பொருள், வகைகள், மூல ஆதாரங்கள் - சட்டம் | 11th Political Science : Chapter 4 : Basic Concepts of Political Science Part II

   Posted On :  26.09.2023 09:34 pm

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி II

சட்டம்

அரசால் அமலாக்கம் செய்யப்படுகின்ற விதிமுறைகளின் தொகுப்பிற்கு சட்டம் என்று பொருள்.

அலகு 4 

அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்பகுதி II 


சட்டம்


கற்றலின் நோக்கங்கள்

சட்டத்தின் சாராம்சத்தை அறிந்து கொள்வதன் மூலம் மாணவர்கள்  நீதியைப் பற்றிய சிந்தனைக்கு  நெருக்கமாதல்.

சட்டத்தின் வகைகளை தெரிந்து கொள்வதன் மூலம் மாறுபட்ட சட்டங்களின் செயல்பாட்டையும், அதனால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளையும் புரிய வைத்தல்.

சட்டத்தின் ஆதாரங்களைப் புரிந்து கொள்ளுதல்.

சட்டம், அரசு மற்றும் நீதிநெறி ஆகியவைகளிடையேயான தொடர்பை புரியவைப்பது.


1. அறிமுகம்

சட்டம் என்றால் என்ன?

அரசால் அமலாக்கம் செய்யப்படுகின்ற விதிமுறைகளின் தொகுப்பிற்கு சட்டம் என்று பொருள்.

அரிஸ்டாட்டில்சட்டம் செயல்படாத நிலையில் மனிதர்கள் விலங்குகளாக மாறுகிறார்கள்என்று சரியாக சுட்டிக்காட்டுகிறார். சமுதாயத்தின் கட்டுக்கோப்பினைப் பாதுகாக்கவும், தேசத்தின் வளர்ச்சியை மேம்படுத்தவும், சட்டமானது உலகம் முழுமைக்கும் இன்றியமையாததாகிறது. சமுதாய ஒழுங்கினைப் பராமரிக்க, சட்டத்தின் அபரிமிதமான சக்தி மட்டுமே முழு தீர்வாக விளங்க முடியாது. ஏனெனில் சட்டத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது. குற்றவாளிகளுக்கு சட்டம் கொடுங்கோலனாகவும், குடிமக்களுக்கு அதே சட்டம் பாதுகாவலனாகவும் விளங்குகிறது.

உலகத்தின் ஒரு பகுதியில் சட்டம், கடினமானதாகவும் மறுபக்கம் இணக்கமாகவும் விளங்கக்கூடிய காரணம் என்பது எப்போதும் சர்ச்சைக்குரியதாகவும், விவாதத்திற்குரியதாகவும் தொடர்கிறது. மேற்கூறிய வாதமும், விவாதமும் தத்தம் நாடுகளின் பணிகள், குறிப்பாக தண்டனைகளைப் பொறுத்து அமைகிறது. உதாரணத்திற்கு மக்களாட்சி நாடுகளில் நிறைவேற்றப்படக் கூடிய சட்டம், முற்றதிகார நாடுகளின் சட்டங்களை விடவேறுபட்டதாகவும், மக்கள் நலனுக்காகவுமாக செயல்படுகிறது. இதை தவிர்த்துத் சட்டம், ஒரு நாட்டு மக்களுக்கு எந்த அளவிற்கு சுதந்திரத்தை வழங்குகிறது என்பது குறிப்பிட்ட சட்டத்தை நிர்வகிக்கும்போதும், செயல்படுத்தும் போதும் தெரிய வருகிறது. உலகின் எந்த நாட்டிலுமே சட்டத்தினை அறியாமை என்பது தண்டனையிலிருந்து தப்பிக்கும் ஒரு காரணியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே சட்டத்தின் கருத்தாக்கத்தினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதும், அவை அரசமைப்பு வழங்கும் அடிப்படை சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறை என புரிய வைப்பதும் இன்றியமையாததாகிறது.

