இந்தியாவில் தொழிற்புரட்சியின் தாக்கம்
18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை இங்கிலாந்து ஒரு வேளாண்மை நாடாகத்தான் இருந்தது. அதே நேரத்தில் இந்தியா வேளாண்மைக்காக மட்டுமல்லாமல் அதன் மிகச் சிறந்த உற்பத்திப்பொருள்களுக்காகவும் அறியப்பட்டிருந்தது. 18ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் இங்கிலாந்தில் குவிக்கப்பட்ட இந்தியப் பருத்தி இழைத் துணிகளுக்கும் பட்டு ஆடைகளுக்கும் தடைவிதித்தும் இங்கிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது. காரணம்,
ஜான் கே என்பவரால் பறக்கும் நாடா கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்த 30 ஆண்டுகளில் ஹர்கிரீவ்ஸ்,
ஆர்க்ரைட், கிராம்ப்டன் ஆகியோர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளால் நூற்பு, நெசவுத் தொழில் ஆகியன இங்கிலாந்தில் பெரும் வளர்ச்சியடைந்திருந்தன. வங்கத்தில் ஒரு பிரதேச அரசாகக் காலூன்றிய ஆங்கிலேயரால் வங்கம்,
கர்நாடகம் ஆகிய பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வமே இங்கிலாந்தில் தொழிற்புரட்சிக்குத் தேவையான முதலீட்டை வழங்கி அதை வெற்றி பெற வைத்தது. வங்கத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் மற்றும் அவர்களின் முகவர் கரங்களில் சிக்கிப் பெரும் துன்பத்துக்கு ஆளாயினர். அவர்கள் முதலில்,
உற்பத்திப் பொருள்களை ஓரிடம் விட்டு வேறிடம் எடுத்துச்செல்ல போக்குவரத்துத் தீர்வை செலுத்த வேண்டும் என்று இந்திய நெசவாளர்கள் மீது கடும் சுமையைத் திணித்தனர். அடுத்து, இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் வணிகப் பயிர்களை மட்டும் சாகுபடி செய்ய வற்புறுத்தினர். கைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளுக்கான சந்தை இழப்பால் இந்தியா பண்டைய உற்பத்தித் துறையில் வகித்து இருந்த இடத்தை இழந்து மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மட்டுமே மாறியது.
19ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் டாக்கா மஸ்லின் துணி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது. மேலும் அமெரிக்கப் போட்டியின் காரணமாக,
இந்தியாவில் செய்யப்பட்ட கச்சாப் பருத்தி ஏற்றுமதியும் படிப்படியாகச் சரிந்தது. பிரிட்டன் துணி ஆலைகளில் உற்பத்தியான துணிகள் இந்தியச் சந்தைகளில் குறைவான விலைக்கு விற்கப்பட்டமையால் இந்திய நெசவாளர்கள் வேலையற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியற்றவர்களாயினர்.
மதுரை ஆட்சியர் அளித்த ஓர் அறிக்கையில் சுமார் 5,000 கைத்தறி நெசவுக் குடும்பத்தினர் ஒரு வேளை உணவுகூடக் கிடைக்காமல் அவதியுறுவதாகப் பதிவுசெய்துள்ளார். திருநெல்வேலி பகுதி நெசவாளர்கள் தமது "வாழ்வாதாரங்கள் அழிந்துபோனதாலும் சாதி அமைப்பு வேறு தொழில்களில் ஈடுபட அனுமதிக்காததாலும்" துன்பப்பட்டதாகத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அக்காலத்தில் பதிவு செய்துள்ளார். பல லட்சம் மக்கள் பஞ்சத்தால் மடிந்தனர். பஞ்சத்தால் சாக விரும்பாத லட்சக்கணக்கான இந்திய விவசாயிகளும் கைவினைத் தொழிலாளர்களும் தாய்நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தின் காலனி நாடுகளின் மலைத்தோட்டங்களில் மோசமான பணி மற்றும் வாழும் சூழல்களில் அடிமைகளாய், ஒப்பந்தக் கூலிகளாய் வாழ நேர்ந்தது.
● தொழிற்புரட்சியின் முக்கியப் பண்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன
● தொழிற்புரட்சி முதன்முதலாக இங்கிலாந்தில் தோன்றியதற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன
● ஜவுளி உற்பத்தியில் வளர்ச்சி ஏற்படுவதற்கு வழிகோலிய கண்டுபிடிப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன
● இரும்பு மற்றும் எஃகின் பயன்பாடு அனைத்துவகைத் தொழில்களையும் இயந்திரமயமாக்கியதும், அதனால் போக்குவரத்து, தகவல் தொடர்புத் துறைகளில் ஏற்பட்ட அதிவேக வளர்ச்சியும் விவரிக்கப்பட்டுள்ளன
● தொழிற்புரட்சியானது சுற்றுச்சூழல் மீதும் மக்களின் வாழ்க்கை நிலைகள் மீதும் ஏற்படுத்திய தாக்கம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது
● தொழிற்புரட்சி பிரான்ஸ்,
ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பரவியமை விரிவாக விளக்கப்பட்டுள்ளது
● போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூலமே உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பெறப்பட்டன என்பதை உணர்த்தும் பொருட்டு, தொழிலாளர் இயக்கங்கள், அவற்றின் மீது அமெரிக்க அரசு மேற்கொண்ட அடக்குமுறை ஆகியவை மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது