தாவரங்களில் பாலினப்பெருக்கம் - பெண் இனப்பெருக்கப் பகுதி சூலகவட்டம் | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants
கருவுறுதலுக்கு முந்தைய அமைப்புகள் மற்றும் நிகழ்வுகள்
தாவரங்களில் ஏற்படும் ஹார்மோன் மற்றும் வளர்ச்சி
மாற்றங்கள் மலர் தோற்றுவியின் வேறுபாடுறுதலுக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றன.
கருவுறுதலுக்கு முந்தைய அமைப்புகள் மற்றும் நிகழ்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சூலகவட்டம் மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பாகும். சூலகவட்டம் என்ற சொல் மலரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூலக அலகுகளைக் குறிக்கிறது. சூலக அலகு சூலகப்பை , சூலகத் தண்டு , சூலகமுடி ஆகிய பகுதிகளைக் கொண்டது. சூலக அலகு (pistil) சூலக இலையிலிருந்து பெறப்படுகிறது. சூலகம் என்ற சொல் சூல்கள் கொண்ட பகுதியைக் குறிக்கிறது. சூலகமுடி மகரந்தத்துகளை ஏற்கும் பரப்பாகச் செயல்படுகிறது. சூலகமுடிக்குக் கீழாகக் காணப்படும் நீண்ட, மெல்லிய பகுதி சூலகத் தண்டாகும். சூலக அலகின் பருத்த அடிப்பகுதி சூலகமாகும் சூலொட்டுத்திசுவால் இணைக்கப்படுள்ள சூல்கள் சூலக அறையினுள் அமைந்துள்ளன. மலர் தோற்றுவியின் (floral primordium) நுனியில் தோன்றும் ஆக்குத்திசுவிலிருந்து சிறிய காம்புரு (papillate) போன்ற வளர்ச்சியிலிருந்து சூலக அலகு தோன்றுகிறது. இது துரிதமாக வளர்ந்து சூலகம், சூலகத்தண்டு மற்றும் சூலகமுடியாக வேறுபாடடைகிறது. சூலொட்டுத் திசுவிலிருந்து சூல்கள் அல்லது பெரு வித்தகங்கள் தோன்றுகின்றன. ஒரு சூலகம் ஒன்று (நெல், மா) முதல் பல (பப்பாளி, தர்பூசணி, ஆர்க்கிட்கள்) சூல்களைக் கொண்டிருக்கும்.
சூலின் அமைப்பு (பெருவித்தகம்)
ஒன்று அல்லது இரண்டு சூலுறைகளால் பாதுகாப்பாக சூழப்பட்ட சூல் பெருவித்தகம் என்று அறியப்படுகிறது. ஒரு முதிர்ந்த சூல் ஒரு காம்பையும், உடலையும் கொண்டிருக்கும். சூலகக்காம்பு அடிப்பகுதியில் அமைந்து சூல்களை சூலொட்டுத்திசுவுடன் இணைக்கிறது.
சூலகக்காம்பு சூலின் உடலோடு இணையும் பகுதி
சூல்தழும்பு (hilum) எனப்படும். தலைகீழாக அமைந்த சூலுடன் சூலகக்காம்பு ஒட்டிய இடத்தில்
உருவாகும் விளிம்பு பகுதி சூல்காம்புவடு (raphe) எனப்படும். சூலின் மையத்தில் காணப்படும்
பாரங்கைமாவாலான திசுப்பகுதி சூல்திசு (nucellus) என்று அழைக்கப்படுகிறது. சூல்திசுவைச்
சூழ்ந்து காணப்படும் பாதுகாப்பு உறை சூலுறை (integument) எனப்படும். ஒரு சூலுறை மட்டும்
காணப்படின் ஒற்றை சூலுறைச் சூல் (unitegmic) என்றும், இரு சூலுறைகள் காணப்படின் இரு
சூலுறைச் சூல் (bitegmic) என்றும் அழைக்கப்படும். சூலுறையால் சூழப்படாத சூல்திசுப்பகுதி
சூல்துளை (micropyle) எனப்படும். சூல்திசு , சூலுறை மற்றும் சூல் காம்பு ஆகியவை சந்திக்கும்
