சமூக நீதி - உறுதிப்படுத்தும் நடவடிக்கை | 11th Political Science : Chapter 12 : Social Justice
உறுதிப்படுத்தும் நடவடிக்கை
சமூக - பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் வழியாக சமூக சமத்துவத்தினை உருவாக்குவது உறுதிப்படுத்தும் நடவடிக்கை எனப்படுகிறது. இந்த மக்கள் காலம் காலமாக வரலாற்றுப்பூர்வமாக அடிமைகளாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். இதனால் உருவாகியுள்ள சமுதாய, பொருளாதார இடைவெளிகளை இணைக்க வேலைவாய்ப்புகள் மற்றும் ஊதியங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல், கல்வி வாய்ப்புகளை அதிகரித்தல், கடந்த காலங்களில் ஏற்பட்ட வலி, காயங்கள் மற்றும் தவறுகளுக்கு நிவாரணம் காணுதல், குறிப்பாக அடிமை மற்றும் அடிமை சட்டங்களால் கடந்த காலங்களில் ஏற்பட்ட சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியன உறுதிபடுத்தும் நடவடிக்கைகளில் அடங்கும்.
உதாரணமாக, அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளில் அமலான உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீது 2017-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் "கருப்பினத்தவர் வேலைவாய்ப்பு பெறுவது அதாவது பணிகளில் கருப்பினத்தவர் பங்கு குறிப்பிடத்தக்க அளவு (0.8%) அதிகரித்துள்ளது என தெரியவந்தது.
அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் (யு.எஸ்.ஏ)
சுதந்திரம், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் முன்னேறி வந்தபோதும் அங்கு நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது இருபதாம் நுற்றாண்டின் பிற்பகுதி வரை நீடித்தது. இதை எதிர்த்து அங்கு குடிமை உரிமைப் போராட்டங்கள் நடந்தன.
இதைத்தொடர்ந்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் 1960களில் அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் உறுதிப்படுத்தும் ஆணை குடியரசு தலைவர் ஜான் எஃப் கென்னடி அவர்களால் 1961 இல் வெளியிடப்பட்டது. இது நிர்வாக ஆணை 10925 என்று அழைக்கப்படுகிறது. இதன்படி வேலை வாய்ப்புகளில் எந்த தொழிலாளரும் அல்லது விண்ணப்பதாரரும் நிறம், மொழி, இனம், தேசிய பூர்விகம், அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என அரசு கேட்டுக்கொண்டது.
1965 இல் மற்றொரு ஆணையால் (11246) இது மாற்றப்பட்டது. இதன்படி தனியான நிர்வாகத் துறை மூலம் தொடர்ச்சியான நேர்மறை செயல்பாடுகளை மேற்கொண்டு வேலை வாய்ப்புகளில் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் மைய கூட்டாட்சி அரசின் கடமை உறுதிபடுத்தப்பட்டது. இதன்படி பாலினம் பாதுக்காக்கப்பட்ட இனங்களில் கீழ் கொண்டுவரப்பட்டது. 1964ல் நிறைவேற்றப்பட்ட சிவில் உரிமை சட்டத்தில் நிறுவனங்களில் பாகுபாடற்ற நிலையை உருவாக்க அழுத்தம் கொடுப்பது என்ற உறுதிப்படுத்தும் நோக்கம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. 1967ல் பெண்களுக்கு உறுதிப்படுத்தும் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டது.
அனைத்து வகையான இனப் பாகுபாடுகளை ஒழிக்கும் உலகளாவிய சிறப்பு கருத்தரங்கம் அமைப்பு ரீதியாக பாகுபாட்டுக்கு உள்ளான சமூகங்களுக்கு நிவாரணம் அளிக்க உறுதிப்படுத்தும் நடவடிக்கை அவசியத் தேவை என கையொப்பமிட்ட உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டது. இந்த நடவடிக்கை அமலாக்கம் செய்யப்பட்ட பின்னர் எந்த ஒரு இனக்குழுக்கள் இடையிலும் சமத்துவமின்மை நிகழாத வகையில் திட்டங்களை உருவாக்குமாறு அக்கருத்தரங்கம் வலியுறுத்தியது.
சில அரசுகளால் கடைப்பிடிக்கப்பட்ட பாகுபாட்டுக்கொள்கைகளால் பாதிப்புக்குள்ளான சமுதாயங்களுக்கு உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அமலாக்கம் செய்வது அந்நாடுகளின் சமத்துவக் கொள்கையில் தேவைப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழு வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது.
1994-ல் தென் ஆப்பிரிகா சமூகம் மக்களாட்சிக்கு மாறியதைத் தொடர்ந்து முன்னர் நிலவிய இன ஒதுக்கல் ஆட்சியின் பாதிப்புகளை அகற்றி சமூகங்கள் இடையே சமத்துவம் ஏற்படும் வழிவகைகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவாக உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி முன்னர் சட்டத்தின் அடிப்படையில் இன ஒதுக்கல் செய்யப்பட்ட பூர்வீக கருப்பினத்த வர்கள், இந்தியர்கள், பழுப்பு நிறத்தவர்கள் ஆகியோருக்கும் வெள்ளை இனத்தவர் உள்ளிட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பில் சமத்துவம் அளிக்க சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி 50 பேருக்கு அதிகமாகப் பணியாற்றும் நிறுவனங்களில் மேற்கூரிய பாதிக்கப்பட்ட வகுப்பினர்க்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமக்குத் தாமே திட்டம் வகுத்து அரசுக்கு அளித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இது கருப்பினத்தவர்களுக்கு பொருளாதார ஆற்றல் அளிக்கும் சட்டத்தின் ஒரு உறுப்பாக வகுக்கப்பட்டிருந்தது. இது குறித்த வழக்கில் கருப்பினத்தவருக்கு முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை என்று தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனா
சீனாவில் வாழும் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்குவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அமலில் உள்ளன.
ரஷ்யா
சோவியத் ஒன்றியம் இருந்தபோது இனக்குழு சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கும் பல்கலைக்கழக நுழைவு மற்றும் அரசு பதவிகளில் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது.
புதிய கல்வியும் புதிய தேவைகளும்
பண்டைக்காலத்தில் நமது நாட்டில் நிலவிவந்த கல்விமுறை சமத்துவ கல்வி முறை அல்ல. அவரவர் வர்ணம் / சாதி சார்ந்த தொழில்களை மட்டுமே கற்க அனுமதிக்கப்பட்டனர். பிற்காலத்தில் நவீன கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அங்கும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் நவீன கல்வி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கிறித்துவ மிஷனரி அமைப்புகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆங்கிலேய காலனி ஆட்சியின் கீழ் வந்த பின்னர் இங்கிலாந்து நாட்டின் கிறித்துவ மிஷனரிகள் பல இடங்களில் பள்ளிகள் தொடங்கினர். கல்வி மறுக்கப்பட்டு வந்த பல சமுதாயங்களுக்கு இவை நல் வாய்ப்பாக அமைந்தன.