அரசியல் அறிவியல் - சமூக நீதி | 11th Political Science : Chapter 12 : Social Justice
அலகு 13
சமூக நீதி
கற்றலின் நோக்கங்கள்
❖ சமூக நீதி என்ற கருத்தாக்கத்தின் பல்வேறு பரிணாமங்கள்
❖ சமூக நீதியின் முக்கியத்துவம்
❖ பகிர்ந்தளிப்பு நீதியின் பொருள் மற்றும் முக்கியத்துவமும் - சமூக படிநிலையில் இதன் தாக்கமும்.
❖ ஜான் ரால்சின் நியாயமான மற்றும் நேர்மையான சமுதாயம்
❖ தமிழகத்தில் சமூக நீதி இயக்கங்கள்
❖ உறுதியான நடவடிக்கை நேர்மறை பாகுபாடு பற்றிய கருத்தாக்கம் / அரசியல் கொள்கை
❖ சாதிப்பாகுபாடுகளும் அதன் பின் விளைவுகளும்
❖ சமத்துவ சமுதாயம்
❖ இட ஒதுக்கீட்டுக் கொள்கையும் அதன் தேவையும்
❖ வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் அரசாங்கத்தின் பங்கு
❖ சலுகைகளும் அதன் தாக்கமும்
சமூகநீதி என்றால் என்ன?
சமூகம் உருவாக்கும் எதிர்மறை மதிப்பீடுகள் சமத்துவமின்மையை, ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. சமூக அதிகாரத்தைக் கைக்கொள்வதில் ஏற்படும் போட்டிகளே ஒடுக்குமுறைகள் தோன்றிடக் காரணங்களாகும். தங்களுக்கென உருவாக்கிக் கொண்ட இயல்பான அடையாளக் கூறுகளைத் தற்காத்துக் கொள்வதற்கு அதிகார அமைப்புகளைக் கைப்பற்றிக் கொள்ள எண்ணுகின்றனர். 'பன்மைத்துவ’ மான சமூக அமைப்பில் தனித்த ஒரு குழுவினர் மட்டும் சமூக மேலாதிக்கம் பெற்றவர்களாக உருவெடுப்பது அநீதியான போக்காகும்.
சமூகமேலாதிக்க உணர்வினைப் பெற்ற இன, மத, மொழி, சாதி மற்றும் பண்பாட்டுக் குழுவினர் மற்ற குழுவினரின் சமூக உரிமைகளைப் பறித்தெடுக்க முயலும்போது அல்லது தடுக்கும்போது சமூகப் பகை முரண்கள் உருவாகின்றன. தங்கள் மீதான மேலாதிக்கத்தை மறுத்துத் தங்களுக்கு உரிய உரிமைகளைச் சமமாகப் பெற்றிட நடத்துகிற போராட்ட உணர்வினையே சமூக நீதி என்கிறோம்.
சமூகப்படிநிலைகளின் பின்புலம்
இந்தியாவில், புராதன காலத்து மரபுசார்ந்த சிந்தனையால் உருவான வருணாசிரம தர்மா சமூகப்படிநிலை, மேல்-கீழ் என்னும் பாகுபாட்டைக் கொண்டிருக்கின்றது. வருண படிநிலை அமைப்பு 'சதுர் வருண அமைப்பு' (நான்கு வருண அமைப்பு - அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறது. பிறப்பின் அடிப்படையில் பேணப்படும் இப் பாகுபாடு, தலைமுறைகளாகத் தொடர்வதால் சமூகத்தில் ஆழமான ஏற்றத்தாழ்வுகள் உருவாயின.
இந்திய அரசமைப்புச் சட்டம் 1949: பிரிவு 15(4)
சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்குவதற்கு அரசமைப்புச் சட்ட விதி 29(2) தடையாக இருக்காது.
இந்திய அரசமைப்புச் சட்டம் 1949: பிரிவு 16(4)
அரசுப்பணியில் போதிய அளவு பிரதிநிதித்துவம் பெறாத அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணிநியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்க மேற்கொள்ளப்படும் செயல்களுக்கு இவ்விதி தடையாக இருக்காது
இன, மத, மொழி சிறுபான்மையினருக்கான ஐ.நா. பிரகடனம் -- டிசம்பர் 18, 1992
பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்:
❖ சிறுபான்மை மக்கள் தனிப்பட்ட முறையிலும் பொதுவாழ்விலும் எந்த வகையான பாகுபாடும் குறுக்கீடும் இன்றி சுதந்திரமாக தங்கள் பண்பாட்டைப் - பின்பற்றவும், மதத்தைக்கடைப்பிடிக்கவும், பிரச்சாரம் செய்யவும், மொழியைப் பயன்படுத்தவும் உரிமை பெற்றவர்கள் ஆவர். ❖ சிறுபான்மை மக்கள் தங்களுக்கான அமைப்புகளை உருவாக்கவும் பராமரிக்கவும் உரிமை உண்டு.
