பெண் இனப்பெருக்கப் பகுதி - சூலகவட்டம் - பெருவித்துருவாக்கம் | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants
பெருவித்துருவாக்கம் (Megasporogenesis)
பெருவித்து தாய் செல்லிலிருந்து பெருவித்து உருவாகும் நிகழ்வு பெருவித்துருவாக்கம் (megasporogenesis) எனப்படும். சூல் வளர்ச்சியடையும் போது சூல்திசுவின் புறத்தோலடித்தோல் கீழ் அமைந்துள்ள ஒரு சூல்திசு செல் பெரிதாகி முன்வித்தாக (archesporium) செயல்படுகிறது. சில தாவரங்களில் முன்வித்து செல் நேரடியாக பெருவித்து (megaspore) தாய் செல்லாகச் செயல்படுகிறது. பிற தாவரங்களில் இவை குறுக்குவாட்டில் பகுப்படைந்து வெளிப்புறத்தில் முதல் நிலை புறப்பக்க செல்லையும் (outer primary parietal cell), உட்புறத்தில் முதல் நிலை வித்துருவாக்க செல்லையும் (inner primary sporogeneous cell) தருகிறது. இந்த புறப்பக்க செல் பகுப்படையாமலோ அல்லது பரிதி மற்றும் ஆரத்திற்கு இணையாக சில பகுப்புகளை அடைந்து முதல் நிலை வித்துருவாக்க செல் சூல்திசுவில் ஆழமாகப் பதியச் செய்கிறது. இந்த முதல் நிலை வித்துருவாக்கச் செல் பெருவித்து தாய் செல்லாகச் செயல்படுகிறது. பெருவித்து தாய் செல் குன்றல் பகுப்பிற்குட்பட்டு நான்கு ஒருமடிய பெருவித்துக்களைத் தருகிறது. கருப்பை வளர்ச்சியில் பங்கு பெறும் பெருவித்துகளின் எண்ணிக்கையைப் பொருத்து ஒருபெருவித்து சார் கருப்பை (monosporic), இருபெருவித்து சார் கருப்பை (bisporic), நான்கு பெருவித்து சார் கருப்பை (tetrasporic) என மூன்று அடிப்படை வகையான வளர்ச்சி முறைகள் காணப்படுகின்றன. பொதுவாக நான்கு பெருவித்துக்கள் நேர்கோட்டில் அமைந்திருக்கும். இந்த நான்கு பெருவித்துகளில் பொதுவாக சலாசா பக்கமுள்ள பெருவித்து செயல்படும் பெருவித்தாகிறது. மற்ற மூன்றும் அழிந்துவிடுகின்றன. செயல்படும் பெருவித்து பெண் கேமீட்டகத் தாவரம் அல்லது கருப்பையை உருவாக்குகிறது. இந்த வகை கருப்பை வளர்ச்சி ஒருபெருவித்து சார் கருப்பை (எடுத்துக்காட்டு : பாலிகோனம்) என அழைக்கப்படுகிறது. நான்கு பெருவித்துக்களில் இருவித்துகள் கருப்பை உருவாக்கத்தில் ஈடுபட்டால் இருபெருவித்து சார் கருப்பை வளர்ச்சி (எடுத்துக்காட்டு: அல்லியம்) எனப்படுகிறது. நான்கு பெருவித்துக்களும் கருப்பை உருவாக்கத்தில் ஈடுபட்டால் அது நான்கு பெருவித்து சார் கருப்பை (எடுத்துக்காட்டு: பெப்பரோமியா) எனப்படும். ஒருபெருவித்துசார் கருப்பையின் வளர்ச்சி (பாலிகோனம் வகை) படம் 1.9-ல் கொடுக்கப்பட்டுள்ளது.