இங்கிலாந்து சட்ட நிபுணரான .வி. டைசிசட்டத்தின் ஆட்சிஎன்ற கருத்தாக்கத்தினை 19-ஆம் நூற்றாண்டில் மேலும் பிரபலப்படுத்தியவர் ஆவார். அரசியல் அமைப்புச் சட்டதின் அறிமுகம் என்ற நூலில் கூறியுள்ளார். முற்கால தத்துவ ஞானிகளுக்குசட்டத்தின் ஆட்சிஎன்னும் சொற்றொடர் அறிமுகமில்லாவிட்டாலும் அக்கருத்தாக்கத்தினை அரிஸ்டாட்டில் எனும் ஞானிசட்டமே ஆளுகை புரிய வேண்டும்என எழுதியுள்ளதை காணலாம்.

குறிப்பிடத்தக்க மேற்கோள்  

தனியார் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தனி நபர்களாகவும், அவர்களுக்கு மேலாகவும், இடையேயும் ஓர் பாரபட்சமில்லாத நடுவராக அரசு இருக்கிறது. ஹாலந்து (Holland)

சட்டம்நீதி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு

- சமூகத்தில் நீதியை அடைவது சட்டத்தின் குறிக்கோள் ஆகும்.

- நீதி என்பது எது சரி, எது தவறு, எது நல்லது, எது சமத்துவம் போன்றவைகளை விளக்கக்கூடிய ஒர் புலனாகாத கருத்தாகும்.

- எனவே ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எது சரியானதோ அல்லது எது நியாயமானதோ அதைச் செய்வதாகும்.


சட்டம் பற்றிய கருத்துகள்

சட்டம் என்பது இறையாண்மையின் கட்டளை - ஜான் ஆஸ்டின் (John Austin)

நீதி நிர்வாகத்தை. செயல்படுத்துவதற்காக அரசு அங்கீகரித்த விதிமுறைகளின் தொகுப்பே சட்டம் ஆகின்றது. சல்மாண்டு

சட்டங்கள் இல்லையென்றால் அங்கே சுதந்திரம் இல்லைஜான்லாக்


சட்டத்தின் நோக்கங்கள்:

அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத்தல்

நியாயத்தை ஊக்குவித்தல் 

சச்சரவுகளை தீர்த்தல்

நீதியை ஊக்குவித்தல்

ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் ஏற்படுத்துதல்

விரும்பத்தகுந்த சமூக மற்றும் பொருளாதார நடத்தையை ஊக்குவித்தல்

பெரும்பான்மை விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துதல் (சில பிரச்சனைகளில்)

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல்.


2. சட்டத்தின் பொருள்

சட்டம் என்கிற வார்த்தை பண்டைய டியூட்டோனிக் (Teutonic) மொழியிலுள்ள லாக்என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவானதாகும். சட்டமில்லாத சமுதாயம் மற்றும் ஆட்சி, குழப்பவாதத்திலும்கலகத்திலும் முடிவுறும். உன்மையில் சட்டமே வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறது. சட்டம் என்ற சொல்சீரானதுஎன்பதைக் குறிக்கிறது. அரசியல் அறிவியலில் சட்டம் என்பது மனித நடவடிக்கைகளை வழிநடத்துகிற விதிகளைக் கொண்ட தொகுப்பு ஆகும். அரசின் கடமைகளை அரசாங்கம் செயல்படுத்துகிறது.


3. சட்டங்களின் வகைகள்:


) தனியார் சட்டங்கள் (Private Laws)

குடிமக்களிடையேயான உறவுகளும், அவ்வுறவுகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் தனியார் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

) பொதுவுடைமைச் சட்டங்கள் (Public Laws)

குடிமக்களுக்கும், அரசுக்கும் இடையேயான உறவுகளை முடிவு செய்வது பொது சட்டமாகும். இவ்வகை சட்டத்தில் அரசு நடுவராகவும், கட்சிகாரராகவும் பார்க்கப்படுகிறது.

