Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | சென்னை மாகாணத்தில் சமூகநீதி

சமூக நீதி - சென்னை மாகாணத்தில் சமூகநீதி | 11th Political Science : Chapter 12 : Social Justice

   Posted On :  04.10.2023 04:02 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 13 : சமூக நீதி

சென்னை மாகாணத்தில் சமூகநீதி

இதே காலகட்டத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் இங்கிலாந்து அரசின் நேரடி நிர்வாகம் விரிவடைந்தது.

சென்னை மாகாணத்தில் சமூகநீதி

இதே காலகட்டத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் இங்கிலாந்து அரசின் நேரடி நிர்வாகம் விரிவடைந்தது. ரயத்துவாரி போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. வரி வசூல் செய்யும் நிர்வாக அமைப்புகள் உருவாயின. சென்னையில் ராணுவ அமைப்புகள் உருவாயின. 1835 இல் இந்தியா முழுவதும் அரசு நிர்வாக மொழியாக ஆங்கிலம் மட்டுமே பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்ட இந்திய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர். பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினரே ராணுவத்தில் சேர்ந்தனர். ராணுவத்தில் அனைவரையும் சேர்த்துக்கொண்ட காலனி அரசு பள்ளிகளில் இந்திய மொழிகளை அனுமதிக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்நிலை நீடித்தது.

நவீன கல்விமுறையின் கீழ் ஆங்கிலம் கற்றவர்கள் இப் பணிகளில் அமர்த்தப்பட்டனர். ஐரோப்பியர்கள் தவிர இந்திய ஆங்கிலேயர்கள், பிராமணர்கள் ஆகியோரே அரசு பணிகளில் நிறைந்திருந்தனர். இதேபோல, 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜமீன்தாரி, ராயத்துவாரி முறைகள் அமலாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள், நிலச்சுவாந்தார்கள் உருவாயினர். இவர்கள் அனைவரும் உயர்சாதியினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கிராம நில உறவுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.


இதைத் தொடர்ந்து ராயத்துவாரி முறை மீது ஆய்வு செய்யுமாறு அன்றைய ஆங்கிலேய அதிகாரி பிரான்ஸிஸ் எல்லீஸ் பணிக்கப்பட்டார். இதேபோல் தாமஸ் மன்றோ எனும் அதிகாரியும் ராயத்துவாரிமுறை மீது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அவர்கள் அறிக்கைகளில் 'காலம் காலமாக நிலத்துடன் தொடர்பு கொண்டிருந்த மக்களிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டு மேல்தட்டு வகுப்புகளைச் சேர்ந்த ஜமீன்தார்கள், மிராசுதாரர்களிடம் நிலம் அளிக்கப்பட்டதால் வேளாண்மையின் தரமும் விளைச்சலும் குறைந்துவிட்டதாகவும் இதனால் நில வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தனர். மேலும், ஏராளமான நிலங்களை தரிசாகப் போட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று கோரினர்.

தாழ்த்தப்பட்டோருக்கான முன்னுரிமைகள் 

சென்னை மாகாண அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி உதவித்திட்டங்களை 1885 இல் அறிவித்தது. சில இடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கான பள்ளிகளை அரசே திறந்தது.

இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரிமென்கீரே என்பவர் செங்கல்பட்டு மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதன்சுருக்கம் வருமாறு: தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக, பொருளாதார, கல்வி ரீதியாக மிகவும் - மோசமடைந்துள்ளனர். அவர்களுக்கு நிலம் மறுக்கப்படுகிறது. வீடு கட்டிக்கொள்ளக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. கல்வி நிராகரிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள். ஏராளமான நிலம் வேண்டுமென்றேதரிசாகப் போடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் குறைகிறது. இந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கலாம்

அவரது அறிக்கையில் மேலும் பல பரிந்துரைகளும் இருந்தன. இந்த அறிக்கையை பரீசிலித்த அரசு 1892இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் நிலத்தை பிரித்து வழங்கியது. இது பஞ்சமி நிலம் என அழைக்கப்பட்டது. இதேபோல தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகளுக்கான பள்ளிகளை அரசு பஞ்சமர் பள்ளிகள் என அழைத்தது.

