Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | பொருளாதாரம் - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

வரலாறு - பொருளாதாரம் - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் | 9th Social Science : History : Early Tamil Society and Culture

   Posted On :  04.09.2023 03:32 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

பொருளாதாரம் - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

திணைக் கோட்பாடு விளக்குவது போலவே சங்க காலப் பொருளாதாரம் பல வகைப்பட்டதாக இருந்தது.

பொருளாதாரம்

திணைக் கோட்பாடு விளக்குவது போலவே சங்க காலப் பொருளாதாரம் பல வகைப்பட்டதாக இருந்தது. வேளாண்மை , கால்நடைவளர்ப்பு, வணிகம், பணப்பரிமாற்றம், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் என்று மக்கள் வாழ்ந்த நிலங்களுக்கு ஏற்றவாறு தொழில்களும், அவை சார்ந்து பொருளாதாரமும் இருந்தன.

 

வேளாண்மை உற்பத்தி

சங்க கால மக்களின் உயிர்வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதில் வேளாண்மையே முதலிடத்தில் இருந்தது. நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. நன்செய் நிலத்திலும் புன்செய் நிலத்திலும் பயிர்த்தொழில் நடைபெற்றது. ஆற்றுவடிநீர்ப் பகுதிகளிலும் குளம், ஏரி போன்ற நீர்நிலைகளால் பாசனவசதி பெற்ற பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டன. தானியங்கள் புன்செய் நிலத்தில் பயிரிடப்பட்டன. செந்நெல், வெண்நெல், ஐவனநெல் எனப் பலவகையான நெல்கள் குறித்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆதிச்சநல்லூரிலும், பொருந்தல் என்ற இடத்திலும் மேற்கொண்ட அகழாய்வுகளில் தாழிகளுடன் நெல்லும் கிடைத்துள்ளது. வனப்பகுதிகளில், இடம்விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறை புனம் எனப்பட்டது.

கால்நடை வளர்ப்பு: பசு, எருமை, காளை உள்ளிட்ட மாடுகள், வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வளர்த்தல் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கினர்.

 

சங்க கால கைவினை மற்றும் தொழிற் கூடங்கள்

கைவினைத் தயாரிப்புகளும், மிக நுண்ணிய வேலைப்பாடுடைய தொல்பொருள்களும் நகரவாழ்வின் முக்கியமான அடையாளங்களாகும். சங்க காலத்தில் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் இருந்தனர். பொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகள் தொழிற் கூடங்கள் ஆகும்

 

மட்கலன்கள் செய்தல்

மட்கலன்களைச் செய்வது பரவலாக எல்லா இடங்களிலும் காணப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பலவிதமான மட்கலன்கள் 'கலம் செய்கோ' என அழைக்கப்பட்டவர்களால் உற்பத்தி செய்யப்பட்டன. கரியநிறத்தவை, செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை (Russet-coated), கருப்பு-சிவப்பு நிறத்தவை என்று பலவிதமான மட்கலங்கள் தயாரிக்கப்பட்டன.


 

இரும்பு உருக்குத் தொழில்

இரும்பைக் கொண்டு கருவிகள் செய்வதும் முக்கியமான தொழிலாக இருந்திருக்கிறது. பல்வேறு இடங்களில் இரும்பை உருக்கும் உலைகளும் இருந்தன. அகழாய்வு மேற்கொண்ட பல இடங்களில் கொல்லுலைகள், உருக்கு உலைகள் ஆகியன இருந்த தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொடுமணலிலும், குட்டூரிலும் இரும்பு உருக்கு உலைகள் அகழாய்வில் வெளிப்பட்டுள்ளன. இரும்பில் கருவிகள் செய்தோர் குறித்து சங்க இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன. உழுகருவிகளும், வாள், ஈட்டி, கத்தி போன்ற படைக்கருவிகளும் தயாரிக்கப்பட்டன.


 

கல்லில் செய்த அணிகலன்கள்

சங்க காலத்து மக்கள் பலவிதமான அணிகலன்களைஅணிந்துதங்களை அழகுபடுத்திக் கொண்டனர். எளிய மக்கள் பூக்களையும் இலை தழைகளையும் சூடிக்கொண்டதுடன், சுட்ட களிமண், உலோகம் ஆகியவற்றிலும் அணிகலன்கள் செய்து அணிந்தனர். செல்வந்தர்கள் செம்பு, தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்த நகைகளில் நவமணிகளையும் பதித்து அழகுபடுத்தி அணிந்தனர்.

