அரசியல் அறிவியல் - ஜான் ரால்சின் நீதி கோட்பாடு | 11th Political Science : Chapter 12 : Social Justice
ஜான் ரால்சின் நீதி கோட்பாடு
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவராக ஜான் ரால்சன் கருதப்படுகிறார். நேர்மையான நீதி என்ற கருத்தியலின் அடிப்படையில் ஓர் நீதி கோட்பாட்டை அவர் உருவாக்கியுள்ளார். இவரது நீதி சமத்துவத்தை கோருகிறது. இவரைப் பொறுத்தவரை சுதந்திரம், வாய்ப்பு, வருவாய், வளம் மற்றும் சுயமரியாதை என அனைத்தும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இதையே வேறு வார்த்தைகளில் கூறினால் சமத்துவமின்மையே அநீதி ஆகும். தனிமனிதன் எந்த ஒரு செயலோ அல்லது பண்போ மற்றவருக்கு பயனளிக்காத வகையில் இருக்குமாயின் அது அந்த சமூகத்தின் அநீதியான பண்பை காட்டுவதாக அமையும் என்று கூறுகிறார். இந்த கண்ணோட்டமானது நீதியை பற்றிய நமது புரிதலை விரிவாக்குகிறது.
ஜான் ரால்ஸ் சிறந்த படைப்புகள்
❖ நீதி கோட்பாடு - 1971
❖ நேர்மையான நீதி - 1985
❖ அரசியல்தாராளாவியல்- 1993
❖ மக்களின் சட்டம் - 1993
அறநெறியின் அடிப்படையிலான பகுத்தறிவு ஒரு புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கும். அதில் மக்கள் தங்கள் சுயநல விரும்பிகளின் படி இல்லாமல் ஒட்டுமொத்த சமுதாய விருப்பங்களின் படியான கொள்கைகளைப் பற்றி சிந்திப்பார்கள் என்று ரால்ஸ் கூறுகிறார். இந்த முழுமையான அனைவரையும் உள்ளடக்கிய கண்ணோட்டம் ஜான் ரால்சின் கட்டமைப்பில் காணப்படுகிறது. இதை தெளிவாக கூறினால் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும்படி இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானதாக இருக்கக்கூடாது. இந்த நியாயமானது இரக்கத்தினாலோ அல்லது பெருந்தன்மையினாலோ இல்லாமல் காரண அறிவின் வெளிப்பாடாக இருத்தல் வேண்டும். ஜான் ரால்சின் கோட்பாடானது நவீன காலத்தின் மிகச் சிறந்த பகுத்தறிவு மனிதர்கள் நம் சமூகத்தில் நீதியின் சக்தியை உணர வேண்டும் என்கிறது. நம் போன்ற சமூகங்களில் காரண அறிவுக்கு பொருந்தாத அடையாளங்கள் மற்றும் உணர்ச்சிகருத்துக்கள் முக்கியபங்காற்றுகின்றன. அவற்றை விடுத்து ஜான் ரால்சின் வழியே அணுகும்போது நீதியின் உண்மையான ஆற்றலை கண்டு கொள்ள முடியும்.
உங்களுக்குத் தெரியுமா?
வேறு நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்களுக்கும் சில அடிப்படை உரிமைகளை பல நாடுகள் உறுதி செய்துள்ளன. புகலிடம் கோரிய மக்கள், தஞ்சம் அடைந்த மக்கள், அகதிகளாக குடியேறியோர் என பலதரப்பட்ட மக்களுக்கும் உரிமைகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உறுப்பு நாடுகள் பலரும் அங்கீகரித்துள்ளனர்.