தாவரங்களில் கடத்து முறைகள் - செல்களுக்கிடையே நடைபெறும் கடத்துமுறைகள் | 11th Botany : Chapter 11 : Transport in Plants
செல்களுக்கிடையே
நடைபெறும் கடத்துமுறைகள்
செல்களுக்கிடையே அல்லது குறைந்த தூர கடத்து முறையானது
வரையறுக்கப்பட்ட இடத்தில் மிகக்குறைந்த செல்களுக்குள் நடைபெறுவதாகும். நீண்ட தூர இடப்பெயர்ச்சிக்கு
வழிவகை செய்வதற்காக இக்கடத்து முறைகள் திகழ்கின்றன. செல்களுக்கு இடையேயான இடப்பெயர்ச்சிக்கான
இயக்கம் ஆற்றல் சார்ந்ததாகவோ அல்லது ஆற்றல் சாராததாகவோ இருக்கும் (படம் 11.1). மேற்கண்ட
படத்தில் உள்ளவாறு செல்களுக்கிடையே கடத்து முறைகள் நடைபெறுகின்றன.
1.
ஆற்றல்சாரா கடத்தல்
1. பரவல் (Diffusion)
ஒரு மூடிய அறையில் ஊதுபத்தி, அல்லது கொசுவர்த்தியினைக் கொளுத்தும் போதோ அல்லது நறுமணத் திரவிய குப்பியினை திறக்கும்போதோ அதன் மணம் அறை முழுவதும் விரவி நிற்பதை உணரலாம். நறுமண மூலக்கூறுகள் சம அளவில் அறையில் விரவுவதே இதற்குக் காரணமாகும். இந்நிகழ்வே பரவல் என அழைக்கப்படுகிறது.
பரவல்: அடர்வு அதிகமான இடத்திலிருந்து அடர்வு
குறைவான இடத்திற்கு செறிவடர்த்தி சரிவு காரணமாக ஒட்டுமொத்த மூலக்கூறுகளும் சமநிலை எட்டப்படும்வரை
இடம்பெயர்வது பரவல் எனப்படும்
பரவலில் மூலக்கூறுகளின் இயக்கம் தொடர்ச்சியாகவும் ஒழுங்கற்றும்
அனைத்து திசைகளிலும் நடைபெறும் (படம் 11.2).
அ) இது ஒரு ஆற்றல் சாரா செயல்பாடு, எனவே இதற்கு ஆற்றல்
தேவைப்படுவது இல்லை.
ஆ) இது உயிருள்ள திசுக்களைச் சார்ந்ததல்ல.
இ) பரவல் வாயுக்களிலும் திரவங்களிலும் அதிக அளவில்
நடைபெறும்.
ஈ) பரவலின் தூரம் குறையும் போது மிக வேகமாகவும் தூரம்
அதிகரிக்கும் போது மெதுவாகவும் நடைபெறும்.
உ) வெப்பநிலை, செறிவு சரிவுவாட்டம், ஒப்படர்த்தி ஆகியவை
பரவலின் வீதத்தினை கட்டுப்படுத்துகின்றன.
அ) வளி மண்டலம் மற்றும் இலைத்துளைகளுக்கிடையே ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுப்பரிமாற்றம் பரவல் மூலமாக நடைபெறுகிறது. மேலும் ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன்-டை-ஆக்ஸைடினை ஈர்க்கவும் சுவாசித்தலுக்கு தேவையான ஆக்ஸிஜனை ஈர்க்கவும் பரவலே காரணமாக உள்ளது.
ஆ) நீராவிப்போக்கின் போது வெளியிடப்படும் நீராவி(செல்லிடைவெளிகளில்) இலைத்துளைகள் வழியே வளிமண்டலத்திற்கு செல்ல பரவலே காரணமாக உள்ளது.
இ) கனிம உப்புகளின் அயனிகள் ஆற்றல் சாரா கடத்தலுக்கு பரவலே காரணமாக உள்ளது.