❖ சிறுபான்மையினர் தங்கள் வரலாறு, மரபுகள், மொழி மற்றும் பண்பாடு பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவும் ஒட்டுமொத்த சமுதாயம் பற்றி அறிந்து கொள்வதற்கும் சிறுபான்மை மக்களுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
❖ ஏற்கனவே உள்ள மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு இந்தப் பிரகடனம் எந்த வகையிலும் ஊறு விளைவிப்பதாக அமையக்கூடாது.
இந்தியா பல்வேறு தட்ப, வெட்ப புவிசார் நிலவியல் அமைப்பு கொண்ட பன்மைத்துவ நாடாகும். பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்கள் வெவ்வேறு பண்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். எனினும், இந்திய சமூக வளர்ச்சிப் போக்கில் ஏற்றத்தாழ்வுகள் வர்ண அமைப்பின் அடிப்படையில் அமைந்த படிநிலைகளால் உருவாகியுள்ளன. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளால் நலிவுற்ற பிரிவினரின் வாழ்க்கை மேம்பட, அவர்களையும் அரவணைத்து வளர்ச்சிபெற்றிட, நமது அரசமைப்புச் சட்டம் பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை முன் மொழிகிறது.
இயற்கை வளங்களோ தொழில் வளர்ச்சியோ இல்லாத பகுதிகளுக்கு ஏற்ப சிறப்புத்திட்டங்களை மாநில அரசு உருவாக்கிக் கொள்ள அரசமைப்புச் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் சமூகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நலிந்த பிரிவினருக்குச் சிறப்புச் சட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலின்படியே அரசு வழங்கியுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தன்னிறைவு பெற்ற சமூக வளர்ச்சிக்கு என்று சமூகநீதியை அடித்தளமாகக் கொண்ட சிறப்பு ஏற்பாடுகள் இன்றியமையாத தேவையாக உள்ளன.
நமது நாட்டின் சமூக மக்களாட்சி தழைத்திடவும் , பன்மைத்துவம் வலிமைபெறவும் இன, மத பிரிவினர்கள் குழுக்கள் தங்கள் அடையாளங்களுடனும், அதிகாரப் பகிர்வுடனும், சகிப்புத்தன்மை உணர்வுடனும் வாழ்வதற்கான சமூக ஏற்பாடே சம வாய்ப்பு என்பதாகும்.
தொழில் புரட்சியைத் தொடர்ந்த மேலை ஐரோப்பிய சமூக அமைப்பில் ஏற்பட்ட பிரிவினை உணர்விற்கு பொருளாதாரம் அடிப்படை காரணமாகும். இந்திய சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள பாகுபாடுகள் வைதீக புராணங்கள் அடிப்படையில் நால்வருண அமைப்பாக பாகுபடுத்தப்பட்டிருக்கிறது.
சமூகத்தின் உற்பத்திக் கருவிகளான நிலம் மற்றும் இயற்கை வளங்களை உடைமையாக்கிக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறவர் முதலாளியாகவும் அத்தகைய உற்பத்திக் கருவிகளைப் பெற முடியாமல் தடுக்கப்பட்டு ஏழ்மை நிலையை அடைந்தவர்கள் தொழிலாளிகளும் ஆவார். நிலம் மற்றும் வளங்களைப் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறபோது அவரின் வர்க்கமும் மாற்றம் அடைகிறது. எனவே, பொருளாதார அடிப்படையில் முதலாளி தொழிலாளி என சமூகப் பிரிவினை ஏற்பட்ட மேலை ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளி முதலாளி ஆவதற்குச் சமூகத்தில் நிரந்தரத்தடைகள் ஏதும் இல்லை . ஆனால், புராதண நூல்களின் அடிப்படையில் உருவான நால்வருணப் பாகுபாட்டு முறையில் யாரும் தத்தம் வருணங்களை மாற்றிக்கொள்ள முடியாது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே வருணத்தில் மட்டுமே இருக்க வேண்டிய சமூகத்தடை உள்ளது.
வருண அமைப்பு தனிமனித மாண்புகளையும் உரிமைகளையும் மறுக்கிறது. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் சரியான சமூகக் கண்காணிப்பு முறைகளையும், சட்டப் பூர்வமான நீதி வழங்கும் முறையினையும் கடைபிடித்து வருகின்றது. அவ்வாறு வழங்கப்பெறும் நீதி வருண,வர்க்கவேறுபாடுகளைக்களைவதுடன் சமத்துவக் கண்ணோட்டத்துடனும் அமைந்திருக்கிறது எனலாம்.
இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களாட்சி நெறிமுறைகளின்படி பாதிக்கபட்ட அனைவருக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து அவர்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையினைப் பாதுகாக்கிறது. இத்தகைய சமூக வளர்ச்சிக்கான மாற்று செயல்முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் சமூக விடுதலையும் சமூக நீதியும் உறுதிப்படுத்தப்படுகின்றன. எனவே, உயிரோட்டமான சமூகநீதி இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டு உணர்வையும் பேணிக்காத்து நீதிப்பகிர்வினையும் மக்களாட்சி மாண்பினையும் உறுதிசெய்கிறது.