அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் - இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் | 10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இந்திய
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு
76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது.
இவர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார். இவர்
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகத்
தேவையான தகுதிகளை இவரும் கொண்டிருக்க வேண்டும். எந்த நேரத்திலும்
குடியரசுத் தலைவரால் அவர் பதவியிலிருந்து அகற்றப்படலாம் அல்லது அவர் குடியரசுத் தலைவருக்குப்
பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம்.
இவர்
குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு
ஆலோசனை வழங்குவார்.
இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு
உண்டு. நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும்,
பங்கு கொள்ளுவதற்கும் இவருக்கு உரிமை உண்டு. நாடாளுமன்றத்தின்
இரு அவையின் கூட்டத்திலோ அல்லது எந்தவொரு கூட்டுக் குழு கூட்டத்திலோ வாக்கு அளிக்கும்
உரிமை இன்றி உறுப்பினராக இவர் இடம் பெறுவார். நாடாளுமன்ற உறுப்பினர்
ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும்
இவரும் பெறுகிறார்.