தாவரங்களில் பாலினப்பெருக்கம் - ஆண் இனப்பெருக்க பகுதி - மகரந்தத்தாள் வட்டம் | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants
கருவுறுதலுக்கு முந்தைய அமைப்புகள் மற்றும் நிகழ்வுகள்
தாவரங்களில் ஏற்படும் ஹார்மோன் மற்றும் வளர்ச்சி
மாற்றங்கள் மலர் தோற்றுவியின் வேறுபாடுறுதலுக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றன.
கருவுறுதலுக்கு முந்தைய அமைப்புகள் மற்றும் நிகழ்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆண் இனப்பெருக்க பகுதி - மகரந்தத்தாள் வட்டம்
மகரந்தத்தாள் வட்டம் மகரந்தத்தாள்களால் ஆனது. ஒவ்வொரு மகரந்தத்தாளும் ஒரு மகரந்தப்பையையும் ஒரு மகரந்தத்தாள் கம்பியையும் கொண்டது. மகரந்தப் பையிலுள்ள மகரந்தத் துகள்கள் ஆண் கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கின்றன. இப்பாடத்தில் மகரந்தப்பையின் அமைப்பு மற்றும் வளர்ச்சி பற்றி விரிவாகக் காண்போம்.
மகரந்தப்பையின் வளர்ச்சி:
மிகவும்
இளம் நிலை மகரந்தப்பை புறத்தோலால் சூழப்பட்ட ஒருபடித்தான செல் திரள்களால் ஆனது. இதன்
வளர்ச்சியின் போது மகரந்தப்பை நான்கு மடல்களைக் கொண்ட அமைப்பாகிறது. ஒவ்வொரு மடலிலும்
ஒன்று அல்லது ஒரு சில வரிசைகளில் அமைந்த புறத்தோல் அடிச்செல்கள் தெளிவான உட்கருவைக்
கொண்டு அளவில் பெரிதாகின்றன. இவை முன்வித்து செல்களாக செயல்படுகின்றன. இந்த முன்வித்து
செல்கள் பரிதிக்கிணையான தளத்தில் பகுப்படைந்து (periclinal divison) புறத்தோலை நோக்கி
முதல் நிலை புறபக்க (parietal) செல்களையும், மகரந்தப்பையின் உட்புறம் நோக்கி முதல்
நிலை வித்துருவாக்க (sporogenous) செல்களையும் தோற்றுவிக்கின்றன. முதல் நிலை புறபக்க
செல்கள் தொடர்ச்சியாக பரிதிக்கிணையான தள மற்றும் ஆரத்திற்கு இணையான பகுப்படைந்து
2-5 அடுக்குகள் கொண்ட மகரந்தப்பைச் சுவரை உருவாக்குகின்றன. இவை புறத்தோலிலிருந்து உட்புறம்
நோக்கி எண்டோதீசியம், இடை அடுக்குகள் மற்றும் டபீட்டம் என்ற பகுதிகளை கொண்டுள்ளன.
நுண்வித்துருவாக்கம்
(Microsporogenesis): இருமடிய நுண்வித்து தாய் செல்குன்றல் பகுப்படைந்து
ஒருமடிய துண்வித்துக்கள் உருவாகும் படிநிலைகளுக்கு நுண்வித்துருவாக்கம்
(microsporogenesis) என்று பெயர் முதல்நிலை வித்து செல்கள் நேரடியாகவோ அல்லது சில குன்றலிலா
பகுப்புக்களுக்கு உட்பட்டோ வித்துருவாக்க திசுவைத் (sporogenous tissue) தோற்றுவிக்கின்றன.
வித்துருவாக்க திசுவின் கடைசி செல்கள் நுண்வித்து தாய் செல்களாகச் செயல்படுகின்றன.
ஒவ்வொரு நுண்வித்து தாய் செல்லும் குன்றல் பகுப்புற்று நான்கு
செயல்பாடு
டாட்டூரா மெட்டலின் மொட்டுகள் மற்றும் மலர்களைச் சேகரிக்கவும்.
மகரந்தத்தாள்களை பிரித்தெடுத்து மகரந்தப்பையை மெல்லிய குறுக்குத் துண்டுகள் எடுத்து
நுண்ணோக்கியில் உற்று நோக்கவும். மகரந்தப்பையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை உற்று நோக்கி
பதிவு செய்யவும்.
