Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்திய நாடாளுமன்றம்

ராஜ்ய சபா, லோக்சபா | தகுதிகள், பதவிக் காலம், தேர்தல், செயல்பாடுகள், சபாநாயகர், அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் - இந்திய நாடாளுமன்றம் | 10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India

   Posted On :  27.07.2022 02:23 pm

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 2 : நடுவண் அரசு

இந்திய நாடாளுமன்றம்

நடுவண் அரசின் சட்டம் இயற்றும் அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது. இந்திய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவைகள் 1. குடியரசுத் தலைவர் 2 ராஜ்ய சபா (மாநிலங்களவை) 3. லோக்சபா (மக்களவை). நாடாளுமன்றமானது மாநிலங்களவை என்னும் மேலவையையும் மக்களவை என்னும் கீழவையையும் கொண்டுள்ளதால் இது ஈரவை சட்டமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திய நாடாளுமன்றம்

நடுவண் அரசின் சட்டம் இயற்றும் அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது. இந்திய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவைகள் 1. குடியரசுத் தலைவர் 2 ராஜ்ய சபா (மாநிலங்களவை) 3. லோக்சபா (மக்களவை). நாடாளுமன்றமானது மாநிலங்களவை என்னும் மேலவையையும் மக்களவை என்னும் கீழவையையும் கொண்டுள்ளதால் இது ஈரவை சட்டமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.


          நாடாளுமன்றம்

 

மாநிலங்களவை

ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவை 250 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 238 உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு அல்லது செயல்முறை அனுபவம் கொண்ட 12 உறுப்பினர்களைக், குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினராவதற்கானத் தகுதிகள்

இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

அரசாங்கத்தில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.

மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனைத்திருப்பித்தர முடியாதவராகவோ இருத்தல் கூடாது.

மக்களவையிலோ () எந்தவொரு சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது.

மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக் காலம்

மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை ஆகும். அதனைக் கலைக்க முடியாது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர். அதனால் ஏற்படும் காலியிடங்கள் புதிய உறுப்பினர்களால் நிரப்பப்படுகின்றன.

துணைக் குடியரசுத் தலைவர் பதவி வழி மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார். மாநிலங்களவையின் துணைத் தலைவர் அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

உங்களுக்குத் தெரியுமா?

நிதி மசோதா

நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை. மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும். இம்மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுடன் சட்டமாக மாறும். மாநிலங்களவை 14 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கவில்லையெனில், ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும். மாநிலங்களவையின் சட்டத் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை மக்களவை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. எந்த முன்மொழிவுகளையும் மக்களவை நிராகரிக்கலாம்.

தேர்தல்

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் (MLA'S) ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்தல் முறை மறைமுக தேர்தல் எனப்படும். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.


மக்களவை

மக்களவையானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின் புகழ்மிக்க அவை ஆகும். மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 552. அவற்றில் 530 உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், 13 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆங்கிலோ - இந்தியன் சமூகத்திலிருந்து 2 உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். தற்சமயம் மக்களவை 545 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

மக்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள்

இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

25 வயதிற்கு குறைவுடையவராய் இருத்தல் கூடாது.

அவரது பெயர் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.

நடுவண் அரசு, மாநில அரசு அலுவலகங்களில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.

மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலாதவராகவோ இருத்தல் கூடாது.

மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்

பொதுவாக, மக்களவை தன்னுடைய முதல் கூட்டத்திலிருந்து ஐந்து ஆண்டுகள் செயல்படும். அதன் காலம் முடிவதற்கு முன் பிரதம அமைச்சரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் மக்களவையைக் கலைக்கலாம். இந்திய அரசியலமைப்பின் நெருக்கடி நிலை சட்டத்தின்படி மக்களவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்தவொரு கட்சிக்கோ () கூட்டணிக்கோ பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் குடியரசுத் தலைவர் மக்களவையைக் கலைக்கலாம்.

மக்களவை தேர்தல்

மக்கள் தொகையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள மக்களால் நேரடியாக மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், மேற்பார்வையிடுதல், நடத்துதல் ஆகிய பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்கிறது.

மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் 'வயது வந்தோர் வாக்குரிமை' பின்பற்றப்படுகிறது. வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்ட 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க தகுதியுடையவர் ஆவர்.


மக்களவையின் செயல்பாடுகள்

அனைத்து மசோதாக்களையும் மக்களவையில் அறிமுகப்படுத்தவும், நிறைவேற்றவும் முடியும் (நிதி மசோதா உள்பட).

குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களின் பதவி நீக்க விவகாரங்களில் பங்கேற்க மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கான எந்தவொரு மசோதாவை நிறைவேற்றுவதிலும் மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் சமமான அதிகாரம் பெற்றுள்ளது.

மக்களவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் லோக்சபாவில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.

தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்.

மாநிலங்களவை - 18 உறுப்பினர்கள்

மக்களவை - 39 உறுப்பினர்கள்


சபாநாயகர்

மக்களவையைத் தலைமை ஏற்று நடத்துபவர் சபாநாயகர் ஆவார். அவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாடாளுமன்ற மக்களாட்சியில் சபாநாயகரின் பதவி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மக்களவை கலைக்கப்பட்டாலும் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார். நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார். அவர் ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது சாதாரண மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றுள்ளார். சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் போதும் அல்லது வருகை புரியாத போதும் துணை சபாநாயகர் மக்களவைக்குத் தலைமை வகிப்பார்.



நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றுதல், நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவு - செலவு திட்டத்தினை நிறைவேற்றுதல், பொதுமக்கள் குறைகளைப் போக்குதல், மேலும் வளர்ச்சித் திட்டங்கள், சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகள் போன்றவைகளை விவாதித்தல் என பல பணிகளைச் செய்கிறது.

நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை (Impeachment) விசாரிக்கவும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் ஆகியோரை அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது.

மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட நாடாளுமன்றதிற்கே அதிகாரம் உண்டு.


Tags : Rajya Sabha, Lok Sabha | Qualification, terms, Election, Functions, The Speaker, Powers and Functions ராஜ்ய சபா, லோக்சபா | தகுதிகள், பதவிக் காலம், தேர்தல், செயல்பாடுகள், சபாநாயகர், அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்.
10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India : Parliament of India Rajya Sabha, Lok Sabha | Qualification, terms, Election, Functions, The Speaker, Powers and Functions in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 2 : நடுவண் அரசு : இந்திய நாடாளுமன்றம் - ராஜ்ய சபா, லோக்சபா | தகுதிகள், பதவிக் காலம், தேர்தல், செயல்பாடுகள், சபாநாயகர், அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 2 : நடுவண் அரசு