தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமான விடை தருக | 9th Social Science : History : Early Tamil Society and Culture
V. சுருக்கமான விடை தருக.
1. தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.
விடை:
• வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வழியாக சங்ககால மக்களின் வாழ்க்கை முறை குறித்த சான்றுகள் கிடைத்துள்ளன.
அகழாய்வு நிகழ்விடங்கள்: அரிக்கமேடு, அழகன் குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம்,கொற்கை, வசவ சமுத்திரம் மற்றும் கேரளத்தின் பட்டணம்.
• சங்ககாலத் துறைமுகப்பட்டிணமான புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேட்டில் அகழ்வாய்வு நடந்தது. இவ்வாய்வில் சரக்குக் கிடங்கு, தொட்டிகள், உறை கிணறுகள், தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
2. சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?
விடை:
• சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியன சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் சான்றாகும். சங்ககாலத்தின் முதன்முதலாக செலவாணிக்குரிய பொருளாக நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.
• முத்திரை பொறித்த நாணயங்கள் கொடுமணல், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களிலும், ரோமானிய நாணயங்கள் கோயம்புத்தூர் மண்டலத்திலும் கிடைத்துள்ளன.
3. சங்ககாலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. இதற்கான காரணங்களைக் கூறுக.
விடை:
• சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. ஏனெனில், நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. ஆற்று வடிநீர்ப் பகுதிகளிலும், குளம், ஏரி போன்ற நீர்ப்பாசன வசதி பெற்ற பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டது. புன்செய் நிலத்தில் தானியங்கள் பயிரிடப்பட்டன.
• செந்நெல், வெண்ணெல், ஐவனநெல் என நெல் வகைககள் குறித்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆதிச்சநல்லூர், பொருந்தல் ஆய்வுகளில் தாழிகளுடன் நெல்லும் கிடைத்துள்ளது. காடுகளில் இடம் விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறை புனம் எனப்பட்டது.
4. அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது - இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
விடை:
தமிழகமும் வெளிநாட்டுத் தொடர்புகளும் .
அயல் நாடுகளுடனான தமிழகத் தொடர்புக்கான சான்றுகள்:
• ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று காலத்தில் மேலைக்கடலான அரபிக்கடலைக் கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
• கிரேக்க ரோமானிய, மேற்கு ஆசிய மக்களான யவனர்களோடு வாணிபத் தொடர்பு இருந்தது. (யவனர் - கிரேக்க அயோனியா பகுதி சொல்)
செங்கடல் பகுதியில் உள்ள பெர்னிகே, குசேர் அல் காதிம், தாய்லாந்து நாட்டில் உள்ள குவான் லுக் பாட் ஆகிய இடங்களில் கிடைத்த அகழாய்வுப் பொருட்கள்.
• தமிழ் இலக்கியங்கள் தென்கிழக்கு ஆசியாவை சுவர்ணபூமி என குறிப்பிடுகின்றன. ஏற்றுமதி : மிளகு போன்ற நறுமணம் பொருட்கள், நவமணிகள், யானைத் தந்தம். இறக்குமதி : தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்கள்).