அல்லது இணையும் பகுதிக்கு சலாசா (chalaza) என்று பெயர். சூல்துளைக்கு அருகில் சூல்திசுவில்
காணப்படும் பெரிய முட்டை வடிவ பை போன்ற அமைப்பு கருப்பை (embryo sac) அல்லது பெண் கேமீட்டகத்
தாவரம் என்று அழைக்கப்படுகிறது. இது சூல் திசுவிலுள்ள செயல்படும் பெருவித்திலிருந்து
தோன்றுகிறது. ஒரு சில சிற்றினங்களில் (ஒரு சூலறையுடைய மென் சூல்திசு கொண்ட) சூலுறையின்
உள்ளடுக்கு சிறப்பு பெற்று கருப்பையின் ஊட்டத்திற்கு உதவுகிறது. இந்த அடுக்கு எண்டோதீலியம்
(endothelium) அல்லது சூலுறை டபீட்டம் (integumentary tapetum) என்று அழைக்கப்படுகிறது
(எடுத்துக்காட்டு: ஆஸ்டரேசி). வித்துருவாக்க செல்லின் அமைவிடத்தைப் பொறுத்து சூல்கள்
இரு வகைப்படும். வித்துருவாக்க செல்கள் புறத்தோலடியில் ஒரே ஒரு அடுக்காக சூல் திசுவால்
சூழப்பட்டிருந்தால் அது மென்சூல்திசு சூல் (tenuinucellate) வகை எனப்படும்.
பொதுவாக இவ்வகை சூல்கள் மிகச் சிறிய சூல் திசுவைக் கொண்டிருக்கும். வித்துருவாக்க செல்கள் புறத்தோலடியின் கீழ்ப் பகுதியிலிருந்து தோன்றினால் அந்த வகை சூல்கள் தடிசூல்திசு சூல் (crassinucellate) வகை எனப்படும். இத்தகைய சூல்கள் பொதுவாக அதிக சூல்திசு கொண்டவையாக இருக்கும். சலாசா மற்றும் கருப்பையின் இடையே சூலின் அடிப்பகுதியில் காணப்படும் செல் தொகுப்பு ஹைப்போஸ்டேஸ் (hypostase) என்றும், சூல்துளைக்கும் கருப்பைக்கும் இடையே காணப்படும் தடித்த சுவருடைய செல்கள் எப்பிஸ்டேஸ் (epistase) என்றும் அழைக்கப்படுகிறது. சூலின் அமைப்பு படம் 1.7-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
சூலின் வகைகள்
திசையமைவு, வடிவம், சூல்காம்பு மற்றும் சலாசாவிற்கு
தொடர்பாக சூல்துளையின் அமைவிடம் ஆகியவற்றின் அடிப்படையில் சூல்கள் ஆறு முக்கிய வகைகளாக
வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மிக முக்கியமானவை நேர்சூல் (orthotropous), தலைகீழ்சூல்
(antatropous), கிடைமட்ட சூல் (hemianatropous) மற்றும் கம்பைலோட்ராபஸ்
(campylotropous) வகைகளாகும். சூல்களின் வகைகள் படம் 1.8-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
நேர்சூல்
(Orthotropous): இவ்வகைச் சூலில் சூல்துளை இணைப்புப் பகுதியிலிருந்து
தொலைவில் அமைந்திருக்கும். சூல்காம்பு, சூல்துளை மற்றும் சலாசா ஆகியவை ஒரே நேர்க்கோட்டில்
அமைந்திருக்கும். எடுத்துக்காட்டுகள் : பைப்பரேசி, பாலிகோனேசி.
தலைகீழ்சூல் (Anatropous): இவ்வகைச் சூலில் சூல் முழுமையாக தலைகீழாகத் திரும்பியிருக்கும். எனவே சூல்துளையும் சூல்காம்பும் அருகருகே அமைந்திருக்கும். பெரும்பாலான ஒருவிதையிலை, இருவிதையிலை தாவரங்களில் இவ்வகை சூல் காணப்படுகிறது.
கிடைமட்டசூல்
(Hemianatropous): இவ்வகையில் சூலின் உடல் குறுக்குவாட்டில் சூல்காம்பிற்குச்
செங்குத்தாக அமைந்து காணப்படும். எடுத்துக்காட்டு: பிரைமுலேசி.
