Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | மகரந்தச்சேர்க்கைக்கான முகவர்கள்

தாவரங்களில் பாலினப்பெருக்கம் - மகரந்தச்சேர்க்கைக்கான முகவர்கள் | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants

   Posted On :  29.07.2022 07:27 pm

12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

மகரந்தச்சேர்க்கைக்கான முகவர்கள்

மகரந்தச்சேர்க்கை காற்று, நீர், பூச்சிகள் போன்ற பல முகவர்களால் நடைபெறுகிறது.

மகரந்தச்சேர்க்கைக்கான முகவர்கள் (Agents of pollination)

மகரந்தச்சேர்க்கை காற்று, நீர், பூச்சிகள் போன்ற பல முகவர்களால் நடைபெறுகிறது. மகரந்தச்சேர்க்கை நடைபெற உதவும் முகவர்களின் அடிப்படையில் உயிரிலி மற்றும் உயிரி வகைகள் என வகைப்படுத்தப்படுகிறது. இதில் இரண்டாவது வகை மூலமாகவே பெரும்பாலான தாவரங்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது

உயிரிலி முகவர்கள் (Abiotic agents)

1) காற்று மகரந்தச்சேர்க்கை (Anemophily) - காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை

2). நீர் மகரந்தச்சேர்க்கை (Hydrophily) – நீரின் மூலம் மகரந்தச்சேர்க்கை

உயிரி முகவர்கள் (Biotic agents)

விலங்கு மகரந்தச்சேர்க்கை (zoophily)

விலங்குகளின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை விலங்கு மகரந்தச்சேர்க்கை (Zoophily) என்றும் பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை பூச்சி மகரந்தச்சேர்க்கை (entomophily) என்றும் அழைக்கப்படுகிறது.


1. காற்று மகரந்தச் சேர்க்கை:

காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்கள் காற்று மகரந்தச்சேர்க்கை மலர்கள் (anemophilous) என அழைக்கப்படுகின்றன. காற்று அதிக அளவு வீசக்கூடிய பகுதிகளில் காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் தாவரங்கள் காணப்படுகின்றன. எனவே இம்முறையில் இது ஒரு வாய்ப்பு நிகழ்வாகும். இந்நிகழ்வில் ஒரு மலரிலிருந்து மற்றொரு மலருக்கு மகரந்தத்துகள் கடத்தப்படும் போது குறிப்பிட்ட ஒரு மலரை சென்றடையாமல் அதிக அளவில் வீணடிக்கப்படுகின்றன. புற்கள், கரும்பு, மூங்கில், தென்னை, பனை, சோளம் போன்றவை காற்று மகரந்தச் சேர்க்கைக்கு பொதுவான எடுத்துக்காட்டுகளாகும்.

காற்று மகரந்தச்சேர்க்கை மலர்களில் பின்வரும் பண்புகள் காணப்படுகின்றன.

• மலர்கள் தொங்கு (pendulous), தொங்கு கதிர் (catkin) அல்லது கதிர் (spike) வகை மஞ்சரிகளில் காணப்படுகின்றன.

• மஞ்சரி அச்சு நீட்சி பெற்று, மலர்கள் இலைகளுக்கு மேல் நீண்டு காணப்படும்.

• பூவிதழ்கள் இன்றியோ அல்லதுமிகவும் குன்றியோ காணப்படும்.

• மலர்கள் சிறியவை, தெளிவற்றவை, நிறமற்றவை, மணமற்றவை மற்றும் பூத்தேன் சுரக்காதவை.

• மகரந்தத்தாள்கள் எண்ணற்றவை, மகரந்தக்கம்பிகள் நீண்டவை, வெளிநோக்கி வளைந்தவை, மகரந்தப்பை சுழலக்கூடியவை.

