்சொற்கள் ஆகும். கலைச் சொற்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே இருக்கும்.
தமிழ்க்கனல் : அகராதியில், கலைச்சொற்கள் குறித்து அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளதா?
செழியன் : பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவதே அகராதியின் நோக்கம். ஆனால், கலைச்சொல்லாக்கம் என்பது பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை அடையாளம் காட்டியும் தேவையானவிடத்துப் புதிதாகச் சொற்களை உருவாக்கியும் தருவதாகும்.
முத்து : கலைச்சொற்கள் பயன்படும் துறைகள் பற்றிக் கூறுங்கள் ஐயா.
செழியன் : நம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகள், வேளாண்மை, மருத்துவம், பொறியியல், தகவல் தொடர்பியல் முதலான துறைசார்ந்த கலைச்சொற்கள் இன்றைய அறிவியல் சூழலுக்கேற்பப் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ்க்கனல் : அவ்வாறான கலைச்சொற்கள் சிலவற்றைச் சொல்லுங்கள்....
செழியன் : மருத்துவமனை (CLINIC), குருதிப்பிரிவு (BLOOD GROUP) மருந்தாளுநர் (PHARMACIST), ஊடுகதிர் (
X - RAY ), குடற்காய்ச்சல் (TYPHOID), களிம்பு (OINTMENT) முதலியவை மருத்துவக் கலைச்சொற்கள்; எழுதுசுவடி (NOTE BOOK), விடைச்சுவடி (ANSWER BOOK) பொதுக் குறிப்புச் சுவடி (ROUGH NOTE BOOK), விளக்கச்சுவடி (PROSPECTUS) போன்றவை கல்வி சார்ந்த கலைச்சொற்கள். இவ்வாறு துறை சார்ந்த கலைச்சொற்கள் இலட்சக் கணக்கில் தமிழில் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் உள்ள புதிய சுவைச்சொற்களைத் தொகுத்து அகரவரிசைப்படுத்திக் கலைச்சொல் அகராதிகள் வெளியிடப்படுகின்றன.
முத்து : கலைச்சொல்லாக்கப் பணியின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் எவையேனும் உள்ளனவா?
செழியன் : தமிழில் கலைச்சொல்லாக்கப் பணி தொடங்குவதற்குமுன் நாம் பின்வரும் விதிமுறைகள் சிலவற்றைக் கருத்தில் கொள்ளல் வேண்டும்.
ஆக்கப்பெறும் சொல் தமிழ்ச்சொல்லாக இருத்தல் வேண்டும்.
பொருள் பொருத்தமுடையதாக, அதே நேரத்தில் செயலைக் குறிப்பதாக அமைதல் வேண்டும்.
வடிவில் சிறியதாக, எளிமையாக இருத்தல் வேண்டும்.
ஓசை நயமுடையதாக இருத்தல் வேண்டும்.
தமிழிலக்கண மரபுக்கு உட்பட்டதாய் இருத்தல் வேண்டும். நல்லவை அல்லாதவற்றைக் குறிக்கக்கூடாது.
தமிழ்க்கனல் : கலைச்சொல் உருவாக்கத்தில் மாணவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கவேண்டும்?
செழியன் : நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில், அதற்கான கலைச்சொல் ஆக்கங்களும் நிகழ்ந்துகொண்டே உள்ளன. பெரும்பாலும் அவை ஏட்டளவில் இருக்கின்றன. அக்கலைச் சொற்களை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும். எடுத்துக்காட்டாக, இ-மெயில், ஸ்மார்ட்ஃபோன், விண்டோஸ் 10.8G ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக மின்னஞ்சல், திறன்பேசி, பலகணி 10, 8ஆம் தலைமுறை போன்ற கலைச்சொற்கள் தமிழில் உள்ளன. இப்பணிக்கு இதழ்களும் ஊடகங்களும் துணைநிற்க வேண்டும்.
முத்து : புதிய கண்டுபிடிப்புகளுக்கான கலைச்சொற்களை எங்கிருந்து பெறலாம்?