) அரசமைப்பு சட்டங்கள் (Constitutional Laws)

அரசை வழி நடத்தக்கூடிய அடிப்படை சட்டங்கள் அரசமைப்பு சட்டங்கள் ஆகும். அரசாங்கத்தின் செயல்பாடுகளை வரையறுத்து, தெளிவுபடுத்தக்கூடிய சட்டங்களே அரசமைப்பு சட்டங்களாகும். உதாரணத்திற்கு, குடியரசு தலைவர் தேர்தல், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பொதுசட்டம், சட்டமன்றத்தால் இயற்றப்படக் கூடிய நிரந்தர சட்டத்திலிருந்து வேறுபடுகிறது

() நிரந்தர சட்டங்கள் (Statute Laws)

நிரந்தர சட்டங்கள் என்பவை மாநில சட்டமன்றத்தின் மூலமாகவும், நாடாளுமன்றத்தின் மூலமாகவும் இயற்றப்படும் சட்டங்களாகும். மக்களாட்சி நாடுகளில் பெரும்பான்மையான சட்டங்கள் நாடாளுமன்றத்தின் மூலமாகவே இயற்றப்படுகின்றன

) அவசர சட்டம் (Ordinance)

பொதுவாக அரசினுடைய சட்டங்களின் அடிப்படையில், அரசாங்கத்தின் செயலாட்சி துறை மூலம் இது பிறப்பிக்கப்படுகின்றது. இவ்வகை சட்டம், குறைந்த கால கட்டமே நீடிக்கும். நாடாளுமன்றம் இயங்காத காலங்களிலும், அவசர காலங்களிலும் குடியரசு தலைவர் மூலம் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்

) பொது சட்டங்கள் (Common Laws)

பொது சட்டங்களானது மரபுகளையும், பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் அடிப்படையாக கொண்டது. ஆனால் நிரந்தர சட்டங்களைப் போல நீதிமன்றங்களால், அமலாக்கம் செய்யக்கூடிய தன்மை உடையதாகும். பொதுச் சட்டங்கள் இங்கிலாந்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சட்டங்கள் ஆகும்

) நிர்வாக சட்டங்கள் (Administrative Laws) 

அரசாங்க பணியாளர்களின் அலுவல் பொறுப்புகளை பற்றி விளக்கமளிப்பதுடன், ஆளுகையை முறைப்படுத்துவதற்கான சட்டம் நிர்வாக சட்டம் எனப்படும். தனி மனிதர்களுக்கும், பொதுநிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே சட்டத்தையும், அதன் செயல்பாட்டையும் பிரித்து நடைமுறைப்படுத்துவது நிர்வாக சட்டமாகும். மேலும் இது அரசாங்க அதிகாரிகளின் சலுகைகளை பற்றி விளக்கம் அளிக்க முயலுகிறது. குடிமக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே சர்ச்சை ஏற்படும் பட்சத்தில் நிர்வாக நீதிமன்றம், நிர்வாக சட்டத்தின் மூலம் தீர்வு காண்கிறது

) பன்னாட்டு சட்டங்கள் (International Laws)

பன்னாட்டு சூழலில் நாகரீகமடைந்த நாடுகளுக்கு இடையேயான உறவுமுறைகளையும், நடத்தையையும் நிர்ணயிக்கும் சட்டம், பன்னாட்டு சட்டமாகும். பன்னாட்டு உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கென்று, தனித்தன்மையுடைய பன்னாட்டு சட்டம் என்ற ஒன்று வழக்கில் இல்லை . ஆனால் ஐக்கிய நாடுகள் சபையும், உலக பொதுமக்களின் கருத்துமே, ஒவ்வொரு நாடும் தங்கள் இறையாண்மையை முழுவதுமாக அனுபவிக்க வழிவகை செய்கின்றது

மேலும் கடல் எல்லை பாதுகாப்பு சட்டம், வான்எல்லை சட்டம் என்றும் பன்னாட்டு சட்டங்களின் பிரிவுகள், தரைவழி, கடல்வழி, ஆகாய வழி என்று நாடுகளுக்கிடையே சர்வதேச எல்லைகளை வரையறுக்கிறது. வான்எல்லைச் சட்டங்களின் மூலம் ஒரு நாட்டின் ஆகாய விமானம் இன்னொரு நாட்டின் வான் எல்லையில் பறக்கும்போது அனுமதி பெற்ற பிறகே பறக்க வழி செய்கிறது


4 . சட்டத்தின் மூல ஆதாரங்கள்:


) வழக்காறுகள் (Customs)

