சமூக நீதி - சமூக, பண்பாட்டு சமத்துவம் | 11th Political Science : Chapter 12 : Social Justice
சமூக, பண்பாட்டு சமத்துவம்
சமூகத்தின் பல பிரிவினரும் தங்களது பண்பாட்டு அம்சங்களைப் பின்பற்றவும் தங்களது தனித் திறமைகளுக்கு ஏற்ற வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ளவும் சமூகத்தில் சமத்துவம் நிலவுவது அவசியமாகும். ஒவ்வொரு நபருக்கும் நியாயமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு நீக்கிட முயலவேண்டும்; அல்லது அதன் தாக்கத்தைக் குறைத்திட நடவடிக்கை மேற்கொள்வது மிக அவசியம். உதாரணமாக, தரமான மருத்துவ வசதிகள், கல்வி, சத்தான உணவுகள், குறைந்தபட்ச ஊதியம் என்பது போன்ற அம்சங்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கிடைத்திடச் செய்வது அவசியம். இவை இல்லாத நிலையில், சமூகத்தில் அனைவரும் சமம் என்றோ அல்லது சம வாய்ப்பு பெற்றவர்கள் என்றோ கருதமுடியாது.
நமது நாட்டின் பிரச்சினை என்ன?
சாதி - மதம் பெயரால் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் நம்பிக்கைகள் பெரும் தடையாகிவிடுகிறது. உதாரணமாக, நாட்டில் பல பகுதிகளில், பெண்களின் நிலை கவலை தருவதாகவே உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை என பல உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே பெண்களின் நிலை உள்ளது. இவ்வாறு நடத்தப்படுவதுதான் எங்களது பண்பாடு என சொல்லத் தொடங்கினால், அதன் விளைவுகள் பெரும் அபாயத்தை விளைவிக்கக் கூடியவை. அதாவது, ஏற்றத்தாழ்வுதான் எங்களது பண்பாடு என்று சொன்னால், அல்லது பாகுபாடுதான் எங்கள் பண்பாடு என்றால் அது சமத்துவத்திற்கான நமது பயணம் ஆகாது.
பொருளாதார சமத்துவம்
ஒரு சமூகத்தில் தனி நபர்களிடம் நிலவும் சொத்து மதிப்பு, வருமானம் குறித்த ஏற்றத்தாழ்வுகளை வைத்து, அந்த சமூகத்தில் பொருளாதார சமத்துவம் இருக்கிறதா என்பதை ஓரளவிற்கு நம்மால் அறுதியிட்டுக் கூறமுடியும். அல்லது பணம் படைத்தவர்களுக்கும் ஏழைமக்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி அந்த சமூகத்தின் பொருளாதார நிலையினை நமக்குத் தெளிவுபடுத்தும். நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோரின் எண்ணிக்கையினை வைத்து சில தீர்மானமான முடிவுகளுக்கு நம்மால் வரமுடியும் - இது பரவலாக பின்பற்றக்கூடிய வழிமுறை.
ஆனால், சில பாகுபாடுகள் பண்பாட்டு ரீதியாக நியாயப்படுத்தப்படும் போதுதான், பிரச்சினை பெரிதாகிறது. இத்தகைய பின்னடைவுகளை மக்கள் கவனத்துக்குக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் காலத்தின் தேவைக்கேற்ப சீர்திருத்தவாதிகள் ஈடுபட்டனர்.
"மனிதனை மனிதனாகக் கருதமுடியாமல், அவரது சாதியை மட்டுமே வைத்து எடைபோட முயலும் சிந்தனை காட்டுமிராண்டித்தனமானது" என்று வலியுறுத்திய தந்தை பெரியார், பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் என்ற பெயரில் சமத்துவத்தை மறுக்கும் அத்தனை அம்சங்களையும் கடுமையாக நிராகரித்தார். பெண்களை அடிமைப்படுத்த நாம் உருவாக்கி வைத்திருக்கும் அத்தனை சமூக அமைப்புகளையும் வன்மையாகக் கண்டிக்கும் பெரியார், சாதி, மத, பாலின பேதமற்ற சமூகமே உயரிய சமூகம் என்று அறிவித்தார். மொழி மேல் வெறியும், தங்களது பண்பாடு மேல் தீவிர பற்றும் கொண்டுள்ள நபர்களால் நவீன சமூகத்தை உருவாக்க முடியாது என்று திட்டவட்டமாக வாதாடினார். இவ்வாறு சமத்துவதின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு பலரும் முன்வைத்துள்ளனர்.
இதுவரை சமூகத்தில் தங்களது குடும்ப மரபு, பிறப்பு இவற்றின் அடிப்படையில் உயர் இடத்தையும் பெரும் அங்கீகாரத்தையும் பெற்ற நபர்களின் சிறப்புநிலை முடிவுக்கு வரவேண்டும். பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் ஒருவரின் தகுதி நிர்ணயிக்கப்படுவது சமத்துவமின்மையில் முதன்மையான அம்சம் எனலாம். இதை நிராகரித்து அனைவரும் சமம்; எனவே எந்த ஒரு தகுதிக்கும் அங்கீகரத்திற்கும் பொதுவான தேர்வு முறையினைப் பின்பற்றிட முயல்வது சமத்துவத்திற்கான முதல்படி. இதுவரை, உலகின் பல நாடுகளில் ஏழை மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது; பெண்களை கல்வி கற்கவும் பொது இடங்களில் பணி செய்யவும் தடை செய்திருக்கும் நாடுகள் பல. நமது நாட்டில், ஒருசில கடை நிலைப் பணிகளைத் தவிர, சாதி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர் பதவிகளைப் பெறுவதில் இருக்கும் பெரும் தடைகள் நாமறிந்ததே.