ஒருமடிய நுண்வித்துகளைத் தோற்றுவிக்கின்றன (நான்கமை நுண்வித்து). இந்த நான்கமை வித்துக்கள் நான் முகப்பு , குறுக்கு மறுக்கு , நேர்கோட்டு, இருமுகப்பு , T வடிவ அமைப்பில் உள்ளது. நுண்வித்துக்கள் விரைவில் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து தனித்தனியாக மகரந்தப்பை அறையில் காணப்படுகின்றன மற்றும் மகரந்தத்துகள்களாக வளர்கின்றன. நுண்வித்தகங்களின் வளர்ச்சியிலுள்ள படிநிலைகள் படம் 1.4-ல் கொடுக்கப்பட்டுள்ளன. சில தாவரங்களில் ஒரு நுண்வித்தகத்திலுள்ள நுண்வித்துகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பொலினியம் (pollinium) என்ற அமைப்பை பெற்றுள்ளது. எடுத்துக்காட்டு: எருக்கு . கூட்டு மகரந்தத்துகள் டுரோசீரா, டிரைமிஸ் ஆகிய தாவரங்களில் காணப்படுகின்றன.
முதிர்ந்த மகரந்தப்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
முதிர்ந்த மகரந்தப்பையின் குறுக்கு வெட்டுத்
தோற்றம் மகரந்த அறை மகரந்தச்சுவரால் சூழப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. இது இருமடலுடைய
இரு பை அமைப்பு (dithecous) கொண்டுள்ளது. ஒரு வகைமாதிரி (typical) மகரந்தப்பை நான்கு
வித்தகங்களைக் கொண்டது. முதிர்ந்த மகரந்தப்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் படம்
1.5-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
1. மகரந்தப்பை
சுவர்
ஒரு முதிர்ந்த மகரந்தப்பையின் சுவர் (அ) புறத்தோல்
(ஆ) எண்டோதீசியம் (இ) இடை அடுக்குகள் (ஈ) டபீட்டம் என்ற அடுக்குகளைக் கொண்டுள்ளது.
அ) புறத்தோல்: இது
ஓரடுக்கு செல்களால் ஆன பாதுகாப்பு அடுக்காகும். வேகமாக பெரிதாகும் உட்புறத் திசுக்களுக்கு
ஈடுகொடுக்கும் பொருட்டு இச்செல்கள் தொடர்ச்சியாக ஆரத்திற்கு இணையான பகுப்படைகின்றன.
ஆ) எண்டோதீசியம்: இது
பொதுவாக புறத்தோலுக்குக் கீழாக ஆரப்போக்கில் நீண்ட ஓரடுக்கு செல்களால் ஆனது. உட்புற
கிடைமட்டச் சுவர் (சில சமயங்களில் ஆரச்சுவரும்) - செல்லுலோசால் ஆன பட்டைகளைத் தோற்றுவிக்கிறது.
இச்செல்கள் நீர் உறிஞ்சும் தன்மை (hygroscopic) கொண்டவை. நீர்வாழ்த் தாவரங்கள், சாற்றுண்ணித்
தாவரங்கள், மூடிய பூக்களைக் கொண்ட தாவரங்கள் மற்றும் தீவிர ஒட்டுண்ணித் தாவரங்களில்
மகரந்தப்பைகளில் எண்டோதீசியம் வேறுபாடடைவதில்லை. இரண்டு வித்தகங்களை இணைக்கும் ஒரு
மகரந்த மடல் பகுதியில் அமைந்த செல்களில் இத்தடிப்பு காணப்படுவதில்லை இப்பகுதிக்கு ஸ்டோமியம்
(stomium) என்று பெயர் எண்டோதீசியத்தின் நீர் உறிஞ்சுதன்மையும், ஸ்டோமியமும் முதிர்ந்த
மகரந்தப்பை வெடிப்பிற்கு உதவுகின்றன.
இ) இடை
அடுக்குகள்: எண்டோதீசியத்தை அடுத்துள்ள இரண்டு அல்லது மூன்று
அடுக்கு செல்கள் இடை அடுக்குகளை குறிப்பிடுகின்றன. இவை குறுகிய வாழ்தன்மை
(ephemeral) உடையது. மகரந்தப்பை முதிர்ச்சியடையும் போது இவை நசுக்கப்படுகின்றன அல்லது
சிதைவடைந்து விடுகின்றன.
ஈ) டபீட்டம்: இது
மகரந்தப்பை சுவரின் உட்புற அடுக்காகும். நுண்வித்து உருவாக்கத்தின் நான்மய நுண்வித்துகள்
நிலையில் இது தன் முழு வளர்ச்சி நிலையை அடைகிறது.