செழியன் : இதழ்கள் மின்இதழ்கள். தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையத்தளம் போன்றவற்றிலிருந்து பெறமுடியும். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் இருபதிற்கும் மேற்பட்ட துறைகளுக்குக் கலைச்சொற்களை வெளியிட்டுள்ளது. பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழில் கவைச்சொற்களுக்கெனத் தனியிடம் ஒதுக்கி, மாணவர்களிடையே கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
தமிழ்க்கனல் : கலைச்சொற்கள் சிலவற்றை அறிமுகப்படுத்துங்கள் ஐயா.....
செழியன் : அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்கலைச்சொற்கள்.
Smartphone - திறன்பேசி
Touch
screen - தொடுதிரை
Bug - பிழை
Gazette - அரசிதழ்
Despatch - அனுப்புகை
Subsidy - நல்கை
Ceiling - உச்சவரம்பு
Circular - சுற்றறிக்கை
SubJunior - மிக இளையோர்
Super
Senior - மீமூத்தோர்
Carrom - நாலாங்குழி ஆட்டம்
Sales
Tax - விற்பனைவரி
Customer - வாடிக்கையாளர்
Consumer - நுகர்வோர்
Account - பற்று வரவுக் கணக்கு
Referee - நடுவர்
மேலும், இவை போன்ற பலதுறைச் சொற்களையும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.
முத்து : தமிழில் கலைச்சொற்களின் இன்றியமையாமையைக் கூறுங்கள்...
செழியன் : உலகின் தொன்மையான மொழிகளுள் இன்றும் நிலைத்து நிற்கின்ற மொழி, தமிழ்மொழி. காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழியே வாழும். மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப அறிவியல் ஆகியவற்றைத் தமிழ்வழியில் பயில, கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாக உள்ளது. தாய்மொழி வழியிலான சிந்தனை மட்டுமே புதிது புதிதான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.உலகின் எந்த மூலையில் எவ்வகையான கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும் உடனுக்குடன் ஜப்பானியர்கள் தங்கள் மொழியில் புதிய சொல்லை உருவாக்கிவிடுவர். தாய்மொழி வழியில் ஜப்பானியர்கன் அறிவியல் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்பதால் அங்கே நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. கலைச்சொல்லாக்கம் இல்லையென்றால் அவற்றை நாம் ஒலிபெயர்ப்புச் சொல்லாக மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, கலைச்சொற்களை நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது இன்றியமையாதது.
தமிழ்க்கனல் : நீங்கள் கூறிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு கலைச்சொல் அகராதியை உருவாக்கும் பணியை இன்றிலிருந்தே தொடங்குகிறோம். நன்றி ஐயா.
முத்து : கலைச்சொற்கள் தொடர்பான பல பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஐயா..
அறிவியல் கலைச்சொற்களைத் தமிழாக்குவதில் உள்ள முறைகள் குறித்து அறிவியல் அறிஞர் வா.செ. குழந்தைசாமி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
பழந்தமிழிலக்கியச் சொல்லைப் பயன் படுத்துதல்
- வலவன் (PILOT)
பேச்சுமொழிச் சொல்லைப் பயன்படுத்துதல்
- SHILD
OLD (MEASLES)
பிறமொழிச் சொல்லினைக் கடன்பெறல்
- தசம முறை
(Decimal)
புதுச்சொல் படைத்தல் -
மூலக்கூறு
(Molecule)
உலக வழக்கை ஏற்றுக் கொள்ளல்
- எக்ஸ் கதிர்
(X-ray)
பிறமொழித்துறைச் சொற்களை மொழி பெயர்த்தல்
- ஒளிச்சேர்க்கை (Photosynthesis)
ஒலிபெயர்த்துப் பயன்படுத்தும் சொற்கள்
- மீட்டர், ஓம்
(Meter, Ohm)
உலக அளவிலான குறியீடுகள்,
சூத்திரங்கள்
- ∑ √A = πr2 H2O, Ca
தமிழில் கலைச்சொற்களை உருவாக்கிடும்போது பழந்தமிழிலக்கியச் சொற்களையும் பேச்சுவழக்குச் சொற்களையும் புதிய சொற்களையும் இயன்றவரை பயன்படுத்தல் வேண்டும். அன்றாட உரையாடலில் நாம் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கலைச்சொல்லாக்கப் பணியில் ஈடுபடுவோர், பிறமொழிச்சொற்களை அப்படியே கையாள்வதையோ ஓலிபெயர்ப்புச் சொற்களாக மாற்றுவதையோ கடன்வாங்குவதையோ தவிர்த்தல் வேண்டும். நாம் கலைச்சொல்லாக்கப் பணியில் ஈடுபடும்போது தமிழில் எண்ணற்ற புதிய சொற்களை உருவாக்குவதோடு படைப்புகள் சார்ந்த அறிவையும் பெறலாம்.