சட்ட உருவாக்கத்திற்கு பழக்கவழக்கங்கள் மிகவும் உதவி புரிந்துள்ளன. பழக்கவழக்கங்களின் மூலமாக பயன்படுத்தப்பட்டுவந்த வழக்காறுகள் யாவும் நாளடைவில் அரசால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகின. ஒரு நாட்டின் மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் அரசால் மறுதலிக்க முடிவதில்லை. இன்றளவில் இங்கிலாந்தின், பொது சட்டமானது வழக்காறுகளில் இருந்து பெறப்பட்டது என்பது ஒரு முக்கிய உதாரணமாகும். உதாரணத்திற்கு இந்தியாவில் தமிழ் மக்களிடையே 'ஏறு தழுவுதல் ' (Bull Taming sport) என்ற பண்பாடு சார்ந்த விளையாட்டானது 2017-ஆம் ஆண்டு 'ஜல்லிக்கட்டு சட்டம்' என்ற புதிய சட்டம் உருவாகக் காரணமாக அமைந்தது.

) மதம் (Religion)

ஆதிகால சமூகங்கள் பின்பற்றிய மத சம்பிரதாயங்களும் அரசினுடைய, சட்ட உருவாக்கத்தில் பெரிதான பங்கை ஆற்றியுள்ளது. பெரும்பான்மையான நாடுகளில் மதமே சட்டத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது. இந்து மதச் சட்டமானது பெரும்பாலும் மனுவின் விதிமுறையிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இஸ்லாமியச் சட்டமானது ஷரியத் சட்டங்களின் மூலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது. தெய்வீகச் சட்டமானது, மனிதனின் மூலமாக கடவுள் வழங்கிய சட்டங்கள் என்று கருதப்படுகிறது. தெய்வீக சட்டத்தின் ஆதிமூலமாக கடவுளே இருப்பதாகக் கருதப்படுகிறது. கிறித்துவர்களுக்கு, அவர்களின் பரமபிதா முதன் முதலில் அருளிய பத்து கட்டளைகளே சட்டத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது.

செயல்பாடு

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு


இந்த படம் ஏறுதழுவுதல் என்ற தமிழரின் பண்பாடு விளையாட்டான ஜல்லிகட்டு பற்றியது ஆகும். இது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும். அலங்காநல்லூர் என்றால் ஜல்லிகட்டு என்றும், ஜல்லிகட்டு என்றால் அலங்காநல்லூர் என்றும் அழைக்கப்படுமளவுக்கு அவ்வூரின் பண்பாடு மற்றும் வரலாற்றுடன் அவ்விளையாட்டு ஒன்றிணைந்துள்ளது. இது பொதுவாக பொங்கல் கொண்டாடப்படும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் நடைபெறும் ஒரு தமிழர் பண்பாட்டு விழாவாகும். நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு சமூகத்தினருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் தங்கள் பண்பாட்டையும், மரபையும் காப்பதற்கான உரிமை ஆகியவை உண்டு. ஆனால் ஜல்லிகட்டு என்பதில் பண்பாட்டிற்கும், விலங்குகளின் உரிமைக்கும் இடையே முரண்பாடு தோன்றியது. அரசமைப்பின் பகுதி மூன்றில் அடிப்படை உரிமை உறுப்பு 29(1) -இல் கல்வி மற்றும் பண்பாடு உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 2014 -இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் "விலங்குகளும் புலன் உணர்வு கொண்டவை, ஆதலால் அடிப்படை உரிமை உறுப்பு 29(1)-படி வாழும் உரிமையைப் பெறுகின்றன என்றும் ஆதலால் அவற்றைதுன்புறுத்துவதை அனுமதிக்க இயலாது என தீர்ப்பு கூறியது. இந்த முரண்பாடுகள் இவ்விளையாட்டை முறைப்படுத்துவதில் பல்வேறு விளக்கங்களுக்கு வித்திட்டன.

