இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியத் தொழிலகங்களின் வீழ்ச்சி | 8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India
இந்தியத்
தொழிலகங்களின் வீழ்ச்சி
அ) ஆட்சியாளர்களின் ஆதரவின்மை
இந்தியாவில்
பிரிட்டிஷாரின் வெற்றியானது சுயச்சார்புடன் இருந்த இந்திய பொருளாதாரத்தை காலனித்துவ
பொருளாதாரமாக மாற்றியது. பிரிட்டிஷார் இந்திய நிலப்பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக வெற்றி
கொண்டதால், பூர்வீக ஆட்சியாளர்கள், உயர்குடியினர் மற்றும் நிலக்கிழார்கள் ஆகியோர் தங்கள்
அதிகாரத்தையும் செல்வவளத்தையும் இழந்தனர். அரசவையில் நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்ட
பொருட்களை காட்சிப்படுத்துவதும் பிற சடங்கு சம்பிரதாயங்களும் மறைந்தன. இதன் விளைவாக
பூர்வீக ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்ட கைவினைஞர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்து
ஏழைகளாயினர். பல தலைமுறைகளாக தங்கள் கைவினைத் தொழிலை மட்டுமே மேற்கொண்ட இந்திய கைவினைஞர்கள்
மற்ற தொழில்களுக்கான திறமைகளை கொண்டிருக்கவில்லை. எனவே அவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி
செய்ய வயல்வெளிகளில் தொழிலாளர்களாக வேலை செய்ய வேண்டியதாயிற்று. இந்த மாற்றம் விவசாயத்தின்
மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது மற்றும் தகுதிக்கேற்ற வேலையின்மை அதிக அளவில் விவசாயத்
தொழிலில் ஏற்பட்டது. விவசாயமும் வணிக பயிர்களுக்கு மாறியதால், இந்திய வேளாண் சார்ந்த
தொழிலகங்கள் அழிவை நோக்கிச் சென்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனியின்
அரசியல் செல்வாக்குப் பரவியதால் உள்நாட்டு கைத்தொழில்களின் சிறப்பான காலம் முடிவுக்கு
வந்தது எனலாம்.
ஆ) உற்பத்தியாளர், மூலப்பொருட்களின் ஏற்றுமதியாளராக
மாறுதல்
நாட்டை புகழ்பெறச் செய்த இந்திய கைவினைப் பொருள்கள்
காலனித்துவ ஆட்சியின் கீழ் சரிவைச் சந்தித்தன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பிரிட்டனில்
இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டியே
இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பிரிட்டிஷ் ஆட்சியானது, இந்தியாவை தங்கள் தொழில்களுக்கான
மூலப்பொருள்களின் உற்பத்தியாளராகவும், தங்களால் தயாரித்து முடிக்கப்பட்ட பொருட்களுக்கான
சந்தையாகவும் மாற்றியது. மேலும் பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்வே மற்றும்
சாலைகளானது முடிவுற்ற பொருட்களை இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்குக் கொண்டு செல்லவும்
பல்வேறு பகுதிகளிலிருந்து மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்யவும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
இ) இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின்
போட்டி
இந்தியாவின் பழமையான தொழில் நெசவுத் தொழிலாகும். இந்திய நெசவாளர்களின் மிகவும் சிறப்பு வாய்ந்த திறன்கள் மற்றும் குறைந்த உற்பத்தி செலவு ஆகியவை ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்கு கடுமையான போட்டியை அளித்தன. இப்போட்டி இங்கிலாந்தில் காட்டன் ஜின், பறக்கும் எறிநாடா, நூற்கும் ஜென்னி மற்றும் நீராவி இயந்திரம் ஆகியவை கண்டுபிடிப்பதற்கும், அவை நெசவு உற்பத்தியை பெரிய அளவில் உருவாக்கவும் உதவியது. பிரிட்டனில் உற்பத்தியான பொருட்களின் சந்தையாக இந்தியா மாறியது. இதன் விளைவாக பகுதி நேர வேலையாக நூற்பு மற்றும் நெசவு மூலம் தங்கள் வருமானத்தை ஈடுசெய்த விவசாயிகள் தற்போது பயிரிடுவதை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. அதனால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். மேலும் பழமையான தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்கள் இங்கிலாந்தில் இயந்திரங்களால் முடிக்கப்பட்ட பொருட்களுடன் போட்டியிட முடியவில்லை
தாதாபாய் நௌரோஜியின் செல்வச்
சுரண்டல் கோட்பாடு
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை
பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்குக் காரணம் என்பதை முதலில்
ஏற்றுக் கொண்டவர் தாதாபாய் நௌரோஜி ஆவார்.