கம்பைலோட்ராபஸ்
(Campylotropus): சூல்துளைப் பகுதியில் சூலின் உடல் வளைந்து ஏறத்தாழ
அவரை விதை வடிவில் காணப்படும். கருப்பையும் சற்று வளைந்திருக்கும். விதைத்தழும்பு,
சூல்துளை, சலாசா ஆகியவை ஒன்றுக்கொன்று அருகமைந்து சூல்துளை, சூல் ஒட்டுதிசுவை நோக்கிய
நிலையில் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: லெகுமினோசே.
மேற்கூறிய முக்கிய வகைகளைத் தவிர மேலும் இரு
வகைகள் உள்ளன. அவை
ஆம்பிட்ரோபஸ்
(Amphitropous): இவ்வகை சூல் ஏறத்தாழ தலைகீழ் சூலிற்கும், கிடைமட்ட
சூலிற்கும் இடைப்பட்டதாகும். இங்கு சூல்திசுவும், கருப்பையும் குதிரை லாடம் போன்று
வளைந்திருக்கும். சூல்துளை, சூல்காம்பு, சலாசா ஆகிய மூன்றும் அருகாமையில் அமைந்திருக்கும்.
எடுத்துக்காட்டு: ஒரு சில அலிஸ்மட்டேசி குடும்பத் தாவரங்கள்.
சிர்சினோட்ரோபஸ்
(Circinotropous): சூலினைச் சூழ்ந்து மிக நீளமான சூல்காம்பு காணப்படுகிறது.
இது சூலை முழுவதுமாகச் சூழ்ந்துள்ளது. எடுத்துக்காட்டு: காக்டேசி
பெருவித்து தாய் செல்லிலிருந்து பெருவித்து
உருவாகும் நிகழ்வு பெருவித்துருவாக்கம் (megasporogenesis) எனப்படும். சூல் வளர்ச்சியடையும் போது சூல்திசுவின் புறத்தோலடித்தோல்
கீழ் அமைந்துள்ள ஒரு சூல்திசு செல் பெரிதாகி முன்வித்தாக (archesporium) செயல்படுகிறது.
சில தாவரங்களில் முன்வித்து செல் நேரடியாக பெருவித்து (megaspore) தாய் செல்லாகச் செயல்படுகிறது.
பிற தாவரங்களில் இவை குறுக்குவாட்டில் பகுப்படைந்து வெளிப்புறத்தில் முதல் நிலை புறப்பக்க
செல்லையும் (outer primary parietal cell), உட்புறத்தில் முதல் நிலை வித்துருவாக்க
செல்லையும் (inner primary sporogeneous cell) தருகிறது. இந்த புறப்பக்க செல் பகுப்படையாமலோ
அல்லது பரிதி மற்றும் ஆரத்திற்கு இணையாக சில பகுப்புகளை அடைந்து முதல் நிலை வித்துருவாக்க
செல் சூல்திசுவில் ஆழமாகப் பதியச் செய்கிறது. இந்த முதல் நிலை வித்துருவாக்கச் செல்
பெருவித்து தாய் செல்லாகச் செயல்படுகிறது. பெருவித்து தாய் செல் குன்றல் பகுப்பிற்குட்பட்டு
நான்கு ஒருமடிய பெருவித்துக்களைத் தருகிறது. கருப்பை வளர்ச்சியில் பங்கு பெறும் பெருவித்துகளின்
எண்ணிக்கையைப் பொருத்து ஒருபெருவித்து சார் கருப்பை (monosporic), இருபெருவித்து சார்
கருப்பை (bisporic), நான்கு பெருவித்து சார் கருப்பை (tetrasporic) என மூன்று அடிப்படை
வகையான வளர்ச்சி முறைகள் காணப்படுகின்றன. பொதுவாக நான்கு பெருவித்துக்கள் நேர்கோட்டில்
அமைந்திருக்கும். இந்த நான்கு பெருவித்துகளில் பொதுவாக சலாசா பக்கமுள்ள பெருவித்து
செயல்படும் பெருவித்தாகிறது. மற்ற மூன்றும் அழிந்துவிடுகின்றன. செயல்படும் பெருவித்து
பெண் கேமீட்டகத் தாவரம் அல்லது கருப்பையை உருவாக்குகிறது. இந்த வகை கருப்பை வளர்ச்சி
ஒருபெருவித்து சார் கருப்பை (எடுத்துக்காட்டு : பாலிகோனம்) என அழைக்கப்படுகிறது. நான்கு
பெருவித்துக்களில் இருவித்துகள் கருப்பை உருவாக்கத்தில் ஈடுபட்டால் இருபெருவித்து சார்
கருப்பை வளர்ச்சி (எடுத்துக்காட்டு: அல்லியம்) எனப்படுகிறது. நான்கு பெருவித்துக்களும்
கருப்பை உருவாக்கத்தில் ஈடுபட்டால் அது நான்கு பெருவித்து சார் கருப்பை (எடுத்துக்காட்டு:
பெப்பரோமியா) எனப்படும். ஒருபெருவித்துசார் கருப்பையின் வளர்ச்சி (பாலிகோனம் வகை) படம்
1.9-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
கருப்பையின் வளர்ச்சியிலுள்ள படிநிலைகள் மற்றும்
அமைப்பை விளக்க எளிய ஒருபெருவித்து சார் கருப்பையின் வளர்ச்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செயல்படும் பெருவித்து கருப்பை அல்லது பெண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல்லாகும். சூல்துளை - சலாசா அச்சிற்கு இணையாக பெருவித்து நீட்சியடைகிறது. இதன் உட்கரு குன்றலில்லா பகுப்படைகிறது. உட்கரு பகுப்பினைத் தொடர்ந்து செல்சுவர் தோன்றுவதில்லை. மையத்தில் ஒரு பெரிய நுண்குமிழ்ப்பை (vacuole) இரு உட்கருக்களுக்கு இடையே தோன்றுகிறது. நுண்குமிழ்ப்பை விரிவடைந்து உட்கருவை கருப்பையின் இரு துருவங்களுக்கும் தள்ளுகிறது. இரு உட்கருவும் இரண்டு முறை குன்றலில்லா பகுப்படைந்து நான்கு உட்கருக்களை ஒவ்வொரு துருவத்திலும் உருவாக்குகிறது. இந்நிலையில் எட்டு உட்கருக்களும் பொதுவான சைட்டோபிளாசத்தில் (தனி உட்கரு பகுப்பு) காணப்படுகின்றன. கடைசி உட்கரு பகுப்பிற்கு பின் செல் குறிப்பிடத்தக்க நீட்சியடைந்து பை போன்ற அமைப்பைத் தருகிறது. இதன் தொடர்ச்சியாக கருப்பை செல் அமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. சூல்துளைப் பகுதியிலுள்ள நான்கு உட்கருக்களில் மூன்று முட்டை சாதனமாக மாறுகின்றன. நான்காவது உட்கரு மைய செல்லின் (centre cell)சைட்டோபிளாசத்தில் தனித்து காணப்பட்டு மேல் துருவ உட்கருவாகிறது. சலாசா பகுதியிலுள்ள நான்கு உட்கருக்களில் மூன்று எதிரடிச் செல்களாகவும் (antipodal cells) ஒன்று
கீழ் துருவ உட்கருவாகவும் ஆகிறது தாவரங்களுக்கு ஏற்ப இரண்டு துருவ (polar nuclei) துருவ உட்கரு இணையாமல் அல்லது இணைந்து இரண்டாம் நிலை உட்கருவாக (secondary nucleus) (மைய செல்லுக்குள்) மாறுகிறது. முட்டை சாதனத்தின் (egg apparatus) மையத்தில் ஒரு முட்டை செல்லும், அதன் இரு பக்கங்களிலும் சினர்ஜிட்களும் அமைந்துள்ளன. சினர்ஜிட்கள் வேதியீர்ப்பு பொருட்களைச் சுரப்பதினால் மகரந்தக்குழாயை ஈர்க்க உதவுகின்றன. சினர்ஜிட்களில் உள்ள நூலிழை சாதனம் சூல்திசுவிலுள்ள ஊட்டம் கருப்பைக்கு உறிஞ்சிக் கடத்துவதற்கு உதவுகிறது. மேலும் மகரந்தக்குழாய் முட்டையை நோக்கிச் செல்வதற்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு 7 செல்கள் கொண்ட 8 உட்கரு பெற்ற கருப்பை உருவாகிறது. கருப்பையின் அமைப்பு படம் 1.10-ல் கொடுக்கப்பட்டுள்ளது.