அரசியல் அறிவியல் - நியாயமான விநியோகம் (Justice Distribution) | 11th Political Science : Chapter 12 : Social Justice
நியாயமான விநியோகம் (Justice Distribution)
சமூகத்தில் அனைவருக்கும் செல்வம், வாய்ப்பு போன்றவை சம அளவாகப் பகிர்ந்தளிக்கப்பட அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். நியாயமாக வளங்களை அனைவருக்கும் வழங்குவதற்கு சட்டம் வழிசெய்கின்றன. சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள் வளங்களை விநியோகிப்பதை கண்காணிக்க வேண்டும்.
நம்மை போன்ற நாடுகளில் சமூக கலாச்சார ஏற்றத்தாழ்வுகள் நன்கு ஊன்றியுள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவிற்கும் சுதந்திரம், வாய்ப்பு, செல்வம் மற்றும் சுய கௌரவத்தின் அடிப்படைகள் போன்றவை, சம அளவாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதில் எந்தவிதமான அநீதிகளும் இடம் பெறக்கூடாது.
சட்டமானது மக்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு முன்னரே, மக்கள் சில அடிப்படை சமத்துவங்களை பெற்று வாழ்வில் தனது நோக்கங்களை தொடர தேவையான சூழ்நிலைகள் அமைய வேண்டும். அரசும், சட்டமியற்றும் அமைப்புகளும் தீண்டாமை மற்றும் பிறசாதி பாகுபாடு நடவடிக்கை அகற்றி சமூகத்தில் நீதியை முறைப்படுத்துகின்றது.
சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குவதும் அதை அனைவருக்கும் உறுதிப்படுத்துவதும் அரசமைப்பின் தலையாய கடமையாகும்.
விவாதம்
❖ விளையாட்டுகளில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்தை, மக்கள் கேட்க முடியுமா?
❖ தனியார் துறை மற்றும் இராணுவத்தில் சம வாய்ப்பு வழங்குவதில் அரசாங்கத்தின் தலையீட்டை நாம் எதிர்பார்க்கலாமா?
❖ நம் குற்றவியல் நடைமுறை சட்டம் அனைவரையும் ஒன்றாக நடத்தாமல், வேறுபடுத்தி நடத்துமாறு நாம் கோர முடியுமா?
வரலாற்றுரீதியாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியாகவும், தார்மீகரீதியாகவும் உரிமை கிடைக்க அரசாங்கம் முக்கிய பங்காற்ற வேண்டும். சமத்துவத்தை உருவாக்குவதில் பரந்த மனப்பான்மை என்றும் தொண்டு எனவும் அரசாங்கம் நினைக்கக் கூடாது. சமூதாயத்தில் சமூக நீதியை நிலைநாட்ட மக்களை மாறுபட்ட விதத்தில் நடத்துவது அரசின் கடமையாகும், மேலும் நலிவடைந்த பிரிவினரின் அடிப்படை உரிமையாகவும், இதனைக்கொண்டு சட்டரீதியாகவும் அரசமைப்பில் தீர்வு காண முடியும். நலிவடைந்த பிரிவினருக்கு சம வாய்ப்பும் வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் ஏற்படுத்துவதில் அரசு முக்கிய பங்காற்றுகிறது. அரசு வேலைவாய்ப்பிலும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் நவீன கல்வி முக்கிய பங்காற்றுகிறது. இதனை நிலைநிறுத்துவதற்கு சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவும், சமவாய்ப்பினை ஏற்படுத்துவதும் அரசமைப்பின் முக்கிய நோக்கமாகவும் அங்கமாகவும் இருக்கின்றது.
இதனைப் பற்றி பல கருத்துகள் சமூகத்தில் நிலவுகிறது. நலிவடைந்த பிரிவினருக்கு வளங்களையும், சமவாய்ப்புகளையும் எவ்வாறு அளிப்பது என கேள்வி எழுகின்றது. மேல்தட்டு மக்கள் அரசின் மாறுபட்ட செயல்பாடு பாகுபாட்டை ஏற்படுத்தும் என கருதினர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு நலிவடைந்தோருக்கு கிடைக்காது என்ற அச்சத்தில் இட ஒதுக்கீடு முறையை அரசு உருவாக்குவதன் மூலம் சமூகத்தில் சமவாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்று நம்பினர். இட ஒதுக்கீட்டு முறையினால் நலிவடைந்த பிரிவினருக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தும் போது தகுதி பாதிக்கப்படுவதாக சிலர் கருதினர். ஆகையால் தொழிற்துறையில், பணியாளர்களின் திறமையை பாதிக்கும் என கூறப்படுகிறது.
அரசியல் அறிவியல் மாணவர்களான நாம் எவ்வித தயக்கமுமின்றி நீதியில் உள்ள பிரச்சினைகளை ஆராயவேண்டும். முதலில் நீங்கள் நலிவடைந்து, முன்னேற்றமடையாத மக்களுக்கு உதவ சில தலையீடு தேவை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
நாம் சுதந்திரம் அடைந்து குடியரசு ஆன பின்னும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வளங்கள் அனைத்தும் மேல்தட்டு மக்கள் வசமே இருந்தால் அது என்ன விளைவை ஏற்படுத்தும்? நாம் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டையா அல்லது குறிப்பிட்ட சிலருக்கான நாட்டையா? எதை அடையவேண்டும் எவ்வகையான சமூக நீதியை நாம் இறுதியில் பின்பற்ற வேண்டும்?