பெண் இனப்பெருக்கப் பகுதி - சூலகவட்டம் - சூலின் அமைப்பு (பெருவித்தகம்) | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants
ஒன்று அல்லது இரண்டு சூலுறைகளால் பாதுகாப்பாக சூழப்பட்ட சூல் பெருவித்தகம் என்று அறியப்படுகிறது. ஒரு முதிர்ந்த சூல் ஒரு காம்பையும், உடலையும் கொண்டிருக்கும். சூலகக்காம்பு அடிப்பகுதியில் அமைந்து சூல்களை சூலொட்டுத்திசுவுடன் இணைக்கிறது.
சூலகக்காம்பு சூலின் உடலோடு இணையும் பகுதி சூல்தழும்பு (hilum) எனப்படும். தலைகீழாக அமைந்த சூலுடன் சூலகக்காம்பு ஒட்டிய இடத்தில் உருவாகும் விளிம்பு பகுதி சூல்காம்புவடு (raphe) எனப்படும். சூலின் மையத்தில் காணப்படும் பாரங்கைமாவாலான திசுப்பகுதி சூல்திசு (nucellus) என்று அழைக்கப்படுகிறது. சூல்திசுவைச் சூழ்ந்து காணப்படும் பாதுகாப்பு உறை சூலுறை (integument) எனப்படும். ஒரு சூலுறை மட்டும் காணப்படின் ஒற்றை சூலுறைச் சூல் (unitegmic) என்றும், இரு சூலுறைகள் காணப்படின் இரு சூலுறைச் சூல் (bitegmic) என்றும் அழைக்கப்படும். சூலுறையால் சூழப்படாத சூல்திசுப்பகுதி சூல்துளை (micropyle) எனப்படும். சூல்திசு , சூலுறை மற்றும் சூல் காம்பு ஆகியவை சந்திக்கும் அல்லது இணையும் பகுதிக்கு சலாசா (chalaza) என்று பெயர். சூல்துளைக்கு அருகில் சூல்திசுவில் காணப்படும் பெரிய முட்டை வடிவ பை போன்ற அமைப்பு கருப்பை (embryo sac) அல்லது பெண் கேமீட்டகத் தாவரம் என்று அழைக்கப்படுகிறது. இது சூல் திசுவிலுள்ள செயல்படும் பெருவித்திலிருந்து தோன்றுகிறது. ஒரு சில சிற்றினங்களில் (ஒரு சூலறையுடைய மென் சூல்திசு கொண்ட) சூலுறையின் உள்ளடுக்கு சிறப்பு பெற்று கருப்பையின் ஊட்டத்திற்கு உதவுகிறது. இந்த அடுக்கு எண்டோதீலியம் (endothelium) அல்லது சூலுறை டபீட்டம் (integumentary tapetum) என்று அழைக்கப்படுகிறது (எடுத்துக்காட்டு: ஆஸ்டரேசி). வித்துருவாக்க செல்லின் அமைவிடத்தைப் பொறுத்து சூல்கள் இரு வகைப்படும். வித்துருவாக்க செல்கள் புறத்தோலடியில் ஒரே ஒரு அடுக்காக சூல் திசுவால் சூழப்பட்டிருந்தால் அது மென்சூல்திசு சூல் (tenuinucellate) வகை எனப்படும்.
பொதுவாக இவ்வகை சூல்கள் மிகச் சிறிய சூல் திசுவைக் கொண்டிருக்கும். வித்துருவாக்க செல்கள் புறத்தோலடியின் கீழ்ப் பகுதியிலிருந்து தோன்றினால் அந்த வகை சூல்கள் தடிசூல்திசு சூல் (crassinucellate) வகை எனப்படும். இத்தகைய சூல்கள் பொதுவாக அதிக சூல்திசு கொண்டவையாக இருக்கும். சலாசா மற்றும் கருப்பையின் இடையே சூலின் அடிப்பகுதியில் காணப்படும் செல் தொகுப்பு ஹைப்போஸ்டேஸ் (hypostase) என்றும், சூல்துளைக்கும் கருப்பைக்கும் இடையே காணப்படும் தடித்த சுவருடைய செல்கள் எப்பிஸ்டேஸ் (epistase) என்றும் அழைக்கப்படுகிறது. சூலின் அமைப்பு படம் 1.7-ல் கொடுக்கப்பட்டுள்ளது.