வரலாறு - இங்கிலாந்தில் தொழிற்புரட்சியால் ஏற்பட்ட விளைவுகள் | 9th Social Science : History: Industrial Revolution
இங்கிலாந்தில் தொழிற்புரட்சியால் ஏற்பட்ட விளைவுகள்
இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி வணிக விரிவாக்கம், உணவு உற்பத்தி அதிகரிப்பு, ஆலைத் தொழிலாளர்கள் எனும் ஒரு புதிய வர்க்கம் உருவாதல், நகரமயமாக்கம் ஆகிய வளர்ச்சிப் போக்குகளுக்கு இட்டுச்சென்றது. இதனால் ஏற்பட்ட புதிய நகரங்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி, அமைப்பாகத் திரண்ட தொழிலாளர் இயக்கம், தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கோருதல்,
தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை முறைப்படுத்தக் கோருதல் ஆகிய சமூகநிலைகள் அரசியலில் ஒரு புதிய சக்தியை உருவாக்கின.
காற்று, நீர், விறகு ஆகியனவற்றுக்கு மாற்றாக வேதியியல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தியமை, காற்று மற்றும் நீர் மாசு அதிகரிப்புக்கு இட்டுச் சென்றது. இப் புவியின் சூழலியல், இயற்கைச் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்குமான உறவு ஆகிய இரண்டிலும் தொழிற்புரட்சி ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது.
குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் வேலைவாய்ப்புகள் பெறத் தொழிற்புரட்சி உதவியது. எனினும்,
உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கை துயரம்மிக்கதாக இருந்தது. குழந்தைகளுக்குக் குறைந்த கூலி கொடுத்தால் போதும் என்பதால் ஜவுளி ஆலைகளில் குழந்தைகள் அதிகமாக வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். நிலக்கரிச் சுரங்கத்தொழில் நிலைமை குறித்து 1842இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை சுரங்கங்கள் அறிக்கை என அழைக்கப்படுகிறது.
தொடக்கக் காலத்தில் சுரங்கங்களிலும் ஆலைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்தன. இயந்திரங்களால் ஏற்படும் காயங்கள்,
சிறு தீப்புண்கள், கை -
கால்களில் காயம், விரல்கள் துண்டாவது, கை அல்லது கால் முழுமையாக அகற்றப்படுவது, மரணம் கூட நிகழ்வது என்று பல்வேறு விதமாக ஏற்பட்டன.
தொழிலாளர்கள் மிகவும் சிறிய, அழுக்கடைந்த, சுகாதாரமற்ற வீடுகளில் வாழ்ந்தனர். தொழிலாளர்கள் விரும்பினாலும் கூடத் தமது சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்தவோ மாற்றவோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை . இதனால் டைஃபாயிடு,
காலரா, பெரியம்மை போன்ற நோய்கள் பரவின.
தொழிற்புரட்சியின் வருகையைத் தொடர்ந்து,
உலகின் தொழிற்பட்டறையாக இங்கிலாந்து மாறியது. வேளாண்மை உற்பத்தியில் பொதுவான வீழ்ச்சி காணப்பட்டது. இதனால் மக்கள் கிராமங்களிலிருந்து தொழில் நகரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர். மக்கள்தொகை அதிகரிப்பு,
இடப்பெயர்ச்சி, நகரமயமாக்கம் ஆகியன தொழிற்புரட்சி ஏற்பட்ட இக்காலகட்டத்தின் முக்கியச் சமூக மாற்றங்கள் ஆகும். தொழிற்புரட்சிக்கு முந்தைய சமூகத்தில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில்தான் வசித்தனர். கிராமப்பகுதிகளிலிருந்து இடப்பெயர்வு அதிகரிக்க,
அதிகரிக்க, சிறிய நகரங்கள் பெருநகரங்களாயின. 1840இல் இருபது இலட்சமாக இருந்த லண்டனின் மக்கள்தொகை நாற்பதாண்டுகளில் ஐம்பது இலட்சமாக உயர்ந்தது.
மான்செஸ்டர் நகரில் நிலவிய குளிர்ச்சியான காலநிலை ஜவுளி உற்பத்திக்கு உகந்த சூழ்நிலையை அளித்தது. மேலும் லிவர்பூல் துறைமுகம், லங்காஷையர் நிலக்கரிச் சுரங்கம் ஆகியனவற்றுக்கு அருகிலும் அது அமைந்து இருந்தது. இதனால் உலகின் ஜவுளி உற்பத்தித் தொழிலின் தலைநகரமாக மான்செஸ்டர் மாறியது. இது ஏராளமான மக்களை மான்செஸ்டர் நகரை நோக்கி ஈர்த்தது. 1771 இல் 22,000 மக்கள் மட்டுமே வசித்த மந்தமான நகரமாகத்தான் மான்செஸ்டர் இருந்தது. இதே நகரம் அடுத்த ஐம்பதாண்டுகளில் 1,80,000 மக்கள்தொகை கொண்டதாக வளர்ந்தது.
விவசாயிகள் வறுமையிலும் தொழிலாளர்கள் துன்பத்திலும் ஆட்பட்டுக் கொண்டிருக்க, நடுத்தரவர்க்கம் தொழிலிலும் வர்த்தகத்திலும் மேலும் முதலீடு செய்து செல்வமிக்க வகுப்பாக வளர்ந்தது. இவ்வகுப்பினர் அக்கால அரசுகள்மீது ஆதிக்கம் செலுத்தினர். அனைத்துச் சட்டங்களும் அந்த வகுப்பாரின் நலன்களையே பாதுகாத்தன. தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி இல்லை. இந்தச் சூழலில்தான் ஐரோப்பாவில் ஒரு புதிய தத்துவமாக சோஷலிசம் பிறப்பெடுத்தது. முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டல் கொள்கைகளிலிருந்து உழைக்கும் வர்க்கத்தைப் பாதுகாப்பதற்காக,
கார்ல் மார்க்ஸ் அறிவியல்பூர்வப் பொதுவுடைமை (சோஷலிசம்) எனும் கோட்பாட்டினை முன்வைத்தார். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ஐரோப்பா முழுவதும் பொருளாதார, அரசியல் உரிமைகள் கோரி, வலுவான உழைக்கும் வர்க்க இயக்கங்கள் எழுந்தன.
1832இல் சீர்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. சொந்தமாகச் சொத்து வைத்திருந்த நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே அச்சட்டம் வாக்குரிமை அளித்தது. இதனால் விரக்தியுற்ற உழைக்கும் வர்க்கம் லட்சக்கணக்கில் ஓரிடத்தில் கூடித் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய ஒரு சாசனத்தை உருவாக்கி பல லட்சம் சக தொழிலாளர்களின் கையொப்பம் பெற்றது. இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையான மக்கள் அவையில் (House of Commons) தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகளைத் தொழிலாளர் இயக்கம் வலியுறுத்தியதால் அது 'சாசன இயக்கம்' (Chartism) எனவும், அதில் ஈடுபட்டவர்கள் சாசன இயக்கவாதிகள் எனவும் அழைக்கப்பட்டனர். இந்த இயக்கம் 1836 முதல் 1848 வரை உயிர்ப்போடு இயங்கியது. இருபத்தியோரு வயதான அனைவருக்கும் வாக்குரிமை, ரகசிய வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத் தேர்தல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தகுதியில் சொத்துரிமையை நீக்குதல், ஆண்டுதோறும் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல், சமமான பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை இவ்வியக்கத்தினர் வலியுறுத்தினர்.