Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சங்க கால அரசியல்: பண்டைய தமிழக அரசியல் நிலை

வரலாறு - சங்க கால அரசியல்: பண்டைய தமிழக அரசியல் நிலை | 9th Social Science : History : Early Tamil Society and Culture

   Posted On :  04.09.2023 03:17 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

சங்க கால அரசியல்: பண்டைய தமிழக அரசியல் நிலை

சங்க காலத்திற்கான அடித்தளம் இரும்புக் காலத்தில் வேர் கொண்டது. இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர்.

சங்க கால அரசியல்: பண்டைய தமிழக அரசியல் நிலை

சங்க காலத்திற்கான அடித்தளம் இரும்புக் காலத்தில் வேர் கொண்டது. இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். தலைவர்கள் அந்நிலப்பகுதிகளைத் தமது ஆளுகைக்குக்கீழ் கொண்டு வந்தனர். இவ்வாறு உருவான தலைவர்களில் இருந்தே வரலாற்றின் தொடக்கக் காலத்தில் வேந்தர்கள் தோன்றினார்கள். வேளிர்கள் என்போர் சங்க காலத்தின் குறுநிலமன்னர்கள் ஆவர்.

மௌரியப் பேரரசர் அசோகர் கலிங்கத்தையும் (ஒடிசா ) ஆந்திரம், கர்நாடகத்தின் சில பகுதிகளையும் படையெடுத்து வென்றார்.


 

மூவேந்தர்

சங்க கால ஆட்சியாளர்களில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களே முன்னிலையில் இருந்தனர். அக்காலத்தைய பெரு நகரங்களும் துறைமுகப்பட்டிணங்களும் மூவேந்தரின் ஆளுகைக்குக் கீழேயே இருந்தன.

 

சேரர்

அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ள சேரர் தற்காலத்துக் கேரளத்தையும், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியையும் ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகராக வஞ்சியும், துறைமுகப்பட்டிணங்களாக முசிறியும் தொண்டியும் இருந்தன. தமிழ்நாட்டில் தற்போதுள்ள கரூர் தான் வஞ்சி என்று சிலரும், கேரளத்தில் உள்ள திருவஞ்சைக்களம்தான் வஞ்சி என்று வேறு சிலரும் கூறுகின்றனர். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்தும் அவர்களுடைய நாட்டின் எல்லைகளைக் குறித்தும் பேசுகிறது. சேரர்கள் பனம்பூ மாலை அணிந்தனர். கரூரை அடுத்த புகளூரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் சேர மன்னர்களின் மூன்று தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது. மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் கரூரில் கிடைத்துள்ளன.

சிலப்பதிகாரத்தின் பாட்டுடைத் தலைவியான கண்ணகிக்குக் கோயில் எழுப்பிய சேரன் செங்குட்டுவன் குறித்து சிலப்பதிகாரம் விரிவாகக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பது மரபு. வில்லும் அம்பும் சேரர்களின் இலச்சினையாகும்.


 

சோழர்

காவிரி வடிநிலப்பகுதியையும் தமிழ்நாட்டின் வடபகுதிகளையும் ஆண்ட சோழர்களுக்கு உறையூர் தலைநகராக இருந்தது. காவிரி ஆறு வங்கக் கடலில் ஒருபுறத்தில் யானையும் கலக்கும் பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டிணம் மறுபுறத்தில் அங்குசமும், வில்லும் அவர்களுடைய துறைமுகப்பட்டிணமாக அம்பும் பொறித்த சேரர் நாணயம் விளங்கியது. கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற சங்க காலப் புலவர் காவிரிப்பூம்பட்டிணம் குறித்துப் பட்டினப்பாலை என்ற நெடிய பாடலை இயற்றியுள்ளார். காவிரிப்பூம்பட்டிணத்தில் நடந்த வணிகத்தைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. சோழ மன்னர்களில் தலைசிறந்தவராகப் போற்றப்படும் கரிகால் சோழன், காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கத்தை திறம்படப் பயன்படுத்திப் பாசன வசதிகளைப் பெருக்கிப் பெரும் நிலப்பரப்பில் விவசாயம் தழைக்க வகைசெய்த பெருமைக்குரியவர் ஆவார். பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் (10 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை) உச்சத்தை எட்டிய பாசனநீர் மேலாண்மைக்குக் கரிகால்சோழன் ஆட்சியில்தான் வித்திடப்பட்டது. பாண்டியரையும் சேரரையும் ஏனைய குறுநில மன்னர்களையும் எதிர்த்துக் கரிகாலன் போரிட்டார். சோழர்களின் இலச்சினை புலி. அவர்கள் சதுரவடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்களும் காணப்படுகின்றன.


 

பாண்டியர்


பாண்டியர்கள் குறித்தும் அசோகரது கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென்தமிழகத்தை அவர்கள் ஆண்டனர். தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களைப் போற்றுகின்றன. மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகின்றது. நெடியோன், முடத்திருமாறன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆகியோர் குறிப்பிடத்தக்க பாண்டிய மன்னர்கள். பாண்டியர்களின் இலச்சினை மீன் ஆகும்.

 

வேளிர்/ குடித்தலைமை

தமிழகத்தை ஆட்சிபுரிந்த மூவேந்தர்களைத் தவிரப் பல குறுநில மன்னர்களும் சிறிய பகுதிகளில் குடித்தலைமை ஏற்றிருந்தனர். குறுநில மன்னர்கள் வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர். வேளிரில் கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன், ஆய், அதியமான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் வள்ளல் தன்மையைச் சங்க இலக்கியம் விரிவாகப் பேசுகின்றது. புலவர்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த வேளிர்களின் கொடைத்திறம் இலக்கியங்களில் போற்றப்படுகின்றது. வேளிரில் சிலர் மூவேந்தர்களோடு துணைநின்று அவர்களுக்காகப் போர் புரிந்தனர். வேறுசில வேளிர்கள் மூவேந்தரை எதிர்த்தும் போரிட்டுள்ளனர்.

Tags : History வரலாறு.
9th Social Science : History : Early Tamil Society and Culture : Sangam Age Polity: Political Powers of Tamilagaram History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் : சங்க கால அரசியல்: பண்டைய தமிழக அரசியல் நிலை - வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்