) வழக்குமன்றங்களின் முடிவுகள் (Judicial Decisions)

நீதித்துறையின் செயல்பாடானது சட்டங்களை தெளிவுபடுத்தவும், சட்டங்களை நடைமுறைப்படுத்துவதுமாக அமைகிறது. நீதிமன்றங்களின் தீர்ப்புகள் புதிய சட்டங்களாக உருவாகின்றன. அதன் பிறகே இவ்வகை சட்டங்கள் அரசு மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படுகின்றன. எனவே, நீதிமன்ற தீர்ப்புகள் இவ்வகையில் புதிய பல சட்டங்களை உருவாக்குவதற்கு மூல ஆதாரமாக அமைகிறது. சிலசமயங்களில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகள் சட்டங்களாக பாவிக்கப்படுகின்றன

) சமச்சீராக்கம் (Equity)

சட்டங்கள் எப்போதெல்லாம், தெளிவற்று சூழ்நிலைக்கு பொருந்தாமல் இருக்கிறதோ, அந்தச் சமயங்களில் இந்த சம நீதி பங்கிலான கொள்கைகளும், நல்லியல்புகளும், பொது அறிவு அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு அக்குழப்பமான சூழலுக்கானத் தீர்வு காணப்படுகிறது. ஆங்கிலேய சட்டத்தின்படி சமச்சீராக்கம் என்பது இங்கிலாந்து உயர் நீதி மன்றத்தால் மட்டுமே அமல்படுத்த கூடிய விதிகளின் தொகுப்பாகும்

) அறிவியல் விளக்கவுரைகள் (Scientific Commentaries)

சட்ட வல்லுநர்களின் அறிவியல் விளக்கவுரைகள், மற்றுமொரு சட்டமூலமாக விளங்குகின்றன. முதன் முதலில் இத்தகைய அறிவியல் விளக்கவுரைகள் தோன்றியபோது, அனைவரும் அதனை ஒரு வாதமாக மட்டுமே வர்ணித்தார்கள். நாளடைவில் இதன் சிறப்புத் தன்மையும், அதிகாரமும், நீதி மற்றும் நீதிமன்ற முடிவுகளையும் விட அதிகாரத்துவம் பெற்று விளங்கியது

குறிப்பிடத்தக்க மேற்கோள்

சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் பெரும்பாலான நேரங்களில் சட்டமாகவே கருதப்படுகிறது. உதாரணத்திற்கு, இங்கிலாந்தில் கோக் மற்றும் ப்ளாக் ஸ்டோனின் விளக்கவுரைகள் (Coke and Blackstone), அமெரிக்காவின் ஸ்டோரி மற்றும் கென்ட் (Story and Kent), இந்தியாவின் விஜ்நானேஸ்வரா மற்றும் அபரார்கா (Vijnaneswaa and Aprarka) ஆகியோரின் விளக்கவுரைகளைக்கூறலாம்.- அப்பாதுரை

) சட்டமன்றம் (Legislature)

தற்காலத்தில் பெரும்பான்மையான சட்டங்கள் சட்டமன்றத்தின் மூலமே இயற்றப்படுகிறது. சட்டத்தின் மிக முக்கிய ஆதாரங்களுள் ஒன்றாக இது உள்ளது. பிற நாட்டு அரசமைப்புகளில் உள்ள சிறந்த அம்சங்களைப் பெற்று அதை தன் சொந்த நாட்டின் நன்மைக்கு பயன்படுத்துவதற்கு சிறந்த உதாரணமாக இந்திய அரசமைப்பு உள்ளது

இந்திய அரசமைப்பின் ஆதாரங்கள்

இந்திய அரசாங்க சட்டம் 1935 

பிரிட்டன் அரசமைப்பு 

அமெரிக்க அரசமைப்பு

 

5. சட்டம் எவ்வாறு அரசுடனும், நீதி நெறியுடனும் தொடர்பு கொண்டுள்ளது?

சட்டமும், நீதிநெறியும் சமமாக பாவிக்கப்படுகிறது. நீதிநெறியானது குடிமக்களுக்கு ஒழுக்க விதிகளை போதிக்கிறது. அதேபோல, அரசால் இயற்றப்படுகின்ற சட்டமும் இந்த லட்சியத்தை அடைய பாடுபடுகிறது.

