பாலினப் பெருக்கம் (Sexual Reproduction)
கீழ்நிலைத் தாவரங்களான பாசிகள், பிரையோஃபைட்களில் நடைபெறும் இனப்பெருக்க முறைகள் பற்றி முந்தைய வகுப்புகளில் விரிவாக படித்திருப்பீர்கள். பாலினப் பெருக்கம் ஆண், பெண் கேமீட்களின் உற்பத்தி மற்றும் இணைவு ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. இதில் முந்தைய நிகழ்வு கேமீட் உருவாக்கம் (gametogenesis) என்றும், பிந்தைய நிகழ்வு கருவுறுதல் (fertilization) என்றும் அழைக்கப்படுகிறது. பாசிகள், பிரையோஃபைட்களில் நடைபெறும் பாலினப் பெருக்க முறைகளை நினைவு கூர்வோம். அவை சிற்றினத்தைப் பொறுத்து நகரும் அல்லது நகர இயலா கேமீட்களை உற்பத்தி செய்து இனப்பெருக்கம் செய்கின்றன. கேமீட்களின் இணைவு மூன்று வகைப்படும் ஒத்த கேமீட்களின் இணைவு (isogamy), சமமற்ற கேமீட்களின் இணைவு (anisogamy), முட்டைக் கருவுறுதல் (oogamy) பாசிகளில் வெளிக் கருவுறுதலும், உயர் தாவரங்களில் உட்கருவுறுதலும் நடைபெறுகின்றன.
மலர்
காலங்காலமாக மலர்களைப் பற்றி பன்பரிமாண நோக்குகள்
நிலவுகின்றன. மலர்கள் கவிஞர்களுக்கு உற்சாகமூட்டும் கருவியாக உள்ளது. அனைத்து வகை விழாக்களிலும்
அலங்காரப்பொருளாய் விளங்குகின்றது. தமிழ் இலக்கியத்தில் ஐவகை நிலங்களும், பல வகை மலர்களால்
குறிப்பிடப்பட்டுள்ளன. சில நாடுகளின் கொடிகளிலும் மலர்கள் இடம் பெற்றுள்ளன. இவை வாசனை
திரவியத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. தாவர புற அமைப்பியல் வல்லுநரைப் பொறுத்தமட்டில்
மலர் என்பது இனப்பெருக்கத்திற்காக மிகவும் சுருக்கமடைந்த தண்டுத் தொகுதியாகும். பதினோராம்
வகுப்பில் அலகு II-ல் மலர்களின் பாகங்களைப் பற்றி நீவிர் படித்ததை நினைவு கூர்வோம்.
ஒரு மலர் நான்கு வட்டங்களைக் கொண்டுள்ளது. புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்தத்தாள்
வட்டம், சூலகவட்டம். இவற்றில் மகரந்தத்தாள் வட்டமும், சூலகவட்டமும் இன்றியமையாத உறுப்புகளாகும்
(படம் 1.3). உயர் தாவரங்களில் பாலினப் பெருக்கத்தில் நடைபெறும் நிகழ்வு மற்றும் மாற்றங்கள்
மூன்று படிநிலைகளில் நிகழ்கின்றன. அவை கருவுறுதலுக்கு முன், கருவுறுதல், கருவுறுதலுக்கு
பின் நடைபெறும் மாற்றங்களாகும். இந்நிகழ்வுகளை விரிவாக விவாதிப்போம்.