Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | தொடக்ககாலத் தமிழ்ச் சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகள்

வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகள் | 9th Social Science : History : Early Tamil Society and Culture

   Posted On :  04.09.2023 03:07 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

தொடக்ககாலத் தமிழ்ச் சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகள்

செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் தொல்காப்பியம், பதினெண் மேல்கணக்கு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள் ஆகியவை சங்க காலத்தில் தோன்றிய செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் ஆகும். இவை சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிய உதவுகின்றன.

தொடக்ககாலத் தமிழ்ச் சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகள்

தொன்மைக்கால தமிழர்களின் வரலாற்றை அறிவியல்பூர்வமாக மீட்டுருவாக்கம் செய்வதற்குப் பல வகையான சான்றுகள் உதவுகின்றன. அவையாவன:

1. செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்

2. கல்வெட்டுகள்

3. தொல்லியல் அகழாய்வுச் சான்றுகள் மற்றும் பண்பாட்டுப் பொருள்கள்

4. தமிழ் அல்லாத மற்றும் அயல்நாட்டினரின் இலக்கியக் குறிப்புகள்

செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் தொல்காப்பியம், பதினெண் மேல்கணக்கு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள் ஆகியவை சங்க காலத்தில் தோன்றிய செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் ஆகும். இவை சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிய உதவுகின்றன.

 

தொல்காப்பியம்

தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் தமிழின் பழமையான இலக்கண நூலாகும். இந்நூலின் முதலிரண்டு பகுதிகள் தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுக்கின்றன. மூன்றாவது பகுதி மக்களின் சமூக வாழ்க்கைக்கான இலக்கணத்தை வரையறுக்கிறது.

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழில் தோன்றிய இலக்கியங்களில் காலத்தால் முற்பட்ட இலக்கியங்கள். இவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் காலத்தால் பிந்தையவை.

எட்டுத்தொகை நூல்களாவன:

(1) நற்றிணை       

(2) குறுந்தொகை

(3) பரிபாடல்         

(4) பதிற்றுப்பத்து

(5) ஐங்குறுநூறு

(6) கலித்தொகை

(7) அகநானூறு     

(8) புறநானூறு

பத்துப்பாட்டு நூல்களாவன:

(1) திருமுருகாற்றுப்படை

(2) பொருநராற்றுப்படை

(3) பெரும்பாணாற்றுப்படை

(4) சிறுபாணாற்றுப்படை

(5) முல்லைப் பாட்டு

(6) நெடுநல்வாடை

(7) மதுரைக் காஞ்சி

(8) குறிஞ்சிப் பாட்டு

(9) பட்டினப்பாலை

(10) மலைபடுகடாம்

பதினெண் கீழ்க்கணக்கு:

வாழ்வியல் அறநெறிகளை எடுத்து இயம்புகின்ற பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள். 1330 குறட்பாக்களைக் கொண்ட திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பால்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

ஐம்பெருங்காப்பியங்கள்:

காப்பியங்கள் என்பவை கவிதை நயமுடைய செய்யுள்வடிவிலான நீண்ட இலக்கியப் படைப்புகளாகும். அவை:

(1) சிலப்பதிகாரம்

(2) மணிமேகலை

(3) சீவகசிந்தாமணி

(4) வளையாபதி

(5) குண்ட லகேசி

 

கல்வெட்டுச் சான்றுகள்

கல்வெட்டுகளைக் குறித்து படிப்பது 'கல்வெட்டியல்' ஆகும். கல்வெட்டுகள் போலவே செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் போன்றவற்றிலும் தகவல்கள் பொறிக்கப்பட்டிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். மொழியின் வரிவடிவம் தோன்றிய காலமே வரலாற்றின் தொடக்க காலம் எனலாம்.