• மகரந்தச் சேர்க்கைக்காக காத்திருக்கும் சூல்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது மகரந்தப்பைகள் மிக அதிக அளவு மகரந்தத்துகள்களை உண்டாக்குகின்றன. இவை மிகச் சிறியவை, உலர்ந்தவை எடை குறைவானவை. எனவே காற்றின் மூலம் நீண்ட தொலைவிற்கு இவற்றை எடுத்துச் செல்ல இயலும்.

• சில தாவரங்களில் மகரந்தப்பைகள் பலமாக வெடித்து மகரந்தத்துகள்களை காற்றில் வெளியேற்றுகின்றன. எடுத்துக்காட்டு: அர்டிகா

• மலர்களின் சூலகமுடி அளவில் மிகப்பெரியதாகவும், துருத்திக்கொண்டும், சில நேரங்களில் கிளைத்தும், இறகு போன்றும் அமைந்து மகரந்தத்துகள்களைப் பிடிப்பதற்கேற்ப தகவமைப்பைப் பெற்றுள்ளன. பொதுவாக ஒரே ஒரு சூல் காணப்படுகிறது.

• சில தாவரங்களில் புதிய இலைகள் தோன்றுவதற்கு முன்னரே மலர்கள் உருவாகின்றன. இதனால் மகரந்தத்துகள் இலைகளின் இடையூறின்றி எளிதாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

மக்காச்சோளத்தில் மகரந்தச்சேர்க்கை (Zea mays): இத்தாவரம் ஆண் - பெண் (monoecious) மலர்களுடைய ஒருபால் (unisexual) மலர்கள் கொண்டது. ஆண் மஞ்சரி (கதிர்குஞ்சம் - tassel) தாவரத்தின் நுனிப் பகுதியிலும், பெண் மஞ்சரி (கதிர் - cob) கீழ்மட்டத்தில் பக்கவாட்டிலும் காணப்படும். மக்காச்சோளத்தில் மகரந்தத்துகள் பெரியவை, அதிக எடையுள்ளவை, மெல்லிய காற்றினால் எடுத்துச்செல்ல முடியாதவை. எனினும் காற்றால் ஆண் மஞ்சரி அசைக்கப்படும்போது மலரிலுள்ள மகரந்தத்துகள் கீழ்நோக்கி விழுகின்றன. பெண் மஞ்சரியின் மலர்களில் சுமார் 23 செ.மீ. நீளமுள்ள சூலகமுடி (silk) காணப்படுகிறது. மேலும் இது இலைகளை தாண்டி அவற்றிற்கு மேல் நீண்டுள்ளது. கதிர்குஞ்சத்தில் இருந்து விழும் மகரந்தத்துகள்களை சூலக முடிகள் பற்றிக் கொள்கின்றன (படம் 1.15)



2. நீர்மகரந்தச்சேர்க்கை (Hydrophily): 

மகரந்தத்துகள் நீரின் மூலம் சூலகமுடியை சென்றடையும் நிகழ்வு நீர்மகரந்தச்சேர்க்கை எனப்படும். நீரின் மூலம் மகரந்தச்சேர்க்கை அடையும் மலர்கள் நீர்மகரந்தச்சேர்க்கையுறும் மலர்கள் (hydrophilous) என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள் : வாலிஸ்நேரியா, ஹைட்ரில்லா. எண்ணற்ற நீர்வாழ்த்தாவரங்கள் இருப்பினும் அதில் சில தாவரங்களில் மட்டுமே நீர் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. நீர்வாழ்த் தாவரங்களின் மகரந்தச்சேர்க்கைக்காக மலர்களை சூழ்ந்துள்ள உறைகள் குறைக்கப்பட்டோ அல்லது காணப்படாமலோ இருக்கின்றது. ஐக்கார்னியா மற்றும் நீர் அல்லி போன்ற நீர்வாழ்த் தாவரங்களின் மகரந்தச்சேர்க்கை காற்று மூலமோ அல்லது பூச்சிகளின் மூலமோ நடைபெறுகின்றன. நீர் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை இரண்டு வகைப்படும், நீர்மேல் மகரந்தச்சேர்க்கை (Epihydrophily) மற்றும் நீருள் மகரந்தச்சேர்க்கை (Hypohydrophily). பெரும்பாலான நீர் மகரந்தச்சேர்க்கை மலர்கள் மியுசிலேஜ் உறை கொண்டுள்ளதால் மகரந்தத்துகள் ஈரமாவதிலிருந்து பாதுகாக்கப் படுகின்றன.

அ . நீர் மேல் மகரந்தச்சேர்க்கை (Epihydrophily)

இவ்வகை மகரந்தச் சேர்க்கையானது நீர்ப்பரப்பிற்கு மேல் பகுதியில் நடைபெறுகிறது. எடுத்துக்காட்டுகள்: வாலிஸ்நேரியா ஸ்பைராலிஸ், எலோடியா.

வாலிஸ்நேரியா ஸ்பைராலிஸில் மகரந்தச்சேர்க்கை

வாலிஸ்நேரியா ஸ்பைராலிஸ் மூழ்கி வேரூன்றி வளரும் நன்னீர் வாழ் ஒருபால் (dioecious) தாவரமாகும். பெண் தாவரங்கள் தனி மலர்களை மகரந்தச்சேர்க்கைக்கு ஏதுவாக நீரின் மேற்பரப்பு வரை கொண்டு செல்ல நீண்ட சுருள் போன்ற காம்பைப் பெற்றுள்ளன. நீரின் மேற்பரப்பில் பெண்மலரைச் சுற்றி குழிந்த கோப்பை வடிவ பள்ளம் உருவாகிறது. ஆண் தாவரத்திலிருந்து உருவாகும் ஆண் மலர்கள் தாவரத்திலிருந்து பிரிந்து நீர்ப்பரப்பில் மிதக்கின்றன. இவ்வாறு மிதக்கின்ற ஆண் மலர்கள் பெண் மலர்களைச் சூழ்ந்த குழிந்த கோப்பை வடிவ பரப்பில் படிந்து பெண் மலரிலுள்ள சூலகமுடியுடன் தொடர்பு கொண்டு மகரந்தச்சேர்க்கை நிகழ்கிறது. மகரந்தச்சேர்க்கை அடைந்த பெண்மலரின் காம்பு சுருண்டு மலர்கள் நீரின் மேற்பரப்பிலிருந்து நீருக்கடியில் கொண்டு வரப்பட்டு கனிகள் உருவாகின்றன (படம் 1.16)


செயல்பாடு

அருகிலுள்ள பூங்காவிற்குச் சென்று அங்குள்ள மலர்களை கவனிக்கவும். அவைகளில் பல்வகை மகரந்தச்சேர்கை நடைபெற ஏதுவாக காணப்படும் தகவமைப்புகள் மற்றும் மாற்றுருக்களைப் பதிவு செய்யவும்.

ஆ. நீருள் மகரந்தச்சேர்க்கை (Hypohydrophily): இது நீருக்குள் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை ஆகும். எடுத்துக்காட்டுகள்: ஜொஸ்டிரா மரைனா, செரட்டோஃபில்லம்.

ஜொஸ்டிரா மரைனா கடல்நீரில் மூழ்கி வாழும் கடல் புல் (sea grass) வகைத் தாவரமாகும். இதன் மகரந்தச்சேர்க்கை நீருள் நடைபெறுகின்றது. இதன் மகரந்தத்ததுகள் நீண்டு ஊசி போன்ற அமைப்பைப் பெற்றுள்ளன. இவை நீருக்குள் வெளியேற்றப்படுகின்றன. இவை கடல்நீரையொத்த ஒப்படர்த்தி (specific gravity) கொண்டிருப்பதால் எந்த ஆழத்திலும் எளிதாக மிதக்கின்றன. இம்மலரின் சூலக முடி பருத்து நீண்ட அமைப்பைப் பெற்றுள்ளது. மகரந்தத்துகள், சூலகமுடி இடையே தொடர்பு ஏற்பட்டவுடன் மகரந்தத்தாள் சூலகமுடியினை சுருள் போன்று சுற்றி கொண்டு மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.


