தொழிற்புரட்சியின் பண்புகள்
● புதிய அடிப்படை மூலப்பொருட்களின் பயன்பாடு: இரும்பு,
எஃகு
● புதிய எரிபொருள் மூலங்களின் பயன்பாடு: நிலக்கரி,
மின்சாரம், பெட்ரோலியம்
● இயந்திர நூற்புக் கருவி (Spinning
jenny), விசைத்தறி போன்ற புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்புகள்,
மனித ஆற்றலைக் குறைந்த அளவு பயன்படுத்தி உற்பத்தி அளவை அதிகரிக்க உதவின.
● தொழிற்சாலை முறை எனப்படும் புதிய அமைப்பின் உருவாக்கமானது வேலைப்பங்கீடு, சிறப்பு கவனத்துடனான தனித்திறன் வளர்ச்சி போன்றவற்றிற்கு வழிவகுத்தது.
● போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வளர்ச்சி.
● அறிவியலை அதிக அளவில் தொழில்துறைக்குப் பயன்படுத்துதல்.
● புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
இங்கிலாந்தில் நிலவிய சில குறிப்பிட்ட புறக்காரணிகளே அங்குத் தொழிற்புரட்சி முதன்முதலில் உருவாக வகை செய்தன. அவையாவன :
● இங்கிலாந்திற்கு ஏராளமான வளங்களும் காலனி நாடுகளும் இருந்தன. "இந்தியா அதன் மணிமகுடத்தில் ஓர் ஒளிவீசும் ரத்தினமாய் ஜொலித்தது".
● காலனி நாடுகளிலிருந்து நிலக்கரி,
இரும்பு, பருத்தி ஆகிய மூலப்பொருள்கள் கிடைத்தன.
● நெதர்லாந்திலிருந்து இங்கிலாந்திற்குக் குடியேறியிருந்த கைவினைஞர்கள்,
நெசவு உற்பத்திக்குத் தேவையான உள் கட்டுமானத்தை ஏற்கெனவே உருவாக்கியிருந்தனர்.
● இங்கிலாந்து வளர்ச்சியடைந்த வங்கி முறையுடன்,
வளர்ந்துவந்த தொழில் முனைவோர் வகுப்பினர், வசதி படைத்த முதலீட்டாளர்கள் ஆகியோரையும் கொண்டிருந்தது.
● இங்கிலாந்தின் அரசவம்சம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அதிக ஊக்கமளித்தது.
● இங்கிலாந்தில் அக்காலகட்டத்தில் நிலவிய நிலையான அரசியல்தன்மை தொழில் வளர்ச்சியில் முழுக் கவனம் செலுத்த உதவியது.
18ஆம் நூற்றாண்டில் சுரங்கங்களில் அதிகரித்த நீர்க்கசிவு, இங்கிலாந்தின் சுரங்க முதலாளிகளுக்கு பெரும் இடையூறாக இருந்தது. நிலக்கரியை வெட்டியெடுக்க நீரை வெளியேற்ற வேண்டியதாக இருந்தது. இதற்கென அவர்கள் கூடுதல் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தினர். இதனால் ஏராளமான பணம் செலவாகியது. இக்காலகட்டத்தில்தான் தாமஸ் நியூகோமன் என்ற பிரிட்டிஷ் பொறியாளர் நீராவி,
நிலக்கரி ஆகியனவற்றைப்பயன்படுத்தி சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்ற உதவும் புதுவகையான நீரேற்று இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்தார். ஆனால்,
அவர் உருவாக்கிய இயந்திரம் அதிக எரிபொருளை விரயமாக்கியது. இந்நிலையில் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர் ஜேம்ஸ் வாட் நிலையாகப் பொருத்தப்பட்ட நீராவி இயந்திரத்தினைச் சுழலும் நீராவி இயந்திரமாக மாற்றியமைத்தார். இது குறைவான எரிபொருளைப் பயன்படுத்தியது.
தொழிற்புரட்சிக்கு முன்பு, நூல் நூற்பது, துணி நெய்வது ஆகியவை சொந்தப் பயன்பாட்டிற்கும் உள்ளூர் பயன்பாட்டிற்கும் மேற்கொள்ளப்பட்டன. வீட்டில் அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட சிறிய இடத்தில் இவை நடத்தப்பட்டன.
