வரலாறு - சங்ககாலச் சமூகம் | 9th Social Science : History : Early Tamil Society and Culture

   Posted On :  04.09.2023 03:18 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

சங்ககாலச் சமூகம்

இரும்புக் காலத்தைச் சேர்ந்த பல சமுதாயங்கள் பழங்குடிச் சமுதாயங்களாக இருந்தன. சில, ஒரு குடித்தலைமையின் கீழ் ஒன்றுபட்டு வாழ்ந்திருந்தன.

சங்ககாலச் சமூகம்

இரும்புக் காலத்தைச் சேர்ந்த பல சமுதாயங்கள் பழங்குடிச் சமுதாயங்களாக இருந்தன. சில, ஒரு குடித்தலைமையின் கீழ் ஒன்றுபட்டு வாழ்ந்திருந்தன. சங்க காலச் சமூகம், பழங்குடி குலத்தலைமைச் சமுதாயத்திலிருந்து ஒரு பெரும்பரப்பை ஆட்சி செய்யும் மன்னர் ஆட்சிமுறைக்கு மாறிக்கொண்டிருந்தது.

 

சமூகப்பிரிவுகள்

சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் சமூகப் பிரிவுகள் வேரூன்றத் தொடங்கின. பாணர், பரதவர், எயினர், உழவர், கானவர், வேட்டுவர், மறவர் போன்ற குழுக்கள் குலம் அடிப்படையிலான சமுதாயங்க ளாக (clan based communities) இருந்தனர். அரசர்களும் குலத்தலைவர்களும் உயர்பிரிவினராகக் கருதப்பட்டனர். அந்தணர்கள் என்று அறியப்பட்ட பூசாரிகளும் இருந்தனர். கைவினைத் தொழில் புரிந்த பானை செய்வோர், உலோகவேலை செய்வோர் போன்ற பிரிவினர் சமூகத்தில் இருந்தனர். வடஇந்தியாவில்காணப்பட்ட சாதி அமைப்பு தமிழகத்தில் வேரூன்றவில்லை. மாறாக ஐவகை நிலச் சூழல் மற்றும் செய்தொழில் அடிப்படையில் சமூகக் குழுக்களாக் காணப்பட்டனர்.

வேளாண் வளர்ச்சியும், கால்நடை வளர்ப்பும் இயற்கை வளங்களையும் வனவிலங்குகளையும் ஓரளவுக்குப் பாதித்திருக்க வேண்டும். வேட்டையாடி வாழ்ந்து வந்த சில பிரிவினர் வனப்பகுதியில் வாழக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது காலப்போக்கில் உடல் உழைப்புத் தொழிலாளர்களாக மாறியிருக்கலாம். நன்செய் வேளாண் பகுதிகளில் வேளாண் வளர்ச்சிக்காகச் சில குறிப்பிட்ட சமூகப்பிரிவினர் பெருமளவுக்கு உடல் உழைப்பைத் தந்தனர்.

 

பெண்கள்

சங்க இலக்கியங்களில் தாய், தலைவி, செவிலித்தாய், தோழி என்று பற்பல இடங்களில் மகளிர் குறித்த செய்திகள் பலவாறு கூறப்படுகின்றன. பாணர் குலப் பெண்கள், நாட்டிய மகளிர், பெண்பாற் புலவர்கள், அரச மகளிர் ஆகியோர் குறித்தும் ஐவகை நிலப்பகுதிகளைச் சார்ந்த பெண்கள் குறித்தும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வெண்ணி என்ற ஊரைச் சார்ந்த வெண்ணிக்குயத்தியார் பெண்பாற் புலவராகக் கண்டறியப்படுகிறார். மகளிர் திணைப்புனம் காத்தல் குறித்தும், உமணர் குல மகளிர் உப்பு விற்றது குறித்தும் சங்கச் செய்யுள்கள் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் பெண்கள் முதல்நிலை உற்பத்தியில் ஈடுபட்டதை அறியலாம். பெண்கள் தங்கள் கணவரோடு உயிர்துறக்க முன்வந்ததை அக்கால இலக்கியங்களில் சில இடங்களில் காணலாம்.

Tags : History வரலாறு.
9th Social Science : History : Early Tamil Society and Culture : Society in Sangam Age History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் : சங்ககாலச் சமூகம் - வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்