3. விலங்கு மகரந்தச்சேர்க்கை (Zoophily): 

விலங்கினங்களின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை விலங்கு மகரந்தச்சேர்க்கை எனப்படும். விலங்கினத்தின் மூலம் மகரந்தச்சேர்க்கை அடையும் மலர்கள் விலங்கு மகரந்தச் சேர்க்கையுறும் மலர்கள் (zoophilous) என அழைக்கப்படுகின்றன. இத்தகைய மகரந்தச்சேர்க்கை பறவைகள், வௌவால்கள், நத்தைகள் மற்றும் பூச்சிகள் போன்ற விலங்கினங்களின் மூலம் நடைபெறுகின்றன. இதில் பூச்சிகள் மகரந்தச் சேர்க்கைக்காக சிறப்பான தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. பெரிய விலங்கினங்களான பிரைமேட்கள் (லெமூர்), மரப்பொந்துவாழிகள், ஊர்வன (ஜெக்கோ பல்லிகள் மற்றும் ஓணான்) போன்றவையும் மகரந்தச்சேர்க்கை முகவர்களாகும்.

அ. பறவை மகரந்தச்சேர்க்கை (Ornithophily): பறவைகளின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை பறவை மகரந்தச்சேர்க்கை என அழைக்கப்படுகிறது. எரித்ரைனா, பாம்பாக்ஸ், சைஜைஜீயம், பிக்னோனியா, ஸ்டெர்லிட்சியா போன்ற தாவரங்கள் எடுத்துக்காட்டுகளாகும். ஒசனிச்சிட்டு (humming bird), பூஞ்சிட்டு (sun bird), தேனுண்ணி (honey eaters) போன்ற பறவைகள் தினந்தோறும் தேனிற்காக மலர்களை நாடிச் செல்வதன் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.

பறவை மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களின் சிறப்புப் பண்புகள்

• மலர்கள் பொதுவாக பெரிய அளவுடையவை.

• மலர்கள் குழல், கோப்பை அல்லது தாழி வடிவானவை.

• மலர்கள் சிவப்பு, ஆரஞ்சு சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, நீலம் மற்றும் மஞ்சள் என பல்வேறு பிரகாசமான நிறங்களில் காணப்படுவதால் அவை பறவைகளை ஈர்க்கின்றன.

• மலர்கள் மணமற்றவை, அதிக அளவு பூந்தேனைச் சுரக்கும் தன்மையுடையன. மலர்களுக்கு வருகை தரும் பறவைகளுக்கு மகரந்தத்துகள்களும் பூந்தேனும் மலர் சார்ந்த வெகுமதியாகிறது.

• மலரின் பாகங்கள் தடித்தும், தோல் போன்று உறுதியாகவும் காணப்படுவதால் மலரினை நாடிவரும் வலிமைமிக்க விருந்தாளிகளின் (பறவைகளின்) தாக்குதலை எதிர்கொள்ள உதவுகிறது.

ஆ. வௌவால் மகரந்தச்சேர்க்கை (Cheiropterophily)

வௌவால்கள் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை வௌவால் மகரந்ததச் சேர்க்கை எனப்படுகிறது. வௌவால் மகரந்தச் சேர்க்கையுறும் ஒரு சில சாதாரண தாவரங்கள் கைஜீலியா ஆப்பிரிக்கானா, அடன் சோனியா டிஜிடேட்டா போன்றவையாகும். வௌவால்கள் இரவு வாழ் உயிரிகள் (nocturnal) ஆகும். பொதுவாக பூக்கள் அந்தி நேரத்தில் மலரும். வெளவால் மகரந்தச் சேர்க்கையுறும் தாவரங்களில் மலர்கள் பொதுவாக தனித்தோ அல்லது கொத்தாகவோ இலைகள் மற்றும் கிளைகளிலிருந்து விலகி காணப்படுகின்றன. இவை நீண்ட மஞ்சரித்தண்டைப் பெற்றிருக்கும். மலர்கள் மிகுதியான பூந்தேனை உற்பத்தி செய்கின்றன.


அடன் சோனியா டிஜிடேட்டாவில் மகரந்தச்சேர்க்கை : இந்த தாவரத்தில் மகரந்தத்தாளும் சூலகமுடியும் மலர் உறைகளைத் தாண்டி நீட்டிக் கொண்டிருக்கின்றன. மகரந்தத்தாள்கள் கொண்ட மலர்களை வௌவால்கள் மார்புடன் இறுக்கமாக பற்றிக் கொண்டு மலரிலிருந்து பூந்தேனை எடுக்கின்றன. இச்செயல் காரணமாக வௌவாலின் மார்பில் ஒட்டிக் கொண்டுள்ள எண்ணற்ற மகரந்தத்துகள் அவை பூந்தேனிற்காக மற்றொரு மலரினை நாடிச் செல்லும் போது அம்மலரின் சூலக முடியினை சென்றடைகின்றன.

இ. நத்தை மகரந்தச்சேர்க்கை (Malacophily): இலைஅட்டைகள் (slugs) மற்றும் நத்தைகளின் (snails) மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை நத்தை மகரந்தச்சேர்க்கை எனப்படும். ஏரேசி (Araceae) குடும்பத்தின் சில தாவரங்களில் நத்தைகளின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது நீர் நத்தைகள் (water snails), லெம்னா (lemna) தாவரத்தின் மேல் ஊர்ந்து செல்லும்போது மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.

ஈ. பூச்சி மகரந்தச்சேர்க்கை (Entomophily): பூச்சிகளின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை பூச்சி மகரந்தச்சேர்க்கை என்றும், எறும்புகளின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை எறும்பு மகரந்தச்சேர்க்கை (மிர்மிக்கோபில்லி - myrmecophily) என்றும் அழைக்கப்படுகிறது. தேனீக்கள், அந்துப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், ஈக்கள், குளவிகள், வண்டுகள் போன்றவை மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் வகையில் சிறந்த தகவமைப்பைப் பெற்றுள்ளன. மலர்களை நாடிச் சென்று மகரந்தச்சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகளில் முக்கியமானவை தேனீக்களாகும். பெரும்பாலான மூடுவிதைத்தாவரங்களில் பூச்சிகளின் மூலமே மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. அதற்காக அவை சிறப்பான தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.

பூச்சி மகரந்தச்சேர்க்கை அடையும் மலர்களின் முக்கியப் பண்புகள்:

• பொதுவாக மலர்கள் பெரியதாகக் காணப்படும். மலர்கள் சிறியதாக இருப்பின் நெருக்கமாக அமைந்து அடர்த்தியான மஞ்சரியாகிறது. எடுத்துக்காட்டு: ஆஸ்ட்ரேசி மலர்கள்.

• மலர்கள் பிரகாசமான வண்ணங்களில் காணப்படும். பூச்சிகளைக் கவர்ந்து ஈர்ப்பதற்காக மலரினைச் சுற்றியுள்ள பாகங்கள் அடர்ந்த நிறத்துடன் காணப்படும். எடுத்துக்காட்டுகளாக பாய்ன் செட்டியா (Poinsettia) மற்றும் போகன்வில்லா தாவரங்களில் பூவடிச் செதில்கள் (bract) நிறமுற்று காணப்படும்.

• மலர்கள் மணமுடையவை மற்றும் பூந்தேன் உண்டாக்குபவை.

• பூந்தேனை சுரக்காத மலர்களின் மகரந்தத்துகள்களை தேனீக்கள் உணவிற்காகவோ அல்லது தேன் கூட்டினை உருவாக்கவோ பயன்படுத்துகின்றன.

• மகரந்தத்துகள்களும், பூந்தேனும் மலரை நாடிவரும் விருந்தாளிகளுக்கு வெகுமதியாகும்.

