நவீன தொழிலகங்களின் தொடக்கம் | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நவீன தொழிலகங்களின் தொடக்கம் | 8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India
நவீன தொழிலகங்களின்
தொடக்கம்
பத்தொன்பதாம்
நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் தொழில்மயமாக்கலின் செயல்பாடு தொடங்கியது.
நவீனத் தொழிற்துறையின் தொடக்கமானது முக்கியமாக சணல், பருத்தி மற்றும் எஃகு தொழில்களின்
வளர்ச்சியுடன் தொடர்புடையது எனலாம். நிலக்கரி சுரங்கத்தொழில் வளர்ச்சி குறிப்பிட்ட
அளவில் தான் இருந்தது. ரயில்வே மற்றும் சாலைகளின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டவுடன்
தொழில்மயமாக்கல் தொடங்கியது. இந்த வளர்ச்சி நாட்டு மக்களின் சமூக மற்றும் பொருளாதார
வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. இரசாயனம், இரும்பு மற்றும் எஃகு, சர்க்கரை, சிமெண்ட்,
கண்ணாடி மற்றும் மற்ற நுகர்வோர் பொருட்கள் போன்ற தொழில்களின் வளர்ச்சிக்கு இரண்டு உலகப்
போர்களும் ஒரு உத்வேகத்தை அளித்தன. பெரும்பாலான ஆலைகள் பணக்கார இந்திய வணிகர்களால்
அமைக்கப்பட்டன. தொடக்கத்தில் இந்த வளர்ச்சி பருத்தி மற்றும் சணல் ஆலைகள் அமைப்பதில்
மட்டுமே இருந்தது.
அ) தோட்டத் தொழில்கள்
தோட்டத் தொழில் முதன் முதலில் ஐரோப்பியர்களை ஈர்த்தது. பெருந்தோட்டத் தொழில் பெரிய அளவில் வேலைகளை வழங்க முடிந்ததென்றாலும், உண்மையில் இது பிரிட்டிஷ் சமுதாயத்தால் அதிகரித்து வரும் தேநீர், காபிமற்றும் கருநீலச்சாயம் (இண்டிகோ) ஆகியவற்றிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தது. எனவே தான் தோட்டத் தொழில் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டது. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் 1839 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதே நேரத்தில் காபி தோட்டமும் தொடங்கப்பட்டது. தேயிலைத் தோட்டம் கிழக்கிந்திய பகுதிகளில் மிக முக்கியமான தொழிலாக இருந்தது போலவே காபி தோட்டமும் தென்னிந்தியாவின் நடவடிக்கைகளின் மையமாக மாறியது. மூன்றாவது முக்கிய தோட்டத் தொழிலான சணல் பல தொழிற்சாலைகள் உருவாக வழிவகுத்தது. இந்த தொழில்கள் அனைத்தும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் பலரால் கட்டுப்படுத்தப்பட்டன.
ஆ) இயந்திர அடிப்படையிலான தொழில்கள்
இந்தியாவில்
1854ஆம் ஆண்டு பம்பாயில் பருத்தி நூற்பு ஆலை நிறுவியதுடன் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட வடிவிலான
நவீன தொழிற்துறைப் பிரிவு தொடங்கப்பட்டது. 1855ஆம் ஆண்டு கல்கத்தாவிற்கு அருகில் ரிஷ்ரா
என்ற இடத்தில் ஹூக்ளி ஆற்றங்கரையில் சணல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. 1870ஆம் ஆண்டு
முதல் காகித ஆலை கல்கத்தாவுக்கு அருகில் பாலிகன்ஜ் என்ற இடத்தில் துவங்கப்பட்டது. பருத்தி
ஆலைகள் இந்திய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன, மற்றும் சணல் ஆலைகள் பிரிட்டிஷ்
முதலாளிகளுக்கு சொந்தமானவையாக இருந்தன. பம்பாய் மற்றும் அகமதாபாத்தில் பருத்தி ஆலைகள்
மற்றும் ஹூக்ளி ஆற்றங்கரையில் சணல் ஆலைகள் பல்கிப் பெருகின. கான்பூரில் கம்பளி மற்றும்
தோல் தொழிற்சாலைகள் முக்கியத்துவம் பெற்றன.
இ) கனரக தொழில்கள்
கனரக தொழில்களில் இரும்பு மற்றும் எஃகு தொழில் அடங்கும். 1874ஆம் ஆண்டு குல்டி என்ற இடத்தில் முதன்முறையாக நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரும்பு மற்றும் எஃகு தொழில்கள் இந்திய மண்ணில் வேரூன்ற தொடங்கின. இருப்பினும் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எஃகு உற்பத்தியை மேம்படுத்திய பெருமை ஜாம்ஷெட்ஜி டாடா என்பவரையேச் சாரும். 1907ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூர் என்ற இடத்தில் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TIS CO) அமைக்கப்பட்டது இந்நிறுவனம் 1911ஆம் ஆண்டு தேனிரும்பு மற்றும் 1912ஆம் ஆண்டு உலோக வார்ப்பு கட்டிகளையும் உற்பத்தி செய்தது.