'பஞ்சமர்' என்பது, வைதீக மதத்தின்படி நான்கு வர்ணங்களுக்கும் வெளியே நிறுத்தப்பட்ட மக்களைக் குறிக்கும் பெயர் ஆகும். எனவே பஞ்சமர் பள்ளிகள் என அழைப்பதை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அழைக்கப்படவேண்டும் என்று அயோத்திதாச பண்டிதர், . சிங்காரவேலர் போன்றோர் கூறினர்.

இவ்வாறு காலனி ஆட்சியில் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு கல்வியும் மறுக்கப்பட்ட நிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்வதை உயர் வகுப்பார் எதிர்த்து தடுத்தனர். பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கக்கூடாது என்று 1854 இல் நீதிமன்றம் ஆணையிட்டது. நீதிமன்ற ஆணைகளுக்கும் உயர்வகுப்பார் பணியவில்லை. 1865 இல் இங்கிலாந்தில் உள்ள இந்தியாவுக்கான அமைச்சரே ஆணையிட்டார். அப்போதும் நிலைமையில் மாற்றமில்லை.

இவ்வாறு, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனி ஆட்சியின் கீழ் சமூகம், பொருளாதாரம், அதிகாரம், வேலை வாய்ப்புகள் ஆகிய துறைகளில் ஒருபக்கம் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் சமூகத்தில் பெரும்பான்மையாக இருந்த பிராமணரல்லாதவர்கள், சிறுபான்மை மதத்தினர் மிகுதியாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

இக் காலகட்டத்தில் தொடங்கப்பட்ட பள்ளிகள் மூலம் நவீன கல்விகற்ற பிரமணரல்லாத வகுப்பினம் சிறுபான்மை மதத்தினர் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தங்களுக்கும் அரசுப்பணிகளில் பிரதித்துவம் வேண்டும் என்று கோரினர்.


குறிப்பாக கல்விகற்ற அயோத்திதாச பண்டிதர், . சிங்காரவேலர், இரட்டைமலை சீனிவாசன், பிட்டி தியாகராயர், பனகல் அரசர் போன்றோர் முன்னணியில் நின்றனர்.

இவ்வாறு எழுந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து 1892 ஆம் ஆண்டில் சென்னை மாவட்ட அனைத்துத் துறைகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளித்து ஆணை வெளியிட்டது. இது 128(2) என்று அழைக்கப்பட்டது. இதனை சென்னை மாகாணம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று அமைக்கப்பட்டது.


தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னெடுத்த கல்வி முயற்சிகளைப் போலவே மகாராஷ்டிராவிலும் கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திட மகாத்மா ஜோதிராவ்பூலே, அன்னை சாவித்ரிபாய்பூலே போன்றோர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்


நீதிக்கட்சி


1913 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கார்டியூ தலைமையிலான ராயல் ஆணையம் வந்தபோது அதனிடம் ஏராளமான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. சென்னை மாகாணம் மட்டுமல்லாமல் ரங்கூன் திராவி சங்கம் உள்பட பல அமைப்புகள் விண்ணப்பங்களை அளித்தன. அவற்றில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மதத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வேலை வாய்ப்புகளில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.


டாக்டர் சி. நடேசன், சர். பி. தியாகராயர், டாக்டர் டி. எம். நாயர் ஆகியோர் அறிக்கை ஒன்றினைத்தயாரித்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர். சர்.பி. தியாகராயர் எழுதி வெளியிட்ட அந்த அறிக்கை 'பிராமணரல்லாதார் அறிக்கை' என்று அழைக்கப்படுகிறது. 1916 ஆம் ஆண்டு பிராமணரல்லாதோர் நலன் காக்க சர்.பி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் 'தென்னிந்தியர் சுதந்திர சங்கம்' (South Indian Liberal Federation) என்ற இயக்கத்தைத் தொடங்கினர். இவ்வியக்கத்தின் சார்பில் 'ஜஸ்டிஸ்' என்னும் இதழ் வெளியானது. எனவே, இவ்வியக்கம் மக்களிடையே 'நீதிக்கட்சி (Justice Party) என வழங்கப்பெற்றது. இவ்வியக்கம் பிராமணரல்லாதார் மக்கள் மத்தியில் கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதற்கான 'வகுப்புவாரி உரிமை' குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.