தெரிந்து தெளிவோம்
ஒரு சொல்லை மொழிபெயர்க்கும்போதோ அல்லது புதிய சொல்லை உருவாக்கும்போதோ அச்சொல் அதே போன்ற வேறு பல சொற்களை உருவாக்க உதவ வேண்டும்.
எடுத்துக்காட்டாக,
library என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நூலகம்,
நூல்நிலையம் ஆகிய சொற்கள் கையாளப்படுகின்றன.
இச்சொற்களில் நூலகம் என்னும் சொல்லே மேலும் பல சொற்களை உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டது.
library
- நூலகம், librarian - நூலகர்,
library science - நூலக இயல்.
இன்றைய நிலையில் பலரும் கலைச்சொற்களை உருவாக்கிய வண்ணம் உள்ளனர்.
கற்றறிந்தோர்,
கற்றறியாதோர்,
கைவினைஞர்கள்,
பயிற்றுநர்,
மாணவர்கள்,
மகளிர்,
குழந்தைகள் எனப் பலரும் கலைச்சொற்களைத் தாமாகவே உருவாக்குகின்றனர்.
அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கும்போது பல்வேறு சொற்களை ஆள்கின்றனர்.
எடுத்துக்காட்டாக,
Amibiotics - எதிர் உயிர்ப்பொருள்,
நுண்ணுயிர்க் கொல்லிகள்,
உயிர் எதிர் நச்சுகள்,
கேடுயிர்க் கொல்லிகள்,
நச்சுயிர்க் கொல்லிகள் எனப் பல்வேறு கலைச்சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இக்கலைச்சொற்கள் தமிழில் சொல்லாக்க வளர்ச்சியினை வெளிப்படுத்துவனவாக உள்ளன.
ஆனால்,
கலைச்சொற்களைக் கற்பதிலும் அவற்றைப் புரிந்துகொள்வதிலும் துறைசார்ந்த நிலையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவற்றைத் தவிர்க்க அச்சொற்களைத் தரப்படுத்திப் பயன்படுத்த வேண்டும்.
இதற்கென குழு ஒன்றை உருவாக்கலாம்.
'தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதத் தொடங்கிய பாரதி, Member என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லொன்றை உருவாக்க முனைந்தார். மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். அவயவி சரியான வார்த்தையில்லை. அங்கத்தான் கட்டிவராது. சபிகன் சரியான பதந்தான். ஆனால் பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன்; உறுப்பாளி? ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக மெம்பர் என்று எழுதி விட்டேன். இன்னும் ஆர, அமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன்.
தெரிந்து தெளிவோம்
நிறுத்தக்குறிகள்
மொழியைக் கற்கும் ஒருவர் படித்தல், எழுதுதல், கேட்டல், பேசுதல் என்னும் பல்வேறு திறன்களை உள்ளடக்கியவராக விளங்கவேண்டும். குறிப்பாகப் படித்தல் என்னும் திறனானது வரிவடிவத்தைக் காணுதல், முறையாக ஒலித்தல், பொருள் உணர்தல் ஆகிய மூன்று செயல்களை உள்ளடக்கியதாகும். இவற்றுள் எந்தச் செயலில் குறைவு ஏற்பட்டாலும் படித்தல் என்பது முழுமையடையாது.
