அறிமுகம் - தொழிற்புரட்சி | 9th Social Science : History: Industrial Revolution
பாடம் 10
தொழிற்புரட்சி
கற்றல் நோக்கங்கள்
❖ 18ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் இன்றியமையாத அம்சங்கள்
❖ இங்கிலாந்தில் தொழிற்புரட்சிக்குச் சாதகமான நிலைமைகள்
❖ ஜவுளி உற்பத்தியில் புரட்சி ஏற்பட ஏதுவான கண்டுபிடிப்புகள்
❖ இங்கிலாந்தில் எஃகுத் தொழிலானது தொழில்மயமாவதை விரைவுபடுத்தியது
❖ உழைக்கும் வர்க்க இயக்கத்தின் எழுச்சியும் இங்கிலாந்தில் அதன் பின்விளைவுகளும்
❖ பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நிகழ்ந்த இரண்டாவது தொழிற்புரட்சி
❖ அமெரிக்காவின் மாபெரும் ரயில்வே ஊழியர் வேலைநிறுத்தமும் ஹேமார்க்கெட் படுகொலையும்
❖ இந்தியாவில் தொழிற்புரட்சியின் தாக்கம்
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உற்பத்தி முறையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் மனிதகுல வரலாற்றையே மாற்றி அமைத்தது. இப்பரந்த மாறுதல் தொழிற்புரட்சிக் காலம் என்று அழைக்கப்படுகிறது. பொருட்கள் கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட நிலைமாறி, இயந்திரங்களால் உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் பொருட்களின் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது. இது பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தியதோடல்லாமல், சமூகத்திலும் அரசியலிலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது. அதுவரை வேளாண்மை கைத்தொழில்கள் ஆகியவை சார்ந்து இயங்கிய பொருளாதாரம் தொழிற்புரட்சியைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் மற்றும் இயந்திர உற்பத்தியின் ஆதிக்கத்துக்கு உள்ளானது. தொழிற்புரட்சி முதன்முதலில் இங்கிலாந்தில் தொடங்கியது; பின்னர் உலகம் முழுவதும் பரவியது. 'தொழிற்புரட்சி' என்ற சொல் முதலில் பிரெஞ்சு எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்டதென்றாலும் இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் 1760 முதல் 1840 வரை ஏற்பட்ட வளர்ச்சியைக் குறிக்க ஆங்கிலப் பொருளாதார வரலாற்றாளர்கள் இதே சொல்லைப் பயன்படுத்தியபோது அது மிகவும் பிரபலமடைந்தது.