வரலாறு - அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி | 9th Social Science : History: Industrial Revolution
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி
உடலுழைப்பிலிருந்து தொழில்நுட்பம் மற்றும் இயந்திரம் சார்ந்த உற்பத்திக்கு மாறியது அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தொடக்கமாகும். இங்கிலாந்தைச் சேர்ந்த சாமுவேல் சிலேட்டர் பத்து வயதிலிருந்து ஜவுளி ஆலைகளில் பணியாற்றி ஒரு ஆலையை நிர்வகிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தார். அமெரிக்கர்கள் புதிய தொழில்நுட்பங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கேள்விப்பட்ட அவர்,
1789இல் அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டவிரோதமாகக் குடியேறினார். ரோட்ஸ் தீவின் புகழ்பெற்ற தொழிலதிபர் மோசஸ் பிரௌன் என்பவரிடம் வேலைவாய்ப்பு கேட்டார். இவர் ஏற்கெனவே ஒரு ஜவுளி ஆலை தொடங்கித் தோற்றவர். பிரௌன் இவரை வேலைக்குச் சேர்த்துக்கொண்டதும் அவரது ஆலை 1793 இல் மீண்டும் இயங்கத் தொடங்கியது. அமெரிக்க நாடுகளில் நீராற்றலின் மூலம் இயங்கிய முதல் ஜவுளி ஆலை அதுதான். 1800 வாக்கில்,
சிலேட்டரின் துணி ஆலையினைக் கண்டு மேலும் பல தொழில்முனைவோர்கள் துணி ஆலைகள் தொடங்கி வளமடைந்தனர். சிலேட்டரின் தொழில்நுட்பம் மேலும் மேலும் புகழடைந்தது. அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன்,
சிலேட்டரை
"அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை" என்று புகழ்ந்தார்.
19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் உருவாக்குவதில் முனைந்தது. ராபர்ட் ஃபுல்டன் என்பவர் ஹட்சன் நதியில் நீராவிப் படகுப் போக்குவரத்தினைத் தொடங்கினார். சாமுவேல் F.B. மோர்ஸ் தந்தியைக் கண்டுபிடித்ததும், எலியாஸ் ஹோவே தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்ததும் அமெரிக்க உள்நாட்டுப்போருக்கு (1860–1865) முன்னர் நிகழ்ந்தவை ஆகும்.
1846இல் எலியாஸ் ஹோவே என்ற அமெரிக்கர் துணி தைக்கும் 'தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
துணிகளை வெண்மையாக்குவது, சாயமிடுவது, அச்சிடுவது போன்ற புதிய முறைகளின் கண்டுபிடிப்புகளால் 19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பல்வேறு நிறங்களில் துணிகளைத் தயாரிக்க முடிந்தது.
உள்நாட்டுப் போருக்குப் பிறகு தொழில்மயமாதல் மிகவும் தீவிரமடையத் தொடங்கியது. 1869இல் கண்டங்களை இணைக்கும் முதல் ரயில்பாதை அமைக்கப்பட்டது. இது மக்கள் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, மூலப்பொருட்களை எடுத்து வருதல் ஆகியனவற்றுக்குப் பயன்பட்டது. இதன் விளைவாக அமெரிக்காவில் எதிர்பாராவண்ணம் நகரமயமாக்கமும் எல்லை விரிவடைதல்களும் நிகழ்ந்த ன. 1860 முதல் 1900 வரையான காலகட்டத்தில்மட்டும் உலகின்பலபகுதிகளிலிருந்து 1 கோடியே 40 இலட்சம் மக்கள் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து,
பல்வேறு வகையான தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கு கண்டுபிடித்தமை (1879), அலெக்சாண்டர் கிரஹாம்பெல் தொலைபேசி கண்டுபிடித்தமை (1876)
ஆகிய நிகழ்வுகள் முழு உலகையும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு மாற்றின.
அமெரிக்காவின் பெரிய அளவிலான முதல் கனரக எஃகு உற்பத்தி ஆண்ட்ரூ கார்னேகி என்பவரால் தொடங்கப்பட்டது. இரும்புக்கான மூலப்பொருட்களை வழங்கிய சுரங்கங்கள்,
உற்பத்தி ஆலைகள், இறுதித் தயாரிப்பான இரும்புத்தகடுகளை உருவாக்கும் வெப்ப உலைகள்,
உற்பத்திப் பொருள்களை எடுத்துச்செல்லும் இரயில்பாதைகள்,
கப்பல் போக்குவரத்து என ஒவ்வொன்றையும் விலைக்கு வாங்கி, எஃகு உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்தையும் தனது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவந்தார். ஜான் டி. ராக்ஃபெல்லர் என்பவர் பல பெரிய தொழிற்சாலைகளை இணைத்து அறக்கட்டளை ஒன்றினை நிறுவினார். அவரது ஸ்டாண்டர்ட் ஆயில் டிரஸ்ட் அத்துறையின் 90 விழுக்காட்டினை ஏகபோகமாக்கி,
போட்டியைக் குறைத்தது. இத்தகைய ஏகபோகம் சிறிய நிறுவனங்களைப் பாதித்து அவற்றுக்கு அச்சுறுத்தலாக விளங்கியது. அமெரிக்க அரசும் ரயில்பாதைகள் அமைப்பதற்கான நிலங்கள் வழங்கி தொழில் வளர்ச்சியை ஆதரித்ததுடன் அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்நியப் போட்டியிலிருந்து பாதுகாப்பும் அளித்தது.
ஒரு கிராமப்புற சமூகமாகத் திகழ்ந்த அமெரிக்கா, நகர்ப்புறச் சமூகமாக மாறுவதைத் தொழிற்புரட்சி விரைவுபடுத்தியது. நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாவதைக் கண்ணுற்ற பண்ணைகளில் வளர்ந்த இளைஞர்கள், நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர். இதேபோல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும்லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துவந்தனர். இவ்வாறு நகரங்களில் குடியேறிய மக்களுக்கு வீட்டுவசதி அளிப்பது சிக்கலானது. இந்தப் புதிய தொழிலாளர்கள் நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தார்கள். தெருக்களில் திறந்தவெளி சாக்கடைகள் ஓடின; குடிநீர் விநியோகம் போதுமானதாய் இல்லை ; இதனால் தொற்றுநோய்கள் பரவின.