டபீட்டத்தின் ஒரு பகுதி மகரந்த அறையைச் சூழ்ந்துள்ள
இணைப்புத் திசுவிலிருந்தும் மற்றொரு பகுதி வெளிப்புற சுவர் அடுக்கிலிருந்தும் உருவாகிறது.
எனவே டபீட்டம் இரட்டை தோற்றமுடையது. இது வளரும் வித்துருவாக்க திசுக்கள், நுண்வித்து
தாய் செல்கள் மற்றும் நுண் வித்துகளுக்கு ஊட்டமளிக்கிறது. டபீட்டத்தின் செல்கள் ஒரு
உட்கரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உட்கரு அல்லது பன்மடிய தன்மையுடைய உட்கரு கொண்டு
காணப்படும். மகரந்தப்பை சுவர் பொருட்கள், ஸ்போரோபொலனின், போலன்கிட், டிரைஃபைன் மற்றும்
ஒவ்வாத்தன்மை வினையை (incompatibility)
கட்டுப்படுத்தும் ஏராளமான புரதங்கள் உற்பத்தியிலும்
டபீட்டம் பங்கு கொள்கிறது. மேலும் நுண்வித்து அல்லது மகரந்தத்துகள்களின் வளத்தன்மை
அல்லது மலட்டுத்தன்மையை இது கட்டுப்படுத்துகிறது.
செயல்பாட்டின் அடிப்படையில் டபீட்டம் சுரப்பு
டபீட்டம், ஊடுருவும் டபீட்டம் என இரு வகைப்படும்.
சுரப்பு
டபீட்டம் (புறப்பக்க / சுரப்பு / செல் வகை)
(Secretory tapetum): இவ்வகை டபீட்டம் தோற்றநிலை, செல்லமைப்பை தக்கவைத்து, செல்
ஒருங்கமைவுடன் இருந்து நுண்வித்துகளுக்கு ஊட்டமளிக்கின்றன.
ஊடுருவும்
டபீட்டம் (பெரிபிளாஸ்மோடிய வகை) (Invasive
tapetum): இவ்வகை பீட்டத்தின் செல்கள் உட்புற கிடைமட்ட சுவர்களையும், ஆரச் சுவர்களையும்
இழந்து அனைத்து புரோட்டோபிளாஸ்ட்களும் ஒன்றிணைந்து பெரிபிளாஸ்மோடியத்தை உருவாக்குகின்றன.
பீட்டத்தின்
பணிகள்
• வளரும் நுண்வித்துகளுக்கு ஊட்டமளிக்கிறது.
• யுபிஷ் உடலத்தின் (ubisch bodies) மூலம்
ஸ்போரோபொலனின் உற்பத்திக்கு உதவுவதால் மகரந்தச்சுவர் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
• போலன்கிட்டுக்கு தேவையான வேதிப்பொருட்களை
தந்து அவை மகரந்தத்துகளின் பரப்புக்கு கடத்தப்படுகிறது.
• சூலக முடியின் ஒதுக்குதல் வினைக்கான
(rejection reaction) எக்சைன் புரதங்கள் (exine proteins) எக்சைன் குழிகளில் காணப்படுகின்றன.
இவ்வகைப் புரதங்கள் டபீட்ட செல்களிலிருந்து பெறப்படுகின்றன.
பெரும்பாலான தாவரவியல் - வல்லுநர்கள் அமீபா வகை என்ற மூன்றாவது வகை டபீட்டம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வகையில் செல்சுவர் இழக்கப்படாமல் மகரந்த அறையினுள் செல்கள் ஊடுருவுகின்றன. இவ்வகை
ஆண்மலட்டுத் தன்மையுடன் தொடர்புடையது. மேலும் பெரிபிளாஸ்மோடிய வகையுடன் அடிக்கடி குழப்பத்தை
ஏற்படுத்துகிறது
2. மகரந்த
அறை:
மகரந்த அறை இளம் நிலையில் நுண்வித்துகளாலும், முதிர்ந்த நிலையில் மகரந்தத்துகள்களாலும்
நிறைந்திருக்கும். நுண்வித்து தாய்செல்கள் குன்றல் பகுப்படைந்து ஒரு மடிய நிலையிலுள்ள
நுண்வித்துகளைத் தருகின்றன.
3. இணைப்புத் திசு: இது மகரந்த மடல்களுக்கு இடையில் காணப்படும் வளமற்ற திசுப் பகுதியாகும். இது வாஸ்குலத் திசுக்களைக் கொண்டுள்ளது. இது உள்பக்க டபீட்டத்தின் உருவாக்கத்திற்குப் பங்களிக்கிறது.