• ஈக்கள் மற்றும் வண்டுகள்வழி நடைபெறும் மகரந்தச்சேர்க்கையுறும் மலர்கள் மகரந்தக்காரணிகளை ஈர்க்க துர்நாற்றத்தைப் பரப்புகின்றன.

• சாறு செல்களைக் (juicy cell) கொண்ட சில மலர்களிலிருந்து பூச்சிகள் துளையிட்டு சாற்றை உறிஞ்சுகின்றன.

சால்வியாவில் மகரந்தச்சேர்க்கை (நெம்புகோல் இயங்குமுறை)

இதன் மலர் ஆண் முன் முதிர்வுதன்மை கொண்டது. ஈருதடு வடிவமுடைய அல்லி வட்டத்தையும், இரு மகரந்தத்தாள்களையும் கொண்டது. சால்வியாவில் மகரந்தச்சேர்க்கை நடைபெற நெம்புகோல் இயங்குமுறை உதவுகிறது. ஒவ்வொரு மகரந்தப்பையும் மேற்புறத்தில் வளமான மகரந்த மடலையும் கீழ்ப்புறத்தில் வளமற்ற மகரந்த மடலையும் கொண்டுள்ளது. மகரந்த மடல்களுக்கு இடையே காணப்படும் நீண்ட இணைப்புத்திசு மகரந்தப்பை இங்குமங்கும் நன்கு அசைந்தாட உதவுகிறது. தேனீ நுழையும் போது மலரின் கீழ்ப்புற உதடு தேனீ அமர்வதற்குரிய தளமாகிறது. தேனீ பூத்தேன் உறிஞ்ச தலையை உள்ளே நுழைக்கும் பொழுது தேனீயின் உடல் இணைப்புத்திசுவில் படுகிறது. இதனால் மகரந்தப்பையின் வளமான பகுதி கீழிறங்கி (தாழ்ந்து) தேனீயின் முதுகில் மோதுகிறது. எனவே தேனீயின் உடலில் மகரந்தத்துகள் படிகின்றன. தேனீ மற்றொரு மலரினுள் நுழையும் பொழுது மகரந்தத்துகள் அம்மலரின் சூலகமுடியில் விழுவதன் மூலம் சால்வியாவில் மகரந்தச்சேர்க்கை நிறைவடைகிறது (படம் 1.17 அ). இதுதவிர பொறி இயங்குமுறை (அரிஸ்டலோக்கியா), விழுகுழி இயங்குமுறை (ஆரம்), கவ்வி அல்லது ஏதுவாக்கி இயங்குமுறை (அஸ்கிளபியடேசி), உந்துதண்டு இயங்குமுறை (பாப்பிலியோனேசி) என சில சுவாரசியமான மகரந்தச்சேர்க்கை முறைகள் பல்வேறு தாவரங்களில் காணப்படுகின்றன.


(அ):சால்வியாவில் மகரந்தச்சேர்க்கை (நெம்புகோல் இயங்குமுறை)