உயர்கல்வியில் ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டும் அனுமதிக்கப்படுவதைக் கண்டித்தும் தமிழ் உள்ளிட்ட பழமையான மொழிகளையும் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிக்கட்சி சார்பில் 1915 இல் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. 1917 இல் இந்தியா வந்த தூதுக்குழுவை சென்னை மாகாணத்தைச் சேர்ந்த 54 அமைப்புகள் சந்தித்து பிராமணரல்லாதோர் மற்றும் சிறுபான்மை மதத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கோரினர். அதுமட்டுமல்லாமல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி ஆங்காங்கு மாநாடுகள் நடத்தப்பட்டன


முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை

சென்னை மாகாண சட்டமன்றத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் அமர்ந்ததைத் தொடர்ந்து இக் கோரிக்கைகள் சட்டமன்றத்திலும் எதிரொலித்தன. தொடர்ந்து நீதிக்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் இவற்றுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக அரசு அனுமதி அளித்ததன் பேரில் அரசு பணியிடங்களில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளித்து 1921 இல் தீர்மானம் நிறைவேறியது. இது வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை என்று அழைக்கப்படுகிறது.

இந்திய வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும். காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பிரிவினர்கள் தாங்களும் சமூக, பொருளாதார இழிவுகளில் இருந்து விடுதலை பெற்று சுய மரியாதையுடனும் சமத்துவத்துடனும் எதிர்காலத்தில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது.

"எல்லா அரசு பணிகளிலும் பிராமணர் அல்லாதவர்களை அவர்களுக்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதி இருந்தாலே போதும் என்று கருதி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என அனைவரும் அரசுப்பணிகளில் அமர்த்தப் படவேண்டும். இதற்கான ஒரு நிலையான ஆணை வெளியிட வேண்டும். நூறுரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் உத்தியோகமாக இருந்தால் 75% அளவு மக்களை அது அடையும்வரை ஏழாண்டுகாலம் வரை அமலில் இருக்கும் வண்ணமும் இவ்வாணை அமலில் இருக்க வேண்டும்" எனும் தீர்மானத்தினை சட்டசபையின் உறுப்பினரான முனுசாமி கொண்டுவந்தார்.

இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய சர். ஆர். கே. சண்முகம் "இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நாம் நிறைவேற்றினால் நம் எதிர்கால சந்ததி நம்மையெல்லாம் நமது நாட்டுக்கு உரிமை வாங்கித் தந்தவரென்றே கொண்டாடும்" என்று குறிப்பிட்டார். அத்தீர்மானத்தை வழிமொழிந்த டாக்டர் சி. நடேசனார் 'எங்கள் மக்களுக்கு வேலைகளில் சரியான பிரிதிநிதித்துவம் தரப்படாவிட்டால், நாங்கள் வரி கொடுக்க மாட்டோம்' என்று பேசினார்.

காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இயங்கி வந்த தந்தை பெரியார், ஜஸ்டிஸ் கட்சியினரின் கருத்துக்களை ஆதரித்தார். காங்கிரஸ் கட்சிக்குள்ளும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரிக்கையை எழுப்பினார். 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரும் தீர்மானத்தை பெரியார் கொண்டுவந்தார். இதற்கு காங்கிரஸ் தலைமை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்.

1928 வாக்கில் இரா. முத்தையா அவர்களின் தலைமையில் நீதிக்கட்சி செயல்பட்ட போது அரசின் எல்லாத்துறைகளிலும், பணிநியமனங்கள் முறைப்படுத்தப்பட்டு அரசாணையின் மூலம் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் நிரந்தரமாக்கப்பட்டது.


