தாவரங்களில் கடத்து முறைகள் - நீர் வடிதல் | 11th Botany : Chapter 11 : Transport in Plants
காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது நீராவிப்போக்கின்
வீதம் வெகுவாகக் குறைகிறது. இந்நிலையில் நீர் உறிஞ்சப்படும் போது தாவரத்தினுள் அதிகப்படியான
நீர் சேர்ந்து வேர் அழுத்தத்தினை உருவாக்குகிறது. இந்த அதிகப்படியான நீர் தாவர இலைகளின்
விளிம்புகளில் நீராக வடிகிறது. இதுவே நீர்
வடிதல் எனப்படுகிறது. எடுத்துக்காட்டு: புற்கள், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரி
மற்றும் அலோகேஷியா. ஈரப்பதமுள்ள நிழற்பாங்கான
பகுதியில் வளரும் தாவரங்களில் காணப்படும் இவ்வகை நீர்வடிதலில் இலைத்துளை போன்ற ஒரு
துளை வழியாகவே நீர் வெளியேறுகிறது. இத்துளை நீர்சுரப்பி
அல்லது ஹைடதோடு எனப்படும். இத்துளையினுள் அதிகச் செல்லிடைவெளி கொண்டு பரவலாக
அமைந்த செல்கள் காணப்படுகின்றன. இவை எபிதெம் எனப்படும் (படம் 11.18). எபிதெம்,
நரம்புகளின் சைலம் மற்றும் ஃபுளேயம் முடிவில் காணப்படும். ஹைடதோடுகள் வழியாக வரும்
நீர் தூய்மையானதல்ல. இது பல்வேறு கரைபொருட்களைப் பெற்ற கரைசலாகும்.