வரலாறு - சங்க காலம் | 9th Social Science : History : Early Tamil Society and Culture
சங்க காலம்
சங்க காலம் அல்லது வரலாற்றுத் தொடக்க காலம் தென்னிந்திய வரலாற்றின் சிறப்புமிக்க காலமாகும். இலக்கியங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளிட்ட எழுத்துப்பூர்வமான சான்றுகள் கிடைத்துள்ளதால் சங்க காலம்,
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து மாறுபட்டுச் சிறப்புடன் விளங்குகிறது. சங்க இலக்கியத் தொகுப்பு, அக்கால மக்களின் வாழ்க்கைமுறை குறித்தும் சமூக அமைப்பு குறித்தும் அறிய உதவுகின்றது.
சங்க காலத்தை காலவரையறை செய்வதில் அறிஞர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. சங்க கால இலக்கியம் கி.மு.
(பொ.ஆ.மு.). மூன்றாம் நூற்றாண்டிற்கும்,
பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகப் பெருவாரியான அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அசோகருடைய கல்வெட்டுகளில் காணப்படும் சேர,
சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்த தகவல்களும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும், கிரேக்க, ரோமானிய குறிப்புகளும் இக்காலவரம்பை உறுதிப்படுத்துகின்றன. சங்கச் செய்யுள்கள் வரலாற்றின் தொடக்க காலத்தில் இயற்றப்பட்டவை எனவும்,
பின்னரே அவை தொகை நூல்களாகத் தொகுப்பட்டன எனவும் கருதப்படுகிறது.
அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய பிராமி வரிவடிவத்திற்கு அசோகன் பிராமி என்று பெயர்.
தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் திணை என்ற கருத்து விவரிக்கப்பட்டுள்ளது. திணை என்பது குறிப்பிட்ட இயற்கை நிலவமைப்பையும்,
அதன் வாழ்வியல் முறைகளையும் குறிப்பதாகும். சங்கச் செய்யுள்கள் திணை அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. மனித வாழ்க்கையையும்,
இயற்கையோடு மனிதர்கள் கொண்டிருந்த நெருக்கமான உறவையும் அவை படம் பிடித்துக் காட்டுகின்றன.
சங்க காலச் செய்யுள்களை பொருண்மை அடிப்படையில் பொதுவாக அகத்திணைப் பாடல்கள் என்றும் புறத்திணைப் பாடல்கள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அகத்திணை என்பது காதல் வாழ்வையும் குடும்ப வாழ்வையும் குறிக்கும். புறத்திணை என்பது வாழ்வின் பிற அம்சங்களையும் குறிப்பாக, போர், வீரம் முதலிய பொருள்களைப் பேசுகிறது.
ஐந்திணை: ஐந்து திணைகள் அல்லது ஐந்து வகை நிலப்பகுதிகள்
ஐந்திணை என்பது தமிழ்நாட்டின் ஐந்து வகையான நிலப்பகுதிகளைக் குறிக்கும். இந்த ஐந்து வகை நிலங்களும் தனித்த பண்புகள் கொண்டவை. ஒவ்வொரு திணைக்கும் தனியே
கடவுள், தொழில், மக்கள், பண்பாடு போன்றவை உண்டு. இந்த வகைப்பாடு ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் உண்மையான வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிப்பதை அறிஞர்கள் பலர் விளக்கியுள்ளனர்.
● மலையும் மலைச் சார்ந்த பகுதிகளும் குறிஞ்சி
● காடும் காடு சார்ந்த பகுதிகளும் முல்லை
● வயலும் வயல்வெளி சார்ந்த பகுதிகளும் மருதம்
● கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் நெய்தல்
● வறண்ட நிலப்பகுதி பாலை