நீரியல் திறன் பற்றிய கருத்தாக்கம் ஸ்லேடையர்
மற்றும் டெய்லர் ஆகியோரால் 1960 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நீரியல் திறன்
என்பது ஒரே குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஒரு அமைப்பில் உள்ள நீரை, தூய
நீரின் நீரியல் ஆற்றலுடன் ஒப்பிடுவதாகும். ஒரு அமைப்பில் உள்ள நீர் மூலக்கூறுகள் எந்த
அளவிற்கு எளிதாக இடம்பெயர்கிறது என்பதை அளவிடும் குறியீடாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
நீரியல் திறன் ψ (சை) எனும் கிரேக்க
குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதனுடைய அலகு பாஸ்கல் (Pa) ஆகும். திட்ட வெப்பநிலையில் தூய நீரின் நீரியல் ஆற்றல் பூஜ்ஜியமாகும்.
தூய நீரில் கரைபொருளை சேர்க்கும் போது அதனுடைய இயக்க ஆற்றல் குறைவதால் அதன் நீரியல்
ஆற்றலும் குறைகிறது. ஒரு கரைசலை தூய நீருடன் ஒப்பிட்டால் அது எப்பொழுதும் குறைவான நீரியல்
திறனையே கொண்டிருக்கும். வேறுபட்ட நீரியல் திறன்களை கொண்டிருக்கும் கூட்டமாக அமைந்த
செல்களில் ஒரு நீரியல் திறன் சரிவுவாட்டம் (water
potential gradient) ஏற்படுகிறது. இங்கு நீரானது அதிக நீரியல் திறன் உள்ள பகுதியில்
இருந்து குறைவான நீரியல் திறன் கொண்ட பகுதிக்கு செல்லும்.
நீரியல்திறன் (ψ ) இவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.,
1. கரைபொருளின் அடர்த்தி அல்லது கரைபொருள் உள்ளார்ந்த திறன் (ψs)
2. அழுத்தம் உள்ளார்ந்த திறன் (ψP)
மேற்கண்ட இரு காரணிகளையும் இணைத்து நீரியல் திறனை இவ்வாறு குறிப்பிடலாம்,
ΨW = ΨS + ΨP
நீரியல் திறன் = கரைபொருள் உள்ளார்ந்த திறன் + அழுத்தம் உள்ளார்ந்த திறன்
கரைபொருள் திறன் என்பது
ஒரு கரைபொருள் நீரியல் திறன் மீது ஏற்படுத்தும் விளைவாகும். இது சவ்வூடு பரவல் இயல்திறன் என்றும் அழைக்கப்படும்.
தூய நீரில், கரைபொருளினைச் சேர்க்கும் போது அது நீரின் தனி ஆற்றலை குறைப்பதால் நீரியல்
திறன் பூஜ்ஜியத்திலிருந்து குறைந்து எதிர்மறையாகிறது. இவ்வாறாக, கரைபொருள் திறனின்
மதிப்பு எப்போதும் எதிர்மறையாகவே இருக்கும். திட்ட வளிமண்டல அழுத்தத்தில் உள்ள ஒரு
கரைசலின் நீரியல் திறனானது அக்கரைசலின் கரைபொருள் திறனுக்குச் சமமாகவே இருக்கும் (ψw
= ψS).
கரைபொருள் உள்ளார்ந்த திறனின் செயல்பாட்டிற்கு எதிராக
செயல்படும் இயங்கு விசையே அழுத்தயியல் திறன் அழுத்தம் உள்ளார்ந்த திறன் ஆகும். ஒரு
செல்லில் அழுத்த இயல் திறன் அதிகரித்தால் நீரியல் திறனும் அதிகரிக்கும், எனவே நீர்
செல்லுக்குள் சென்று செல் விறைப்புத் தன்மையினை அடைகிறது. செல்லினுள் உருவாகும் இவ்வகை
நேர்மறை நீரியல் அழுத்தம், விறைப்பு அழுத்தம்
எனப்படும். இதேபோன்று செல்லில் இருந்து நீர் வெளியேறுவதால் நீரின் உள்ளார்ந்த திறன்
குறைகிறது இந்நிலையில் செல் நெகிழ்வு நிலை அடைகிறது.
செல்சுவரில் உள்ள நீரை ஈர்க்கும் கொல்லாய்டுகள் (hydrating colloid) அல்லது கூழ்மம் போன்ற அங்கக மூலக்கூறுகளுக்கும் நீருக்கும் இடையே உள்ள ஈர்ப்பு ஊடக உட்திறன் எனப்படுகிறது. ஊடக உட்திறனை உள்ளீர்த்தல் அழுத்தம் எனவும் அழைக்கலாம். ஊடக உட்திறன் அதிகபட்சமாக (எதிர்மறை அலகில்) உலர்ந்த பொருட்களில் காணப்படும். எடுத்துக்காட்டு: நீரில் ஊறவைத்த விதைகள் பெருக்கமடைதல்.