கேலோடிராபிசில் மகரந்தச்சேர்க்கை (ஏதுவாக்கி இயங்குமுறை) அஸ்கிளபியடேசி (APG வகைப்பாட்டின்படி அப்போசைனேசி) குடும்பத் தாவரங்களில் இந்த இயங்கு முறை காணப்படுகிறது. மலர்கள் இருபால் தன்மை கொண்டவை. 5 மகரந்தத்தாள்கள் சூலகமுடியுடன் இணைந்து கைனோஸ்டீஜியம் (gynostegium) உருவாகிறது. சூலகமுடி பெரியது.  ஐந்து பக்கங்களுடன் (ஐங்கோண வடிவில்) ஏற்கும் பரப்பை அடிப்பக்கம் கொண்டது. ஒவ்வொரு மகரந்தத்தாளும் அதன் பின்புறத்தில் பகட்டான நிறமுடைய முகடு போன்ற புறவளரியுடன் கொம்பு வடிவ தேன்சுரப்பியைச் சூழ்ந்துள்ளது. ஒவ்வொரு மகரந்த மடலிலுமுள்ள மகரந்தத்துகள் அனைத்தும் இணைந்து பொலினியத்தை உருவாக்குகின்றன. இந்த பொலினியங்கள் கொக்கி அல்லது கவ்வி வடிவிலுள்ள ஒட்டும் தன்மையுடைய கார்பஸ்குலம் என்ற அமைப்புடன் இணைந்துள்ளன. ஒவ்வொரு பொலினியத்திலிருந்தும் தோன்றும் இழை அல்லது நூல் போன்ற அமைப்பு ரெட்டினாகுலம் எனப்படும். ஆங்கில் எழுத்து ‘Y’ -ன் தலைகீழ் வடிவில் இருக்கும் இந்த மொத்த அமைப்பிற்கு ஏதுவாக்கி (டிராஸ்லேட்டர்) என்று பெயர். பூச்சிகள் பூந்தேனெடுக்க மலரை நாடும் பொழுது ஏதுவாக்கி பூச்சிகளின் உறிஞ்சுகுழல் அல்லது கால்களில் ஒட்டிக் கொள்கிறது. பூச்சிகள் அடுத்த மலரை நாடும் பொழுது பொலினியங்கள் அம்மலரின் சூலகமுடியின் ஏற்கும்பரப்புடன் தொடர்பு கொள்வதால் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.

மகரந்தச்சேர்க்கை - ஒரு கூட்டு நிகழ்வு

மகரந்தச்சேர்க்கை பரிணாமம், சூழ்நிலையியல், விலங்குகள் பற்றிய படிப்பு, இரைதேடு நடத்தை போன்றவை குறித்த தகவல்களைத் தருகிறது. மலர்கள் பூந்தேன் மட்டுமின்றி நுண்காலநிலை, பூச்சிகள் முட்டையிடும் இடம், தங்குமிடம் ஆகியவற்றையும் தருகின்றன. மலர்களுக்கும் பூச்சிகளுக்குமான தொடர்பு மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதையும் அதன் மூலம் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வதையும் உறுதி செய்கிறது. மகரந்தச்சேர்க்கை நிகழ்வதற்காக பூச்சிகளைக் கவரும் வண்ணம் மலர்ப் பாகங்களின் வடிவம், அளவு ஆகியவற்றை தகவமைத்துக் கொள்கின்றன. –

யூக்காவிற்கும் அந்துப்பூச்சிக்கும் (டெஜிகுலாயூக்காசெல்லா) இடையேயான உறவு கட்டாய ஒருங்குயிரி வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகும். அந்துப்பூச்சி மலரின் சூலகப்பையினை துளையிட்டு முட்டையிடுகிறது. பின்னர் மகரந்தத்துகள்களை சேகரித்து பந்து வடிவில் சூலகமுடியின் உள்ளீடற்ற பகுதி வழியாக உள்ளே தள்ளுகிறது. கருவுறுதல் நடைபெற்று விதைகள் உருவாகின்றன. முட்டைப்புழுக்கள் (லார்வாக்கள்) வளரும் விதைகளை உண்ணுகின்றன. உண்ணப்படாத சில விதைகள் தாவரத்தின் பெருக்கத்திற்கு உதவுகின்றன. இதில் ஆச்சரியம் என்னவெனில் அந்த அந்துப்பூச்சிகள் யூக்காவின் மலர்கள் இன்றி உயிர்வாழ இயலாது. இத்தாவரமும் அந்துப்பூச்சிகளின்றி பாலினப் பெருக்கம் செய்ய இயலாது.

