சமூக நீதி - கலைச்சொற்கள்(Glossary) : சமூக நீதி | 11th Political Science : Chapter 12 : Social Justice
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
இந்திய அரசியல் சட்டப் பிரிவு 340 இன்படி "சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்" எவை என அடையாளம் கண்டிடவும் மற்றும் அவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்திடவும் குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது. அதனடிப்படையில் இந்திய அரசு பின்வரும் இரண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை இதுவரை அமைத்துள்ளது.
1. திரு. காகா கலேல்கர் ஆணையம்
காகா கலேல்கர் ஆணையம் என்றழைக்கப்படுகிற முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 29.01.1953 அன்று அமைக்கப்பட்டது. இவ்வாணையத்தில் காகா கலேல்கர் உட்பட 11 பேர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவின் அறிக்கையினை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
2. மண்டல் ஆணையம்
பிரதமர் மொரார்ஜிதேசாய் தலைமையிலான மத்திய அரசு பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் கமிஷன் என்றழைக்கப்படுகிற மண்டல் ஆணையத்தினை 1979 ஆம் ஆண்டு அமைத்தது. இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது ஆணையமாகும். இவ்வாணையத்தின் செயலராக எஸ்.எஸ்.கில் செயல்பட்டார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்து ஆய்வு செய்திட 1979 ஆம் ஆண்டு பி.பி. மண்டல் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பெற்றது. அக்குழு இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவ்வாணையம் 11 காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் 3743 சாதிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாக உள்ளன என அடையாளம் கண்டது.
மண்டல் தன் அறிக்கையின் முகப்புரையில் “வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்திற்கு மெட்ராஸ் முன்னோடியாக இருப்பதுடன் அம்மாநிலமே பிற்படுத்தப்பட்ட வகுப்பார்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் தமிழ்நாடு சமூகநீதியின் பிறப்பிடமாகவும் முகவரி ஆகவும் இருப்பதை அறியலாம்.
மக்கள்தொகையில் 52% உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பார்க்கு மத்திய அரசுப் பணிகளில் 27% வழங்கிட மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது. இவ்வாணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 13.08.1990 ஆம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு மத்திய அரசுப் பணிகளில் மட்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது. இவ்வாணை 13.08.90 ஆம் தேதி முதல் அமல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுப் பணிகளில் சமூகஅடிப்படையிலும், கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்திய அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திரா சகானி V. இந்திய யூனியன் AIR 1993 SC 477
• இது மண்டல குழு வழக்கு எனவும் அழைக்கப்படும்.
• பிரதம மந்திரி மொரார்ஜிதே சாய் தலைமையில் 1979-ஆம் ஆண்டு ஜனவரியில் பி.பி. மண்டல் தலைமையில், சட்டபிரிவு 340-ன் படி பின்தங்கிய வகுப்பினருக்கான இரண்டாவது ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
• பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) மக்களை தவிர்த்து, இதர பிற்பட்ட வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில் 52% இடம் பெற்றுள்ளனர், அரசு பதவியில் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்தால்தான் அது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) இதர பிற்பட்ட வகுப்பினருக்கான (OBC) மொத்த 50 சதவிகித இட ஒதுக்கீடு ஆகும் என இந்த ஆணையம் பரிந்துரை செய்தது.
• மண்டல ஆணைய அறிக்கை சமர்பித்த பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் மற்றும் செயல்பாடும் இல்லை, பாராளுமன்றத்தில் இருமுறை 1982 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் மண்டல் ஆணையம் அறிக்கை மீது விவாதம் மட்டுமே நடைபெற்றது.
• 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி வி.பி. சிங் அரசாங்கம் ஒரு ஆணையின் மூலம் மண்டல் ஆணையம் அறிக்கையின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 27 சதவிகித இட ஒதுக்கீடு சமூகத்தில் பிற்பட்ட வகுப்பினருக்கு இந்திய அரசுப் பணிகளில் வழங்கியது.
சமூக நீதியை மேம்படுத்துதல்
சமூக நீதியை ஏற்படுத்துவதில் இட ஒதுக்கீடு முக்கியமான கருவியாக உள்ளது, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறை சமூக நீதியை நிலை நாட்டுகிறது என்பதை உணரவேண்டும். பிறப்பின் அடிப்படையில் யாவரும் யாருக்கும் உயர்ந்தவர் மற்றும் தாழ்ந்தவரும் இல்லை என்பன சமதர்ம தத்துவத்தின் அடிப்படையாகவும் சமூக நீதிக்கு இன்றியமையாத ஒன்றாகவும் கருதப்படுகின்றன. தன் பிறப்பின் அடிப்படையில் பயன்பெறுபவர்கள் அது இந்த நவீன உலகத்திற்கு பொருந்தாது என உணரவேண்டும். சமூகத்தில் உள்ள அனைவருடனும் உணர்வுபூர்வமாகவும், சமத்துவத்துடன் இருப்பதே நவீன மனிதனாக இருப்பதற்கு அவசியமாகும். சமீப காலத்தில் சொத்துக்கள் மற்றும் ஆடம்பர பொருள்களை கொண்டும் ஒருவரை மதிப்பிடும் போக்கு அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்றாகும். சமீபகால நோக்கங்கள் நம்மை நவீனமாக்குகின்றன. நவீன இந்தியாவை உருவாக்க அனைத்து துறைகளிலும் முழுமையான மாற்றம் தேவை. ஆகையால்தான் நவீன இந்தியா எனும் கருத்தாக்கம் சமூகநீதியை இயற்கையாகவே உள்ளடக்கியதாக இருக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
1979-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பின்தங்கிய வகுப்பிற்கான இரண்டாவது ஆணையம் பி.பி. மண்டல் தலைமையில் உருவாக்கப்பட்டது. பின்தங்கிய மக்களின் சமூக, கல்வியினை மேம்படுத்த வழிமுறைகள், திட்டங்கள் பற்றிய பரிந்துரைகள் கேட்கப்பட்டன. இந்த ஆணையம் அரசு பதவிகளில் 27 சதவிகிதம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
1980-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மண்டல் ஆணையம் அதன் அறிக்கையை உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில் சிங்கிடம் சமர்பித்தனர் அப்போது பி.பி. மண்டல் "இந்த அறிக்கையை தயார் செய்வதில் அதிகமான உழைப்பை கொடுத்துள்ளோம். மிக சரியாக கூறினால் நாம் உன்னதமான சடங்கை செய்துள்ளோம்" என்று கூறினார்.
அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த மண்டல் ஆணைய அறிக்கை உள்துறை அலுவலகத்திலேயே இருந்தது. அதை தேசிய முன்னணி அரசில் பிரதமராக இருந்த வி.பி. சிங் (1938-2001) 1990-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தினார். அந்த நேரத்தில் மண்டல் ஆணைய பரிந்துரைகள் பெரும் விவாதங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. தேசிய அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. சந்தர்ப்பவாத அரசியலை செய்வதாக வி.பி.சிங் குற்றஞ்சாட்டப்பட்டார். எந்த ஒரு பெரிய தேசிய கட்சியும் மண்டல் ஆணைய பரிந்துரைகளுக்கு ஆதரவாக இல்லை
சில அமைப்புகள் மற்றும் பிரிவினர் இந்த பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இரு தரப்பு வாதங்களையும் பதினோரு நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கேட்ட பின்பு உச்சநீதிமன்றம் இந்த மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் செல்லும் என தீர்ப்பளித்தது. அந்த அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகள் இந்த 1992-ஆம் ஆண்டு தீர்ப்பை வழங்கினர். ஆனால் அதே சமயத்தில் பரிந்துரைகளில் சில மாற்றங்களை செய்ய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
1993 செப்டம்பர் 8 ஆம் தேதி பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் அறிக்கை பற்றிய சர்ச்சை முடிவிற்கு வந்து, திட்டம் தொடர ஆரம்பித்தது.
கலைச்சொற்கள்: Glossary
சகோதரத்துவம்: சாதி, இன, மதம், மொழி என்ற பேதங்களில்லாமல் அனைத்து மனிதர்களையும் சகோதர சகோதரிகளாக பாவிக்கும் மனப்பாங்கு.
சுரண்டல்: வளங்களை தேவைக்கதிகமாக பயன்படுத்துவதும், குறைந்த ஊதியத்திற்கு அதிக உழைப்பை பணியாளர்களிடம் பெறுவதும்.
சமத்துவ சமுதாயம்: வர்க்க, இன, பொருளாதார, மொழி, மத பேதங்களில்லாமல் அனைவரையும் சமமாக நடத்தும் சமுதாயம்.
தனிச்சலுகைகள்: ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு, அவர்களின் பதவியின் காரணமாவோ, சிறப்பு திறமைகளின் காரணமாகவோ, சாதியின் காரணமாகவோ வழங்கப்படும் சிறப்பு சலுகைகள்.
சமூக அடையாளம்: சமுதாயத்தின் ஒரு பிரிவில் உறுப்பினராக இருப்பதன் மூலம், ஒரு நபருக்கு கிடைக்கும் அடையாளம்.
நிறவெறி: ஒருவரையோ அல்லது ஒரு குழுவினரையோ, அவர்களது நிறத்தின் அடிப்படையில் பாகுபாடாக நடத்துவது.
வர்ண அமைப்பு: பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்திய பழங்கால நடைமுறை
சிறுபான்மையினர்: நாட்டின் அல்லது ஒரு பகுதியில் உள்ள மொத்த மக்கள் தொகையில் மத, இன, சாதி அடிப்படையில் குறைவான எண்ணிக்கையில் உள்ளோர்.
இடஒதுக்கீடு: அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அரசமைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒரு முறை.
பன்மை சமூகம்: பல்வேறு மொழி, மத, இன மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் ஒன்றாக வாழும் சமூகம்.
சமூக மாற்றம்: ஒரு சமூகத்தில் வாழும் பெரும்பான்மை மக்களின் மன மற்றும் நடவடிக்கைளில் ஏற்படும் மாற்றம்.
குடிமை உரிமைகள்: ஒரு சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்காக அரசமைப்பினால் உத்திரவாதமளிக்கப்பட்ட உரிமைகள்.
பொருளாதார சமத்துவம்: ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களும் சமமான பொருளாதார நிலையில் இருத்தல்.
நிலப்பிரபுத்துவம்: அதிக அளவு, நிலங்களை உடைமையாக கொண்டவர்கள்.
பஞ்சமர்: வர்ணாசிரம முறையில் குறிப்பிடப்படாத வர்க்கத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள்.