 

தங்க ஆபரணங்கள்

தங்கத்தாலான அணிகலன்களைச் சங்க கால மகளிர் பரவலாக அணிந்தனர். ரோமானியர்களின் நாணயங்களைக் கொண்டும் நகைகள் செய்யப்பட்டன. கேரளத்தின் பட்டணத்தில் பொன்னை உருக்கும் உலைகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த அகழாய்வுக் களங்களான சுத்துக்கேணி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் ஆகிய இடங்களிலும், அரிக்கமேடு, கீழடி, பட்டணம் ஆகிய பழங்கால நகரங்களிலும் தங்க அணிகலன்கள் கிடைத்துள்ளன.


 

கண்ணாடி மணிகள்

கண்ணாடி மணிகளைச்செய்யும் முறையை அக்கால மக்கள் அறிந்திருந்தனர். சிலிக்கா மற்றும் பிற பொருள்களை உலையிலிட்டு உருக்கி நீண்ட சிறிய குழல்களாக்கிப் பின்னர் அவற்றைச் சிறுசிறு மணிகளாக நறுக்கினர். கண்ணாடி மணிகள் பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டன. அரிக்கமேட்டிலும், கடலுருக்கு அருகில் குடிக்காடு என்ற ஊரிலும் கண்ணாடி மணி செய்யும் தொழிலகங்கள் இருந்துள்ளன. விலை உயர்ந்த நவமணிக் கற்களை வாங்க இயலாதவர்கள் கண்ணாடி மணிகளை அணிந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

 

முத்துக்குளித்தலும் சங்கு வளையல்களும்

கீழடி அகழாய்வின்போது ஒரு முத்து கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சங்குகளை அரிந்து வளையல் செய்யும் தொழிலும் சங்க காலத்தில் சிறப்புற்றிருந்தது. பாம்பன் கடல்பகுதிகளில் சங்குகளைச் சேகரித்தனர். கைவினைக் கலைஞர்கள் அவற்றை அழகுற அறுத்து எழிலான வளையல்களைச் செய்தனர். முழுமையான சங்குகளும், உடைந்த வளையல்களும் பல தொல்லியல் இடங்களில் கிடைத்துள்ளன. பெண்கள் சங்கு வளையல்கள் அணிந்திருந்தது குறித்துச் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.


 

துணி நெசவு

துணி நெசவு இன்னொரு முக்கியத் தொழிலாகும். நூல் நூற்கும் கதிர்களும் துண்டுத் துணிகளும் கொடுமணலில் கிடைத்திருக்கின்றன. கலிங்கம் மற்றும் பிற வகைத் துணிவகைகள் குறித்து இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. பெரிப்ளஸ் என்ற நூலில் தமிழகத்தில் துணிகள் நெய்யப்பட்டது குறித்த தகவல் உள்ளது.

நூல் நூற்கும் கதிர் (Spindle whorl) பருத்தியிலிருந்து நூலை எடுப்பதற்கு நூல் நூற்கும் கதிர் பயன்படுகிறது.

 

பண்டமாற்றம், வணிகம், வணிகர்கள், வணிகப் பெருவழிகள்

நெல் முதலான தானியங்கள், கால்நடைவளர்ப்பு, கைவினைப் பொருள் தயாரிப்பு போன்றவை குறித்து அறிந்தோம். ஆனால் மக்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் எல்லாப் பொருள்களையும் தயாரிக்க இயலாது. ஓரிடத்தில் கிடைக்கின்ற மூலப்பொருள்களும், வளமும், தொழில் நுட்பக் கலைஞர்களும் மற்ற இடங்களில் கிடைப்பதில்லை. எடுத்துக்காட்டாக, மலைப் பகுதிகளில் கடல் மீனும் உப்பும் கிடைக்காது. கடற்கரையின் மணற்பகுதிகளில் நெல் முதலான தானியங்களைப் பயிரிட முடியாது. ஓரிடத்தில் கிடைக்கும் பொருள்களை மற்ற இடங்களில் உள்ளவர்கள் தம்மிடம் உள்ள பொருள்களைக் கொடுத்து மாற்றிக்கொள்வார்கள். இதற்குப் பண்டமாற்று என்று பெயர்.