ஈ) ஆங்கிலேயர்களின் வர்த்தகக் கொள்கை
இந்தியாவில்
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அனைத்து கொள்கைகளும் இந்திய உள்நாட்டு
தொழில்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. கிழக்கிந்திய கம்பெனியால் பின்பற்றப்பட்ட
தடையில்லா வாணிபக் கொள்கை, இந்திய வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை சந்தை விலைக்கு குறைவாக
விற்க கட்டாயப்படுத்தியது. இது பல கைவினைஞர்கள் தங்கள் மூதாதையர்களிடம் இருந்து கற்றுக்
கொண்ட கைவினைத் திறமைகளை கைவிடவும் கட்டாயப்படுத்தியது. கிழக்கிந்தியக் கம்பெனியின்
நோக்கமானது மலிவான விலையில் இந்திய தயாரிப்பு பொருட்களைப் பெருமளவிற்கு வாங்கி மற்ற
ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் லாபத்திற்கு விற்க வேண்டும் என்பதாகும். இது இந்தியப்
பாரம்பரிய தொழில்களை வெகுவாக பாதித்தது இந்தியாவின் வர்த்தக நலன்களுக்கெதிரான பாதுகாப்புக்
கட்டணங்களின் கொள்கையை ஆங்கிலேயர்கள் பின்பற்றினர். பிரிட்டனுக்குக் கொண்டுசெல்லப்பட்ட
இந்திய பொருட்களுக்குக் கடுமையான வரி விதிக்கப்பட்டன. அதே நேரத்தில் இந்தியாவுக்குக்
கொண்டுவரப்பட்ட ஆங்கிலேய பொருட்களுக்குப் பெயரளவில் மட்டுமே வரி விதிக்கப்பட்டன.
உ) தொழில்மயம் அழிதல்
பத்தொன்பதாம்
நூற்றாண்டின் முதல் பாதியில் மேற்கத்திய நாடுகள் தொழில்மயமாக்கலை அனுபவித்து வந்த அதே
வேளையில் இந்தியத் தொழிற்துறையானது வீழ்ச்சியின் காலத்தைச் சந்தித்தது.
பாரம்பரிய
இந்திய கைவினை தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் தேசிய வருமானத்தின்
வீழ்ச்சி ஆகியன தொழில்மயம் அழிதல் என குறிப்பிடப்படுகிறது.
ஒரு சக்திவாய்ந்த
தொழிற்துறை அமைப்பு, மிகப்பெரிய இயந்திரங்கள், பெரிய அளவிலான உற்பத்தி ஆகியவற்றை பின்புலமாகக்
கொண்ட வெளிநாட்டு தொழிலகங்களுடன் இந்திய உள்நாட்டு தொழிலகங்கள் போட்டியிட முடியவில்லை
. சூயஸ் கால்வாய் கட்டுமானத்திற்குப் பின்பு இந்தியத் தொழிற்துறை மேலும் சிக்கலைச்
சந்தித்தது. ஏனென்றால் இது போக்குவரத்துச் செலவினைக் குறைத்ததுடன் இந்தியாவில் பிரிட்டிஷ்
பொருட்களை மலிவானதாக மாற்றியது. நவீன தொழிற்சாலையின் அதிகமான வேலைவாய்ப்புகளும் வருமானம்
ஈட்டும் விளைவுகளும் கைவினைத் தொழில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.