தாவரங்களில் பாலினப்பெருக்கம் - கருவுறுதல் | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants
கருவுறுதல்
ஆண் கேமீட்டுடன் பெண் கேமீட் கருவுறுதல்
(fertilization) எனப்படும். மூடுவிதைத் தாவரங்களில் கருவுறுதல் இரட்டைக் கருவுறுதல்
(double fertilization) வகையச் சார்ந்ததாகும்.
இரட்டைக் கருவுறுதல் சூலகமுடியில் மகரந்தத்துகள்
முளைத்து மகரந்தக்குழல் உருவாதல், சூலகத்தண்டில் மகரந்தக்குழாய் வளர்தல், சூல்துளை
நோக்கி மகரந்தக்குழாய் வளர்தல், கருப்பையில் காணப்படும் ஒரு சினர்ஜிட்டினுள் மகரந்தக்குழாய்
நுழைதல், ஆண் கேமீட்கள் வெளியேற்றம், கேமீட்கள் இணைதல் மற்றும் மூவிணைதல் (triple
fusion) என பல்வேறு நிலைகளில் நடைபெறுகிறது. மகரந்தத்துகள் சூலக முடி மீது படிந்து
மகரந்தக்குழாய் சூலினுள் நுழையும் வரையுள்ள நிகழ்வுகள் மகரந்தத்துகள் - சூலக அலகு இடைவினை
(pollen - pistil interaction) என அழைக்கப்படுகிறது. இது ஒரு இயங்கு நிகழ்வாகும். மகரந்தத்துகள்
ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் முளைப்பு மற்றும் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது அல்லது தடை
செய்யப்படுகிறது.
இயற்கையில் பல்வேறு வகையான மகரந்தத்துகள் ஏற்கும்
இயல்புடைய சூலகமுடியின் ஏற்கும் பரப்பில் விழுகின்றன. ஆனால் அவை அனைத்தும் முளைப்பதில்லை,
கருவுறுதலும் நடைபெறுவதில்லை . சூலக முடியின் ஏற்புப்பரப்பு மகரந்தத்துகளை ஏற்கிறது.
சூலகமுடியோடு இணக்கமான மகரந்தத்துகளாக இருப்பின் அவை முளைத்து மகரந்தக்குழாயை உருவாக்குகின்றன.
இதற்கு ஈர சூலகமுடியில் (wet stigma) காணப்படும் சூலகமுடி பாய்மமும் (stigmatic
fluid), வறண்ட சூலகமுடியில் காணப்படும் மெல்லிய உறையும் (pellicle) காரணமாகவுள்ளன.
இவை இரண்டும் சூலகமுடிக்கும் மகரந்தத்துகள்களுக்கும் இடையே நிகழும் புரத வினைகளை அங்கீகரித்தோ
, நிராகரித்தோ இணையொத்த மற்றும் இணை ஒவ்வாத மகரந்தத்துகள்களை முடிவு செய்கின்றன. வெவ்வேறு
சிற்றினங்களுக்கிடையே (interspecific) அல்லது ஒரே சிற்றினத்தில் (intraspecific) காணப்படும்
தாவரங்களுக்கிடையே பால் சார்ந்த ஒவ்வாமை (sexual incompatibility) காணப்படுகிறது. ஒரே
சிற்றினத்தில் உள்ள தாவரங்களுக்கிடையே காணப்படும் பால் சார்ந்த ஒவ்வாமை தன் – ஒவ்வாமை
(self incompatibility) எனப்படும். மகரந்தத்துகள் சூலகமுடியில் விழுந்தவுடன் கண்களுக்கு
புலப்படக்கூடிய முதல் மாற்றம் மகரந்தத்துகள் நீரேற்றமடைவதாகும். மகரந்தச்சுவர் புரதங்கள்
மேற்புறத்திலிருந்து வெளியேறுகின்றன. மகரந்தத்துகள் முளைத்தலின் போது, மகரந்தத்துகளில்
காணப்படும் அனைத்து உள்ளடக்கப் பொருட்களும் மகரந்தக்குழாயினுள் நகருகின்றன. மகரந்தக்குழாயின்
வளர்ச்சி அதன் நுனியில் மட்டும் காணப்படும். அனைத்து சைட்டோபிளாச உள்ளடக்கப் பொருட்களும்
நுனியை நோக்கி நகருகின்றன. மகரந்தக்குழாயின் இதர பகுதி நுனியிலிருந்து தோன்றும் நுண்குமிழ்ப்பையால்
ஆக்கிரமிக்கப்படுகிறது. இது குழாய் நுனியிலிருந்து ஒரு கேலோஸ் அடைப்பால் பிரிக்கப்படுகிறது.