நுண் வித்துகள் மற்றும் மகரந்தத் துகள்கள
நுண்வித்து தாய் செல்கள் குன்றல் பகுப்படைதலின்
விளைவாக பெறப்படுவது நுண்வித்துகளாகும். மகரந்தத் துகள் நுண்வித்திலிருந்து பெறப்படுகின்றது.
நுண்வித்துகள் புரோட்டோபிளாசம் பெற்று முழுமையாக வளர்ச்சியடையாத சுவற்றினால் சூழப்பட்டுள்ளது.
மகரந்தத்துகளில் புரோட்டோபிளாசம் அடர்ந்த சைட்டோபிளாசத்தையும், மையத்திலமைந்த உட்கருவையும்
கொண்டுள்ளது. இதன் சுவர் உட்புற இன்டைன் (intine) மற்றும் வெளிப்புற எக்சைன்
(exine) என இரு அடுக்குகளைக் கொண்டது. இன்டைன் பெக்டின், ஹெமிசெல்லுலோஸ், செல்லுலோஸ்,
காலோஸ் மற்றும் புரதங்கள் கொண்டு சீரான மெல்லிய தடிப்புடன் காணப்படும். எக்சைன் செல்லுலோஸ்,
ஸ்போரோபொலினின், போலன்கிட் கொண்டு தடித்து காணப்படும். எக்சைன் சீரற்ற தடிப்புகளுடன்
சில பகுதிகளில் மெல்லியதாக காணப்படும். இப்பகுதிகள் சிறிய வட்டவடிவில் இருந்தால் வளர்துளைகள்
என்றும், சற்று நீண்டு காணப்பட்டால் பிளவுப்பள்ளங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை
மகரந்தத்துகளின் முளைத்தலுடன் தொடர்புடையவை. வளர்துளைப் பகுதியில் ஸ்போரோப்பொல்லனின்
பொதுவாகக் காணப்படுவதில்லை. எக்சைனின் புறப்பரப்பு மென்மையாகவோ அல்லது பலவகை அலங்கார
பாங்குகளுடனும் உள்ளது. (தடி வடிவம், சிறு குழியுடைய , கரணை போன்ற, சிறு புள்ளி போன்ற).
அலங்கார பாங்குகள் தாவரங்களை அடையாளம் கண்டறியவும் வகைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
மகரந்தவியல்
(Palynology)
மகரந்தத்துகள் பற்றிய படிப்பிற்கு மகரந்தவியல் (Palynology) என்று
பெயர். இது நிலக்கரி மற்றும் எண்ணெய் புலங்களின் பரவலைக் கண்டறிய உதவுகிறது. ஒரு பகுதியின்
தாவர கூட்டத்தை மகரந்தத்துகள் பிரதிபலிக்கின்றன.
மகரந்தத்துகள்களை நீண்டகாலம் உயிர்ப்புத்தன்மையுடன் பாதுகாக்க திரவ நைட்ரஜன் (-196°C) பயன்படுத்தப்படுகிறது. இந்நுட்பம் உறைகுளிர்பாதுகாப்பு (cryopreservation) என அறியப்படுகிறது. இந்நுட்பம் பொருளாதார முக்கியத்துவமுள்ள பயிர்களின் மகரந்தத்துகள்களை தாவர மேம்பாடு செயல்திட்டங்களுக்காக சேமித்து வைக்க உதவுகிறது.
தேனீ மகரந்தம் (Bee
pollen)
தேனீ மகரந்தம் ஒரு இயற்கை
பொருளாகும். இதில் அதிக அளவு புரதம், கார்போஹைட்ரேட், மிக குறைவான தாதுப் பொருள்கள்
மற்றும் வைட்டமின்கள் உள்ளன. எனவே இது கூடுதல் ஊட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது;
இது மகரந்த மாத்திரைகளாகவும், பாகு நீராகவும் விற்கப்படுகிறது. மேலும் தடகள வீரர்கள்
மற்றும் பந்தயக் குதிரைகளின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. தீக்காயத்தினால் ஏற்படும்
புண்கள் ஆறுவதற்கு இது உதவுகிறது. பூந்தேன் மகரந்தம் பற்றிய அறிவியலுக்கு பூந்தேன்
மகரந்தவியல் (mellitopalynology) என்று பெயர்.