முதல் சட்டத்திருத்தம்

இந்தியா சுதந்திரம் அடைந்து இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் அதில் குறிப்பிடப்பட்டிருந்த சட்டப்பிரிவுகளைக் காட்டி, தமிழகத்தில் வகுப்புவாரி ஆணை பின்பற்றப்படுவதால், மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை எனக்கூறி செண்பகம் துரைராஜன் என்பவர் 1951ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார்.

இவ்வழக்கினை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் தமிழகத்தில் பின்பற்றப்படும் வகுப்புவாரி ஆணையானது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் அத் தீர்ப்பினை உறுதி செய்தது. எனவே தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த வகுப்புவாரி (இடஒதுக்கீடு) முறை ரத்து செய்யப்பட்டது.

வகுப்புவாரிமுறை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் எழுந்தன. எனவே, தந்தை பெரியார் உடனடியாக அரசமைப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் தந்தை பெரியார், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கு. காமராஜ், பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் முயற்சியால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீடிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம் ஆகும். இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீண்டும் இடஒதுக்கீடு பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.


அரசமைப்புச் சட்டம், பிரிவு 15 மற்றும் 16 ஆகிய பிரிவுகள் "சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின் தங்கியவர்களுக்குச் சில சிறப்புச் சட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கலாம்" என அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் பிரதமர் நேரு முதலாவது சட்டத் திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். அத் திருத்தத்தின்படி அரசமைப்புச் சட்ட பிரிவுகள் 15 (4) & 16(4) என்னும் உட்பிரிவுகள் இணைக்கப்பட்டன. இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பின் தமிழ்நாட்டில் 1951 ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு 25%, தாழ்த்தப்பட்டோருக்கு 16% என இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது


இட ஒதுக்கீடு விரிவாக்கம்


மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து ஆராய்ந்திட சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப் பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1971 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு 31%, தாழ்த்தப்பட்டோருக்கு 18% என இட ஒதுக்கீட்டு வரம்பு மாற்றியமைக்கப்பட்டது.

1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில அரசின் சமூக நலத்துறை அரசாணை (G.0. Ms.No. 1156, 02.02.1979) ஒன்றினைப் பிறப்பித்தது. அவ்வாணையின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின், குடும்ப ஆண்டு வருமானம் ₹ 9000 நிர்ணயிக்கப்பட்டது. பின் அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டு புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்புதிய ஆணையின்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டு வரம்பு 31% லிருந்து 50% ஆக உயர்த்தப்பட்டது. எனவே, அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50%, தாழ்த்தப்பட்டவர்கள்& பழங்குடியினருக்கு 18% என்று மொத்த இடஒதுக்கீடு 68% நடைமுறைக்கு வந்தது.

1989 ஆம் ஆண்டு பழங்குடியினருக்குத் தனியிட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என இடஒதுக்கீட்டு வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டு இடஒதுக்கீடு 69% என நடைமுறைக்கு வந்தது.


மத்திய அரசின் இட ஒதுக்கீடு: மண்டல் ஆணையம்

வி.பி. சிங் ஆட்சியின் போது மண்டல்ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அதன் அடிப்படையில் மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து, இந்திரா சகானி இடஒதுக்கீட்டு முறையானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும், அரசமைப்புச் சட்ட விதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இடஒதுக்கீட்டு முறையினை ரத்து செய்திட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார்.


அவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வி.பி.சிங் தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிய 27 சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தது. மேலும், இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. அரசியல் சட்டத்தில் உச்ச வரம்பு குறித்துக் குறிப்பிடப்படாத நிலையில் உச்சநீதிமன்றம் 50 சதவீதம் என்று உச்சவரம்பினை நிர்ணயித்தது. எனினும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் ஒரு பகுதியில் உச்சவரம்பிற்கும் விலக்கு உண்டு என்பதைப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது.

"உச்சநீதிமன்றத்தில் மண்டல் ஆணைய உத்தரவு பற்றிய தீர்ப்பில்" 50% என்பது விதியாக இருந்த போதிலும் கூட பலதரப்பட்ட மக்கள் பல்வேறு வகையில் பரந்துப்பட்ட இந்நாட்டில் வேரூன்றி உள்ள சில அசாதாரணமான நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது நமது வாதமல்ல. நாட்டின் தொலை தூரத்தில் உள்ள பகுதிகளிலோ அல்லது தள்ளியிருக்கும் பரப்புகளிலோ வாழ்வதன் மூலம் தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வாய்ப்பற்ற மக்களுக்கு அவர்களுக்கே உரியதனித்தன்மை காரணமாக அவர்களுக்கு வேறுவகையில், விதிகளிலிருந்து விலக்கு என்பது மிகவும் அவசியமாகும்". 50% இட ஒதுக்கீட்டிற்கு விலக்கு உண்டு எனத் தீர்ப்பளித்த நீதிபதிகளே ஏற்றுக் கொண்டுள்ளனர், என்பதை மேற்கண்டத் தீர்ப்பின் ஒருபகுதி உறுதி செய்துள்ளது. எனினும் தமிழகத்தில் நடைமுறையிலிருந்த 69% இடஒதுக்கீடு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும் அதனை ரத்து செய்திட வேண்டுமென்றும் நுகர்வோர் அமைப்பின் அறக்கட்டளை உறுப்பினரான கே.என்.விஜயன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 50%மேல் இடஒதுக்கீடு அளிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.


எனினும் 1951 ஆம் ஆண்டு எழுந்ததைப் போன்ற சட்ட நெருக்கடிகள் எழுந்ததால் அரசியல் சட்டத்தில் உள்ள மாநில அரசுகளுக்கான அதிகார வரம்பு என்னும் வாய்ப்பினைப் பயன்படுத்தி அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அரசியல் சட்ட பிரிவு 31(C) (Directive principles of state policy) -யினைப் பயன்படுத்தித் தனிச்சட்ட மசோதா ஒன்றினை 30.12.1993 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. அதன்பின் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட 69% இடஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் தனிச்சட்டமசோதாவிற்கு 19.07.1994 அன்று அன்றைய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு உரியசட்டப் பாதுகாப்பினைப் பெற்றுவிட்டது.

தமிழக அரசின் இச்சட்டத்தினை எதிர்த்தும் வழக்குத்தொடரும் சூழலைத் தவிர்க்க இந்திய அரசமைப்புச் சட்டத்தின் IX ஆவது அட்டவணையில் சேர்க்க தமிழக அரசு பெரும் முயற்சி எடுத்தது. நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பெற்ற 76-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழக அரசின் இடஒதுக்கீட்டுச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் IX ஆவது அட்டவணையில் இணைக்கப்பெற்றது. அத்துடன், 1992 நவம்பர் 16ஆம்தேதி முதல் இச்சட்டம் முன்தேதியிட்டு நடைமுறைக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இடஒதுக்கீட்டு முறை என்பது அரசு அதிகாரங்களைப் பெறுவதற்கான தற்காலிக முயற்சியே ஆகும். சமூக மாற்றம் நிகழ்ந்திடவும், உண்மையான சமூக நன்மதிப்பு உருவாகிடவும், சாதிய அடுக்கு முறைகள் ஒழிந்து சமத்துவம் பிறந்திட வேண்டும். அத்தகைய சமத்துவம் பிறப்பதற்கான வழிமுறைகளுள் ஒன்று 'சாதிக்கலப்புத் திருமணங்களாகும்'. சாதிகளுக்குள்ளேயே நடைபெறும் திருமணங்களே சாதிக்கட்டமைப்பை வலிமைப்படுத்தி வருவதுடன் சமத்துவம் உருவாவதற்கானத் தடைக்கல்லாகவும் இருக்கின்றன. எனவே "சாதிமறுப்புத் திருமணங்களும்" முற்போக்கான உயர் எண்ணங்களுமே உண்மையான சமூகமாற்றத்தை முன்னெடுக்கும் கருவிகளாகும்.

Tags : Social Justice சமூக நீதி.
11th Political Science : Chapter 12 : Social Justice : Status in Madras Presidency Social Justice in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 13 : சமூக நீதி : சென்னை மாகாணத்தில் சமூகநீதி - சமூக நீதி : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 13 : சமூக நீதி