நுண்ணோக்கியினால் பார்க்கும் போது மகரந்தக்குழியின் புறக்கோடி நுனிப்பகுதி அரைவட்ட
வடிவில் ஒளி ஊடுருவும் பகுதியாக காணப்படுகிறது. இப்பகுதி கேப் பிளாக் (cap block) என்று
அழைக்கப்படுகிறது. கேப் பிளாக் பகுதி மறைந்தவுடன் மகரந்தக்குழாயின் வளர்ச்சி நின்று
விடுகிறது.
மகரந்தத்துகள் முளைத்தலுக்குப்பின், மகரந்தக்குழாய்
சூலகமுடியிலிருந்து சூலகத்தண்டினுள் நுழைகிறது. மகரந்தத்துகளின் வளர்ச்சி சூலகத்தண்டின்
வகையைப் பொறுத்து அமைகிறது.
சூலகத்தண்டின்
வகைகள்
மூன்று வகையான சூலகத்தண்டுகள் காணப்படுகின்றன.
(அ) திறந்த அல்லது உள்ளீடற்ற சூலகத்தண்டு (ஆ) திட அல்லது மூடிய சூலகத்தண்டு (இ) பாதி
திட அல்லது பாதி மூடிய சூலகத்தண்டு.
உள்ளீடற்ற
அல்லது திறந்த சூலகத்தண்டு (Hollow or open style): பொதுவாக
இவ்வகை சூலகத்தண்டு ஒரு விதையிலைத் தாவரங்களில் காணப்படுகிறது. இதில் ஒரு உள்ளீடற்ற
கால்வாய் சூலகமுடியிலிருந்து சூலகத்தண்டின் அடிவரை காணப்படுகிறது. அக்கால்வாய் ஒருவரிசை
சுரப்பு செல்களால் (ஊடு கடத்துதிசு Transmitting tissue) சூழப்பட்டுள்ளது. இச்செல்கள்
வழுவழுப்பான மியூசிலேஜ் பொருட்களைச் சுரக்கின்றன. மகரந்தக்குழாய் சூலகத்தண்டு கால்வாயை
ஒட்டிய செல்களின் பரப்பில் வளர்ந்து செல்கிறது. கால்வாயினுள் நிரப்பப்பட்ட சுரப்புப்
பொருட்கள் வளரும் மகரந்தக் குழாய்க்கு உணவாகவும், சூலகத்தண்டுக்கும் மகரந்தக்குழாய்க்கும்
இடையே ஏற்படும் ஒவ்வாமை வினைகளை கட்டுப்படுத்தும் காரணியாகவும் செயல்படுகின்றன. இச்சுரப்புப்
பொருட்கள் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் எஸ்டரேஸ், அமில பாஸ்படேஸ் போன்ற நொதிகளையும்,
ஒவ்வும் தன்மையைக் கட்டுப்படுத்தும் புரதங்களையும் கொண்டுள்ளன.
திட அல்லது
மூடிய சூலகத்தண்டு (solid or closed style): பொதுவாக இவ்வகை சூலகத்தண்டு
இருவிதையிலைத் தாவரங்களில் காணப்படுகிறது. இதில் சூலகத்தண்டின் மையப் பகுதியில் நீண்ட
சிறப்பு வாய்ந்த செல்கள் கற்றையாக அமைந்துள்ளன. இதற்கு ஊடுகடத்தும் திசு
(transmitting tissue) என்று பெயர். இத்திசு திறந்த சூலகத்தண்டில் காணப்படும் சூழ்ந்தமைந்த
சுரப்பு செல்களுக்கு சமமானவை மற்றும் அதே செயலைச் செய்கின்றன. மகரந்தக்குழாய் இந்த
ஊடுகடத்து செல்களுக்கு இடையேயுள்ள செல் இடைவெளிகளின் வழியே வளர்கிறது.
பாதி
திட அல்லது பாதி மூடிய சூலகத்தண்டு (semisolid or half closed style): இவ்வகை
சூலகத்தண்டு, திறந்த மற்றும் மூடிய வகை சூலகத்தண்டிற்கு இடைப்பட்ட ஒரு வகையாகும். ஊடுகடத்து
திசுவின் இயல்பு பற்றி வேறுபட்ட கருத்துகள் உள்ளன. ஒரு சில ஆய்வாளர்கள் இது திடவகை
சூலகத்தண்டில் மட்டும் காணப்படுகிறது என்றும் கருதுகிறார்கள். வேறு சிலர் உள்ளீடற்ற
சூலகத்தண்டில் காணப்படும் சிறப்புவகை அடுக்கு செல்களையும் ஊடுகடத்து திசு என்று கருதுகின்றனர்.
மகரந்தக்குழாய்
சூலினுள் நுழைதல்: மகரந்தக் குழாய் மூன்று வகைகளில் சூலினுள் நுழைகிறது
(படம் 1.18)
சூல்துளைவழி
நுழைதல் (Porogamy):மகரந்தக்குழாய் சூல்துளை (micropyle) வழியாக சூலினுள்
நுழைதல்.