மகரந்தத்துகளின் வடிவம் சிற்றினத்திற்கு சிற்றினம்
மாறுபடுகிறது. கோளம், நீள்கோணம், கதிர்கோல், மடல், கோண அல்லது பிறை வடிவம் என பல்வேறு
வடிவங்களில் காணப்படுகிறது. மகரந்தத்துகள்களின் அளவு 10 மைக்ரோ மீட்டர் (மயோசோடிஸ்)
முதல் 200 மைக்ரோ மீட்டர் (குக்கர்பிட்டேசி மற்றும் நிக்டாஜினேசி குடும்பத் தாவரங்கள்)
வரை வேறுபடுகின்றன.
சுவர்ப்பொருளான ஸ்போரோபொலினின் உருவாக மகரந்தத்துகளின்
சைட்டோபிளாசம் மற்றும் டபீட்டம் பங்களிக்கிறது. இது கரோட்டினாய்டிலிருந்து பெறப்படுகிறது.
இது இயற்பியல் மற்றும் உயிரிய சிதைவைத் தாங்கும் தன்மையுடையது. அதிக வெப்பத்தைத் தாங்கும்
தன்மை, வீரியமிக்க அமிலம், காரம் மற்றும் நொதிகளின் செயல்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
எனவே தொல்லுயிர் புதைபடிவுகளில் மகரந்தத்துகள் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்க இதுவே
காரணமாகும். மேலும் மகரந்தப்பையிலிருந்து சூலக முடி வரையிலான மகரந்தத்துகள்களின் பயணத்தை
இது பாதுகாப்பானதாக்குகிறது.
போலன்கிட் உருவாக்கத்தில் டபீட்டம் பங்களிக்கிறது. கரோட்டினாய்டு அல்லது ப்ளேவோனாய்ட் இதற்கு மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தைத் தருகிறது. இது மகரந்தத்துகள்களின் புறப்பரப்பில் காணப்படும் பிசுபிசுப்பான பூச்சு கொண்ட எண்ணெய் அடுக்காகும். இது பூச்சிகளைக்கவர்வதுடன் புற ஊதாக் கதிர்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
ஆண் கேமீட்டகத் தாவரத்தின் வளர்ச்சி
ஆண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல் நுண்வித்தாகும்.
இது ஒருமடியமானது. நுண்வித்தகத்திற்கு உள்ளிருக்கும் போதே ஆண் கேமீட்டகத் தாவரத்தின்
வளர்ச்சி தொடங்கிவிடுகிறது. நுண்வித்தின் உட்கரு பகுப்படைந்து ஒரு தழைவழி
(vegetative) உட்கருவையும், ஒரு உருவாக்க (generative) உட்கருவையும் தோற்றுவிக்கிறது.
உருவாக்க உட்கருவைச் சூழ்ந்து சுவர் தோன்றுவதால் இரண்டு சமமற்ற செல்கள் உருவாகின்றன
- ஒரு பெரிய, ஒழுங்கற்ற உட்கரு கொண்ட, அதிக சேமிப்பு உணவைக் கொண்ட தழைவழி செல் மற்றும்
ஒரு சிறிய உருவாக்க செல். பொதுவாக இரண்டு செல் நிலையில் மகரந்தத்துகள் மகரந்தப்பையிலிருந்து
வெளியேற்றப்படுகின்றன.
ஒரு சில தாவரங்களில் உருவாக்க செல் மீண்டும்
பகுப்படைந்து இரு ஆண் கேமீட்டுகளைத் தோற்றுவிக்கிறது. இத்தாவரங்களில் மகரந்தத் துகள்கள்
மூன்று செல் நிலையில் வெளியேற்றப்படுகின்றன. 60% மூடுவிதைத் தாவரங்களில் மகரந்தத்துகள்
இரண்டு செல் நிலையிலேயே வெளியேற்றப்படுகின்றன. மகரந்தத்துகள் சரியான சூலகமுடியினை அடைந்த
பின்னரே ஆண் கேமீட்டகத் தாவரம் மேற்கொண்டு வளரும்.
சூலகமுடியை அடைந்த மகரந்தத்துகள் ஈரப்பசையை உறிஞ்சி உப்புதலடைகிறது. இன்டைன் வளர்துளையின் வழியாக மகரந்தக் குழாயாக வளர்கிறது. இரண்டு செல் நிலையில் மகரந்தத்துகள் வெளியேற்றப்பட்டிருப்பின் சூலக முடியை அடைந்த பின் அல்லது மகரந்தக்குழாய் கருப்பையை அடையும் முன்னர் உருவாக்க செல் பகுப்படைந்து இரு ஆண் செல்களைத் (விந்துக்கள் ) தருகிறது. ஆண் கேமீட்டகத் தாவரத்தின் வளர்ச்சி நிலைகள் படம் 1.6-ல் கொடுக்கப்பட்டுள்ளன.