தொழிற்புரட்சி பரவுதல்
இங்கிலாந்து பெற்றிருந்ததைப் போன்று பிரான்ஸ் இயற்கைவளங்களைப் பெற்றிருக்கவில்லை . பிரெஞ்சுப் புரட்சி,
நெப்போலியன் மேற்கொண்ட நீண்டகாலப் போர்கள் ஆகியனவற்றின் விளைவாக ஏற்பட்ட அரசியல் நிலையற்ற தன்மை நாட்டைச் சீரழித்திருந்தது. புரட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் வணிகர்கள் பலரும் இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்திருந்தனர். அவர்கள் நெப்போலியப் போர்கள் முடிவுக்கு வந்த பின்னர் பிரான்ஸ் திரும்பியபோது பிரிட்டிஷ் தொழில்நுட்பங்களையும் கொண்டுவந்து பயன்படுத்தினர். இது அவர்களது நாட்டில் தொழிற்புரட்சியை நிறைவேற்ற உதவியது. பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட நூற்புக்கதிர்களைப் பயன்படுத்தியதால்,
1830 – 1860 காலகட்டத்தில் பிரான்சின் ஜவுளி உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்தது.
பிரான்கோஸ் டி வெண்டல் என்பவர் பிரிட்டிஷ் தொழில்நுட்பத்தை லொரைனுக்குக் கொண்டு வந்தார். அவரது குடும்பம் நிலக்கரிச் சுரங்கத்தில் நீராவி இயந்திரத்தையும்,
இரும்பைப் பிரித்தெடுப்பதில் துழாவும் உலையையும் (puddling kiln) பிரான்சில் அறிமுகம் செய்தது. 1860இல் வெண்டல் குடும்பத்திடம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். வணிகத்தைப் பலதுறைகளுக்கு விரிவாக்கம் செய்ததன் மூலம் இருப்புப்பாதை அமைத்தல்,
கப்பல் கட்டுதல் போன்ற மற்ற கனரகத் தொழில்களைத் தொடங்கினர்.
அல்சாஸ் மாகாணத்தின் முல்ஹவுஸ் நகரம் இயந்திரம் செய்வதற்கான அச்சுகளால் புகழ்பெற்றது. இதனால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வடிவமைப்பாளர்கள் இந்நகருக்கு வந்தனர். இந்த அடித்தளத்தைப் பயன்படுத்தி முல்ஹவுஸ் நிறுவனம் பல்துறைகளில் விரிவடைந்து கனரகத் தொழில்களில் ஈடுபட்டு முன்னோடி இயந்திரங்களின் உற்பத்தியாளராக உயர்ந்தது. செயிண்ட்-சாமோண்டில் இரும்பு உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டது. 1820இல் வார்ப்பிரும்பினைச் சுத்திகரிக்கும் பிரிட்டிஷ் தொழில்நுட்பம் இந்த நகரத்தில் பயன்படுத்தப்படத் தொடங்கியது.
1832 இல் பிரான்ஸ் நாட்டின் செயின்ட் இடியன் - ஆந்திரிஜியோக்ஸ் ஆகிய நகரங்களிடையே முதல் பிரெஞ்சு ரயில்பாதை திறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் எண்ணற்ற ரயில்பாதைகள் அமைக்கப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாகன உற்பத்தியில் பிரான்ஸ் முன்னோடி நாடாக வளர்ந்தது. பிரான்ஸ் நாட்டில் இன்றளவும் புகழ்பெற்ற வாகன நிறுவனங்களாகத் திகழும் இரு நிறுவனங்கள் 1891இல் தொடங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அர்மான் பியூகாட் நிறுவனம்,
முதல் கட்ட வாகனங்களை உற்பத்தி செய்தது. 1898இல் லூயி ரெனால்ட் என்பவர் நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கினார். தொடர்ந்து சொசைட்டெ ரெனால்ட் ஃபெரெர்ஸ் (ரெனால்ட் சகோதரர்கள் நிறுவனம்) தனது நிறுவனத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரித்தார்.
1806இல் பிரான்சில் வேளாண்மை உற்பத்தியில் ஈடுபட்ட மக்கள்தொகை 65.1 விழுக்காடாக இருந்தது.
1896இல் இது 42.5 விழுக்காடாகக் குறைந்தது.
அதே காலகட்டத்தில் தொழில் துறையில் வேலைவாய்ப்புகளின் பங்கு 20.4 விழுக்காட்டில் இருந்து 31.4 விழுக்காடாக அதிகரித்தது.
ஒரு தொழிற்புரட்சி உருவாவதற்குத் தேவையான இயற்கை வளங்கள் ஜெர்மனியில் இயல்பாகவே அமைந்திருந்தன. சார், ரூர், மேற்கு சைலேசியா, சாக்ஸனி ஆகிய பகுதிகளில் நிலக்கரிப் படிவுகள் இருந்தன. எர்சிபிர்ஜ், ஹார்ஸ் மலைகள், மேற்கு சைலேசியா ஆகிய இடங்களில் இரும்பு கிடைத்தது.
ஜெர்மனியின் முன்னேற்றத்துக்குப் பெரும் சவாலாக அமைந்தது இன்னமும் இலவச உழைப்பு முறை கொண்ட பண்ணையடிமை முறையும் அதன் நில உடைமை அடிப்படையிலான சமூக அரசியல் அமைப்பும்,
தொழில் தொடங்கக் கடைபிடிக்கப்பட்ட கடுமையான உரிம முறையும்தான். பிரெமன்,
ஹாம்பர்க் ஆகிய இரு பெரிய துறைமுகங்கள் தான் வடகடலில் இருந்த பாதுகாப்பான துறைமுகங்களாகும். ஆனால், இவை அனைத்தையும்விட ஜெர்மனியில் தொழிற்புரட்சி ஏற்பட மிக முக்கியமான சவாலாக அமைந்தது அதன் அரசியல் அமைப்புதான். 1871ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஜெர்மனி என்பது எண்ணற்ற ஜெர்மானிய அரசுகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அவற்றில் பிரஷ்யா மிகப் பெரிய அரசாகும்.
போட்டிகளைக் கட்டுப்படுத்தவும் விலை உயர்வைத் தக்கவைக்கவும் உற்பத்தியாளர்கள் அல்லது விநியோகிப்பாளர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டமைப்பே கார்டெல் ஆகும்.
ஜெர்மனியில் தொழிற்புரட்சி உருவாவதிலும் ஜெர்மனி ஒரே நாடாக ஒருங்கிணைவதிலும் இருப்புப்பாதைகள் பெரிதும் உதவின. 1835டிசம்பரில் நியூ ரெம்பர்க், ஃபர்த் நகரங்களுக்கிடையே முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. இருப்புப்பாதைகள் அமைப்பதில் தனியார் துறை முன்முயற்சி எடுத்தது. ஆனால்,
மூலதனப் பற்றாக்குறை எழுந்தபோது அரசாங்கம் தலையிட்டு உதவியது. சில பகுதிகளில் இருப்புப்பாதை அமைக்கும் பணி தேசியமயமாக்கப்பட்டது. பிரஷ்யாவில் இருப்புப்பாதைகளை ஒருங்கிணைக்கும் பணியை அரசே முன்முயற்சி எடுத்து,
தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தியது. 1842இல் இருப்புப்பாதை அமைக்கும் திட்டத்திற்கென்றே ரயில்வே நிதி எனத் தனி நிதி உருவாக்கப்பட்டது. பிரஷ்யாவில் ஒருங்கிணைந்த இருப்புப்பாதை மையமாக பெர்லின் நகரம் உருவானது. ஜோல்வேரெய்ன் ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இருப்புப்பாதைகளால் இணைக்கப்பட்டதால் வணிக,
வர்த்தக நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.
நீராவி இயந்திரப் பயன்பாட்டால் 1837இல் 419 ஆக இருந்த பிரஷ்ய தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 1849இல் 1,444 ஆக உயர்ந்தது.
1820இல் பத்து இலட்சம் டன்களாக இருந்த நிலக்கரி உற்பத்தி, அடுத்த 30 ஆண்டுகளில் அறுபது இலட்சம் டன்களுக்கும் அதிகமாக உயர்ந்தது.
1810இல் 46,000 டன்களாக இருந்த இரும்பு உற்பத்தி, 1850 வாக்கில் 5,29,000 டன்களாக அதிகரித்தது.
1850இல் 3,638 மைல் நீளமாக இருந்த ரயில்பாதை 1870இல் 11,600 மைல் நீளமாக அதிகரித்தது.
இறுதியாக 1871 இல் பிரஷ்ய அரசுகள் ஒன்றாக இணைந்து ஒரே ஜெர்மனி உருவானது. இதைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் மிகப் பெரிய தொழில்மயநாடாக ஜெர்மனி உருவாகி, தொழில்மயமானதில் தொழிற்புரட்சி தோன்றிய இடமான இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி, அமெரிக்காவிற்குப் போட்டியாக உருவெடுத்தது. மின்பொருள் உற்பத்தியில் சீமென்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பொட்டாசியம் உப்பு, சாயங்கள், மருந்துப்பொருள்கள், செயற்கை இழைகள் போன்ற வேதிப்பொருள்கள் உற்பத்தியில் ஜெர்மனி தலைசிறந்து விளங்கியது. வேதிப்பொருள் துறையில் பேயர், ஹெஸ்ட் போன்ற ஜெர்மன் நிறுவனங்கள் தலைமை தாங்கின. வாகனத் தொழிலிலும் ஜெர்மனி ஒரு முன்னணி நாடாக விளங்கியது. உலகம் முழுவதிலும் ஜெர்மனியின் டெய்ம்லர், பென்ஸ் ஆகிய வாகனங்கள் மிகப் புகழ்பெற்றிருந்தன.