செல்சவ்வானது நீரையும், முனைவற்ற மூலக்கூறுகளையும் எளிய பரவல் மூலம் ஊடுறுவ அனுமதிக்கிறது. ஆனால் அயனிகள், சர்க்கரைகள், அமினோ அமிலங்கள், நியூக்ளியோடைடுகள் மற்றும் செல்லின் வளர்சிதை மாற்ற பொருட்கள் ஆகிய முனைவுள்ள மூலக்கூறுகள். செல் சவ்வின் வழியாக மூலக்கூறுகள் பரவுவது செறிவு சரிவு வாட்டத்தினை மட்டும் சார்ந்தது அல்ல, பின்வரும் கூறுகளையும் சார்ந்துள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
பரவலும்
அறுவைச் சிகிச்சை அரங்கில் கிருமிநீக்கமும்
அறுவைச் சிகிச்சை நடைபெறும் அறுவை அரங்கமானது தொற்றுத்தன்மையினை ஏற்படுத்தவியலா வகையில் கிருமிகளின்றி இருக்க வேண்டும். இதற்காக, பொட்டாசியம் பர்மாங்கனேட்டுடன் பார்மலினைச் சேர்க்கும்போது புகை மூண்டு மூடப்பட்ட ஒரு அறையிலுள்ள -அனைத்து நோயூக்கிகளையும் அழிக்கிறது. பரவலின் வாயிலாக நடைபெறும் இச்செயல் புகையூட்டம் (Fumigation) எனப்படும்
சவ்வின் செலுத்துதிறனின் வகைகள்
கரைசல் என்பது கரைபொருள் கரைப்பானில்
கரைவதால் ஏற்படுவது.செல் சவ்வில் இக்கூறுகள் கடத்தப்படுவதைப் பொருத்து கீழ்க்காணும்
வகைகளில் சவ்வுகள் பிரிக்கப்படுகின்றன.
முழுக்
கடத்தா தன்மை: கரைப்பான்
மற்றும் கரைபொருள் மூலக்கூறுகள் ஆகிய இரண்டையும் தடுப்பது. எடுத்துக்காட்டு: சூபரின்,
க்யூட்டின் மற்றும் லிக்னின் உடைய செல் சுவர்கள்.
முழுக்
கடத்து தன்மை: கரைபொருள்
மற்றும் கரைப்பான் மூலக்கூறுகள் ஆகிய இரண்டையும் தன்னைக் கடந்து செல்ல அனுமதிப்பது.
எடுத்துகாட்டு: செல்லுலோசால் ஆன செல்சுவர்.
பகுதி
கடத்து தன்மை: கரைப்பான்
மூலக்கூறுகளை மட்டும் இது அனுமதிக்கும். ஆனால் கரைபொருளை அனுமதிப்பதில்லை. எடுத்துக்காட்டு:
பார்ச்மெண்ட்தாள்.
தேர்வு கடத்து தன்மை: அனைத்து உயிரிய சவ்வுகளும் கரைப்பான் மூலக்கூறுகளுடன் ஒரு சில கரைபொருளையும் அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டு: பிளாஸ்மாலெம்மா, டோனோபிளாஸ்ட் மற்றும் செல் நுண்ணுறுப்புகளின் சவ்வுகள்.
அ) மூலக்கூறின்
அளவு : சிறிய அளவிலான மூலக்கூறுகள் வேகமாக
பரவும்.
ஆ) மூலக்கூறின்
கரைதிறன் : கொழுப்பில் கரையும் பொருட்கள்
எளிதாகவும், வேகமாகவும் செல் சவ்வினை கடந்து செல்லும். ஆனால் நீரில் கரையும் பொருட்கள்
அவ்வளவு எளிதாக செல் சவ்வினை கடக்க இயலாது. அவை மேம்படுத்தப்பட்ட பிறகே செல் சவ்வினை
கடக்க இயலும்.
மேம்படுத்தப்பட்ட பரவலில், கடத்து புரதங்கள், எனப்படும்
ஒரு சிறப்பான சவ்வுப் புரதத்தின் துணையால் ஏ.டி.பி. ஆற்றலை பயன்படுத்தாமல் மூலக்கூறுகள்
செல் சவ்வினை கடக்கின்றன.
செல் சவ்வில் இரு வகையான கடத்து புரதங்கள் காணப்படுகின்றன.
அவை கால்வாய் புரதங்கள் மற்றும் தாங்கிப் புரதங்கள்.
அ) கால்வாய் புரதங்கள்
கால்வாய் புரதங்கள் என்பவை செல் சவ்வினுள் கால்வாய்
அல்லது குகை போன்ற அமைப்பினை ஏற்படுத்தி அதன் வழியாக மூலக்கூறுகள் எளிதில் செல்லினுள்
புகுவதற்கு வழி வகுக்கின்றன. இக்கால்வாய்கள் திறந்தவை அல்லது மூடியவை. இவை சில குறிப்பிட்ட
மூலக்கூறுகளுக்கு மட்டும் திறப்பவை. சிலவகை கால்வாய் புரதங்கள் வெளிச்சவ்வினுள் மிகப்பெரிய
துளையினை ஏற்படுத்துபவை. எடுத்துக்காட்டு: போரின்
மற்றும் அக்வாபோரின்.
