தொழிற்புரட்சி | வரலாறு - உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள் | 9th Social Science : History: Industrial Revolution
உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள்
தொழிற்சாலைகளில் நிலவிய மோசமான பணிச்சூழல்,
நீண்ட வேலை நேரம் ,
குறைந்த கூலி, பெண்களும் குழந்தைகளும் சுரண்டப்பட்டமை ஆகியன தொழிற்சங்கங்கள் உருவாக வழிவகுத்தன. அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்குப் பின்னர்,
தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டனர். அவற்றுள் 1877இல் வெடித்த இருப்புப்பாதைத் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தம் பெரும் நிகழ்வாக அமைந்தது. நீடித்த பொருளாதார மந்தம் காரணமாக ஊதியம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வேலை நிறுத்தம் ஏற்பட்டது. மேற்கு வெர்ஜீனியாவில் தொடங்கிய இந்த வேலைநிறுத்தம் 45 நாட்களிலேயே மேலும் மூன்று மாநிலங்களுக்குப் பரவியது. முதலாளிகளின் அடியாட்கள்,
தேசியப் பாதுகாப்புப்படை, இராணுவம், கூலிப்படைகள் ஆகியனவற்றைக் கொண்டு இந்தப் போராட்டம் நசுக்கப்பட்டது.
சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் 1886 மே மாதம் 4ஆம் தேதி ஒரு தொழிலாளர் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாளொன்றுக்கு எட்டு மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து அமைதியாகத் தொடங்கிய இக்கூட்டத்தில் காவல்துறை பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைச் சுட்டுக் கொன்றது. ஹே மார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மே 1ஆம் நாள் இன்றளவும் சர்வதேச தொழிலாளர் நாளாகக் (மே தினம்) கடைபிடிக்கப்படுகிறது.