சட்டமும் ஒழுக்கமும் ஒன்றோடு ஒன்று மிகுந்த தொடர்புடையன ஆகும். ஒழுக்க விதிமுறைகள் என்பவை குடிமக்களின் நன்னடத்தைகளுக்கு அடிப்படையாகும். நல்லியல்பு அரசு நற்குடிமக்களை பெற்று சிறந்து விளங்குகிறது. நல்லியல்பற்ற அரசானது, ஒழுக்கம் தவறிய குடிமக்களைப் பெற்று சீரழியும். அரசின் உயிர்மூச்சான செயல்பாடாக "நீதி நெறிகள்" விளங்குகின்றன

குறிப்பிடத்தக்க மேற்கோள் 

‘'தனிமனிதனின் நல்லொழுக்கத்திற்கு சரிசமமாக இயங்கக்கூடியது நல்லரசாகும். அரசியல் உடற்கூறில் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கின்றபோது, ஒட்டுமொத்த உடலும் பாதிப்புறும்". - பிளாட்டோ (Plato)

குறிப்பிடத்தக்க மேற்கோள் 

நீதிநெறியானது நல்லியல்பு கடமைகளைப் பற்றியது, ஆனால் அரசால் இயற்றப்படும் சட்டமோசட்டக் கடமைகளை பற்றியதாகும்.


சட்டத்திற்கும் நீதிநெறிக்கும் உள்ள வேறுபாடுகள் (The Distinction between Law and Morality)

சட்டத்தின் கட்டளைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறுபவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படுகிறார்கள்

சமூக விதிகளையும், சமூக நீதிநெறிகளையும் மதியாதவர்களுக்கு சமூக புறக்கணிப்பு என்பதே மாபெரும் தண்டனையாக அமைகிறது

நீதிநெறி என்பது மனிதர்களின் அக மற்றும் புற நடவடிக்கைகள் தொடர்புடையதாகும். ஆனால் சட்டமோ மனிதர்களின் புற நடவடிக்கைகளுடன் மட்டுமே தொடர்புடையதாகும். இதனாலேயே மனிதர்கள் தங்கள் புற நடவடிக்கைகளின் மூலம் சட்டத்தை மீறும்போது, தண்டிக்கப்படுகிறார்கள்.

பொதுக் கருத்து

பொதுவான நலனுக்கான மக்களின் கருத்தாகும்.

நீதிநெறி என்றால் என்ன?

சமூக எதிர்மறைகளான மது, சூது, திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, போன்றவைகளை கட்டுப்படுத்தும் சமூக உறுப்புகள் நீதிநெறி எனப்படுகிறது. நீதிநெறிகள் தொடர்பான சட்டங்கள் எப்போதும் நிலையானவைகளாகும்.


6. பொதுக்கருத்தும், சட்டமும் ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புடையவை?

மக்களாட்சி நடைமுறையில், தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மக்கள் அரசியலில் பங்கேற்பது தான், மக்களாட்சியை வலிமையுள்ளதாக மாற்றுகின்றது. சட்ட உருவாக்கத்தில் மக்கள் நேரடியாக பங்கு பெறவில்லையென்றாலும், சட்ட மன்றத்தின் பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுக்கின்றார்கள். இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றமானது மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கின்றது.

மக்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே மக்களாட்சியில் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. மக்கள் தங்கள் அதிருப்தியையும், கோபத்தையும் அமைதியான போராட்டங்களின் மூலமாக அரசுக்கு வெளிப்படுத்துகிறார்கள். மக்களின் பொதுநலனும், சமூக மேம்பாடும், பொதுக் கருத்தின் இரு கண்களாகும்.

குறிப்பிடத்தக்க மேற்கோள்


தற்கால அரசானது, நீதிநெறி, மதம் மற்றும் இயற்கை சட்டத்தின் லட்சியவாத அடிப்படையில் நீடிக்கிறது எனலாம். அதே சமயத்தில் அரசு, தனது சுயபாதுகாப்பிற்காக மேற்குறிப்பிட்ட ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ மீறுகிறது. கோட்ஸீ

குறிப்பிடத்தக்க மேற்கோள் 


சட்டமும், ஒழுங்கும் நீதியை நிலை நாட்டுவதற்காக இயங்குகிறது. இதை செய்ய தவறும்பட்சத்தில், சமூக வளர்ச்சியை தடுக்கும் ஆபத்தான தடுப்பு அணைகளாக இவை மாறுகின்றன. -மார்டின் லூதர்கிங்ஜுனியர்

Tags : Meaning, classification, sources பொருள், வகைகள், மூல ஆதாரங்கள்.
11th Political Science : Chapter 4 : Basic Concepts of Political Science Part II : Law Meaning, classification, sources in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி II : சட்டம் - பொருள், வகைகள், மூல ஆதாரங்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி II