தாவரங்களில் கடத்து முறைகள் - தாவர நீர் தொடர்புகள் | 11th Botany : Chapter 11 : Transport in Plants
தாவர-நீர்
தொடர்புகள்
தாவரங்களின் வாழ்க்கைக்கு நீர் இன்றியமையாதது. நீர்கிடைக்கும்
அளவினைப்பொருத்து தாவரங்களின் உள்ளமைப்பு மற்றும் வெளியமைப்பு மாற்றமடைகிறது. தாவரங்களின்
புரோட்டோபிளாசம் 60-80 % நீரால் ஆனது. நீரில் பெரும்பான்மையான பொருட்கள் கரைவதால் நீர்
ஒரு பொது கரைப்பான் என்றழைக்கப்படுகிறது.
நீர் மூலக்கூறுகளின் பிணைப்பு வலிமை காரணமாகவே சாறேற்றம் நடைபெறுகிறது. தாவரங்களின்
உள் வெப்பநிலையினைப் பராமரிப்பதற்கும் செல்லின் விறைப்பு நிலைக்கும் நீரே காரணமாக உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
உள்ளீர்த்தலின்
சக்தி
பண்டைய காலத்தில் பாறைகளில் சிறு பிளவுகளில்
மரக்கட்டை துண்டுகளைச் செலுத்தி அதற்கு தொடர்ச்சியாக நீர் செலுத்தப்படும். உள்ளீர்த்தல்
நிகழ்வு காரணமாக மரத்துண்டுகள் பெருக்கமடைந்து பாறைகள் மிகச் சரியாக வெட்டப்படும்.
கோதுமையிலிருந்து பெறப்படும் குளுட்டன் அதன் எடையினை விட 300 சதவீதம் அளவிற்கு நீரை உறிஞ்சும்
மரப்பிசின், ஸ்டார்ச், புரதம், செல்லுலோஸ், அகார், ஜெலட்டின் போன்ற கூழ்ம அமைப்புகளை நீரில் வைக்கும் போது அவை நீரினை அதிக அளவில் உறிஞ்சி பெருக்கமடைகின்றன. இத்தகைய பொருட்கள் உள்ளீர்ப்பான்கள் என்றும் இந்நிகழ்வு உள்ளீர்த்தல் என்றும் அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
1. உலர்ந்த விதைகள் உப்புதல் 2. மழைக் காலங்களில் மரச்சன்னல்கள்,
மேசைகள், மரக்கதவுகள் ஆகியவை ஈரப்பதம் காரணமாக உப்புதல்.
1) விதை முளைத்தலின்போது, உள்ளீர்த்தல் காரணமாக விதையின்
அளவு அபரிமிதமாக விரிவடைவதால் விதையுறை கிழிபடுகிறது.
2) வேர் மூலம் நீர் உறிஞ்சுதலின் ஆரம்ப நிலையில் இது உதவுகிறது.
செயல்பாடு
முருங்கை மரம் அல்லது கருவேல மரம் அல்லது
பாதாம் மரத்திலிருது 5 கிராம் அளவிற்கு அதன் பிசினை சேகரிக்க வேண்டும். இதனை 100மி.லி.
நீரில் ஊறவைக்க வேண்டும். 24 மணி நேரத்திற்கு பின்பு ஏற்படும் மாற்றங்கள் குறித்து
ஆசிரியரிடம் கலந்துரையாடுக.
நீரியல் திறன் பற்றிய கருத்தாக்கம் ஸ்லேடையர்
மற்றும் டெய்லர் ஆகியோரால் 1960 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நீரியல் திறன்
என்பது ஒரே குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஒரு அமைப்பில் உள்ள நீரை, தூய
நீரின் நீரியல் ஆற்றலுடன் ஒப்பிடுவதாகும். ஒரு அமைப்பில் உள்ள நீர் மூலக்கூறுகள் எந்த
அளவிற்கு எளிதாக இடம்பெயர்கிறது என்பதை அளவிடும் குறியீடாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
நீரியல் திறன் ψ (சை) எனும் கிரேக்க
குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதனுடைய அலகு பாஸ்கல் (Pa) ஆகும். திட்ட வெப்பநிலையில் தூய நீரின் நீரியல் ஆற்றல் பூஜ்ஜியமாகும்.
தூய நீரில் கரைபொருளை சேர்க்கும் போது அதனுடைய இயக்க ஆற்றல் குறைவதால் அதன் நீரியல்
ஆற்றலும் குறைகிறது. ஒரு கரைசலை தூய நீருடன் ஒப்பிட்டால் அது எப்பொழுதும் குறைவான நீரியல்
திறனையே கொண்டிருக்கும். வேறுபட்ட நீரியல் திறன்களை கொண்டிருக்கும் கூட்டமாக அமைந்த
செல்களில் ஒரு நீரியல் திறன் சரிவுவாட்டம் (water
potential gradient) ஏற்படுகிறது. இங்கு நீரானது அதிக நீரியல் திறன் உள்ள பகுதியில்
இருந்து குறைவான நீரியல் திறன் கொண்ட பகுதிக்கு செல்லும்.
நீரியல்திறன் (ψ ) இவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.,
1. கரைபொருளின் அடர்த்தி அல்லது கரைபொருள் உள்ளார்ந்த திறன் (ψ s)
2. அழுத்தம் உள்ளார்ந்த திறன் (ψ P)
மேற்கண்ட இரு காரணிகளையும் இணைத்து நீரியல் திறனை இவ்வாறு
குறிப்பிடலாம்.
ΨW = ΨS + ΨP
நீரியல் திறன் = கரைபொருள் உள்ளார்ந்த திறன் + அழுத்தம் உள்ளார்ந்த திறன்
கரைபொருள் திறன் என்பது
ஒரு கரைபொருள் நீரியல் திறன் மீது ஏற்படுத்தும் விளைவாகும். இது சவ்வூடு பரவல் இயல்திறன் என்றும் அழைக்கப்படும்.
தூய நீரில், கரைபொருளினைச் சேர்க்கும் போது அது நீரின் தனி ஆற்றலை குறைப்பதால் நீரியல்
திறன் பூஜ்ஜியத்திலிருந்து குறைந்து எதிர்மறையாகிறது. இவ்வாறாக, கரைபொருள் திறனின்
மதிப்பு எப்போதும் எதிர்மறையாகவே இருக்கும். திட்ட வளிமண்டல அழுத்தத்தில் உள்ள ஒரு
கரைசலின் நீரியல் திறனானது அக்கரைசலின் கரைபொருள் திறனுக்குச் சமமாகவே இருக்கும் (ψw
= ψS).
கரைபொருள் உள்ளார்ந்த திறனின் செயல்பாட்டிற்கு எதிராக
செயல்படும் இயங்கு விசையே அழுத்தயியல் திறன் அழுத்தம் உள்ளார்ந்த திறன் ஆகும். ஒரு
செல்லில் அழுத்த இயல் திறன் அதிகரித்தால் நீரியல் திறனும் அதிகரிக்கும், எனவே நீர்
செல்லுக்குள் சென்று செல் விறைப்புத் தன்மையினை அடைகிறது. செல்லினுள் உருவாகும் இவ்வகை
நேர்மறை நீரியல் அழுத்தம், விறைப்பு அழுத்தம்
எனப்படும். இதேபோன்று செல்லில் இருந்து நீர் வெளியேறுவதால் நீரின் உள்ளார்ந்த திறன்
குறைகிறது இந்நிலையில் செல் நெகிழ்வு நிலை அடைகிறது.
செல்சுவரில் உள்ள நீரை ஈர்க்கும் கொல்லாய்டுகள் (hydrating colloid) அல்லது கூழ்மம் போன்ற அங்கக மூலக்கூறுகளுக்கும் நீருக்கும் இடையே உள்ள ஈர்ப்பு ஊடக உட்திறன் எனப்படுகிறது. ஊடக உட்திறனை உள்ளீர்த்தல் அழுத்தம் எனவும் அழைக்கலாம். ஊடக உட்திறன் அதிகபட்சமாக (எதிர்மறை அலகில்) உலர்ந்த பொருட்களில் காணப்படும். எடுத்துக்காட்டு: நீரில் ஊறவைத்த விதைகள் பெருக்கமடைதல்.
ஒரு கரைசலையும் அதன் கரைப்பானையும் (தூய நீர்) ஒரு
அரை கடத்து சவ்வால் பிரித்து வைக்கும் போது கரைபொருளின் கரைதிறன் காரணமாக கரைசலில்
ஒரு அழுத்தம் உருவாகிறது. இதுவே சவ்வூடுபரவல்
அழுத்தம் (Osmotic Pressure - OP) எனப்படுகிறது.