உற்பத்தி ஒரு குடிசைத்தொழிலாக நடந்தது. ஒரு கைத்தறி நெசவாளிக்குத் தேவைப்படும் நூலை நூற்க,
நான்கு முதல் எட்டுத் தொழிலாளர்கள் நூற்புச் சக்கரத்தினைத் தம் கைகளால் இயக்க வேண்டியதாக இருந்தது. 1733இல் ஜான் கே கண்டுபிடித்த கைகளால் இயக்கப்படும் flying
shuttle' எனப்படும் பறக்கும் நாடா நூற்பின் வேகத்தை அதிகரித்தது. 1764இல் ஜேம்ஸ் ஹார்கிரீவ்ஸ் இயந்திர நூற்புக் கருவியைக் கண்டுபிடித்தார். இது ஒரே சமயத்தில் எட்டு நூல்களை ஒன்றாகப் பின்னி நூற்றது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு ரிச்சர்ட் ஆர்க்ரைட் 'நீர்ச்சட்டகத்தைக் (water
frame) கண்டுபிடித்தார். இந்த நூற்புச் சட்டகம் மனித ஆற்றலுக்கு மாற்றாக நீர் ஆற்றலைப் பயன்படுத்துவதாகும். இது வீட்டில் வைத்து இயக்க முடியாத அளவுக்கு அளவில் பெரியதாக இருந்தது. இவ்வாறாக,
தொழிற்சாலை பிறந்தது. 1779இல் சாமுவேல் கிராம்ப்டன் இயந்திர நூற்புக்கருவியையும் நீர்ச்சட்டகத்தையும் இணைத்துச் 'ஸ்பின்னிங் மியூல்' என்ற நூற்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இது ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான நூல்களை நூற்று,
எட்டு மெல்லிய மற்றும் கனமான நூல்களை நூற்றது. 1793இல் எலி விட்னி என்பவர் பருத்தியிலிருந்து கொட்டையைத் தனியாகப் பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் எனப்படும் பஞ்சுக் கடைசல் கருவியைக் கண்டுபிடித்தார்.
நெசவுத் தொழில் உற்பத்தி தொழிற்புரட்சியின் இதயமாகத் திகழ்ந்தது. பிரிட்டன் ஐம்பதே ஆண்டுகளில் கைத்தறித் துணி உற்பத்தியிலிருந்து இயந்திர உற்பத்திக்கு முழுமையாக மாறியது. புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பால் ஆலைகளின் துணி உற்பத்தி மிக அதிக அளவில் பெருகியது. டெர்பிஷையர்,
லங்காஷையர், செஷையர், ஸ்டாஃபோர்டுஷையர், நாட்டிங்காம்ஷையர், யார்க்க்ஷையர் ஆகியவை முக்கியத் தொழில் மையங்களாக மாறின. இதில் மிக முக்கியமானது மான்செஸ்டர். அங்கு 1802 ஆண்டில் 50க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் இருந்தன. பெருமளவு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிற்கூடங்கள் வேலைப் பங்கீட்டுக் கோட்பாட்டின்படி அமைக்கப்பட்டிருந்தன.
இரும்பு, எஃகு
இரும்பினைத் தகடுகளாகவும் பாளங்களாகவும் மாற்றுவதற்கான தொழிற்சாலையாக ரோலிங் மில்' உருவானது. இரும்பைச் சுத்தியலால் அடித்துத் தகடாக்கும் முறையை விட இவ்வாலைகள் பதினைந்து மடங்கு வேகமாக இரும்பினைத் தகடாக மாற்றின. வெப்பம் மிகுந்த ஊதுலைகள் இரும்பு உற்பத்தியில் எரிபொருளின் திறனை அதிகரித்தன. 1856இல் ஹென்றி பெஸ்ஸிமர் எஃகு தயாரிக்க ஒரு விரைவான, சிக்கனமான முறையைக் கண்டுபிடித்தார். காலப்போக்கில் இரும்பு,
எஃகு ஆகிய இரண்டும் அனைத்துத் தொழில்களிலும், அனைத்து இயந்திரங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டன.
ஜேம்ஸ் வாட் மேம்படுத்திய நீராவி இயந்திரம் மட்டுமல்லாமல் ஆர்க்ரைட் வரவாலும் ஆலை உற்பத்தி முறையாலும் நிலக்கரிக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதன் விளைவாக நிலக்கரிச் சுரங்கங்கள் மேலும் மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டு, அபாயகரமான நிலைக்கு உள்ளாயின. சுரங்கங்களின் உள்ளே பணியாற்றும்போது தொழிலாளர்கள் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தியதால் வெடிவிபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து உயிரிழப்புகளுக்கு அவை இட்டுச்சென்றன. 1815இல் சர் ஹம்ப்ரி டேவி எனும் கண்டுபிடிப்பாளரால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு விளக்கினால் இந்த அபாயம் குறைந்தது.
இங்கிலாந்தில் 1750இல் 4.7 மில்லியன் டன்களாக இருந்த நிலக்கரி உற்பத்தி 1900இல் 250 மில்லியன் டன்களாக அதிகரித்தது.
போக்குவரத்து வசதி எவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளது என்பதைச் சார்ந்தே தொழிற்புரட்சியின் பரவலாக்கம் அமைந்தது. உற்பத்தி அதிகரிப்பினால் மூலப்பொருள்களை வெகுதொலைவிலிருந்தும் கொண்டுவரவேண்டியதாயிற்று. பொருள்கள் உற்பத்தியான பின்னர் அவற்றைச் சந்தைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டியிருந்தது. எனவே புதிய கால்வாய்கள்,
சாலைகள், இருப்புப்பாதைகள் உருவாக்கப்பட்டன. மெக்ஆடமைஸ்டு சாலை முறையும்,
ஜார்ஜ் ஸ்டீபன்சன்னின் நீராவி இயந்திர ரயில்களும் இங்கிலாந்து நாட்டில் சாலை, ரயில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தின.
ஜான் லவுடன் மெக்ஆடம் என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னோடிப் பொறியாளர் ஆவார். இவரால் வடிவமைக்கப்பட்ட சாலை அமைக்கும் முறை உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கும் முறையை மாற்றியது.
இருப்புப்பாதைகள் கி.மு. (பொ.ஆ) ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் கோரினத்தில் அமைக்கப்பட்டன. அவை மனிதர்களாலும் விலங்குகளாலும் இயக்கப்பட்டன. ஜெர்மனியில் குதிரைகளால் இழுக்கப்பட்ட ரயில் போக்குவரத்து இருந்துள்ளது. நவீன ரயில் போக்குவரத்து 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் நீராவி என்ஜின்கள் வளர்ச்சி பெற்றதோடு தொடங்கிற்று.
முதல் ரயில்பாதை 1825இல் இங்கிலாந்து நாட்டில் ஸ்டாக்டன், டார்லிங்டன் ஆகிய நகரங்களுக்கு இடையே அமைக்கப்பட்டது. அடுத்த நாற்பதாண்டுகளில் 15,000 மைல் தூரம் இருப்புப்பாதைகளால் இணைக்கப்பட்டன. அமெரிக்காவின் ராபர்ட் ஃபுல்டன் என்பவர் 1807இல் கிளர்மோண்ட் என்ற நீராவிப் படகினைக் கண்டுபிடித்தார். இது நியூயார்க், ஆல்பனி ஆகிய நகரங்களுக்கு இடையே 150 மைல் தொலைவுக்கு இயக்கப்பட்டது. சில ஆண்டுகளில் ஆறுகளிலும் கடலோரங்களிலும் சரக்குகளை எடுத்துச்செல்ல நீராவிப் படகுகள் பயன்படுத்தப்பட்டன. 1830ஆம் ஆண்டில் மான்செஸ்டர், லிவர்பூல் ஆகிய நகரங்களுக்கு இடையிலான 40 மைல் தூரம் ஒன்றரை மணிநேரத்தில் கடக்கமுடிந்தது.