செயல்பாடுகளும், கடமைகளும், அமைச்சரவைக் குழு, வகைகள் - இந்திய பிரதம அமைச்சர் | 10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India
பிரதம அமைச்சர்
அரசியலமைப்புச்
சட்டப்பிரிவு 74(1) குடியரசுத் தலைவருக்கு உதவிடவும், அறிவுரை வழங்கிடவும்
பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு நடுவண்
அமைச்சரவைக் குழு இருக்கும் எனக் குறிப்பிடுகிறது.
இந்தியாவின்
பிரதம அமைச்சர் பதவியானது வெஸ்மின்ஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக்
கொள்ளப்பட்டது. (இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மையில் அமைந்துள்ளதால் அவர்களின்
நாடாளுமன்ற முறை வெஸ்ட்மினிஸ்டர் முறை என்றழைக்கப்படுகிறது).
மக்களவையின்
பெரும்பான்மைக் கட்சியின் தலைவரை பிரதம அமைச்சராகக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மற்ற அமைச்சர்களை
பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மக்களவையில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் இல்லையெனில் குடியரசுத்
தலைவர் எந்தக் கட்சி அமைச்சரவையை அமைக்க முடியுமோ அக்கட்சியின் தலைவரை அவர் அழைத்து
அரசு அமைக்கக் கூறலாம். குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்குப்
பதவிப் பிரமாணமும், இரகசியக்காப்புப்
பிரமாணமும் செய்து வைக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினராக
இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத்
தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும்
மக்களவைக்கு பொறுப்புடையவர்களாவர்.
அரசியலமைப்பு
சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
• பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை
அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
•
தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின்
தேதி, நிகழ்ச்சி நிரல் (Agenda) குறித்து
முடிவு செய்வார்.
•
காபினெட் அமைச்சரவை
கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக்
கலந்தாலோசிக்கலாம்.
•
பிரதம அமைச்சர்
பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
•
நடுவண் அரசின்
விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின்
அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார்.
•
பிரதம அமைச்சர்
என்பவர் குடியரசுத் தலைவருக்கும்,
அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
•
பிரதம அமைச்சர்
நாட்டின் உண்மையான தலைவராவார்.
அவர் நாட்டின் முக்கிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
•
சர்வதேச மாநாடுகளான
காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு
ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.
தேர்தலுக்குப்
பின்னர் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் அமைச்சரவையை நியமிக்கிறார். ஒட்டு மொத்த மக்களவை
உறுப்பினர்களில் 15% மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக
(பிரதம அமைச்சர் உட்பட) இருத்தல் வேண்டும் என இந்திய
அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.
நடுவண்
அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
1.
காபினெட் (அ) ஆட்சிக்குழு
அமைச்சர்கள்
2.
இராசாங்க அமைச்சர்கள்
3.
இணை அமைச்சர்கள்
காபினெட்
அமைச்சர்கள்
நிர்வாகத்தின்
மையக் கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பே காபினெட் ஆகும். காபினெட் அரசாங்கத்தின்
பாதுகாப்பு, நிதி, வெளியுறவுக் கொள்கைகள்,
உள்துறை ஆகியவற்றின் முக்கிய முடிவுகளை எடுக்கிறது.
இராசாங்க
அமைச்சர்கள்
அமைச்சரவை
குழுவின் இரண்டாவது வகையினரே இராசாங்க அமைச்சர்கள் ஆவர். அவர்கள் தங்களுக்கு
ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படுகின்றனர். ஆனால் அழைப்பு விடுத்தால் மட்டுமே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து
கொள்வர்.
இணை அமைச்சர்கள்
அமைச்சரவையில்
மூன்றாவதாக, இணை அமைச்சர்கள் உள்ளனர். காபினெட் அமைச்சர்கள்
(அ) இராசாங்க அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட
கடமைகளைச் செயலாற்றுவதில் இவர்கள் உதவி புரிகின்றனர்.