 

தமிழ் பிராமி கல்வெட்டுகள்

தமிழ்நாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கற்பாறைகளிலும் குகைவாழிடங்களிலும் காணப்படுகின்றன. சமணத் துறவிகள் இக்குகைகளைப் பெரும்பாலும் தமது வாழிடங்களாகக் கொண்டிருந்தனர். இயற்கையாக அமைந்த மலைக்குகைகளின் விளிம்பில், மழைநீர் வழிந்து வெளியேறுவதற்காகச் சிறிய பகுதியை வெட்டி கொடுங்கை அல்லது வாரி போன்று செதுக்கியிருந்தனர். அதற்குக் கீழேதான் பெரும்பாலான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குகைகளின் உட்புறத்தில் வழுவழுப்பான படுக்கைகளைப் பாறைகளிலேயே செதுக்கி உருவாக்கியிருந்தனர். உலகியல் வாழ்வைத் துறந்து, குகைகளில் வாழ்ந்த துறவிகளுக்கு அரசர்களும் வணிகர்களும் இயற்கையாக அமைந்த குகைகளை வாழிடங்களாக மாற்றி உதவினர். தமிழ்நாட்டில் மாங்குளம், முத்துப்பட்டி, புகலூர், அரச்சலூர், கொங்கர்புளியங்குளம், ஜம்பை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள குகைவாழிடங்களில் தமிழ் பிராமி கல்வெட்டுகளை இன்றும் காணலாம். பெரும்பாலான குகைவாழிடங்கள் பண்டைக்கால வணிக வழிகளில் அமைந்துள்ளன.

குறிப்பு: பண்டைய கல்வெட்டுகள் சிலவற்றில் மக்கள் (உள்ளூர்க்காரர்கள், சுற்றுலாப் பயணிகள்) தங்களுடைய பெயர்களை எழுதியோ அல்லது செதுக்கியோ அவற்றை பாழ்படுத்தியுள்ளதை நீங்கள் பார்த்து இருக்கலாம். அவ்வாறு பாரம்பரியப் பொதுச் சொத்துக்களை அல்லது மற்றவர்களின் சொத்துக்களை நாசம் செய்வது 'நாசவேலைகள்' என அழைக்கப்டுகிறது.


 

நடுகற்கள்

போர்க்களத்திலும் ஆநிரை கவரும் சண்டைகளிலும் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன. முல்லை நில வாழ்க்கையில் மக்களின் சிறப்பான செல்வ வளமாகக் கால்நடைகள் (ஆநிரைகள்) இருந்தன. அருகருகே வாழ்ந்த இனக்குழுவினர் மற்ற குழுவினரின் கால்நடைகளைக் கவர்ந்து தமதாக்கிக் கொள்வதற்காகச் சண்டையிட்டுள்ளனர். முல்லைநில மக்களின் தலைவன் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டுக் கால்நடைகளைக் கவர்ந்து வருவதுண்டு. இதை எதிர்த்து போரிடுபவரும் உண்டு. அப்போது இறந்துபடும் வீரர்களைத் தியாகிகளாகப் போற்றி அவர்களின் நினைவாக நடுகற்களை நிறுவினர்.

போர்க்களக் காட்சிகளையும், நடுகற்களைக் குறித்தும், அவற்றை வழிபட்ட முறைகளைக் குறித்தும் சங்க இலக்கியங்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நடுகற்கள் நடப்படுவதற்கான வழிமுறைகள் குறித்து தொல்காப்பியம் விரிவாக எடுத்துரைக்கிறது.

தேனி மாவட்டத்தின் புலிமான்கோம்பை, தாதப்பட்டி ஆகிய இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் பொற்பனைக்கோட்டை என்ற இடத்திலும் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சங்க கால நடுகற்கள் காணப்படுகின்றன. சங்ககாலத்தைச் சார்ந்த நடுகற்களில் உருவம் அல்லது சிலைகள் காணப்படவில்லை.

சங்க காலத்திற்குப் பிறகும், பல்லவர் காலத்திலும் நடப்பட்ட நடுகற்கள் முல்லை நிலப்பகுதிகளில் பெரிதும் காணப்படுகின்றன. குறிப்பாக, திருவண்ணாமலைமாவட்டத்தில்செங்கம் என்ற ஊரினைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக இத்தகைய நடுகற்களைக் காணலாம். யாருடைய நினைவாக அந்த நடுகற்கள் நடப்பட்டனவோ, அந்த வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு வீரர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

புலிமான் கோம்பை நடுகற்கள்

தேனி மாவட்டத்தின் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள ஊர் புலிமான்கோம்பை (புள்ளிமான் கோம்பை) ஆகும். 2006ஆம் ஆண்டில் இந்த ஊரிலிருந்து தமிழ் பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய அரிய நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன. புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் ஒன்றில் கீழ்க்கண்ட செய்தி காணப்படுகிறது.