ஒரு தொடரையோ பத்தியையோ கட்டுரையையோ படிக்கும்போது, பொருள் உணர்வுக்கு ஏற்ப, நிறுத்திப் படிக்க வேண்டிய இடத்தில் நிறுத்தியும் சேர்த்துப் படிக்க வேண்டிய இடத்தில் சேர்த்தும் வியப்பு, அச்சம், வினா முதலிய உணர்வுகள் வெளிப்படும் இடங்களில் அவற்றை வெளிப்படுத்தியும் படிக்க வேண்டியது படிப்பவர்தம் கடமையாகும்.
பேருந்து, தொடர்வண்டி, வானூர்தி போன்றவை நிற்கும் இடத்திற்கு 'நிறுத்தம் என்பது பெயர். அவற்றைப் போலவே, மக்கள் உணர்வின் இயக்கமாக விளங்கும் மொழியின் இயக்கத்திற்கும் நிறுத்தம் உண்டு. வண்டிகள் சாலை விதிகளுக்கு ஏற்ப இயங்கவும் நிறுத்தவும் விகைவும் ஒதுங்காமல் பின்வரவும் எனக் குறிகள் (விளக்குகள், ஒலிகள்) உள்ளமை போலச் சொற்றொடர் நிறுத்தங்களுக்கும், குறிகள் என்னும் அடையாளங்கள் உண்டு. அவற்றிற்கு 'நிறுத்தக்குறிகள்' என்று பெயர் எடுத்துக்காட்டாக,
“மறைமலையடிகள் மரணத்தின்பின் மனிதர்நிலை என்னும்நூலை இயற்றினார்" மறைமலையடிகளார் எழுதிய நூல்களை அறிந்திராத ஒருவர், நிறுத்தக்குறிகள் இடம்பெறாத இத்தொடரைப் படிக்கும்போது மரணத்துக்குப்பின் அவர் எப்படி நூல் எழுத முடியும்? என்று வினவுவார். ஆனால், மறைமலையடிகள் என்னும் பெயருக்குப்பின் காற்புள்ளியும் மரணத்தின்பின் மனிதர்நிலை என்பவற்றின் முன்னும் பின்னும் மேற்கோள்குறியும் இட்டு,
மறைமலையடிகள்,
'மரணத்தின்பின் மனிதர்நிலை என்னும் நூலை இயற்றினார்.
என்று எழுதும்போது பொருள் தெளிவாகிவிடும் அல்லவா! எனவே, நிறுத்தக்குறிகள் ஒரு தொடரில் உள்ள பொருள்வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாக விளங்குகின்றன என்க.
நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்திப் படிக்க முயலும்போது தெளிவாகப் பொருள் உணர்ந்து, படிப்பவர்களும் கேட்பவர்களும் பயன்பெறுவர். நிறுத்தக்குறிகளை இடாமல் எழுதுவதோ இடம் மாற்றி இக்குறிகளை இடுவதோ தொடரின் பொருளையே மாற்றிவிடும். சிலவேளைகளில் முற்றிலும் பிழையான பொருளைத் தந்துவிடும். எனவே, நிறுத்தக்குறிகள் மொழியைத் தெளிவாகப் பேசவும் படிக்கவும் எழுதவும் துணைநிற்கின்றன.
இனி, நிறுத்தக்குறிகள் சிலவற்றையும் அவற்றை எவ்வெவ்விடத்தில் பயன்படுத்தப்படவேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் காண்போம்.
காற்புள்ளி (, )
பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும்.
● அறம்,பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு.
● நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும்.
● இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.
● ஐயா; அம்மையீர்,
● சிறியவன் பெரியவன். செல்வன் ஏழை.
