தகுதிகள், தேர்தல், சட்டமன்ற அதிகாரங்கள், நீக்கம் - இந்தியக் குடியரசுத் தலைவர் | 10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India
இந்தியக் குடியரசுத் தலைவர்
நடுவண்
அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். அவர் பெயரளவில் நிர்வாக அதிகாரம் பெற்றவர்
ஆவார். அவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். அவர் முப்படைகளின் தலைமை தளபதியாகச் செயல்படுகிறார். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 53ன் படி குடியரசுத் தலைவர்
நேரடியாகவோ அல்லது அவருடைய சார்நிலை அலுவலர்கள் மூலமாகவோ நடுவண் அரசின் நிர்வாக அதிகாரங்களை
அரசியலமைப்பின்படி செயல்படுத்துகிறார்.
• இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
• 35 வயது பூர்த்தி அடைந்தவராக
இருத்தல் வேண்டும்.
• நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ அல்லது
உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
• மக்களவை உறுப்பினராவதற்கான தகுதியினைப்
பெற்றிருத்தல் வேண்டும்.
• அவரின் பெயரைக் குடியரசுத் தலைவரைத்
தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுமத்திலுள்ள பத்து வாக்காளர்கள் முன்மொழியவும் மேலும்
பத்து வாக்காளர்கள் வழிமொழியவும் வேண்டும்.
குடியரசுத்
தலைவர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்கக் கூடாது. ஒருவேளை பதவி வகிக்கும்
பட்சத்தில் குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கும் நாளில் அப்பதவி காலியானதாகக் கருதப்படும்.
உங்களுக்குத் தெரியுமா?
புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் - குடியரசுத் தலைவரின் இல்லம் ஆகும். அவருடைய இல்லம் மற்றும் அலுவலகம் இரண்டும் ஒரே கட்டடத்தில் அமைந்துள்ளன. இருந்த போதிலும் அவருக்கு இருப்பிடத்துடன் கூடிய அலுவலகங்கள் மேலும் இரண்டு
இடங்களில் உள்ளன. அங்கு வருடத்திற்கு ஒரு முறை சென்று தன்னுடைய
அலுவலக பணிகளை அவர் மேற்கொள்கிறார். அவைகள் சிம்லாவில் உள்ள ரிட்ரீட்
கட்டடம் (The Retreat Building) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி
நிலையம் ஆகும். இவைகளில் ஒன்று வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும்
அமைந்துள்ளது. இது நாட்டின் ஒற்றுமையையும், மக்களின் பல்வேறுபட்ட கலாச்சாரத்தின் ஒற்றுமையையும் பறைசாற்றுகின்றது.
குடியரசுத்
தலைவர், ஒற்றை மாற்று வாக்கு
மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
வாக்காளர்
குழுமம் என்பது மாநிலங்களவை மற்றும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டமன்ற
உறுப்பினர்கள், தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரியின்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவரின்
பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட
தகுதி உடையவர் ஆவார்.
அரசியலமைப்பு
சட்டப்பிரிவு 77ன் படி நடுவண் அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே
மேற்கொள்ளப்பட வேண்டும்.
பிரதம்
அமைச்சரையும், மற்ற அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர் பிரதம அமைச்சரின் ஆலோசனைப்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு
செய்கிறார். இந்தியாவின் மிக முக்கிய பதவிகளான மாநில ஆளுநர்கள்,
உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், இதர நீதிபதிகள், இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்,
தலைமைக் கணக்கு தணிக்கையாளர், இந்தியத் தலைமை தேர்தல்
ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள், நடுவண் அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள், மற்ற நாடுகளுக்கான
தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
பொதுத்
தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி துவக்கி
வைக்கிறார். மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது.
குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
அவர்
நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலுவையில் இருந்தாலும் அது குறித்து
செய்தி அனுப்பலாம்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன.
நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில்
அறிமுகம் செய்யமுடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது
ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத்தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம்.
மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும்
இவருக்கு உண்டு.
கலை, இலக்கியம்,
அறிவியல், விளையாட்டு, மற்றும்
சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத்
தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார். மேலும் ஆங்கிலோ
- இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த 2 நபர்களை மக்களவையில்
போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதும் பட்சத்தில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
நடுவண்
அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற பின்னரே
நடுவண் நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால
நிதியினைக் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளது. அவரின் பரிந்துரை
இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியாது. இந்தியாவின்
அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு
மட்டுமே உண்டு. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை
அமைக்கிறார்.
இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தின்
72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக்
குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து
விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம்
வழங்கியுள்ளது.
நடுவண்
அரசின் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தைச் சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு
வழங்கியுள்ளது. அவர் சட்டத்தின்படி
இராணுவத்தை வழிநடத்துகிறார்.
வெளிநாடுகளுக்கான
இந்திய தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான
வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார். வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும்
குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.
நெருக்கடி
நிலையை அறிவிக்கும் அதிகாரம்
352வது சட்டப்பிரிவிலும், மாநில அரசை கலைக்கும்
அதிகாரம் 356வது சட்டப்பிரிவிலும், நிதி
நெருக்கடியை அறிவிக்கும் அதிகாரம் 360வது சட்டப்பிரிவிலும் உள்ளது.
கேரளா
மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகபட்சமாக 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசுத்
தலைவர் தன்னுடைய பணித்துறப்பு கடிதத்தினை துணைக் குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம். அவர் சட்டப்பிரிவு
61இன் படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம்
பதவி நீக்கம் செய்யப்படலாம். இவருக்கு எதிரான இக்குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானமாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
மேலும் அவைக்கு வருகை புரிந்தவர்களில் நான்கில் ஒரு பங்கிற்குக் குறையாமல்
ஆதரவு தெரிவிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் தனது பதவிக்காலம்
முடிந்தாலும் அவருக்குப் பின் ஒருவர் பதவியேற்கும் வரை அப்பதவியில் தொடரலாம்.