கூடல்ஊர் ஆகோள் பெடு தீயன் அந்தவன் கல்"

இதன் பொருள்: "கூடலூரில் ஆநிரை கவர்ந்தபோது நடந்த பூசலில் கொல்லப்பட்ட தீயன் அந்தவனின் கல்"


 

சுடுமண் கால எழுத்துப் பொறிப்புகள்:

வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சுடுமண் கலன்களில் மக்களின் பெயர்கள் தமிழ் பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இத்தகைய சுடுமண் பொறிப்புகள் காணப்படுகின்றன. மேலும், எகிப்து நாட்டின் பெரேனிகே (Berenike), குசேர் அல் காதிம் (Quseir al Qadhim) ஆகிய இடங்களிலும், ஓமன் நாட்டின் கோர் ரோரி (Khor Rori) என்ற இடத்திலும் தமிழ் பிராமி எழுத்துக்களில் மக்களின் பெயர் பொறித்த சுடுமண் கலங்களின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இதன் மூலம், பண்டைத் தமிழர்கள் மேற்கு ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள ரோமானியப் பேரரசுப் பகுதிகளுக்கும் சென்று வணிகத்தில் ஈடுபட்டிருந்தது குறித்து அறியமுடிகிறது. ஒரு பொருள் தமக்கு உரிமையானது என்பதைக் குறிப்பதற்காகவே அதன்மீது மக்கள் தம் பெயர்களைப் பொறித்து வைத்தனர். சுடுமண் கலன்களில் காணப்படும் பெரும்பாலான பெயர்கள் தமிழிலும், சில பெயர்கள் பிராகிருத மொழியிலும் உள்ளன. கப்பல்களில் அல்லது வண்டிகளில் பொருள்களை எடுத்துச் செல்லும்போது இவற்றை அடையாளம் காண்பதற்கும் தங்களது பெயர்களை எழுதினர்.

பிராகிருதம் மௌரியர் காலத்தில் வடஇந்தியாவில் பொதுமக்களால் பேசப்பட்ட மொழி.

 

தொல்லியல் அகழாய்வுக் களங்கள்

தொல்லியல் அகழாய்வுப் (excavation) பணி என்பது பண்டைக்கால சமூகத்தின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளும் நோக்கில் முறைப்படி ஓர் இடத்தை அகழ்ந்து, சான்றுகளாகக் கிடைத்த பொருள்களை முறையாகத் திரட்டி ஆராய்வதாகும்.


வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வழியாகச் சங்க கால மக்களின் வாழ்க்கை முறை குறித்த சான்றுகள் கிடைத்துள்ளன. கண்டறியப்பட்ட தமிழ் நாட்டில் அரிக்கமேடு , அழகன்குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டிணம், கொற்கை, வசவசமுத்திரம் ஆகிய இடங்களிலும், கேரளத்தின் பட்டணம் என்ற இடத்திலும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளிலிருந்து சங்க கால மக்களின் வாழ்க்கை முறைக்கான பலவகையான தொல்லியல் சான்றுகள் கிட்டியுள்ளன.

புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு என்ற இடம் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினர் அகழாய்வு செய்த சங்க காலத் துறைமுகப்பட்டிணம் ஆகும். பிரிட்டனைச் சேர்ந்த சர் இராபர்ட் எரிக் மாட்டிமர் வீலர், பிரான்சைச் சேர்ந்த ஜே.எம். கசால், நம் நாட்டின் . கோஷ், கிருஷ்ண தேவா ஆகிய தொல்லியல் அறிஞர்கள் இங்கே அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர். சரக்குக் கிடங்கு, தொட்டிகள், உறைகிணறுகள், தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் அங்கே இருந்தமையை அவர்கள் கண்டறிந்து வெளிப்படுத்தினர்.

இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India-ASI) பழங்கால மக்கள் வாழ்ந்த இடங்களையும் கட்டுமானங்களையும் நினைவுச் சின்னங்களையும் நிருவாகம் செய்யும் அமைப்பு இந்தியத் தொல்லியல் துறை ஆகும். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. தமிழக அரசின் கீழ் தமிழ்நாடு தொல்லியல் துறை இயங்குகிறது. இந்தியாவில் உள்ள தொல்லியல் பொருட்களைப் பாதுகாப்பதற்கு இந்தியப் புதையல் சட்டம் (1878), பழங்காலப் பொருட்கள் மற்றும் கலைக் கருவூலங்கள் சட்டம் (1972), பழமையவாய்ந்த நினைவுச்சின்னங்கள், தொல்லியல் ஆய்வுக் களங்கள் மற்றும் எஞ்சியப் பொருட்கள் சட்டம் (1958) ஆகியவை வகுக்கப்பட்டுள்ளன.