அமார்போபேலஸ் தாவர மலர்கள் மலர்ப்பொருள்களைப் வெகுமதியாகத் தருவது மட்டுமின்றி முட்டை இடுவதற்கு பாதுகாப்பான இடத்தையும் தருகின்றன. மலர்களுக்கு வருகை தரும் பல உயிரினங்கள் மகரந்தத்துகள்களையும் பூந்தேனையும் உட்கொள்கின்றன. ஆனால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதில்லை. இவ்வுயிரிகள் மகரந்தத்துகள் பூந்தேன் கொள்ளையர்கள் என அழைக்கப்படுகின்றன.


தேனீ ஆர்கிட்களின் (ஓபிரஸ்) மலர்கள் பெண்குளவியை (கால்பா) ஒத்து காணப்படுகின்றன. ஆண்குளவி மலரை பெண்குளவி எனக் கருதி அதனுடன் புணர முற்படுகிறது. இத்தகைய போலி புணர்ச்சிச் செயல் (pseudocopulation) மகரந்தச்சேர்க்கை நடைபெற உதவுகிறது. அத்தியில் (ஃபைகஸ் காரிகா) குளவியால் (பிளாஸ்டோபேகா சீன்ஸ்) நடைபெறும் மகரந்தச் சேர்க்கையும் தாவர - பூச்சி இடைவினைக்கு எடுத்துக்காட்டாகும்.

அரிஸ்டலோக்கியாவில் மகரந்தச்சேர்க்கை (பொறி இயங்குமுறை)

அரிஸ்டலோக்கியாவில் பொறி இயங்குமுறை என்ற சிறப்பு முறையில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. இலைக்கோணத்திலமைந்த குழல் போன்ற பூவிதழ்களைக் கொண்ட மலர்கள் காணப்படுகின்றன. இதன் அடிப்பகுதி கைனோஸ்டீஜியம் கொண்டு பருத்து காணப்படுகிறது. கைனோஸ்டீஜியத்தில் ஆறு மகரந்தத் தாள்கள் காணப்படுகின்றன. குழல் போன்ற பூவிதழின் உட்புறச்சுவர் வழுக்கும் தன்மையுடனும் கீழ்ப்புறம் நோக்கி நீட்டியுள்ள விறைப்பான மயிரிகளைக் கொண்டும் காணப்படுகிறது.


இளம் மலர்கள் நிமிர்ந்தவை. இந்நிலையில் உள் நுழையும் சிறு ஈக்கள் குழாயில் நுழைகின்றன. அவை தப்பமுடியாமல் மயிரிழைகளால் பிடிக்கப்படுகின்றன. மகரந்தப்பைகள் முதிர்ந்தவுடன் மலர்கள் கீழ்ப்புறம் நோக்கி வளைவதுடன் மயிரிழைகள் உதிர்ந்துவிடுகின்றன. இதிலிருந்து தப்பிச்செல்லும் ஈக்கள் மற்றொரு மலரில் நுழையும் பொழுது மகரந்தத் துகள்கள் அம்மலரின் சூலகமுடி மீது விழுந்து மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.

மகரந்தச்சேர்க்கையின் முக்கியத்துவம்

• மகரந்தச்சேர்க்கை கருவுறுதலுக்கு முக்கிய முன்தேவையாகும்.

• கருவுறுதல் கனிகள் மற்றும் விதைகள் உருவாக உதவுகிறது.

• கருவுறுதலுக்காக ஆண் மற்றும் பெண் கேமீட்களை நெருக்கமாக கொண்டு செல்ல உதவுகிறது.

• வேறுபட்ட மரபணுக்கள் ஒன்றாக கலந்து தாவரங்களில் வேறுபாடுகளை அறிமுகப்படுத்த அயல்- மகரந்தச்சேர்க்கை உதவுகிறது.

இவ்வேறுபாடுகள் தாவரங்களை சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவும், சிற்றினமாக்கத்திற்கும் உதவுகின்றன. 

Tags : Sexual Reproduction in Plants தாவரங்களில் பாலினப்பெருக்கம்.
12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants : Agents of pollination Sexual Reproduction in Plants in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் : மகரந்தச்சேர்க்கைக்கான முகவர்கள் - தாவரங்களில் பாலினப்பெருக்கம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்