இது மாதிரியான பாகுபாடுகளைக் களைந்திட காலம் காலமாகத் தொடரும் பல சிறப்பு தகுதிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். சில நேரங்களில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினருக்கு தொடர் புறக்கணிப்புகள் காரணமாக சிறப்பான அல்லது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. அப்போதுமட்டுமே, உண்மையான சமத்துவத்தை நாம் நெருங்குகிறோம் என்று பொருள். எனவே, வரலாற்று ரீதியாக நிகழ்ந்திருக்கும் அநீதிகளை இனம் கண்டால் மட்டுமே, சமத்துவம் என்பதன் முழுப்பொருளையும் நாம் எட்டமுடியும்.
அரசின் சமச்சீர் நடவடிக்கைகளில் முக்கியமானது இடஒதுக்கீடு. கல்வி, வேலை வாய்ப்பில் குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கீடு செய்து, இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவதே இதன் அடிப்படை நோக்கம். ஆனால், இது பாகுபாடின் மறுவடிவமே என்று வாதிடும் சிலரும் உண்டு. இடஒதுக்கிட்டின் மூலம் திறமையின்மை புதிய அங்கீகாரம் பெற்றுவிடும் எனவும், சாதிரீதியான பாகுபாடு களையப்படாமல் உறுதிப் பட்டுவிடும் என்றும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
பன்னெடுங்காலமாகத் தொடர்ந்துவந்த சாதி, மத பாலின ஏற்றத்தாழ்வுகளை மிக விரைவாக நம்மால் களையமுடிந்தால் அது வரவேற்கத்தக்கதே. அப்படிப்பட்ட சமூக, பண்பாட்டு மாற்றம் ஓரிரு தலைமுறைகளுக்குள்ளாகவே ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியங்களுக்குப் பொருந்தாதது என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமூக நீதியும் சமத்துவமும்
உலகெங்கும் உள்ள சமூகங்கள் அனைத்துமே தங்களுக்கென்று நீதி என்பது பற்றி வரையறை வந்திருக்கின்றன. சரி-தவறு என்ற தெளிவு இல்லாத சமூகம் வரலாற்றில் இருந்ததாகத் தகவல் இல்லை . சமூகம் ஏற்றுக் கொண்ட நல்ல செயல்கள், சமூகம் மறுக்கும் அல்லது நிராகரிக்கும் செயல்கள் அந்த சமூகத்தின் 'தர்மம்' என்று வழங்கப்படலாயிற்று. இந்த தர்மத்தை மீறும் நபர்கள் மீது தயவுதாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்கவும் தண்டனை வழங்கவும் அரசன் தவறக்கூடாது என்பதே முக்கியமான தர்மம் என்று நமது நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளிலும் நிலவிய நியதியாக இருந்திருக்கிறது. கிரேக்கத் தத்துவ அறிஞர் பிளாட்டோ தனது மாணவர்களோடு நடத்திய பல உரையாடல்களில் நீதி என்றால் என்ன அதை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார்.
அறிஞர் சாக்ரடீஸ் தமது குறிப்பில், ஒரு சமூகத்தில் சில நபர்கள் கூட நியாயத்திற்கு எதிராக இருந்தால், அது ஒட்டுமொத்த சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி விளக்குகிறார். நீதி என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும் செயலாக மட்டுமே இருக்கமுடியும் என்று தெளிவுபடுத்துகிறார். தனி நபருக்கு மட்டும் நன்மையோ, பலனையோ தரும் செயலை நீதி என்று கருதக்கூடாது என்பதே அவரது கருத்தின் சாராம்சம். ஆம், ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் நீதி பற்றிப் பேசமுடியாது; நியாயம் என்பது முழு சமூகத்திற்கும் மட்டுமானதாகவே இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் என்பதே சாக்ரடீஸ் சொல்லும் தத்துவத்தின் மையக்கருத்தாகும். இதன்படி, நமது நாட்டில் காலம் காலமாக வழங்கப்பட்டு வந்த அநீதி, பாகுபாடுகளை அகற்றுவதற்காக அந்த சமூகங்களுக்கு வழங்கப்பட்ட நீதியே இடஒதுக்கீடு எனும் சமூகநீதியாகும்.
விகிதாச்சார நீதி
பாகுபாடு நிறைந்த சமூகத்தில் நீதியை நிலைநாட்டுவதில் நமது அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமூக நீதி என்பது வரலாற்று ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கான உதவிக்கரம் எனலாம். அதில் யாருக்கு எவ்வளவு வழங்கப்படவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் தொடர்ந்தன. சாதியப் படிநிலையே ஏற்றத்தாழ்வுக்கான முதன்மையான கூறாக இருக்கும் நமது நாட்டில், அதனடிப்படையிலேயே சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும். ஆகவேதான், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் பிரிவினர், பழங்குடியினர் என பலதரப்பாக ஒவ்வொருவரின் சமூக நிலைக்கு ஏற்ப, அரசின் திட்டங்கள் அமைந்திருக்கின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
நாட்டில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்காக முதல் ஆணையம் 1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. காகா காலேல்கர் அவர்களின் தலைமையில் அமையப்பெற்ற இதுவே சுதந்திர இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.