முக்காற்புள்ளி (;)
சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற்புள்ளி வருதல் வேண்டும்.
● சார்பெழுத்து :
● பத்துப்பாட்டு
2:248
● எட்டுத்தொகை என்பன வருமாறு:
முற்றுப்புள்ளி (.)
தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் முற்றுப்புள்ளி வருதல் வேண்டும்.
● உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
● தலைமையாசிரியர், அரசு மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
● தொல் சொல்.58.
● 18/02/2018.
அரைப்புள்ளி (;)
தொடர்நிலைத் தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி வருதல் வேண்டும்.
● வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
● சீர் -
மாறுபாடு இல்லாதது; அளவு; இயல்பான தன்மை; ஒழுங்கு; சமம்; நேர்த்தி; அழகு; சீதனம்; செய்யுளின் உறுப்பு
வினாக்குறி ( ? )
ஒரு வினாத்தொடர், முற்றுத்தொடராகவும் நேர்கூற்றுத் தொடராகவும், இருப்பின், இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.
● அது என்ன? (முற்று)
● நீ வருகிறாயா? என்று கேட்டான். (நேர்கூற்றுத் தொடர்)
வியப்புக்குறி (!)
வியப்புக்குறி, வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும் நேர்கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி வருதல் வேண்டும்.
● எவ்வளவு உயரமானது!
● என்னே தமிழின் பெருமை! என்றார் கவிஞர்
● வா! வா! வா! போ! போ! போ!
விளிக்குறி (!)
அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் விளிக்குறி பயன்படுத்த வேண்டும். வியப்புக்குறியும் விளிக்குறியும் ஒரே அடையாளக்குறி உடையன.
● அவையீர் !
● அவைத்தலைவீர் !
மேற்கோள்குறி (‘ ‘ , “ “)
ஒற்றை மேற்கோள்குறி, இரட்டை மேற்கோள்குறி என இருவகைப்படும்.
ஒற்றை மேற்கோள்குறி வரும் இடங்கள்
ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைப்பெயர், நூற்பெயர் குறிக்கும் இடம்,பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ஒற்றைக்குறி வருதல் வேண்டும்.
● ‘ஏ’ என்று ஏளனம் செய்தான்.
● பேரறிஞர் அண்ணா 'செவ்வாழை' என்னும் சிறுகதை எழுதினார்.
● 'கம்பனும் மில்டனும்' என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும்.
● 'செவிச்செல்வம் சிறந்த செல்வம்' என்பர்.
இரட்டை மேற்கோள்குறி வருமிடங்கள்
நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும் இரட்டைக்குறி வருதல் வேண்டும்.
● "நான் படிக்கிறேன்"
என்றான்.
● “ஒழுக்கமுடைமை குடிமை"
என்றார்.
நிறுத்தக்குறிகள் எல்லாம் வெறும் அடையாளங்கள் அல்ல. அவையெல்லாம் பொருள்பொதிந்த அடிப்படையில் தோன்றியவை என்பதை மாணவர்கள் நன்குணர்ந்து அவற்றைப் பின்பற்றிப் பேசவும் எழுதவும் வேண்டும்.
பழங்காலத்தில் பனை ஓலைகளிலோ கல்வெட்டுகளிலோ ஒரு பாடல் அல்லது உரைநடைப் பகுதியை எழுதி முடித்ததும் அதனை எழுதி முடித்தமைக்கு அடையாளமாக அதன் இறுதியில் சுழியம் இடுதல் (O) அல்லது இணைகோடுகள் இடுதல்(//) அல்லது கோடு இடுதல் (
/ ) என்னும் வழக்கம் இருந்துள்ளது. எனினும், பல்வேறு வகையான நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகப்படுத்தி எவ்வெவ்விடங்களில் அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென விளக்கியவர்கள் ஐரோப்பியர்களே ஆவர். தமிழ்மொழியின் இலக்கண நெறிகளுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்திச் சொற்றொடர்களைப் பிரித்துப் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.