பாலிலா இனப்பெருக்கம் (Asexual Reproduction)
கேமீட்கள் ஈடுபடாமல் தன்னுடைய சொந்த சிற்றினங்களை
பெருக்குவதற்கு உதவும் இனப்பெருக்க முறை பாலிலா இனப்பெருக்கம் என்று அழைக்கப்படுகிறது.
பதினோராம் வகுப்பில் அலகு |-லிருந்து இனப்பெருக்கம் உயிரினங்களின் ஒரு முக்கிய பண்பு
என்பதை தெரிந்துக் கொண்டோம்.
மேலும் இங்கு பல்வகை இனப்பெருக்கம் பற்றி விவரித்துள்ளோம்.
பரிணாமத்தில் கீழ்நிலைத் தாவரங்கள், பூஞ்சைகள், விலங்குகளில் பல்வகை பாலிலா இனப்பெருக்க
முறை காணப்படுகிறது. கொனிடியங்கள் தோற்றுவித்தல் (ஆஸ்பர்ஜில்லஸ், பெனிசிலியம்), மொட்டு
விடுதல் (ஈஸ்ட், ஹைட்ரா), துண்டாகுதல் (ஸ்பைரோகைரா), ஜெம்மா உருவாதல் (மார்கான்ஷியா),
மீளுருவாக்கம் (பிளனேரியா) மற்றும் இரு பிளவுருதல் (பாக்டீரியங்கள்) போன்றவை சில பாலிலா
இனப்பெருக்க முறைகளாகும். (பதினோராம் வகுப்பில் அலகு 1-ல் உள்ள பாடம் ஒன்றைக் காண்க).
இந்த இனப்பெருக்க முறையில் தோன்றும் உயிரினங்கள் புற அமைப்பிலும், மரபியலிலும் ஒத்திருப்பதால்
நகல்கள் (clones) என்று அறியப்படுகின்றன. உயர்தாவரங்களும் பாலிலா இனப்பெருக்கத்தின்
போது பல முறைகளை பின்பற்றுகின்றன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.