 

வணிகர்கள்

தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் ஆளப்படுகின்றன. பொன் வணிகர்கள், துணி வணிகர்கள், உப்பு வணிகர்கள் என்று குறிப்பிட்ட பண்டத்தை மட்டும் வியாபாரம் செய்த வணிகர்களும் இருந்தனர். உப்பு வணிகர்கள் உமணர்கள் எனப்பட்டனர். அவர்கள் தம் குடும்பத்தோடு மாட்டு வண்டியில் சென்று வணிகம் செய்தனர்.

 

போக்குவரத்து முறைகள்

மாட்டுவண்டிகளும் விலங்குகளும் சரக்குப் போக்குவரத்திற்குப் பயன்பட்டன. தமிழ்நாட்டின்பல்வேறு நகரங்களும் வணிக வழிகளால் இணைக்கப்பட்டன. கடற்பயணம் மேற்கொள்ள உதவிய கலம், பஃறி, ஓடம், தோணி, தெப்பம், நாவாய் போன்றவை கடற்போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது குறித்து இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

பண்டமாற்றமும் நாணயங்களும்

பண்டமாற்றுமுறை மூலமாகவே மக்களிடையே பெருமளவில் பரிமாற்றம் நடைபெற்றது. அரிசியைக் கொடுத்து மீனைப் பெற்றனர். உப்பு விலைமதிப்புடையதாகக் கருதப்பட்டது. எனவே ஒரு குறிப்பிட்ட அளவு உப்புக்கு அதே அளவு அரிசி பரிமாறிக்கொள்ளப்பட்டது. சங்க கால சேர, சோழ, பாண்டிய மற்றும் மலையமான் ஆகிய அரசர்களின் நாணயங்கள் பெருமளவு கிடைத்திருப்பதைக் கொண்டு, அவை பரவலாகப் புழக்கத்தில் இருந்தன என்று அறியமுடிகிறது.


 

தமிழகமும் வெளிநாட்டுத் தொடர்புகளும்

கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று வீசும் சமயத்தில் மேலைக்கடலான அரபிக்கடலைக் கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன. மிளகு போன்ற நறுமணப் பொருள்களும், யானைத் தந்தம், நவமணிகள் உள்ளிட்ட அரிய பொருள்களும் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆயின. தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன.

கிரேக்க, ரோமானிய, மேற்கு ஆசிய மக்கள் உள்ளிட்ட மேற்கத்தியர்கள் யவனர் என்று அழைக்கப்படுகின்றனர். யவனர் என்னும் சொல் கிரேக்கப் பகுதியான அயோனியாவிலிருந்து வந்தது.


 

தமிழ்நாட்டிலிருந்து செங்கடல் கரைக்கு

செங்கடல் கடற்கரையில் உள்ள பெர்னிகே துறைமுகத்தில் ஏழரை கிலோ மிளகு இருந்த இந்தியப் பானையும், தேக்கு மரப்பலகைத் துண்டுகளும், தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்த (தமிழக) பானை ஓடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.


செங்கடல் கடற்கரையில் பெர்னிகே துறைமுகத்திற்கு வடபகுதியில் உள்ள இன்னொரு துறைமுகம் குசேர் அல் காதிம் என்பதாகும். இந்த இடத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட மூன்று சுடுமண் பாண்டத் துண்டுகள் கண்டறியப்பட்டன. அவற்றில் பனை ஓறி, கண்ணன் (கணன்), சாத்தன் (சாதன்) என எழுதப்பட்டுள்ளது.


'பெரும் பத்தன் கல்' என்ற பெயரில் தாய்லாந்து நாட்டில் உள்ள குவான் லுக் பாட் என்ற இடத்தில் அரிய கல் ஒன்று கிடைத்துள்ளது. இக்கல், பெரும்பத்தன் என்பவரால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். மேலும் அவர் ஒரு பொற்கொல்லராக இருக்க வேண்டும். அந்தக் கல், தங்கத்தின் தரத்தை அறிய உதவும் உரைகல் ஆகும்.

Tags : History வரலாறு.
9th Social Science : History : Early Tamil Society and Culture : Economy - Early Tamil Society and Culture History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் : பொருளாதாரம் - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் - வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்