கரைசலில் கரைபொருளின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சவ்வூடுபரவல் அழுத்தமும் அதிகரிக்கிறது.
எனவே, அதிக அடர்வுள்ள கரைசல் (குறைந்த ψ
அல்லது ஹைப்பர்டானிக்) அதிகமான சவ்வூடு பரவல் அழுத்தத்தினைக் கொண்டிருக்கும். இதேபோல
குறைந்த அடர்வுள்ள கரைசல் (அதிக ψ
அல்லது ஹைப்போடானிக்) குறைவான சவ்வூடு பரவல் அழுத்தத்தினைக் கொண்டிருக்கும். தூய நீரின்
சவ்வூடு பரவல் அழுத்தம் எப்பொழுதும் பூஜ்ஜியமாக இருக்கும், கரைபொருளின் அடர்வு அதிகரிக்க
இதன் அளவானது அதிகரிக்கும். எப்பொழுதும் நேர்மறை அலகீட்டில் உள்ள சவ்வூடுபரவல் அழுத்தம்
π,
என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது.
சவ்வூடுபரவல்
திறன் என்பது ஒரு கரைசலில் உள்ள கரைப்பான்
துகளின் எண்ணிக்கைக்கும் அதன் கரைபொருள் துகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதமாகும்.
சவ்வூடுபரவல் அழுத்தமும் சவ்வூடுபரவல் திறனும் சமமானது எனினும் சவ்வூடுபரவல் திறன்
எதிர்மறை அளவிலும் சவ்வூடுபரவல் அழுத்தம் நேர்மறை அளவிலும் இருக்கும்.
ஒரு தாவர செல்லினைதூய நீரில் (ஹைப்போடானிக் கரைசல்) வைக்கும் போது, நீரானது உட்சவ்வூடு பரவல் (எண்டாஸ்மாஸிஸ்) காரணமாக செல்லுக்குள் செல்லும். இதனால் செல் சவ்வின் மூலமாக செல் சுவருக்கு நேர்மறை நீர் அழுத்தத்தினை ஏற்படுத்துகிறது. இவ்வாறு செல் சவ்வின் மூலம் செல்சுவரை நோக்கி உண்டாக்கப்படும் இவ்வழுத்தம் விறைப்பு அழுத்தம் (Turgor Pressure - TP) எனப்படுகிறது.
மேற்கண்ட விறைப்பு அழுத்தத்திற்கு எதிராக செல்சுவரும்
சமமான மற்றும் எதிர் விசையினை செல் சவ்வின் மீது செலுத்துகிறது. இதுவே சுவர் அழுத்தம் (wall pressure-WP) எனப்படுகிறது.
விறைப்பு அழுத்தமும் சுவர் அழுத்தமும் இணைந்து செல்லுக்கு
விறைப்புத் தன்மையினை தருகிறது.
TP + WP = விறைப்புத் தன்மை (Turgid).
செயல்பாடு
தொட்டாற் சிணுங்கி தாவரத்தின் இலைகள் தொட்டவுடன் மூடுவதில் விறைப்பழுத்தத்தின் பங்கினைக் கண்டறிக.
தூய கரைப்பான் (ஹைப்போடானிக்) அதிகமான பரவல் அழுத்தம்
கொண்டது. இதில் கரைபொருளை சேர்க்கும்போது கரைப்பானின் பரவல் அழுத்தம் குறைகிறது. குறிப்பிட்ட
வெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்தத்தில் உள்ள ஒரு கரைசலின் பரவல் அழுத்தத்திற்கும்
அக்கரைசலின் கரைப்பானின் பரவல் அழுத்ததிற்கும் இடையேயான வேறுபாடே பரவல் அழுத்தப் பற்றாக்குறை (DPD) எனப்படுகிறது.
இதற்கு பெயரிட்டவர் மேயர் (1938) ஆவார். ஒரு கரைசலில் கரைபொருளின் அளவை அதிகரிப்பதன் மூலம்
பரவல் அழுத்தப் பற்றாக்குறையினை அதிகரிக்க இயலும். பரவல் அழுத்தப் பற்றாக்குறை அதிகமானால்
அது உட்சவ்வூடு பரவலை (எண்டாஸ்மாஸிஸ்) ஏற்படுத்தும் அதாவது அது ஹைப்போடானிக் கரைசலில்
இருந்து நீரை உறிஞ்சிக் கொள்ளும். இதனால் ரென்னர் (1935) இதனை உறிஞ்சு அழுத்தம் என்று அழைத்தார். உறிஞ்சு
அழுத்தம் ஒரு செல்லில் சவ்வூடுபரவல் அழுத்தத்திற்கும் மற்றும் விறைப்பழுத்தத்திற்கும்
இடையே உள்ள வேறுபாட்டிற்கு சமமாக இருக்கும். கீழ்க்கண்ட மூன்று சூழ்நிலைகள் தாவரங்களில்
காணப்படுகின்றன. .
