வரலாறு - நுண்கலைகள் - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் | 9th Social Science : History : Early Tamil Society and Culture
நுண்கலைகள்
சங்க காலத்தில் பலவகையான கலைகளும் செழித்திருந்தன. சமய சடங்குகளின் போது நிகழ்த்தப்படும் ஆட்டங்களில் ஒரு வகைக்கு வெறியாட்டம் என்று பெயர். செய்யுள் இயற்றல்,
இசைக்கருவிகளை இசைத்தல், நடனமாடுதல் ஆகியவற்றைப் பலரும் அறிந்திருந்தனர். சங்க காலத்து உணவுமுறைகள் குறித்து இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. மகளிர் தம் கண்களுக்கு மைதீட்டுவதற்குச் செம்பினால் ஆன மெல்லிய குச்சிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இக்குச்சிகள் பல அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கள் தோற்றப் பொலிவிலும் அவர்கள் அக்கறை கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது.
சங்க காலத்தில் தமிழில் எழுத தமிழ் பிராமி என்ற வரிவடிவம் பயன்படுத்தப்பட்டது.
கொடுமணல், தமிழ்நாட்டில் ஈரோடுக்கு அருகில் உள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் கொடுமணம்தான் இவ்வூர் எனக் கருதப்படுகிறது. பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளும் இரும்பு, மணிக்கற்கள், சங்கு வேலைப்பாடுகள் குறித்த சான்றுகளும் இங்கே கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட 300க்கும் மேற்பட்ட மட்கலப் பொறிப்புகள் இந்த ஊரில் கிடைத்துள்ளன.
மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் சிலைமான் என்ற ஊருக்கு அருகில் கீழடி உள்ளது. இங்கே பள்ளிச் சந்தைத்திடல் என்று அழைக்கப்படும் பரந்த தென்னந்தோப்பில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினர் மற்றும் தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத்துறையினர் மேற்கொண்ட அகழாய்வுகளின் மூலம் சங்க காலத்து நகரம் புதையுண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செங்கற் கட்டுமானங்கள்,
கழிவுநீர் வழிகள், தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட மட்கல ஓடுகள், செம்மணிக்கற்களாலான அணிகள், முத்து, இரும்பு பொருள்கள், விளையாட்டுப்பொருள்கள், கண்ணுக்கு மை தீட்டும் செப்புக் கம்பி போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் அகழாய்வுகளை மேற்கொண்டால்,
கைத்தொழில் முறைகள் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் பல தகவல்கள் வெளிவரும்.
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வடக்குப் பரவூர் என்ற ஊரை ஒட்டிய வடக்கேகரா என்ற சிற்றூரின் அருகே பட்டணம் அமைந்துள்ளது. மேலை நாடுகளோடும் கீழை நாடுகளோடும் வணிகத் தொடர்புகொண்டிருந்த பழங்காலத் துறைமுகம்தான் பட்டணம்.
கீழடி மற்றும் சிந்துவெளி குறியீடுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை
வைகை நதிக்கரையிலுள்ள கீழடி அகழாய்வுகள் மூலம் நகரமயமாதல் கி.மு. (பொ.ஆ.மு.) 6ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருநை நாகரிகம்: தமிழ்ப் பண்பாட்டின் தொட்டில்
பொருநை (தாமிரபரணி) தமிழ் நாட்டின் ஒரே வற்றாத ஆறாகும். இது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பாய்கிறது. பொருநை ஆற்றின்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் 1876இல் ஜெர்மானிய பரப்பாய்வாளர் டாக்டர் ஜாகோர் என்பவரால் அகழாய்வு நடத்தப்பெற்றது.பின்னர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர்ரீ 1899 முதல் 1905 வரை ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்தார். அவர் அகழாய்வு செய்து சேகரித்த தொல்பொருள்கள் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னர், சுமார் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு இந்திய அரசு தொல்லியல் துறையினர் (ASI) 2004இல் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அகழாய்வு செய்தனர். இதன் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை ஆதிச்சநல்லூரின் ஈமக்காடுகள் மற்றும் வாழிடப்பகுதி புதைமேடுகளில் அகழாய்வுப் பணியினைத் (2019 - 2021) தொடங்கியது. கொற்கை, சங்க இலக்கியங்களிலும் கிரேக்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளஒரு பழையதுறைமுகமாகும். தமிழக அரசின் தொல்லியல்துறையினரால் 1968 இல் இங்கு அகழாய்வு நடத்தப்பட்டது. தற்சமயம் இங்கு நடைபெற்று வரும் அகழ்வாய்வானது (2020-2021) கொற்கை துறைமுகத்தையும் அதனது அயலகத் தொடர்பினையும் குறித்துப் பல சுவையான தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றன. ஆதிச்சநல்லூரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவகளை என்ற ஊரில் 2019இல் நடத்தப்பட்ட அகழாய்வில் ஒரு தாழியிலிருந்து கிடைத்த உமி நீங்கிய நெல்மணிகள் அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள பீட்டா ஆய்வகத்தில் கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது இதனது காலம் பொது ஆண்டிற்கு முந்தைய காலத்தைச் கி.மு. (பொ.ஆ.மு.) 1155 சேர்ந்ததாகக் காலக்கணக்கீடு செய்யப்பட்டது. இது தாமிரபரணி பண்பாடு 3200 வருடப் பழமை என்று உறுதிப்படுத்துகின்றது.