சலாசாவழி நுழைதல் (Chalazogamy): மகரந்தக்குழாய்
சலாசா வழியாக சூலினுள் நுழைதல்.
சூலுறைவழி நுழைதல் (mesogamy): மகரந்தக்குழாய்
சூலக உறை வழியாக சூலினுள் நுழைதல்.
மகரந்தக்குழாய் சூலினுள் நுழையும் பகுதி எதுவாயினும்,
கருப்பையினுள் சூல்துளை வழியாகவே நுழைகிறது. இம்மகரந்தக்குழாய் கருப்பையிலுள்ள ஒரு
சினர்ஜிட்(synergid)க்குள் நேரடியாக நுழைகிறது.
மகரந்தக் குழாய், சூலகம், சூல் மற்றும் கருப்பையை நோக்கி வளர்வதற்கு வேதிநாட்டப் பொருட்களே காரணமாகும்.மகரந்தக்குழாய் சூலகத்தண்டின் முழு நீளத்திற்கும் பயணித்து சூலக அறையை அடைகிறது. அங்கிருந்து சூலிலுள்ள சூல்துளை வழியாக நுழைவதற்கு ஒரு அமைப்பு வழிகாட்டியாக செயல்படுகிறது. அவ்வமைப்பு வழிநடத்தி (obturator) என்று அழைக்கப்படுகிறது. (உங்களுக்குத் தெரியுமா? பகுதியைக் காண்க). கருப்பையை அடைந்தபின், மகரந்தக் குழாயின் நுனியில் அல்லது நுனிப்பகுதியை ஒட்டிய மேல்பகுதியில் ஒரு துளை உருவாகிறது. சினர்ஜிட் வழியாக மகரந்தக்குழாயில் நுழைந்து அதன் சைட்டோபிளாச உள்ளடக்கப் பொருட்கள் (இரண்டு ஆண் கேமீட்களும், தழைவழி உட்கரு மற்றும் சைட்டோபிளாசம்) வெளியேற்றப்படுகின்றன. இதன்பின் கருப்பையில் மகரந்தக்குழாய் வளர்வதில்லை . மகரந்தக்குழாய் உட்கரு அழிந்துவிடுகிறது.
S.G. நவாஸின் மற்றும் ட கினார்டு 1898 மற்றும்
1899 - ஆம் ஆண்டு லில்லியம் மற்றும் ஃபிரிட்டிலாரியா தாவரங்களில் ஆண் கேமீட்டகத்திலிருந்து
வெளியேறும் இரண்டு ஆண் கேமீட்களும் கருவுறுதலில் ஈடுபடுகின்றன என்பதைக் கண்டறிந்தனர்.
அந்த ஆண் கேமீட்கள் கருப்பையிலுள்ள இரண்டு வேறுபட்ட கூறுகளை கருவுறச் செய்கின்றன. இவ்வாறு
இரண்டு ஆண் கேமீட்களும் கருவுறுதலில் ஈடுபடுவதால், இந்நிகழ்வு இரட்டைக் கருவுறுதல்
(Double fertilization) என்று அழைக்கப்படுகிறது. இது மூடுவிதைத் தாவரங்களின் சிறப்புப்
பண்பாகும். இரண்டு ஆண் கேமீட்களில் ஒன்று முட்டை உட்கருவுடன் (syngamy) இணைந்து கருமுட்டை
(zygote)- யை உருவாக்குகிறது
மற்றொரு ஆண் கேமீட் மைய செல்லை நோக்கி நகர்ந்து,
அங்குள்ள துருவ உட்கருக்கள் (polar nuclei) அல்லது துருவ உட்கருக்கள் இணைந்து உருவான
இரண்டாம் நிலை உட்கருவுடன் இணைந்து முதல்நிலை கருவூண் உட்கரு (primary endosperm
nucleus - PEN) வை உருவாக்குகிறது. இந்நிகழ்வில் மூன்று உட்கருக்கள் இணைவதால் இதற்கு
மூவிணைதல் (triple fusion) என்று பெயர். இந்நிகழ்வின் முடிவில் கருவூண் உருவாக்கம்
நடைபெறுகிறது. கருவூண் வளரும் கருவிற்கு உணவாக உள்ளது.
கருவுறுதலுக்குப் பின் கரு பகுப்படைவதற்கு முன் முதல்
நிலை கருவூண் உட்கரு (PEN - Primary Endosperm Nucelus) உடனடியாக பகுப்படைந்து உருவாகும்
திசுகருவூண்திசு என்றழைக்கப்படுகிறது.
வளர்ச்சி முறையைப் பொறுத்து மூடுவிதைத் தாவரங்களில்
3 வகையான கருவூண் திசு அறியப்படுகிறது. அவை உட்கரு சார் கருவூண் திசு (nuclear
endosperm), செல்சார் கருவூண் திசு (cellular endosperm), ஹீலோபிய கருவூண் திசு
(helobial endosperm) ஆகும்