 

பண்பாட்டுப் பொருள்கள்

செங்கற் கட்டுமானங்கள், மணிகள், சங்கு வளையல்கள், அணி புடைப்பு மணிகள் (cameo), செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட பொருள்கள் (intaglio) போன்றவற்றைத் தொல்லியலாளர்கள், அகழாய்வு மேற்கொண்ட இடங்களில் கண்டறிந்தனர். தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட சுடுமண் பாண்ட ஓடுகளும், பல வகை நாணயங்களும் அங்கே கிடைத்துள்ளன. இத் தொல்பொருள்கள், அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகள், கலைகள், கைவினைத் திறன், தொழிலகங்கள் ஆகியவை குறித்து அறிந்துகொள்ள உதவுகின்றன.

அணி புடைப்புமணிகள் (Cameo) என்பவை, விலையுயர்ந்த நவமணிகளின் மேற்புறத்தில் வேலைப்பாடு மிக்க உருவங்கள் செதுக்கப்பட்டவையாகும்.

செதுக்கு வேலைப்பாடுடைய பொருள்களில் (Intaglio) உருவங்கள் உட்குழிவாகச் செதுக்கப்பட்டிருக்கும்.


 

நாணயங்கள்

முதன்முதலாக, சங்க காலத்தில்தான் செலாவணிக்குரிய பொருளாக நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன. சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியவை சங்க காலம் குறித்து அறிந்துகொள்ள உதவும் மற்றொரு வகையான சான்றாகும். கொடுமணல், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களில் முத்திரை பொறித்த நாணயங்கள் கிடைத்துள்ளன.


ரோமானிய நாணயங்கள் தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் மண்டலத்தில் செறிந்து காணப்படுகின்றன. அழகன்குளம், கரூர், மதுரை ஆகிய இடங்களிலும் அவை கிடைத்துள்ளன. சில சமயம் மதிப்புயர் செல்வமாகவும் (Treasure) நாணயங்கள் பாதுகாக்கப்பட்டன.


கட்டி வடிவிலான (ingots) தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் புல்லியன் (bullion) என்று அழைக்கப்படுகிறது.

தொடக்க காலத்தில் இந்தியாவில் முத்திரை பொறித்த நாணயங்களே பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலும் வெள்ளியில் செய்யப்பட்ட அவற்றில் எண்ணற்ற குறியீடுகள் முத்திரைகளாகப் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் அல்லாத பிற மொழிச் சான்றுகளும் வெளிநாட்டினரின் குறிப்புகளும்

 தமிழ் அல்லாத பிற மொழிச் சான்றுகளும் தொடக்க காலத் தமிழ்ச் சமூகம் குறித்த அரிய தகவல்களைத் தருகின்றன. பண்டைத் தமிழ்ச் சமூகம் உலகெங்கிலும் விரிந்த தொடர்புகளைக் கொண்டிருந்ததைத் தமிழ் அல்லாத சான்றுகள் மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

 

அர்த்த சாஸ்திரம்

மௌரியர் காலத்தில் வாழ்ந்த கௌடில்யர் என்ற சாணக்கியர் இயற்றிய அர்த்த சாஸ்திரம் என்ற நூல் பொருளாதாரம் குறித்தும் ஆட்சிமுறைமை குறித்தும் எடுத்துரைக்கிறது. 'பாண்டிய காவாடகா' என்ற அந்நூலின் குறிப்பு பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்கள், கடற்பொருள்களைக் குறிப்பதாக இருக்கலாம்.

 

மகாவம்சம்

இலங்கையின் புத்த சமய வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்ற நூல் பாலி மொழியில் எழுதப்பட்டது. தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருந்த வணிகர்கள் குறித்தும் குதிரை வணிகர்கள் குறித்தும் இந்நூல் குறிப்பிடுகிறது.

முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் காலவரிசையில் விவரிக்கும் குறிப்பு வரலாற்றுக் குறிப்பு (chronicle) எனப்படும்.

எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் (Periplus of Erythrean Sea)|

எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் என்பது பண்டைய கிரேக்க நூலாகும். இந்நூலின் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. பெரிப்ளஸ் என்றால் கடல் வழிகாட்டி என்று பொருள். மாலுமிகள் இவ்வழிகாட்டிகளைக் கடற்பயணத்திற்குப் பயன்படுத்தினர். செங்கடலைச் சுற்றியுள்ள கடற்பரப்பே எரித்திரியன் கடல் ஆகும். முசிறி, தொண்டி, குமரி, கொற்கை ஆகிய சங்ககாலத் துறைமுகப்பட்டிணங்கள் குறித்தும் சேர, பாண்டிய அரசர்கள் குறித்தும் இந்த நூலில் குறிப்புகள் உள்ளன.

 

பிளினியின் 'இயற்கை வரலாறு

ரோமானியரான மூத்த பிளினி என்பவர் 'இயற்கை வரலாறு' என்ற நூலை எழுதினார். லத்தீன் மொழியில் எழுதப்பட்ட இந்நூல், ரோமானியப் பேரரசின் இயற்கை வளங்கள் குறித்து விவரிக்கிறது. இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகம் குறித்துக் குறிப்பிடும் பிளினி, வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அருகில் உள்ள ஓசலிஸ் (Ocealis) துறைமுகத்திலிருந்து பருவக் காற்று (தென்மேற்குப் பருவக்காற்று) சரியாக வீசினால் நாற்பது நாள்களில் இந்தியாவைஅடைந்துவிடலாம் என்று கூறியுள்ளார். கேரளக் கடற்கரையில் இருந்த பக்காரே (Bacare) துறைமுகத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். பக்காரே துறைமுகத்தின் தற்காலப் பெயர் என்னவென்று தெரியவில்லை. இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகத்தினால் ரோமானிய நாட்டுச் செல்வம் கரைந்தது குறித்துப் பிளினி ஆதங்கப்படுகிறார். இதன் மூலம் மிளகுக்கு இருந்த மதிப்பையும், பெருமளவிற்கு மிளகு தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியானதையும் அறியமுடிகிறது.

 

தாலமியின் புவியியல்

இரண்டாம் நூற்றாண்டில் நிலவிய ரோமானியப் பேரரசின் புவியியல் அமைப்பு விவரங்கள், நிலப்படம் ஆகியவற்றைக் கொண்ட ஆவணமே தாலமியின் புவியியல் என்ற நூலாகும். இதில் காவிரிப்பூம்பட்டிணம் (Khaberis Emporium), 6800605 (Korkoi), 86060flwr Gwif (Komaria), முசிறி (Muziris) ஆகிய துறைமுகப்பட்டிணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


பியூட்டிங்கேரியன் அட்டவணை (Peutingerian Table)


பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் ஆகும். இதில் பண்டைய தமிழகமும் முசிறி துறைமுகமும் மேலும் பல இடங்களும் குறிக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: இங்கு இலங்கைத் தீவு Taprobane எனவும், முசிறி துறைமுகம் முசிறிஸ் எனவும் குறிக்கப்பட்டுள்ளது,

 

வியன்னா பாப்பிரஸ்

வியன்னா பாப்பிரஸ் என்பது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க ஆவணமாகும். இதில் முசிறியில் நடைபெற்ற வணிகம் தொடர்பான குறிப்பு உள்ளது. தற்போது இந்த ஆவணம் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில், ஆஸ்திரிய தேசிய நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளபாப்பிரஸ்அருங்காட்சியகத்தில் உள்ளது. இது வணிகர்களுக்கு இடையேயான எழுத்துப்பூர்வமான ஓர் உடன்படிக்கை ஆகும். ஹெர்மாபோலோன் (Hermapollon) என்ற பெயருடைய கப்பல், ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதியான மிளகு, தந்தம் போன்ற சரக்குகள் குறித்த பட்டியல் இந்த ஆவணத்தில் காணப்படுகின்றன.

பாப்பிரஸ் என்பது பண்டைய எகிப்தில் பாப்பிரஸ் என்ற நாணலிலிருந்து தயாரிக்கப்பட்ட தாள் ஆகும். அக்காலத்தில் எழுதுவதற்கு இதைத்தான் பயன்படுத்தினர்.

Tags : History வரலாறு.
9th Social Science : History : Early Tamil Society and Culture : Sources for the study of early Tamil society History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகள் - வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்