உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களும், பணிகளும், - நீதித்துறை | 10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India
நீதித்துறை
நடுவண்
அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும். குடிமக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும்
பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்சநீதிமன்றம் ஆகும். நடுவண், மாநில அரசுகளின் சட்டமன்ற, நிர்வாகப் பிரிவுகளிலிருந்து
நீதித்துறை தன்னாட்சி பெற்று விளங்குகிறது. ஒருங்கிணைந்த நீதித்துறை
என்பது நாடு முழுவதும் நீதித்துறையானது ஒற்றை அதிகாரப் படிநிலையைக் கொண்டுள்ளதாகும்.
குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில்
நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது
உச்சநீதிமன்றம்
உங்களுக்குத் தெரியுமா?
புதுதில்லியில்
அமைந்துள்ள 'இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் துவங்கப்பட்டது. இது 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ்
நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.
உச்ச
நீதிமன்றத்தின் அமைப்பு
1950ஆம் ஆண்டு அரசியலமைப்பின் தொடக்கத்தில் ஒரு தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தது. தற்சமயம்
உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
இந்திய
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மற்ற நீதிபதிகளைத்
தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்ட மூத்த நீதிபதிகள் குழுவின் (Collegium) ஆலோசனையுடன் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
•
அவர் இந்தியக்
குடிமகனாக இருத்தல் வேண்டும் அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல்
வேண்டும்.
•
அவர் பத்து ஆண்டுகள்
உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
•
குடியரசுத் தலைவர்
பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.
தற்காலிக
அடிப்படையில் (ad-hoc
basis) உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகை
செய்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகள்
65 வயது வரை பதவியில் நீடிப்பர்.
உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக குடியரசுத் தலைவரிடம் பதவி
விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம் அல்லது பெருங்குற்றத்தின் மூலம் உண்டான கண்டனத்
தீர்மானத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தினை
நாடாளுமன்றம் பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தலைமையிடம் புதுதில்லியில் உள்ளது.
எனினும் இந்தியக் குடியரசுத் தலைவரின் இசைவு பெற்று இந்தியத் தலைமை நீதிபதியின்
முடிவின்படி வேறு எந்த மாநிலத்திலும் அல்லது எந்த ஒரு இடத்திலும் இந்நீதிமன்ற அமர்வு
அமையலாம்.
உச்ச
நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் தனக்கேயுரிய நீதி வரையறைக்கு உட்பட்டவை
ஆகும். அவைகள்
1.
இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு
இடையிலான சிக்கல்கள்
2.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்
3.
அடிப்படை உரிமைகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன
உச்ச நீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும்.
அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட நீதிப்பேராணைகளை உச்சநீதிமன்றம் வழங்குகிறது.
உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும். மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் (Civil and Criminal) அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கின்றது. அப்படிப்பட்ட வழக்குகளைத் தீர்க்க அரசியலமைப்புச் சட்டப்படி மேலும் சட்டவிளக்கம் தேவையென உயர் நீதிமன்றம் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவ்வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்ல முடியும்.
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.
•
உச்ச நீதிமன்றம்
பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
• குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குபடுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு
சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம்
உள்ளது இது நீதிப்புனராய்வு
(நீதிமன்ற மறுஆய்வு அதிகாரம்) எனப்படும்.
பின்வரும் தனிப்பட்ட நீதிமன்ற மறுஆய்வு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.
அவை
1.
நடுவண் அரசு, மற்றும், மாநிலங்களுக்கிடையிலான
பிரச்சனைகள்.
2.
அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்கள், கருத்து வேற்றுமைகளை விளக்கி தெளிவுபடுத்துதல்.
3.
அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்.
4.
மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு
முரணானது என அறிவிக்கும் அதிகாரம் போன்றவைகளை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.