இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் | 8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India
இந்தியாவின்
பாரம்பரிய கைவினைப் பொருட்கள்
இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஒரு சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. கைவினைப் பொருட்கள் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்தன. இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைகள் வருவதற்கு முன்னர், இந்திய கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்த நிலையில் கைவினைத் தொழில் பெரிய வேலை வாய்ப்பாக இருந்தது. நெசவு, மரவேலை, தந்தவேலை, மதிப்புமிக்க கற்களை வெட்டுதல், தோல், வாசனை மரங்களில் வேலைப்பாடுகள் செய்தல், உலோக வேலை மற்றும் நகைகள் செய்தல் ஆகிய பாரம்பரிய தொழில்களில் இந்தியா மிகவும் புகழ்பெற்று விளங்கியது. கிராமப்புற கைவினைஞர்களான பானைத் தயாரிப்பாளர்கள், நெசவாளர்கள், உலோக வேலை செய்வோர் ஆகியோர் வீட்டுப் பயன்பாட்டிற்கான பொருட்களையும் கைவினைப் பொருட்கள் பாத்திரங்களையும் உற்பத்தி செய்தனர். ஆனால் சில சிறப்பு வாய்ந்த பொருட்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்காக உற்பத்தி செய்யப்பட்டன. அவைகள் பருத்தித் துணிகள், மஸ்லின் துணிகள், கம்பளி, பட்டு மற்றும் உலோகப் பொருட்கள் ஆகியனவாகும். பருத்தி மற்றும் பட்டு ஆடைகளின் சிறந்த தரத்திற்கு இந்தியா பிரபலமானது. நெசவாளர்கள், தையல்காரர்கள் மற்றும் சாய தொழிலாளர்கள் ஆகியோரைப் பற்றி பல அறிவார்ந்த படைப்புகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட சில உலோகத் தொழிற்சாலைகளுக்கான மையங்கள் நன்கு பிரபலமானவை. உதாரணமாக மணி தயாரிக்கப் பயன்படும் உலோகமான வெண்கலத்துக்கு சௌராஷ்டிரா பெயர்பெற்றது. தொழிற்சாலைக்கு வங்காளம் புகழ்பெற்றது. மஸ்லின் ஆடைகளுக்கு டாக்கா புகழ்பெற்றது.
டாக்காவின் மஸ்லின் ஆடைகள்
கி.மு. (பொ.ஆ.மு.) 2000ஆம் ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள
மம்மிகள் மிகச் சிறந்த தரம் வாய்ந்த இந்திய மஸ்லின் ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.