அரசியல் அறிவியல் - சமத்துவம் நிலவ சமூக நீதி அவசியம் | 11th Political Science : Chapter 12 : Social Justice
சமத்துவம் நிலவ சமூக நீதி அவசியம்
சமத்துவம் வேண்டும் என்று அனைவருமே ஏற்றுக்கொள்ளும் அதே நேரம், ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும் நம்மை நிலைகுலைய வைக்கின்றன. வசதிகளில், வாய்ப்புகளில், பணிச் சூழலில் என்று பல தளங்களில் நிலவும் சமத்துவமின்மை பற்றி நாம் என்ன சொல்லப்போகிறோம்.? இது போன்ற ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் நமது வாழ்வில் தவிர்க்கமுடியாத மற்றும் நிரந்தரமான அம்சங்கள் என்று கருதமுடியுமா? இவ்வாறு வாய்ப்புகள் இன்றித் தவிக்கும் மக்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு செய்ய நாம் கூடுதலாக என்ன செய்ய வேண்டும்? இது போன்ற சமத்துவமின்மைக்கு நமது சமூகத்தில் நிலவும் பண்பாட்டு மதிப்பீடுகள் எந்த அளவிற்கு காரணமாக இருக்கின்றன? இது மாதிரியான கேள்விகள் பல ஆண்டுகளாகவே நம் நாட்டினரை மட்டுமல்ல உலகெங்கிலும் பெரும் அதிர்வுகளை உருவாக்கி வந்திருக்கின்றன. அதனால்தான், சமத்துவம் என்பது சமூக, அரசியல் கோட்பாட்டில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. முதலில், சமத்துவம் என்ற கோட்பாடு எதை சுட்டிக்காட்டுகிறது? நாம் அனைவரும் சமம் என்றால் அதன் உண்மையான பொருள் என்ன? சமத்துவத்தை உறுதிசெய்வது எப்படி? அவ்வாறு உறுதி செய்வதன் வழியாக நாம் சாதிக்க நினைப்பது என்ன? வருமானத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே நாம் சரிசெய்ய நினைக்கிறோமா? எந்த மாதிரியான சமத்துவத்தை நாம் நிலைநாட்ட முயல்கிறோம்? நாம் எத்தனிக்கும் சமத்துவம் யாருக்கானது?
சமூக அடையாளங்களை முன்னிறுத்தி ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி; அதுவே சமத்துவமின்மையை உருவாக வழிகோலுகிறது. இனம், மொழி, சாதி, பாலினம், மதம் போன்ற வேறுபாடுகள் இருந்தாலும், மனிதர்கள் அனைவரும் தங்களது தனித்துவமான திறமையினை முன்னெடுத்துச் சென்று வாழ்வில் வெற்றி பெற வாய்ப்புகள் சம அளவில் வழங்கப்பட வேண்டும்.
சமூக, அரசியல் கோட்பாடுகளில், மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது இயற்கையாகவே மனிதர்களிடம் நிலவும் வேறுபாடுகளுக்கும் சமூக, கலாச்சார ரீதியாக இருக்கும் பாகுபாடுகளுக்குமான வேறுபாடு போல, தனிநபர் விருப்பங்கள், திறமைகள் இயல்பானவை, தனித்துவமானவை. ஒருவருக்கான அங்கீகாரமும், மதிப்பும் தனி நபர்களின் சாதனைகள், தனி நபரின் திறமைக்குமாக இருக்கவேண்டும்; ஆனால், ஒரு சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கலாச்சார, அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் செயற்கையானவை. இவற்றை பாகுபாடுகள் எனலாம்.
மக்களாட்சி நிலவும் நாடுகளில் அரசியல் சமத்துவத்தை எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். மக்களாட்சி அரசுகள் தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான குடியுரிமையை வழங்கி வருகின்றன. குடியுரிமை என்பது வாக்குரிமை, கருத்துரிமை, இணைந்து செயல்படும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, வழிபாட்டுரிமை என பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டது. இவை அனைத்துமே மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட அவசியமாகும். அப்போதுதான், குடிமக்கள் அனைவரின் பங்களிப்புடன் அரசு செயல்படமுடியும். மேலும், அரசமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சட்ட உரிமைகளையும் வழங்கியுள்ளது. மக்களாட்சி நிலவும் பல நாடுகளில் குடியுரிமை உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், சமத்துவமின்மையும், ஏற்றத்தாழ்வுகளும் நிலவத்தான் செய்கின்றன.