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள்
ஈமத் தாழிகள்: மண்-பாறை அடுக்குகளில் 3 முதல் 12 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த ஈமத் தாழிகளில் எலும்புகள், இறந்தவர்களின் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் என்ற நம்பிக்கையில் வைக்கப்பட்ட பாத்திரங்கள், பொன், உயரளவு ஈயம்கொண்ட வெண்கல, இரும்புப் பொருள்கள் கிடைத்துள்ளன.
பொன்னாலான நெற்றிப்பட்டங்கள்
நீள்வட்ட வடிவிலான பொன்தகட்டால் ஆன நெற்றிப்பட்டங்கள் சிறிய அளவில் பொறிக்கப்பட்ட முக்கோண வடிவ அணிவேலைப்பாடுகளுடனும் நெற்றியில் கயிற்றால் இணைத்துக் கட்டுவதற்காக இரு முனைகளிலும் இடப்பட்ட துளைகளுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயரளவு ஈயம்கொண்ட வெண்கலப் பொருள்கள்
சிறிய, பெரிய அளவிலான உயரளவு ஈயம்கொண்ட பல வடிவிலான வெண்கலப் பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பானை வகைகள்
கருப்பு-சிவப்பு நிற பானை வகைகள், 500க்கும் மேற்பட்ட கீறல் குறியீடுகள் மற்றும் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகள் பொறித்த பானையோடுகள் கிடைத்துள்ளன.
அணிகலன்கள்
செம்பு, இரும்பாலான மோதிரங்கள், பொன், கண்ணாடி, தந்தம், எலும்பு மற்றும் சங்கினால் செய்யப்பட்ட மணிகளும் வளையல்களும் கிடைத்துள்ளன.
சுடுமண் பெண்ணுருவங்கள்
சிந்துவெளி அகழ்வில் கிடைத்துள்ளதைப் போன்ற சுடுமண் பெண்ணுருவங்கள் கிடைத்துள்ளன.
இரும்புப் பொருள்கள்
எறி வேல், ஈட்டி, குறுவாள் போன்ற 32 விதமான இரும்பினாலான கருவிகள் கிடைத்துள்ளன.
நீர், கழிவுநீர் மேலாண்மை
இங்கு கிடைத்த செங்கற்கட்டுமானம் 29 வரிசையில் உள்ளது. இதன் நடுவில் ஒரு பெரிய பானை கிடைத்துள்ளது. மேலும் ஒன்றன் மீது ஒன்றாக வைக்கப்பட்ட துளையிடப்பட்ட 9 சுடுமண் குழாய்கள் அக்காலத்தின் தொழில்நுட்பச் சிறப்பை உணர்த்துகின்றன.
சங்கு வளையல் தொழிற்கூடம்
முழுமையான சங்குகள், அறுக்கப்பட்ட சங்கு வளையல்கள், வளையல்துண்டுகள் இங்கு சங்கு வளையல்கள் செய்யும் தொழிற்கூடம் இருந்தமையை வெளிப்படுத்துகின்றன. சங்க இலக்கியப் பாடல்கள் பலவும் கொற்கையில் சங்கு வளையல் தொழில் செய்பவர்கள் இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன.
அயலகத் தொடர்பை வெளிப்படுத்தும் பானையோடுகளும் நாணயங்களும்
இங்கு கிடைத்திருக்கும் அயல் நாட்டு பானையோடுகள் மற்றும் கருப்பு நிற மெருகேற்றப்பட்ட மட்பாண்டங்கள், கி.மு.(பொ.ஆ.மு.) ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தமிழகம் உலகின் பிற பகுதிகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.