1) போரின்
கணிகங்கள், மைட்டோகாண்ட்ரியா மற்றும் பாக்டீரியாவின் வெளிச்சவ்வில் காணப்படும் மிகப்பெரிய கடத்து புரதத்திற்கு போரின் என்று பெயர். இவை சிறிய அளவிலான மூலக்கூறுகளைக் கடத்துவதற்கு ஏற்றவை.
2) அக்வாபோரின்
அக்வாபோரின் என்பவை பிளாஸ்மா சவ்வில் பொதிந்து காணப்படும் நீர் கால்வாய் புரதங்களாகும் (படம் 11.3).
இதன் மூலம் மிகப்பெரிய அளவில் நீர் மூலக்கூறுகள் சவ்வினைக் கடக்கின்றன. தாவரங்களில் பல்வேறு வகையான அக்வாபோரின்கள் காணப்படுகின்றன. மக்காச்சோளத்தில் 30வகையான அக்வாபோரின்கள் உள்ளன. தற்போது இவை நீரைத் தவிர கிளிசரால், யூரியா, கார்பன் டை ஆக்ஸைடு, அம்மோனியா, உலோக அயனிகள் மற்றும் வினையாக்க மூலக்கூறு ஆக்சிஜன் ஆகிய பொருட்களை கடத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது. இவை சவ்வின் நீர் செலுத்து திறனை அதிகரிக்கவும், வறட்சி மற்றும் உவர் தன்மைக்கு எதிராகவும் செயல்படுகின்றது.
உங்களுக்குத் தெரியுமா?
அக்வாபோரின் கண்டுபிடிப்பு
இரத்த சிவப்பணுவில் (RBC) நீர்த்துளை - எனப்படும் அக்வாபோரின் பீட்டர்
ஆக்ரே என்பவரால் கண்டறியப்பட்டது. இதற்காக -வேதியலுக்கான நோபல் பரிசை 2003ல் இவர் பெற்றார்.
தாங்கிப் புரதங்கள் என்பவை ஒரு ஊர்தி போல செயல்பட்டு
சவ்வுக்கு வெளியேயும் உள்ளேயும் மூலக்கூறுகளைச் சுமந்து செல்கின்றன (படம் 11.4). தாங்கிப்
புரதத்தின் அமைப்பானது பொருட்களைச் சுமந்து செல்லும்போது மாற்றமடைகிறது, பின் மூலக்கூறுகள்
பிரிந்த பின் மீண்டும் இயல்பான நிலையினை அடைகிறது.
மூலக்கூறுகளின் இடப்பெயர்ச்சி திசை மற்றும் செயல்படு திறனைப் பொருத்து தாங்கிப் புரதங்கள் 3 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது (படம் 11.5). அவை
(1) ஒற்றைக் கடத்தி
(2) இணை கடத்தி
(3) எதிர்கடத்தி.
1) யூனிபோர்ட்
அல்லது ஒற்றைக் கடத்தி : இவ்வகையில் ஒரே
வகையான மூலக்கூறுகள் ஒரே திசையில் பிற மூலக்கூறுகளுடன் தொடர்பின்றி சவ்வின் வழியாகச்
செல்லும்
2) சிம்போர்ட்
அல்லது இணை கடத்தி: சிம்போர்ட் என்பது
ஒரே நேரத்தில் இரு வேறு மூலக்கூறுகளை ஒரே திசையில் கடத்தும் ஒருங்கிணைந்த சவ்வுப் புரதமாகும்.
3) ஆன்டி போர்ட்
அல்லது எதிர் கடத்தி:
ஆன்டி போர்ட் என்பது ஒரே நேரத்தில் இரு வேறுபட்ட மூலக்கூறுகளை எதிர் எதிர் திசைகளில் சவ்வின் வழியே கடத்தும் ஒருங்கிணைந்தச் சவ்வுப்புரதமாகும்.
நீங்கள் கற்றதை சோதித்தறிக.
இணை
கடத்தலுக்கும் எதிர் கடத்தலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் யாவை?
ஒற்றுமை: இரண்டிலும் இரு வகை மூலக்கூறுகள் ஈடுபடுகின்றன.
ஒரே திசையில் கடத்தல் நடைபெறுகிறது.
வேற்றுமை: இணை கடத்தலில் மூலக்கூறுகள் ஒன்றாகவே இணைந்து செல்கின்றன. ஆனால் பதிலீடு, கடத்தலில் ஒன்றுக்கொன்று எதிர் எதிர் திசையில் மூலக்கூறுகள் செல்கின்றன.