• இயல்பான செல்லில்
பரவல் அழுத்தப் பற்றாக்குறை:
பரவல் அழுத்தப் பற்றாக்குறை = சவ்வூடுபரவல் அழுத்தம் - விறைப்பு அழுத்தம்.
• ஒரு முழுமையான
விறைப்புத் தன்மை பெற்ற செல்லில் பரவல் அழுத்தப் பற்றாக்குறை:
முழுமையான விறைப்புத் தன்மை கொண்ட செல்லில் சவ்வூடு
பரவல் அழுத்தமானது எப்போதும் விறைப்பு அழுத்தத்திற்குச் சமமாக இருக்கும்.
சவ்வூடுபரவல் அழுத்தம் = விறைப்பு அழுத்தம் அல்லது சவ்வூடுபரவல் அழுத்தம் - விறைப்பு அழுத்தம் = 0. இதன் காரணமாக ஒரு முழுமையான விறைப்புத் தன்மை பெற்ற செல்லில் பரவுதல் அழுத்தப் பற்றாக்குறை எப்பொழுதும் பூஜ்ஜியமாக இருக்கும்.
• நெகிழ்வான செல்லில்
பரவல் அழுத்தப் பற்றாக்குறை:
நெகிழ்வான செல்லில் விறைப்பழுத்தம் காணப்படாததால் விறைப்பழுத்தம் பூஜ்ஜியம். எனவே பரவுதல் அழுத்தப் பற்றாக்குறை = சவ்வூடு பரவல் அழுத்தம்.
ஆஸ்மாஸிஸ் (லத்தீன்: ஆஸ்மாஸ் = உந்துவிசை) அல்லது சவ்வூடு
பரவல் என்பது ஒரு சிறப்பு வகையான பரவல் ஆகும். ஒரு தேர்வு செலுத்து சவ்வின் வழியாக
நீர் அல்லது கரைப்பான் மூலக்கூறுகள் அதன் அடர்வு அதிகமான (அதிகமான நீரியல் திறன்) பகுதியிலிருந்து
அடர்வு குறைவான (குறைந்த நீரியல் திறன்) பகுதிக்கு செல்வது ஆஸ்மாஸிஸ் அல்லது சவ்வூடு
பரவல் எனப்படும்.
செறிவின் அடிப்படையில்
கரைசலின் வகைகள்
அ. ஹைப்பர்டானிக் (ஹைப்பர் = அதிகம்; டானிக் = கரைபொருள்) : இது செறிவு மிகுந்த கரைசல் (குறைவான கரைப்பான் / குறைவான). பிற கரைசலிடமிருந்து நீரை ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
ஆ. ஹைப்போடானிக் (ஹைப்போ = குறைவு; டானிக் =
கரைபொருள்) :
இது செறிவு குறைந்த கரைசல் (அதிகமான கரைப்பான் / அதிகமான I). பிற கரைசல்களுக்கு நீரை வழங்கும் தன்மை கொண்ட து (படம் 11.7).
இ. ஐசோடானிக் ( ஐசோ = சமமான ; டானிக் = கரைபொருள்)
: இது ஒத்த அடர்வுள்ள இரு கரைசல்களை குறிப்பதாகும்.
இந்நிலையில் இருபுறமும் கரைபொருள் சம அளவில் இருப்பதால் நீர் மூலக்கூறின் நிகர ஓட்டம்
பூஜ்ஜியமாக இருக்கும்.
ஹைப்பர், ஹைப்போ மற்றும் ஐசோடானிக்
ஆகிய தொடர்புடைய சொற்கள் பிற கரைசல்களுடன் ஒப்பிடுவதற்காகவே பயன்படுகிறது சவ்வூடுபரவலின் வகைகள்
ஒரு சவ்வூடு பரவல் அமைப்பிற்குள் நீர்மூலக்கூறுகள்
அல்லது கரைப்பான் செல்லும் திசையின் அடிப்படையில் இரு வகையான சவ்வூடு பரவல் நடைபெறுகிறது.
அவை உட்சவ்வூடு பரவல்
(எண்டாஸ்மாசிஸ்)
மற்றும் வெளிச்சவ்வூடு பரவல் (எக்ஸாஸ்மாஸிஸ்).
சவ்வூடு
பரவல்- செயல்முறை விளக்கம்
ஒரு திசில் புனலின் வாயினை ஆட்டுச் சவ்வினால்
கட்ட வேண்டும். இது அரை கடத்திச் சவ்வாக செயல்படும். இதில் அடர்வு மிக்க சர்க்கரைக்
கரைசலினை ஊற்றி அதன் ஆரம்ப அளவினை குறித்துக் கொள்ள வேண்டும். பின் இவ்வமைப்பினை ஒரு
நீர் நிறைந்த பீக்கருள் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து திசில் புனலில் நீர்மட்டம்
உயர்ந்திருப்பதைக் காணலாம். இதற்குக் காரணம் நீர் முலக்கூறுகள் அரைக் கடத்திச் சவ்வு
வழியாக பரவல் மூலம் உள் நுழைவதே (படம் 11.6).
இதே போல பீக்கரில், நீருக்கு பதிலாக
சர்க்கரை கரைசலும் திசில் புனலில் சர்க்கரைக் கரைசலுக்கு பதிலாக நீரையும் நிரப்பினால்
என்ன நிகழும்?
1) உட்சவ்வூடு
பரவல் அல்லது எண்டாஸ்மாசிஸ்: தூய நீரில் அல்லது ஹைப்போடானிக் கரைசலில் வைக்கப்பட்ட
செல் அல்லது ஒரு ஆஸ்மாட்டிக் அமைப்பிற்குள் கரைப்பான் மூலக்கூறுகள் உட்செல்வது எண்டாஸ்மாசிஸ்
அல்லது உட்சவ்வூடு பரவல் எனப்படும்.
எடுத்துக்காட்டாக உலர்ந்த திராட்சைகளை (அதிக கரைபொருள் மற்றும் குறைந்த கரைப்பான்) நீரில் வைக்கும் போது அவை பெருக்கமடைந்து விறைப்பு அழுத்தம் அடைவது.
2) வெளிச்சவ்வூடு
பரவல் அல்லது எக்ஸாஸ்மாசிஸ்: ஹைப்பர்டானிக்
கரைசலில் வைக்கப்பட்ட செல் அல்லது ஆஸ்மாட்டிக் அமைப்பிலிருந்து நீர் மூலக்கூறுகள் வெளியேறுவது
எக்ஸாஸ்மாசிஸ் அல்லது வெளிச்சவ்வூடு பரவல் எனப்படும். தாவரசெல்லில் ஏற்படும் எக்ஸாஸ்மாசிஸ்
உயிர்மச் சுருக்கத்தினை (பிளாஸ்மோலைசிஸ்)
ஏற்படுத்தும்.
பிளாஸ்மா சிதைவு
(பிளாஸ்மோலைசிஸ் பிளாஸ்மா = சைட்டோபிளாசம்; லைசிஸ் = அழிதல்)
ஒரு தாவரசெல்லினை ஹைப்பர்டானிக் கரைசலில் வைக்கும்
போது, நீர் மூலக்கூறுகள் செல்லில் இருந்து வெளிச்சவ்வூடு பரவல் காரணமாக வெளியேறுகிறது.
நீர் மூலக்கூறுகள் வெளியேறுவதால் செல்லின் புரோட்டோபிளாசம் சுருங்கி செல் சவ்வானது
செல் சுவரிலிருந்து விடுபட்டு செல்லானது நெகிழ்ச்சி நிலையினை அடைகிறது. இதுவே பிளாஸ்மா சிதைவு எனப்படுகிறது.
தாவரங்களுக்கு நீர் பற்றாக்குறையினால் வாடல் ஏற்படுவது பிளாஸ்மா சிதைவின் அறிகுறியாகும். மூன்று விதமான பிளாஸ்மா சிதைவுகள் தாவரங்களில் காணப்படுகின்றன. அவை அ) ஆரம்ப நிலை பிளாஸ்மா சிதைவு ஆ) உறுதி நிலை பிளாஸ்மா சிதைவு இ) இறுதி நிலை பிளாஸ்மா சிதைவு. இவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
பிளாஸ்மா சிதைவு உயிருள்ள செல்களுக்கு மட்டுமேயான பண்பாவதால் இதன் மூலம், செல் உயிருள்ளதா அல்லது உயிரற்றதா? என்பதை அறியலாம்.
உயிர்மச் சுருக்கத்தினால் பாதிப்படைந்த செல்லினை நீர் அல்லது ஹைப்போடானிக் கரைசலில் வைக்கும் போது மீள் நிலை அடைந்து செல் விறைப்புத் தன்மை அடைகிறது. உட் சவ்வூடு பரவல் காரணமாக செல் அதன் இயல்பான வடிவம் மற்றும் அளவினை மீண்டும் பெறுகிறது. உயிர்மச் சுருக்கம் அடைந்த செல் மீளவும் அதன் பழைய நிலையினை அடையும் இந்நிகழ்வே பிளாஸ்மா சிதைவு மீட்சி என்றழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு: உலர் திராட்சியினை நீரில் வைக்கும்போது பெருக்கமடைவது.
உருளைக்
கிழங்கு ஆஸ்மாஸ்கோப்
1. உருளைக் கிழங்கில் கத்தியின் உதவியால் ஒரு குழியினை உண்டாக்க வேண்டும்
2. இக் குழியில் அடர் சர்க்கரை கரைசலை நிரப்பி அதன் ஆரம்ப அளவினை குறிக்க வேண்டும்
3. இந்த அமைப்பினை ஒரு தூய நீர் நிரம்பிய பீக்கரில் வைக்க வேண்டும்
4. 10 நிமிடங்கள் கழித்து சர்க்கரை கரைசலின் அளவினை உற்று நோக்கி அதன் அளவினை மீண்டும் குறிக்க வேண்டும் (படம் 11.8).
5. சோதனை முடிவுகளை ஆசிரியரிடம் கலந்தாய்வு செய்ய வேண்டும் மேற்கண்ட சோதனையினை உருளைக் கிழங்கிற்கு பதிலாக பீட்ரூட் அல்லது சுரைக்காயினை வைத்து செய்து பார்த்து அதன் முடிவுகளை ஒப்பிட்டு விவாதிக்கவும்.
எதிர் சவ்வூடு பரவலின் செயல்முறை சவ்வூடு பரவலைப் போன்றதே
ஆனால் இது எதிர் திசையில் நடைபெறும். இதன்படி கரைசலில் ஓர் அழுத்தத்தினை ஏற்படுத்துவதன்
மூலமாக நீரானது எதிர் திசையில் செறிவு சரிவு வாட்டத்திற்கு எதிராக செல்கிறது. வழக்கமான
சவ்வூடுபரவலில், நீரானது அதிக அடர்வுள்ள இடத்திலிருந்து (தூய நீர் - ஹைப்போடானிக்)
குறைவான அடர்வுள்ள இடத்திற்கு (உப்பு நீர் - ஹைப்பர்டானிக்) செல்லும். ஆனால் பின்னோக்கிய
சவ்வூடு பரவலில் நீர் மூலக்கூறுகள் குறைவான அடர்வுள்ள இடத்திலிருந்து (உப்பு நீர் ஹைப்பர்டானிக்)
அதிக அடர்வுள்ள இடத்திலிருந்து (தூய நீர் - ஹைப்போடானிக்) தேர்வு கடத்து சவ்வின் வழியாக
செல்லும் (படம் 11.9).
பயன்கள் : குடிநீர் சுத்திகரிப்பிற்கும் கடல் நீரை குடிநீராக்குவதற்கும்
பின்னோக்கிய சவ்வூடுபரவல் பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள்
கற்றதை சோதித்தறிக.
புறணி
செல்களில் உள்ள பரவல் அழுத்தப் பற்றாக்குறை 5 வளி என்ற அளவிலும் அதைச் சூழ்ந்துள்ள
புறத்தோல் அடித்தோல் செல்களில் உள்ள பரவல் அழுத்தப் பற்றாக்குறை 2 வளி என்ற அளவிலும்
இருப்பின் நீர் செல்லும் திசை யாது?
தீர்வு: நீர் மூலக்கூறானது குறைந்த பரவல்
அழுத்தப் பற்றாக்குறையிலிருந்து அதிக பரவல் அழுத்தப் பற்றாக் குறையுள்ள இடம் நோக்கிக்
செல்லும் எனவே நீர் புறத்தோல் அடித்தோல் செல்களிலிருந்து (2 வளி) புறணி செல்லுக்கு
(5 வளி) செல்லும்